( “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” )
ஆகஸ்ட் 25,2016,.தினமலர்
காஞ்சிப்பெரியவரின் சீடர் குமரேசன் கூறிய உண்மைச் சம்பவம் இது.
திருக்கோவிலூரைச் சேர்ந்த பெரியவரின் பக்தரான மணி, தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்திருந்தார்.
பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தன்று தவறாமல் விரதமிருந்து பூஜை செய்வது அவரது வழக்கம். முடிந்தால் அனுஷத்தன்று காஞ்சிப் பெரியவரை தரிசிக்கவும் செய்வார்.
மணிக்கு இரு குழந்தைகள். மூத்தவள் பெண். இளையவன் பையன். பெண்ணுக்குத் திருமணம் முடிந்து பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். பையன் படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தான். இந்நிலையில் தான், மணி தம்பதி பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அன்று அனுஷம் என்பதால் மடத்தில் பெருங்கூட்டம் காத்திருந்தது. வீட்டில் நிறைமாத கர்ப்பிணி தனியாக இருக்கிறாளே என்ற எண்ணம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்!
காஞ்சிப்பெரியவர் சீடர்களிடம் வரிசையில் நிற்கும் திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” என்று சொல்லிக்கொண்டே அட்சதை கொடுத்து ஆசியளித்தார்.
தாமதம் செய்யாமல் மணியும் உடனே டாக்சியில் திருக்கோவிலூர் திரும்பினர்.
வீட்டிற்குள் நுழையும் போதே அடுத்த வீட்டுப் பெண்கள் ஓடி வந்தனர். “உங்களுக்கு இப்ப தான் பேரன் பிறந்திருக்கான். சுகப்பிரசவம் தான்” என்று சொல்லி விட்டு 'தந்தி ஒண்ணு வந்திருக்கு' என்று சொல்லி அதையும் கையில் கொடுத்தனர். அதைப் பிரித்து பார்த்த மணியின் கண்கள் அகல விரிந்தன. மகனுக்கு ரயில்வே துறையில் நாக்பூரில் சேர்வதற்கான பணி குறித்து தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மகிழ்ச்சியுடன் மணி பேரக்குழந்தையைப் பார்க்கச் சென்றார். தாத்தாவிடம், 'எல்லாம் காஞ்சிப்பெரியவரின் கருணையே' என்று அந்தக் குழந்தை சொல்வது போலிருந்தது. குழந்தைக்கு 'சந்திரசேகரன்' (பெரியவரை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைப்பது வழக்கம்) என்று பெயரிட்டு வாழ்த்தினார். வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.
இதே போலவே, வேறொரு அற்புதமும் பெரியவரால் நிகழ்ந்தது.
ஒருமுறை பெரியவரை தரிசிக்க பெங்களூருவில் இருந்து பணக்காரர் ஒருவர் வந்தார். பழம், பூ, பட்டுப்புடவை, திருமாங்கல்யம் ஆகியவற்றை தாம்பாளத்தில் வைத்தபடி அவரது மனைவி உடன் நின்றாள்.
பெரியவரை வணங்கிய அவர்கள், “சுவாமி... யாராவது ஒரு ஏழைப் பெண்ணுக்கு இதை அளிக்க விரும்புகிறோம்,” என தெரிவித்தனர்.
அதே நேரத்தில், திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலைச் சேர்ந்த ஏழை சமையல்காரர் ஒருவர் தன் மனைவி, மகளுடன் அங்கு வந்திருந்தார். தன் மகளுக்கு திருமணத் தேதி குறித்து விட்டதை தெரிவித்து ஆசியளிக்கும்படி வேண்டினார். அப்போது பணக்காரரை அழைத்த பெரியவர், “திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியே இவாளை இங்க அனுப்பியிருக்கா... அதுக்கு காஞ்சி காமாட்சி வழிகாட்டியிருக்கா... கொடுக்க விரும்பினதை இந்த பொண்ணுக்குச் சீதனமாக கொடுங்கோ” என்று சொல்லி ஆசியளித்தார்.
பணக்காரரும் மகிழ்ச்சியுடன் திருமாங்கல்யம் உள்ளிட்ட அனைத்தையும் அவரிடம் கொடுத்தார். அப்போது அந்தப் பெண்ணை தீர்க்க சுமங்கலியாக வாழ பெரியவர் வாழ்த்தினார்.
No comments:
Post a Comment