”..... வைத்யநாதா, நான் கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா...”
ஆகா, எவ்வளவு பஞ்சகச்சம் ...! சென்னையில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி ஒன்றில்..!!
டிசம்பர் 27ந் தேதி, எனது உபாத்யாயத்தில் ஒரு சஷ்டியப்தபூர்த்தி வைபவம் சென்னை முருகன் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. பல வைதீகாளுடன் நானும் கலந்துகொண்டேன். ’பட்ஸ்’ வைத்யநாதய்யர் என அழைக்கப்பட்ட ஆச்சார சீலரின் நான்காவது பையனுக்குத்தான் சஷ்டியப்தபூர்த்தி.
பொதுவாக இம்மாதிரி விசேஷங்களில் வைதீகாளை தவிற கர்த்தா மட்டும்தான் பஞ்சகச்சத்தில் இருப்பார். அல்லது ஓரிருவர் மற்றவர்கள் பஞ்சகச்சத்தில் கண்ணில் தென்படலாம். இதுதான் தற்காலத்தில் யதார்த்தம். உங்களுக்கே தெரிந்த விஷயம்தான் இது.
ஆனால் இந்த ’நாதன்ஸ்’ குடும்ப சஷ்டியப்தபூர்த்தியில், மண்டபத்தில், வந்திருந்த பந்துமித்ரர்களிடையே சர்வ சகஜமாக பஞ்சகச்சம் அணிந்தவர்களை நிறைய பார்க்க முடிந்தது. அதனுடன் மடிசார் அணிந்த பெண்மணிகளும் அதிகமிருந்தனர். ஆனந்தமாக இருந்தது.
ஒரு ’எக்ஸ்ட்ரா’ ஆனால் அருமையான நம்மை வியக்கவைக்கும் செய்தி:
ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்வாமிகள் அவர்கள் சுமார் 50 வருஷத்திற்கு முன்பு சென்னை விஜயத்தின்போது பவழக்கார தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அருகில் இருப்பவரிடம் “ இந்த தெருவில்தானே பட்ஸ் வைத்யநாதன் வீடு இருக்கு...” என கேட்க இதோ இந்த வீடுதான் என யாரோ கையை காண்பிக்க நேராக அந்த வீட்டின் வாசல் அருகில் நின்று ‘ நான் உள்ளே வரலாமா.” என்று பெரியவா கேட்டவுடன் வைத்யநாத ஐயரின் குடும்பத்தினர் சிறிது நேரம் திக்ப்ரமை அடைந்து விட்டனர். இருக்காதா பின்னே.
சுதாரித்துகொண்டு பூர்ணகும்பத்துடன் பெரியவாளை உள்ளே வரவேற்க, பெரியவா நேராக கிடிகிடுவென மாடிப்படி ஏறி அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார். நமஸ்கரித்துவிட்டு கை கட்டிகொண்டு நிற்கும் வைத்யநாத ஐயரை உற்று நோக்கி பெரியவா சிரித்த முகத்துடன் ” வைத்யநாதா, நான் கொஞ்ச நாள் இங்கே தங்கலாமா...” என்று தெய்வீக அமுத மொழியை உதிர்த்ததை இன்றும் வைத்யநாதரின் குழந்தைகள் நன்றாக தங்கள் நினைவில் வைத்திருக்கின்றனர்.
பெரியவா தொடர்ந்து இவர்கள் இல்லத்தில் கிட்டத்தட்ட 10 நாட்கள் ஸ்ரீ சந்த்ரமெளளீஸ்வர பூஜையுடன் தங்கி அருள் புரிந்துள்ளார்கள். என்ன அதிர்ஷ்டம் இந்த குடும்பத்தினருக்கு.
இப்போது சஷ்டியப்தபூர்த்தி செய்துகொண்டவர், அன்பு முரளி, அப்போது பள்ளியில் 6-ங் க்ளாஸில் படித்துகொண்டிருந்ததாக சொல்லுகிறார். இந்த முரளியை பற்றி ஒரு வார்த்தை. பஞ்சாயதன பூஜை, சந்த்யாவந்தானாதிகளை க்ரமமாக செய்து வருபவர். நல்ல பரோபகாரி.
இந்த குடும்பத்தினருடன் ஒரு விதத்தில் நானும் சம்பந்தபட்டிருப்பது என் அத்ருஷ்டம்.
Source: Shri Sarma Sastrigal
No comments:
Post a Comment