Admission
காஞ்சியில் இருந்து வந்த அழைப்பு!
சிறுவயதில் இருந்தே மகா பெரியவரிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவன் நான். எனது சட்டைப் பையில், எப்போதும் அவரது புகைப்படத்தை வைத்திருப்பேன்.
அவரது திருவுருவப் படங்கள் எங்கு கிடைத்தாலும், வாங்கி பத்திரப்படுத்துவது வழக்கம். இன்றும் அவரை அனுதினமும் வணங்கி, பிரார்த்தித்து வருகிறேன். அந்த கருணாமூர்த்தியின் அருட் கடாட்சத்தை மெய்ப்பிக்கும் ஒரு சம்பவம்:
நானும் என் மனைவியும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள். எங்களுக்கு ஒரு மகன்; ஒரு மகள்.
என் மகன் ராமனாதன் பி.எஸ்ஸி. மற்றும் எம்.பி.ஏ. முடித்து விட்டு, கல்லூரி விரிவுரையாளருக்கான அகில இந்திய தேர்விலும் (நெட்) தேர்ச்சி பெற்றான். இதன் பிறகு தனியார் மற்றும் அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தான். ‘படித்த படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே’ எனும் வேதனையும் ஏக்கமும் எங்களை வாட்டின.
இந்த நிலையில், ‘காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேக ரேந்திரர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பிரிவில், காலமுறை ஊதியத்தில், விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று நாளிதழில் விளம்பரம் ஒன்று வெளியாகி இருந்தது. எங்கள் மகனும் உடனடியாக இதற்கு விண்ணப்பித்தான். நேர்முகத் தேர்விலும் கலந்து கொண்டான். ஆனால், நீண்ட நாட்களாகியும் பதிலேதும் வரவில்லை. இதனால் மிகவும் வருந்திய என் மகனுக்குப் பல வகையிலும் ஆறுதல் கூறினோம்.
ஒரு நாள்… எப்போதும் போல, காலையில் எழுந்து காஞ்சிப் பெரியவரை வணங்கினேன். வேலை கிடைக்காமல் வருந்தும் என் மகனின் நிலை குறித்து, உணர்ச்சிபூர்வமாக மகா பெரியவரிடம் பிரார்த்தித்தேன். அப்போது தொலைபேசி ஒலித்தது.
காஞ்சி (ஏனாத்தூர்) ஸ்ரீசந்திரசேகரேந்திர பல்கலைக் கழகத்தில் இருந்து வந்த அழைப்பு தான் அது! எம்.பி.ஏ. துறையின் விரிவுரையாளராக மகன் தேர்வாகி விட்டதையும், அதற்கான உத்தரவு கூரியரில் அனுப்பப்பட்டுள்ளதையும் தொலைபேசியில் தெரிவித்தனர்.
இதைக் கேட்டதும் சிலிர்த்துப் போனேன். காஞ்சி மகா பெரியவரை உள்ளம் உருக பிரார்த்தித்த வேளையில்… அவரது பெயரால் நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில் மகனுக்கு வேலை கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்து போனோம்.
அதுமட்டுமா? அந்த மகான் வாழ்ந்த பூமியில்…சங்கர மடத்துக்கு அருகிலேயே தற்போது வசித்து வருகிறோம். மகனது வேலை, சங்கர மடத்தில் வழிபாடு… என நிம்மதியாகக் செல்கிறது ஓய்வு காலம். காஞ்சிப் பெரியவரின் கருணையே கருணை!
No comments:
Post a Comment