தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.
ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.
ஓர் இரவு, பெரியவாள் தங்கியிருந்த அறையை
ஒட்டியிருந்த அறையில் முகாம் அலுவலகம்.
அங்கே மரப் பெட்டிகளில் புதிய வேஷ்டி-புடவைகள்,
சால்வைகள், வெள்ளிக்காசு - தங்கக் காசு போன்ற
சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.
பகல் முழுவதும் ஏகப்பட்ட வேலைகள்,உட்காரக்கூட
நேரம் கிடைக்காமல் உள்ளேயும், வெளியேயும்
நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருந்தது,
மெய்த்தொண்டர்களுக்கு. எனவே இரவில் அயர்ந்த தூக்கம்
நள்ளிரவில் ஒரு திருடன் அலுவலக அறைக்குள் புகுந்து
ஒரு பெட்டியைத் தூக்க முயன்றான்.கனமாக இருந்ததால்
சட்டென்று தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பெரியவா, திருடன்
வந்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால்.
உடனே "திருடன்,திருடன்" என்று கூப்பாடு போடவில்லை.
எப்போதும் போன்ற மிருதுவான குரலில் ஓரிரு
சிஷ்யர்களை எழுப்பினார்கள்.
"பக்கத்து ரூம்லே மரப்பொட்டியைத் தூக்க முடியாமே
ஒருத்தன் சிரமப்பட்டுண்டிருக்கான். நீங்க போய்
ஒத்தாசை பண்ணுங்கோ..."
பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டருக்கு உடனே
விஷயம் விளங்கி விட்டது. அவரும் சத்தம் போடாமல்
மின்விளக்குகளின் ஸ்விச்சைப் போட்டார்.ஒரே வெளிச்சம்!
திருட வந்தவன் தலைதெறிக்க ஓடிப் போனான்.
"அடாடா... சொல்லாமல்,கொள்ளாமல் ஓடிப் போயிட்டானே!..
பொட்டியிலேர்ந்து வேணும்கிறதை எடுத்துண்டு போகச்
சொல்லியிருக்கலாமே?" என்றார்கள் பெரியவா.
'இது என்ன கருணையா, கிண்டலா?'
என்று சீடர்களுக்குப் புரியவில்லை.
ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே
கைவந்த கலை.
No comments:
Post a Comment