Contributed by Shri. Varagooran Narayanan
ஒரு தேர்ந்த கர்நாடக ஸங்கீத ரஸிகர்: முன்னேயெல்லாம்
கச்சேரில தவறாம மஹான்களோட பாடல் ஏதாவது
ராகமாலிகை விருத்தமாகப் பாடுவா, அதுல கேதாரகௌளைதான்
அநேகமாக மொதலாவதா இருக்கும். மனஸை ஒரு தூக்குத்
தூக்கற வசியம் அந்த ராகத்துக்கு விசேஷமாயிருந்தது.
இப்ப அதெல்லாம் போயிடுத்து. தேஷ் மாதிரி திராபையான
வடக்கத்தி ராகங்களுக்குத்தான் மவுஸாயிருக்கு.
ஸ்ரீசரணர்.[பெரியவா] : நீ இப்டி சொல்றே! ஆனா, "தேஷும்
கேதாரகௌளையும் ஒரே 'ஸ்கேல்'தான். [ஒரே ஆரோஹண
-அவரோஹணம் உடையவைதான்]: ஒரே ஒரு வித்யாஸம்
ஆரோஹணத்துல நிஷாதம் மட்டும் வித்யாஸப்படறது'ன்னு
கேள்விப்பட்டாப்பல இருக்கே.
ரஸிகர்; [லேசாக முனகிப் பார்த்துகிட்டு,ஆச்சர்ய உணர்ச்சியுடன்]
ஆமாம். பெரியவா சொன்னாப்பலதான்!. ஆனா ஹிந்துஸ்தானிப்
பாடகாள் ஸ்வரங்களைப் பிடிச்சு நிறுத்திப் பாடறதுக்கும்
நம்மவா போன தலைமுறை வரை பண்ணிண்டிருந்ததுக்கும்
இருந்த வித்யாஸத்தாலே ஒண்ணு லைட்டாகவும்
இன்னொண்ணு புஷ்டியாகவும் இருந்திருக்கு.
ஸ்ரீசரணர்: [அவரையும் விஞ்சிய ரஸிகராக,ஆயினும்
அடக்கத்துடன்]
லைட்,புஷ்டி- அந்த 'டிஸ்டிங்ஷன்'லாம் எனக்குத் தெரியாது.
ரெண்டுல ஒவ்வொண்ணுலயும் ஒரு தினுஸு அழகு
இருக்கறதாத்தான் என் லெவல்ல தோண்றது.
நாம 'ஸிந்து பைரவி'ன்னு சொல்ற அவா பைரவி கூட
முழுக்கவே நம்ம தோடி ஆரோஹண-அவரோஹணம்தான்.
கமக மயமா எழைச்சு எழைச்சு நாம தோடி பாடறதுல
ஒரு கம்பீரமான அழகு இருக்குன்னா, அவா ஸிந்துபைரவின்னு
ஸ்வரங்களைப் பிடிச்சு வின்யாஸப்படுத்தறதுலேயும்
மனஸைத் தொடற ஏதோ ஒண்ணு இருக்கறதாத்தான்
என் மாதிரியானவாளுக்குத் தோணறது.
தீக்ஷிதாவாள், ஐயர்வாள் மாதிரியான நம்ம பெரியவாள்ளாமும்
ஹிந்துஸ்தானி ராகங்களை 'அடாப்ட்'பண்ணிண்டிருக்காளே!
ஒரே ஸ்கேல், ஆனாலும் ஸவரங்களைக் கையாளற
விதத்தினாலேயே ரொம்ப வித்யாஸமாயிருக்குன்னா
ஆச்சர்யமாத்தான் இருக்கு. ஆனாலும் வடக்கத்தி-
தெற்கத்தி ஸங்கீதங்களில் இது ஸஹஜமாவே 'ப்ரூவ்'ஆறது.
ரஸிகர்: கர்நாடக ஸங்கீதத்துலேயே கூட அப்படி உண்டு.
தோடியையேதான் மத்திமம் பண்ணி நிஷாதாந்தமா பாடினா
அது புன்னாகவராளி ஆயிடறது! ரெண்டும் ரொம்ப
வித்யாஸமான வெவ்வேறே ராகம் மாதிரிதானே தோணறது?
ஸ்ரீசரணர்: [வியப்புடன்]: அப்படியா? தோடி-புன்னாகவராளி
ஒரே ஸ்வரங்களா? நான் 'நோட் பண்ணினதில்லையே!
கொஞ்சம் பாடிக் காட்டறியா? ஆலாபனையும் பண்ணு,
க்ருதிகளும் பாடு. "கமலாம்பிகே" தோடியும்,
"கனகசைல" புன்னாகவராளியும் பாடு.
ரஸிகர் நன்றாகப் பாடவும் கூடியவர். ஸ்ரீசரணர் கூறிய
விசேஷம், வெகு சிறப்பாகப் பாடினார். அதில் சின்னச் சின்ன
நுட்பங்களையும் ஸ்ரீசரணர் அனுபவித்து ரஸித்ததுண்டே.
..
No comments:
Post a Comment