மஹா காவ் கேம்ப். தனுர் மாசம் ஆனதால், மஹா பெரியவா மூணு மணிக்கே எழுந்து, ஒரு மணி நேர ஜபம் பண்ணி, ஸ்நானம் செய்து, பூஜையை ஆரம்பித்து விடுவார்.
ஒரு நாள், ஸ்ரீ பெரியவா ஜபம் முடித்து தன்அறையை சுத்தம் செய்தபடி மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியே போட்டுக் கொண்டிருந்தார் (ஸ்ரீ வேதபுரியோ, நானோ அவருக்கு தண்ணீர் கொண்...டு வந்து கொடுப்போம்). ஸ்ரீ பாலு பெரியவா ஸ்நானத்திற்கு கிணற்றிலிருந்து ஜலம் இறைத்து வைத்து, ஸ்ரீ வேதபுரியிடம் சொல்லி விட்டு, பொங்கல் பிரசாதம் செய்வதற்கு போனார். நான், ஸ்ரீ ஸ்ரீகண்டன், ஸ்ரீ கண்ணன் எல்லோரும் படுத்துக் கொண்டிருந்தோம். அன்றைக்கு ஸ்ரீ பெரியவா சங்கல்பத்தின் போது பஞ்சாங்கம் படிக்கச் சொல்லி கேட்கவில்லை. தானே செய்து கொண்டு விட்டார். ஆனாலும், கரணத்தில் சந்தேகம் வந்து விட்டது போலும். ஸ்ரீ வேதபுரியிடம் ஜாடையாக கேட்டார் (மௌன வ்ரதம்). அவரும் 'தெரியும்' என்றார். ஸ்ரீ பெரியவா 'எங்கே சொல்' என்பது போல் சைகை செய்தார். உடனே, ஸ்ரீ வேதபுரி ஒரு 'குட்டிக்கரணம்' போட்டார். திடீரென்று ஸ்ரீ வேதபுரி ஜன்னல் பக்கத்தில் இருந்து காணாமல் போனதால் ஸ்ரீ மஹா பெரியவா அவரை தேடினார். ஸ்ரீ வேதபுரி கண்ணில் பட்டதும், மறுபடி அதே மாதிரி ஜாடை செய்து கேட்டார். அவரும், 'இதோ, இப்படித்தான் போட்டேன்' என்று மீண்டும் ஒரு 'குட்டிக்கரணம்' போட்டுக் காட்டினார். அந்த வேகத்தில், ஸ்ரீ பாலு கொண்டு வந்து வைத்திருந்த குடங்கள் மேல் விழுந்து, ஜலம் கீழே கொட்டி பிரளயம் ஆனது. ஸ்ரீ வேதபுரியின் வேஷ்டி ஈரமாகி விட்டது. சத்தம் கேட்டு உள்ளே வந்த ஸ்ரீ பாலு, நடந்த கூத்தை பார்த்து ஸ்ரீ வேதபுரியை சத்தம் போட்டு விட்டு, மறுபடி ஜலம் கொண்டு வந்து வைத்தார். இதற்குள், ஸ்ரீ பெரியவா கேட்டதை ஒரு வழியாக புரிந்து கொண்ட ஸ்ரீ வேதபுரி அன்றைய கரணத்தை சொன்னார். ஸ்ரீ பிரதோஷம் வெங்கட்ராம மாமா இந்த சம்பவத்தை மறுபடி மறுபடி சொல்லக் கேட்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.
(என்னே, ஸ்ரீ வேதபுரியின் குரு பக்தி. எந்த கேள்வியும் கேட்காமல் குரு வாக்கை தட்டாமல் செய்வது எவ்வளவு உயர்ந்த குணம்.
எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும் அந்த நாட்கள். எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் இவர்கள் எல்லோரும்).
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
No comments:
Post a Comment