(பல்கிவாலா)
செப்டம்பர் 05,2016,-தினமலர்
காஞ்சிப் பெரியவரின் பக்தர்களில் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நானி பல்கிவாலா. பார்சி இனத்தைச் சேர்ந்த இவர் இந்து மதத்தின் மீதும், வேதங்கள் மீதும் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.
பெரியவரின் 88வது வயது நிறைவு விழாவில் பங்கேற்ற பல்கிவாலா, “மகா சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி மொழிகளில் உரையாடுவதைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கும். 13வயதில் சந்நியாசம் மேற்கொண்ட அவர், தன் 25வது வயதில் இந்தியா முழுவதும் நடைப் பயணமாகவே நாடெங்கும் சென்றார்.
இப்போதும் கூட பெரியவர் மகாராஷ்டிராவின் சதாராவில் தான் தங்கியிருக்கிறார். மக்கள் நலனுக்காக பாடுபடும் இவரைப் போல ஆன்மிகப் பெரியவரை வேறெங்கும் நான் கண்டதில்லை,” என்று குறிப்பிட்டார்.
பல்கிவாலா அமெரிக்காவின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டு, வாஷிங்டன் புறப்படும் முன் பெரியவரைச் சந்திக்க வந்தார். அப்போது சுவாமி காஞ்சிபுரத்திற்கு வெளியே ஒரு குடிலில் தங்கியிருந்தார். தினமும் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கும் பெரியவர், மற்ற நேரத்தில் ஏதாவது ஒரு பயனுள்ள பணியில் ஈடுபடுவதையும், ஒருவேளை மட்டுமே உணவு உண்பதையும் பார்த்தார்.
“தள்ளாத வயதிலும் ஒரு துறவி இப்படி சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டால் வியப்பாகத் தான் இருக்கிறது. மகான்களின் சக்தி மனதில் உருவாகிறது என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.
அரவிந்தர் கூறியதைப் போல, மகா சுவாமிகளைப் போன்றவர்கள் வாழும் இந்த தேசத்திற்கு என்றும் எந்த நாட்டினராலும் தீங்கு விளைவிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்
No comments:
Post a Comment