ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.
ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!
அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.
அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!
இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.
காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!
பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!
பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!
No comments:
Post a Comment