அதிதி போஜனத்தைப் பற்றி பெரியவா சொன்ன ஒரு உண்மை நிகழ்ச்சி...............
"தொள்ளயிரத்து முப்பதெட்டு, முப்பத்தொம்போதுன்னு ஞாபகம் (Around 1938/39A). நம்ம ஆச்சார்யாள் மடம் கும்பகோணத்தில் இருந்தப்போ, நடந்த ஒரு சம்பவம். எல்லாரும் ஸ்ரத்தையா கேட்டுட்டாலே, இதோட மஹிமை நன்னா புரிஞ்சுடும்!
கும்பகோணத்தில் கும்பகோணம் மாமாங்க குளத்தில., தோட மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்கு வியாபாரி ஒர்த்தர் குடியிருந்தார். எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு....... அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரக்குடி பக்கத்ல பள்ளத்தூர சேந்தவா. அவாளுக்கு கொழந்தை குட்டி கெடையாது. அவா ஊர்லேர்ந்து நம்பகமா ஒரு செட்டியார் பையன அழைச்சுண்டு வந்து ஆத்தோட வெச்சுண்டு, மளிகைக் கடைய அவன் பொறுப்புல விட்டிருந்தா. செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயஸ் இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் ரெண்டுபேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது!
செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பெறும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்யமா இருந்தா.
இதெல்லாம் தூக்கியடிக்கற மாதிரி, ஒரு விஷயம் என்னன்னா.............அந்த தம்பதிகள் பல வர்ஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டிருந்தா! பிரதி தெனமும் மத்யான்னம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு முகம் கோணாம, அவாளோட கால்களை வாசத்திண்ணையில் ஒக்காரவெச்சு அலம்பி, வஸ்த்ரத்தால தொடச்சு, சந்தனம் குங்குமம் இட்டு, கூடத்ல ஒக்காரவெச்சு, ஏதோ இருக்கறதப் போடாம, ஒவ்வொரு அடியாருக்கும் என்னென்ன பிடிக்கும்னு கேட்டு அதை வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடுவா. ஆத்ல சமையலுக்கு ஆளெல்லாம் இல்லே! அந்த அம்மாவே தன் கையால சமைச்சுப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனஸ்!
எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியுங்கறேளா? நம்ம மடத்துக்கு வந்துண்டு இருந்த சுந்தரமையர்தான் செட்டியாரோட கணக்கு வழக்கெல்லாம் பாத்துண்டு இருந்தார். அவர்தான் இதெல்லாம் சொன்னார்..... ஒருநாள் நல்ல மழை! ஒரு அதிதியை கூட காணோம். செட்டியார் ஒரு கொடையை எடுத்துண்டு, மஹாமஹக்கொளத்தண்டை வந்து பார்த்தார். கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் ஒர்த்தர் இருந்தார். ஏன்னா.....வழியெல்லாம் தேவாரம் சொல்லிண்டே வந்தார். வீட்டுக்கு போனதும், "என்ன காய் பிடிக்கும்? போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போடறோம்"...ன்னு சொன்னார். வந்தவருக்கோ நல்ல பசி போல இருக்கு! "வெறும் மொளக்கீரை கூட்டும், கீரைத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்"ன்னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார். செட்டியாரும் இன்னொரு பக்கம் கீரை பறிக்க ஆரம்பிச்சார்...........ஆச்சியோ இவா ரெண்டு பெறும் பறிக்கறதை கொல்லைப் பக்கமா நின்னுண்டு பாத்துண்டே இருந்தா..... தட்டுக்கள் வந்ததும், அந்த அம்மா என்ன பண்ணா தெரியுமா? ரெண்டு கீரையையும் தனித் தனியா அலம்பி தனித்தனியா வேக வெச்சு பக்வம் பண்ணா. இதை சிவனடியார் கவனிச்சுண்டே இருந்தார். எல்லாம் பண்ணினதும், சிவனடியார் பறிச்ச கீரையை மட்டும் ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணிட்டு, இவருக்கு பரிமாறினா. அடியாருக்கோ பெருமை பிடிபடலை
போஜனம் முடிஞ்சதும், தான் பறிச்ச கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினதப் பத்தி கேட்டார். அந்த அம்மா சொன்னா " ஐயா. கொல்லைல கீரை பறிக்கரச்சே நான் பாத்துண்டே இருந்தேன்.....என் பர்த்தா "சிவ சிவ" ன்னு நாமம் சொல்லிட்டே பறிச்சார். அது அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. மறுபடி நிவேதிக்க அவஸ்யமே இல்லே. அதான் நீங்க கொண்டு வந்த கீரையை மட்டும் நைவேத்யம் பண்ணினேன்". அடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து! ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணின்ட்டு போய்ட்டார்.
இப்படி அதிதி போஜனத்த விடாம பண்ணிண்டு இருந்ததுக்கு "பல ப்ராப்தி" என்னன்னா.........ஒரு சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரர் கோவில்ல நாலு கால பூஜைக்கும் ஒக்காந்து தரிசனம் பண்ணா...வீட்டுக்கு வந்த ஆச்சி, தனக்கு "ஒச்சலாயிருக்கு"ன்னு சொல்லிட்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ, அப்பிடியே சாஞ்சுட்டா.....! பதறிப் போய் "சிவகாமி" ன்னு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும் அந்தம்மா பக்கத்துலயே சாஞ்சுட்டார்...!அவ்வளவுதான
்! அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா "சிவ சாயுஜ்யத்த" அடஞ்சுட்டா. அதிதி போஜனத்த விடாம பண்ணின அந்த தம்பதிகளுக்கு கெடச்ச "பதவி" யப் பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்திரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்....."
அதிதி என்பது முதலிலேயே information கொடுத்துவிட்டு வரும் நண்பர்களோ, சொந்தக்காரர்களோ இல்லை. எதிர்பாராமல் வரும் எவருமே அதிதிகள்தான்! "திதி" என்றால், நாள். குறிப்பிட்ட நாளில், நேரத்தில் சாப்பிட வருகிறேன் என்று சொல்லியோ, அல்லது "சாப்பிட வந்துவிடுங்கள்" என்று நாமே ஒரு நாள், நேரம் குறித்து அழைப்பவரோ அதிதி இல்லை. அ-திதி "நேரம் காலம் இல்லாமல் திடீரென்று வருபவர்கள்" தான் அதிதிகள். இன்று எதேச்சையாக மாஸ சிவராத்திரி !
No comments:
Post a Comment