சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்
தொகுப்பாளர்.;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி;வானதி பதிப்பகம்.
சின்னஞ்சிறு கிராமம்.நூறு வீடுகள்.
கிராமத்தின் நடுவில் சிறிய சிவன் கோயில்.
கொஞ்சம் சொத்து இருந்தது.பக்கத்து ஊர்
சிவாசாரியார்,தினமும் ஒருகால பூஜை
செய்துவிட்டுப் போவார்.
கிராமம் இரண்டுபட்டுக் கிடந்தது. இரண்டு
வகுப்பாருக்கிடையே மனஸ்தாபம்.
கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா
ஏனோதானோவென்று நடந்தது. கோயிலுக்குச்
சொந்தமான சிறிய தேர் உண்டு.அது கொஞ்சம்
பழுது பட்டிருந்தது.கிராம மக்கள் பிளவு
பட்டிருந்ததால் தேரை செப்பனிட்டு,ஓட்டுவதற்கு
யாரும் முன்வரவில்லை.
ஒரு சாதியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
அதனால் அவர்களுக்கு உள்ளூர ஓர் அச்சம்
இருந்துகொண்டே இருந்தது.
அவர்களில் நான்கு நபர்கள் பெரியவாளிடம்
வந்தார்கள்; முறையிட்டார்கள்.
"சாமிதான் அவங்களைக் கூப்பிட்டு புத்தி சொல்லணும்....
எங்க பொம்புள்ளைங்க தனியா நடக்கிறதுக்கே
பயப்படறாங்க..." என்று வேதனையுடன் கூறினார்கள்.
பெரியவாள்,அவர்கள் கூறியதெல்லாவற்றையும்
செவியில் ஏற்றுக்கொண்டார்கள்.பின்னர் கூறினார்கள்.
"ஜாதிச் சண்டையிலே நான் தலையிட முடியாது...
நீங்க குற்றம் சொல்கிற அந்த ஜாதிக்காரர்களும்
தரிசனத்துக்கு வருகிறார்கள். அதனாலே நீங்க
சொல்றது எவ்வளவு நியாயமாக இருந்தாலும்,
நான் ஒரு கட்சிக்கு பரிந்துகொண்டு பேசக்கூடாது.."
இரண்டு நிமிஷம் மௌனம்.
"எனக்கு என்ன தோண்றதுன்னா...எப்படியாவது இந்த
வருஷம் தேரோட்டம் நடத்துங்கோ,சிவாசாரியாரை
வைச்சுண்டு,அந்த கட்சி முக்யஸ்தர்கள்கிட்ட பேசுங்கோ.."
பிரசாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்
அந்தக் கிராம மக்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பின்னர்,எதிர்க்கட்சியினர்
வந்தார்கள்.
பெரியவா,வெறும் அப்பாவியாய், "உங்க ஊர்
சிவன் கோயில்லே சைத்ரோத்ஸவம் நடக்குமே....
இந்த வருஷம் நடந்ததோ?" என்று கேட்டார்கள்.
பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரிய
மாகவும் இருந்தது. "நம்ம ஊர் திருவிழாவைப் பற்றி
சாமி ஞாபகமா கேட்கிறாங்க"என்று ஆச்சரியம்.
"சாமி தயவில நல்லா நடந்திச்சு..."
"தேர் ஓடித்தோ?"
வந்தவர்களுக்கு ஆனந்தம் தலையை எகிறிக்
கொண்டு போயிற்று.
"நல்லா ஓடிச்சு......தேர்லே ரிப்பேர் இருந்தது.
செலவு செய்யணும். மேலத்தெரு ஆசாமிங்ககிட்டே
வசதி போறல்லே. தயங்கினாங்க. அட, வடம் புடிக்க
வாங்க; நாங்க செலவு பண்றொம்னு சொன்னோம்.
நல்ல வேளையா ஒத்துக்கிட்டாங்க...அவங்க
இல்லாமல் தேரை ஓட்ட முடியாது.
"ஏன்?"
"வடவண்டை வடக்கயிற்றை அவங்கதான்
புடிக்கணும்...நாங்க தென்னண்டை வடம்...."
"தகராறு பண்ணினானோ?"
அவர்களுக்கு வெட்கிப் போய்விட்டது.
"சின்னப் புள்ளைங்க,ஏதாவது பேசிடுதங்க.
அதனால் அவங்க மனசிலே கொஞ்சம் இது
இருந்துதுங்க...தயங்கிக்கிட்டேதான் கேட்டோம்.
அவங்களும் ஒத்துக்கிட்டாங்க."
"இப்போ அவா மனசிலே இது இருக்கா?"
அதெல்லாம் தேர்ச்சக்கரத்திலே அடிபட்டுப்
போச்சுங்க..."
பெரியவாள் அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு
அவர்களுக்கு மாலை போடச் சொன்னார்கள்.
பிரசாதம் வழங்கினார்கள்.தனியாகப் பிரசாதம்
கட்டச் சொல்லி, வந்தவர்களிடம் கொடுத்து,
"இது மேலத் தெருக்காரர்களுக்கு" என்றார்கள்.
அவர்களும் தயக்கமில்லாமல் வாங்கிக் கொண்டார்கள்.
அந்தக் கிராமத்தில் சில ஆண்டுகளாக, தேர்
ஓடவில்லை.தேரை ஓட்டுவதானால் ஊர் மக்கள்
எல்லோரும்-எல்லா வகுப்பினரும் ஒருமித்து
செயல்பட வேண்டும்.
அப்படி நெருங்கி வரும்போது மனத்திலுள்ள இது
தானாகவே மறைந்துபோகும் சாத்தியக்கூறு உண்டு-
-இதெல்லாம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?
மகாப் பெரியவாள் ஒரு Super diplomat!
நோவு இல்லாமல் முள்ளை எடுத்துவிடுவார்கள்.