”மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது!” என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள்.
”திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார்.
ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியரு சூடு!
கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.
வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்!
மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.
விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா. எல்லாரும் மகா பெரியவாளை தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.
ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.
‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே! பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.
”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவர்.
‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.
ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு கேட்டேன்.
”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.
அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ”ன்னார்.
வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான் பெரியவாளோட பெருங்கருணை.
இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.
கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.
நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.
கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.
”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்’னு சொல்லுவா!”னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா.
No comments:
Post a Comment