Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Friday, September 30, 2016

"தலைப்பாகை சாமியார்!" (ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

"பெண்ணுக்குக் கல்யாணம். மடத்திலேர்ந்து
ஏதாவது உதவி செய்யணும்...."

ஏழைத் தம்பதிகள், அம்மாள் கழுத்தில் மஞ்சள் சரடு,
மெல்லியதாக ஒரு வடம் செயின்.

இவர்களுக்கு உதவி செய்யவேன்டியதுதான்.

"நான் ஒரு சந்நியாசி, ஒரு பைசாவைக்கூட கையால்
தொட்டதில்லை.என்னிடம் போய் பண உதவி
கேட்கிறாயே!" என்று வெளிப்படையாகப் பேசிக்
கொண்டிருக்கும்போதே அந்தரங்கத்தில் திட்டம்.

அதேசமயம், காமாட்சி கோயில் தலைமை
ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்தார். முதலில்,
பெரியவாளுக்குப் பரிவட்டம் கட்டினார். பின்னர்,
குங்குமப் பிரசாதம் சமர்ப்பித்தார்.

பெரியவாள் பரிவட்டத்தைக் கழற்றி, பெண்
கல்யாணத்துக்கு உதவி கேட்டு வந்தவரை
சுட்டிக்காட்டி "அவருக்குக் கட்டு" என்று
உத்தரவிட்டார்கள்.

யாசகம் கேட்டு வந்தவருக்கு அடித்தது யோகம்!

பெரியவாள் குங்குமப் பிரசாதத்தையும் அவரிடமே
கொடுத்து,"எல்லோருக்கும் நீயே கொடு"என்றார்கள்.

திமுதிமுவென்று மார்வாடிக் கூட்டம் உள்ளே
நுழைந்தது. திருத்தலப் பயணம்.வாடகை வாகனத்தில்
வந்திருந்தார்கள்.

பரிவட்டத்துடன், எதிரே குங்குமப் பிரசாதத்துடன்,
உட்கார்ந்திருந்தவர்தான், ஸ்ரீ காமகோடி பீடாதிபதி
என்று நினைத்து, காலில் விழுந்து, இருநூறும்,
முன்னூறுமாகக் காணிக்கை செலுத்தினார்கள்.
யாசகர் (பெரியவா முன்னரே சொல்லியிருந்தபடி)
எல்லோருக்கும் குங்குமம் இட்டுவிட்டார்.

இந்த லீலா நாடகம் நடந்து முடிந்ததும்,பெரியவாள்
எழுந்து வந்து, மார்வாடிகளிடம் பேசி,ஆசீர்வதித்து,
பிரசாதமாகப் பழங்களைக் கொடுத்தார்கள்.

"ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை"
உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய
பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!

Thursday, September 29, 2016

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன""

("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!")

சொன்ன்வர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர்குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!

பெரியவாள் சொன்னார்கள்:

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.

"காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.

"ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

"ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

"ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!"

கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்" என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

"சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.

"காலையில், இரண்டு நிமிஷம் "ராம, ராம" என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம்
"சிவ, சிவ" ன்னு சொலுங்கோ..."

"அப்படியே செய்கிறோம்" என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், "பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா" என்றார்கள்.

அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி லெக்சர்!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்".

அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

Wednesday, September 28, 2016

"வருஷம் போனால் என்ன! நல்ல வயசும் ஆனால் என்ன!"

(பல்கிவாலா)

செப்டம்பர் 05,2016,-தினமலர்

காஞ்சிப் பெரியவரின் பக்தர்களில் புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் உண்டு. அதில் முக்கியமானவர் நானி பல்கிவாலா. பார்சி இனத்தைச் சேர்ந்த இவர் இந்து மதத்தின் மீதும், வேதங்கள் மீதும் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.
பெரியவரின் 88வது வயது நிறைவு விழாவில் பங்கேற்ற பல்கிவாலா, “மகா சுவாமிகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி மொழிகளில் உரையாடுவதைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கும். 13வயதில் சந்நியாசம் மேற்கொண்ட அவர், தன் 25வது வயதில் இந்தியா முழுவதும் நடைப் பயணமாகவே நாடெங்கும் சென்றார்.
இப்போதும் கூட பெரியவர் மகாராஷ்டிராவின் சதாராவில் தான் தங்கியிருக்கிறார். மக்கள் நலனுக்காக பாடுபடும் இவரைப் போல ஆன்மிகப் பெரியவரை வேறெங்கும் நான் கண்டதில்லை,” என்று குறிப்பிட்டார்.

பல்கிவாலா அமெரிக்காவின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டு, வாஷிங்டன் புறப்படும் முன் பெரியவரைச் சந்திக்க வந்தார். அப்போது சுவாமி காஞ்சிபுரத்திற்கு வெளியே ஒரு குடிலில் தங்கியிருந்தார். தினமும் மூன்று மணிநேரம் மட்டுமே தூங்கும் பெரியவர், மற்ற நேரத்தில் ஏதாவது ஒரு பயனுள்ள பணியில் ஈடுபடுவதையும், ஒருவேளை மட்டுமே உணவு உண்பதையும் பார்த்தார்.

“தள்ளாத வயதிலும் ஒரு துறவி இப்படி சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டால் வியப்பாகத் தான் இருக்கிறது. மகான்களின் சக்தி மனதில் உருவாகிறது என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

அரவிந்தர் கூறியதைப் போல, மகா சுவாமிகளைப் போன்றவர்கள் வாழும் இந்த தேசத்திற்கு என்றும் எந்த நாட்டினராலும் தீங்கு விளைவிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்

Tuesday, September 27, 2016

"வெறும் கட்டைதான் - காஷ்டம்!"

( சமயப்பற்றுள்ள முஸ்லிம்களுக்காக தன் காஷ்ட
மௌனத்தை சிறிது நேரம் விட்ட மகா பெரியவா!)


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த
எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு
வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள்
என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும்,எளிய உடை
(வேஷ்டி,குல்லாய்) அணிந்திருந்தார்கள்.

"பெரிய பெரிய தேசியத் தலைவர்கள் எல்லாம்
இந்த மஹந்திடம் (மஹானிடம்) ஆசிபெற்றுச் 
சென்றிருக்கிறார்கள். என்று கேள்விப்பட்டோம்.
அத்தகைய மஹந்தை(மகானை) தரிசனம் செய்ய 
வந்திருக்கிறோம்.

பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்.
ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது.
ஏதேனும் சொன்னால் கேட்டுக்கொண்டிருப்பார்களே
தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.

முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து பக்தியோடு
வந்திருக்கிறார்கள்.

"இன்று பெரியவாள் பேசமாட்டார்கள்" என்று சொல்லி,
ஏமாற்றத்துடன் அவர்களை அனுப்பி வைப்பது
மகா - அநியாயம். ஆனால், பெரியவாளிடம்
யார் போய் சொல்வது?

பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர்,
நியாயமான துணிச்சல்காரர்.

"வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள்
சமயப் பற்றுள்ளவர்கள் மாதிரி இருக்கு.ரொம்பவும்
சாந்தமா இருக்கா. பெரியவாளிடம் ஆசீர்வாதம்
வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா..."

இரண்டு நிமிஷம் கழித்து பெரியவாள் வெளியே வந்தார்கள்.
"ஆயியே....ஆயியே...." என்று அவர்களை அழைத்து
உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும்
உரையாடினார்கள்.

வந்தவர்கள், " நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையில்
சிக்கியிருக்கிறோம்.பெரியவா அனுக்ரஹம் வேணும்"
என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

பெரியவாள் சொன்னார்கள்.

"நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும்
ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான்
மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க
வந்திருக்கிறீர்கள்.அதனாலேதான் உங்களிடம் மட்டும்
பேசுவதற்காக மௌனத்தை சிறிது நேரம் விட்டுவிட்டேன்!
உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவன் காப்பாற்றுவார்.."

அந்த எண்மரில், முதியவரான ஒருவருக்கு ஒரு 
பச்சை நிறச் சால்வையும்,மற்றவர்களுக்குப் பழமும் 
கொடுத்தார்கள்.

அவர்கள் ஆனந்தம் பொங்க திரும்பிச் சென்றார்கள்.
அப்புறம் பெரியவாளின் மௌன விரதம் தொடர்ந்தது.!

வெறும் கட்டைதான் - காஷ்டம்!

Monday, September 26, 2016

'சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!'

(என்ன, ஆறுதல்! என்ன,கருணை!)



சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கிராமத்தில் முகாம். விவசாயக் கூலி வேலை
செய்யும் ஒரு பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள்.
பெரியவாள் எதிரில் கையைக் கூப்பிக்கொண்டு நின்றாள்.
நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

"என்ன வேலை பண்றே?"

"வயல் வேலைக்குப் போறேன் சாமி. ஆறு பசங்கள்,
மாமியா, எங்கிட்ட இருக்கு. காலையில் சோறாக்கி
வெச்சுட்டுப் போயிடுவேன். இருட்டினப்புறம்தான்
வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியைக் கும்பிடறது?
கோயிலுக்குப் போறது? உடம்பும் களைச்சுப் போவுது.
சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி....."

பெரியவாளின் திருக்கண்கள் கருணையால்
நிரம்பியிருந்தன.

"சாமி கும்பிடணும்னு நினைக்கிறயே, அதுவே
சாமி கும்பிட்ட மாதிரிதான்.!.

"காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே
சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடு.சாயங்காலம்
விளக்கு வெச்சவுடனே மேற்கு திக்குப் பார்த்து
ஒரு கும்பிடு போடு.

" நீ கர்மயோகி.  ஒரு விநாடி நேரம் தெய்வத்தை
நினைச்சாலே போறும்-சகல புண்ணியமும் கிடைச்சுடும்..." 

பெண்மணி கண்களை துடைத்துக் கொண்டாள்.
'சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!'
என்ன, ஆறுதல்! என்ன,கருணை!.

பெரியவாள் பலவகையான பழங்களை அந்தப் 
பெண்மணிக்குக் கொடுக்கச் சொன்னார்கள்.

தீனமாக வந்த மங்கை திரும்பிப் போகும்போது,
அரசியாக - மங்கையர்க்கரசியாகப் போனாள்.

பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் -
சகல புண்ணியமும் கிடைச்சுடும்!.


Sunday, September 25, 2016

"தூங்காதே, தம்பி, தூங்காதே!"

("சினிமா பாட்டிலும் சில நல்லகருத்துகள் இருக்கே!")


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பாரதத்தின் மிகச்சிறந்த பாடகி. பற்பல விருதுகள்
பெற்றவர். உலக அளவில் பாராட்டுப் பெற்றவர்.

பெரியவாளுக்குக் கேட்கும்படியாக, கர்நாடக
சங்கீதத்தில் சில கீர்த்தனைகள் பாடினார்.
பக்திப் பரவசத்துடன்.

சிறிது நேரத்துக்குப் பின், அவருக்கு பிரசாதம்
கொடுத்து அனுப்பி வைத்தார்கள் பெரியவா.

கூட்டத்திலிருந்த ஆறு வயதுக் குழந்தை ஒன்று
பெரியவாளிடம் வந்து, "நானும் பாட்டுப் பாடறேன்"
என்று சொல்லிவிட்டு, உடனே ஒரு சினிமாப் 
பாட்டை பாட ஆரம்பித்துவிட்டது.

சற்றுத் தொலைவிலிருந்து அந்த குழந்தை 
பாடியதால், பெரியவாள் செவிகளில் விழவில்லை.

"என்ன பாட்டுப் பாடினாள்?"
என்று அருகிலிருந்தவர்களைக் கேட்டார்கள்.

"ஏதோ சினிமாப் பாட்டு...." என்று அசிரத்தையாகப்
பதில் வந்தது.

"அதைப் பாடிக் காட்டேன்..."

"அது எம்.ஜி.ஆர். பாட்டு,
தூங்காதே, தம்பி, தூங்காதேன்னு வரும்."

ஒரு நிமிடம் கழித்து, "சினிமா பாட்டிலும் சில நல்ல
கருத்துகள் இருக்கே!" என்றார்கள் மகா சுவாமிகள்.

Saturday, September 24, 2016

"நான் வெறும் Skin Specialist; பெரியவா, Kin Specialist;"

"நான் வெறும் Skin Specialist; பெரியவா, Kin Specialist;"(உறவு முறையை நன்கு பிணைத்து வைப்பவர்)

(நான் தோல் டாக்டர் - தோல் நோய்களை மட்டும் நீக்குபவன்;
அவர்கள் Soul doctor - ஆத்மாவைப் பிடிக்கும் சம்சாரப்
பிணியை அறவே நீக்குபவர்".)

சொன்னவர்-டாக்டர் எம்.நடராஜன்.சென்னை-10
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
 புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நான் லண்டன் மருத்துவக் கல்லூரியில் சிறப்புக்
கல்வி பெற்றவன். பொதுவாகவே, சில மாதங்கள்
இங்கிலாந்தில் இருந்துவிட்டுத் திரும்பி வந்தவர்கள்,
நம் நாட்டுக் கலாசாரம் பற்றி இழிவாகப் பேசுவார்கள்.

யார் செய்த புண்ணியத்தாலோ, எனக்கு அப்படிப்பட்ட
நிலை வரவில்லை. நம்து ஆசார - அனுஷ்டானங்கள்,
பூஜை - புனஸ்காரங்களை முழுமையாகப் பின்பற்ற
முடியாவிட்டாலும்,கூடியவரை அனுஷ்டானத்தில்
கொண்டு வந்தேன்.அதன் விளைவாக ஸ்ரீவித்யா
உபாஸனையில் ஈடுபட்டு, பூஜை - ஹோமங்கள்
செய்து வந்தேன்.

பெரியவாள் தரிசனத்துக்கு எப்போது போனாலும்,
என் சொந்த வாழ்க்கை பற்றியும் பெரியவாள்
விசாரிப்பார்கள்.

"நீ ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பாயா?"
என்று கேட்பார்கள்.

"அது சரி, நீயோ மேல்நாட்டில் படித்தவன். அங்கே,
வாழ்க்கைக்குப் பல சௌகரியங்களைக்
கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகளை அனுபவித்துவிட்டு
வந்த நீ எப்படி வைதிக அனுஷ்டானங்களில் ஈடுபட்டாய்?"

"அங்குள்ள மக்களின் வாழ்க்கை, இயந்திர ஓட்டம் தான்;
வெறும் உடலின்பம், பணம், வசதிகள் தான். நமது வாழ்க்கை
முறையில் அமைதி இருக்கிறது. இன்னும் மனிதப் பண்பாடு
இருக்கிறது. இன்னும் பசுமையாக இருக்கும் கலாசாரம்,
ஆன்மிகம் இருக்கிறது. நான் இங்கேயே இருந்திருந்தால் கூட,
ஆன்மிகத்தில் எனக்கு இவ்வளவு ஈடுபாடு வந்திருக்காது.
வெளிநாட்டு வாசம், எனக்கு ஒரு வரப்பிரசாதம்!"

பெரியவாளுக்கு என்னுடைய பதில் ரொம்பவும் திருப்தி
அளித்திருக்க வேண்டும். ஒரு ஆப்பிளை எடுத்து பந்தாடி,
என்னை Catch பிடிக்க வைத்தார்கள்.

"நான் அவர்களுடைய திருவடிகளை Catch செய்து 
எத்தனையோஆண்டுகள் ஆகிவிட்டன. பெரியவா
 கனவிலாவது பந்தைப் போட்டுக்கொண்டே இருக்க 
வேண்டும். பழத்தை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

நான் வெறும் Skin Specialist; பெரியவா, Kin Specialist;
(உறவு முறையை நன்கு பிணைத்து வைப்பவர்)

நான் தோல் டாக்டர் - தோல் நோய்களை மட்டும் நீக்குபவன்;
அவர்கள் Soul doctor - ஆத்மாவைப் பிடிக்கும் சம்சாரப்
பிணியை அறவே நீக்குபவர்".

Friday, September 23, 2016

விநாயகரும் மாணிக்கவாசகரும் (வெயில் காத்த பிள்ளையார்)

(ரொம்ப பேருக்கு தெரியாத கதை-பெரியவா)

(நன்றி- கல்கி+தெய்வத்தின் குரல்)
தேவாரம் பாடிய மூவரைப் பற்றி விக்நேச்வர ஸம்பந்தமாக இவ்வளவு!ஆனால் மாணிக்கவாசகர் அவருடைய திருவாசகத்திலே பிள்ளையாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலே இவர் நெருக்கமா ஸம்பந்தப் பட்டிருக்கிறார். ரொம்ப பேருக்குத் தெரியாத கதை சொல்கிறேன்.

 பழங்காலத்திலே பாண்டிய நாட்டிலேயிருந்து சோழ தேசம் போகிறதற்கு ஆவுடையார் கோவில் வழியாகத்தான் நல்ல சாலை இருந்தது. மாணிக்கவாசகர் காலத்தில் ஆவுடையார் கோவிலுக்கு திருப்பெருந்துறை என்று பெயர். அங்கே வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஒரு சத்திரம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் வானம் பார்க்க, அதாவது வரையில்லாமல், ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். வெயிலில் வந்த யாத்ரிகர்கள் ஒரு கூரையின் கீழ் 'ரெஸ்ட்' பண்ணிக் கொள்ளும் சத்திரத்துக்குப் பக்கத்திலேயே இப்படி அத்தனை வெயிலையும் தன் மேலே வாங்கிக் கொள்கிற ஒரு பிள்ளையார்!இன்னும் சில இடங்களிலும் இப்படி உண்டு. அங்கேயெல்லாம் 'வெயில் உகந்த பிள்ளையார்' என்று அவருக்குப் பேர் சொல்வார்கள். இங்கேயோ 'வெயில் காத்த பிள்ளையார்' என்று பேர். என்ன வித்யாஸமென்றால் மற்ற இடங்களில் ஜனங்கள் அநுபவிக்கிற வெயில் கஷ்டத்தை நாமும் அவர்களோடு சேர்ந்து அநுபவிப்போமே என்று 'ஸிம்பதி'யிலே அவராக வெயிலை ப்ரியப்பட்டு உகந்து ஏற்றுக் கொள்கிறார். இங்கேயோ அதற்கு மேலே ஒரு படி போய், சத்திரத்தில் தங்கினவர்கள் அப்புறம் யாத்திரை தொடரும் போது வெயிலால் கஷ்டப்படாமல் அந்த வெயிலை அவர்களுக்குமாகச் சேர்த்து vicarious suffering என்கிறார்களே, அப்படித் தாமே வாங்கிக்கொண்டு, அவர்களை உஷ்ணத்திலிருந்து காப்பாற்றுகிறார். அதனால் 'வெயில் காத்த பிள்ளையார்' என்று பெயர் பெற்றிருக்கிறார். பாண்டிய ராஜாவுக்காகத் குதிரை வாங்கப் போன மந்திரி திருவாதவூரர் அப்புறம் மாணிக்கவாசகர் என்ற மஹானான கதை தெரிந்திருக்கும். அவர் குதிரை வாங்கப் போகிற வழியிலே அந்தத் திருப்பெருந்துறைச் சத்திரத்தில்தான் ராத் தங்கினார். அப்போது அவருடைய ஸ்வப்பனத்திலே வெயில் காத்த பிள்ளையார் தோன்றினார். வெயிலோ, suffering -ஆ எதுவும் தெரியாத பரப்ரஹ்மமே தாம் என்று வாதவூரருக்குத் தெரிவிக்க நினைத்து, தான் ஒருத்தரே ப்ரஹ்ம - விஷ்ணு -ருத்ரர் ஆகிய மூன்று ரூபமாக மாறி அவருக்குக்காட்சி கொடுத்தார். கொடுத்த அப்புறம், "இந்த ஊரிலே பரப்ரஹ்மத்துக்குக் கோவில் கட்டு. அரூபமாகவும் நிர்குணமாகவும் இருக்கிற தத்வத்துக்கு எப்படிக் கோவில் கட்டுவது என்று கேட்காதே. அதற்கு நேரடியாகக் கோவில் கட்ட முடியாதுதான் ஆனாலும் அப்படி ஒரு தத்வம் உண்டு என்று ஸகல ஜனங்களுக்கும் துளியாவது நினைப்பு வர வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அதை 'ஸிம்பாலிக்'காக (உருவகமாக) ப் புரிந்து கொள்ளும்படி ஒரு கோவில் கட்டச் சொல்கிறேன்.
"ப்ரஹ்மம் அருவம். நாம் பார்க்கிற மூர்த்திகளுக்குள் சிவலிங்கம் தவிர பாக்கி எல்லாம் உருவம். சிவ லிங்கத்துக்கு அவயவங்கள் கொண்ட உருவமும் இல்லை, அது அருவமுமில்லாமல் ஒரு நிள உருண்டையாயிருக்கிறது. அதனால் அருவுருவம் என்று அதற்குப் பேர். சிவலிங்கத்துக்குப் பீடம் இருக்கிறதே, ஆவடையார் என்று, அதுவே ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்ர ஸ்வரூபம். அதற்கு மேலே சிவம் என்கிற அருவ ப்ரஹ்மம் இருப்பதை ஸிம்பாலிக்காகக் காட்டத்தான் லிங்கம் வைத்தது.
"ஆனால் உருவ தத்வத்திலேயே ருசியுள்ள ஜனங்கள் அதை மறந்துவிட்டு லிங்கத்தையும் ஒரு உருவ மூர்த்திதான் என்று நினைக்கிறார்கள். பொது ஜனங்கள் உள்ள ஸ்திதியில் அப்படி நினைப்பதுதான் இயற்கை. அதனால் மற்ற கோவில்களிலெல்லாம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். ஆனாலும், இத்தனாம் பெரியதேசத்தில் ஒரு இடத்திலாவது வேதத்தின் பரம தாத்பர்யமான பரப்ரஹ்மத்தை, அருவப் பரம்பொருளை அழுத்தமாக ஞாபகபப்படுத்த ஒரு ஆலயம் வேண்டாமா? உருவம் என்பதிலிருந்து அருவுருவம் என்கிற வரையில் கொண்டுவிட்டிருக்கிற ஈச்வரனுக்குத்தான் அதற்கும் அடுத்த ஸ்டேஜான அருவமாக வைத்தும் கோவில் கட்டினால் பொருத்தமாயிருக்கும், ஜனங்களின் மனோபாவத்துக்கும் அதுவே ஸரியாய் வரும்.
"ஆனபடியால்  இங்கே ஆவுடையாரை மட்டும் மூலஸ்தானத்தில வைத்து, அதற்கு மேல் லிங்கம் ப்ரதிஷ்டை பண்ணாமல் காலியாகவே விட்டுக் கோவில் கட்டு. காலி என்பதால் சூன்யமில்லை, அதுதான் நம் இத்தனை ஜீவாத்மாக்களுக்கும் மூலம் என்று ஜனங்களுக்குப் புரிவிப்பதாக அதற்கு ஆத்மாநாதஸ்வாமி என்று பெயர் வை.
"நான் சொன்னேனே என்று இப்பவே காரியத்தில் இறங்காதே!இங்கே ஒரு குருந்த மரத்தின் கீழே என் தகப்பனார் குரு ஸ்வரூபத்தில் வந்து ஆத்மாவை c அநுபவத்தில் தெரிந்து கொள்ளும்படியாக - அதாவது நம்முடைய ஆத்மா பரப்ரஹ்மமே என்பதை c அநுபவமாக அறியும்படி - உபதேசிப்பார். அதற்கப்புறமே ஆலய நிர்மாணம் பண்ணு" என்று சொல்லி விட்டுப் பிள்ளையார் மறைந்துவிட்டார்.
இப்படி ஒரு ஆனை சொன்னதன் மேல்தான் குதிரைக்கான பணத்தில் மாட்டுக்குக் கோவில் எழும்பிற்று!ஆவுடையார் என்பது மாடுதான், பரமேச்வரனின் ரிஷபம்!ஆ-மாடு, உடையார் என்றால் ஸ்வாமி. கோவில் கல்வெட்டுக்களில் பார்த்தால் 'ஸ்வாமி' என்பதற்குத் தமிழ் வார்த்தையாக 'உடையார்' என்றே போட்டிருக்கும். ராஜராஜீச்சுரமுடையார், திருநாசேக்சுரமுடையார் என்கிற மாதிரி. மற்ற மாடுகளுக்கெல்லாம் தலைமையில் அவற்றுக்கு ஸ்வாமியாக உள்ள ரிஷபந்தான் ஆவடையார். மற்ற ஊர்களில் அந்த ரிஷபத்தின் மேலே லிங்க ரூபத்தில் பரமேச்வரன். ஜீவாத்மாக்களான அத்தனை பசுக்களுக்குள்ளும் உடையாரான பசுபதி மாட்டு ஜாதிப் பசுபதியான ஆவுடையார் மேலே உட்கார்ந்திருப்பார்.
பிள்ளையார் சொன்னபடியே அப்புறம் ப்ராம்மண குருவாக ஈச்ரவன் வர, அவரடம் வாதவுரரர் உபதேசம் பெற்றுக் கொண்ட ஆவுடையாரை மட்டும் வைத்துக் கோவில் கட்டினார். ஞானாபூதி பெற்றவுடனேயே அவருக்கு மணி மயியாகத்தான் திருவாசகம் பாடவந்தால் மாணிக்கவாசகர் என்ற புதுப் பெயரும் உண்டாகி விட்டது.
அரூப ஸ்வாமி ஆவுடையார் மட்டுமே மூலஸ்தானத்தில் இருந்தால் ஜனங்கள் அந்தத திருப்பெருந்தறைக்கும் 'ஆவுடையார் கோவில்' என்று புதப் பெயர் வைத்துவிட்டார்கள்.
அம்பாளும் அங்கே அரூபந்தான். இவர் ஆத்மநாதர் என்றால் அவள் யோகாம்பிகை.
இப்படி அவர்கள் அரூபமாக விட்டதற்கு வட்டியும் முதலுமாக மாணிக்கவாகர் என்ன பண்ணினாரென்றால் கோவில் கட்டச் சொன்ன பிள்ளையாருக்கே அங்கே மூன்று மூர்த்திகள் சேர்ந்தாற்போல் வைத்து விட்டார். அவர் இவருக்கு மும்மூர்த்திகளாக மூன்று ரூபத்தில் தரிசனம் தந்தால் இவரும் அவருக்கு மூன்று மூர்த்தி வைத்துவிட்டார் - மூம்மூர்த்திகளும் அவரே என்று காட்டுவதாக.
இரட்டைப் பிள்ளையார் பல ஊரில் உண்டு. ஆவுடையார் கோவிலில் மட்டும் மூன்று பிள்ளையார்!

Thursday, September 22, 2016

பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?

[எஸ்.ரமணி அண்ணா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் தமிழில் டைப் செய்யப்பட்டது]

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....

தஞ்சாவூர்,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம்,கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி "பூர்ணகும்ப" மரியாதையுடன்ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம்.சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார். அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். பிறகு, "பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம். நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம்.சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்!" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், "கோயில் எங்கே இருக்கு?" என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு. வந்து அருள் பண்ணணும்!" என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள-பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள்பிரவேசித்தார். கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம்,


"கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?" என்று கேட்டார்.

"இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.

"அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; "எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு, 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!"

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

"அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத்திறந்து நன்னா பாத்துண்ருக்காரே..
இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்பார்த்து பண்ணிடுங்கோ."

உடனே பஞ்சாயத்துத் தலைவர், "இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே.." என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே!கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார்.

சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று கூறினார். குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர்.அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது.

சிற்பியும் அடித்துச் சொன்னார்; "இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச்சதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க.."

மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் "மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார். இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..க்ஷேமம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை' கூடியது. ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார்.

"ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான்இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே.நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பாகவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க.... இப்ப என்ன பண்றது?"

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன்ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?" என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் "தலைவரே! கோயில் விநாயகர் சிலைபத்தி எனக்கு ஒரு விஷயம்தெரியும்..,சொல்லலாங்களா?" என்று கேட்டான் பவ்யமாக.

"ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம்காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; "ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி[ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க!

எப்படீன்னா ஒரு பத்துநாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில்நேரமுங்க.இதோஒக்காந்துருக்காரே..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலைபண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ணதொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

"இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத்தொறப்பாருன்'ன்னு சொல்லிகிட்டே
,'புள்ளையாரே,கண்ணத்தொற..புள்ளையாரே,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும்ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின்ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.."புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு"னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த
விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர்கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில்
ஆழ்ந்தது. சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரைவிழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார்.

மிக அழகாக "நேத்ரோன் மீலனம்" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில்பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.

அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர். அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; "புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா
தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ? போங்கோ....போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்."

Wednesday, September 21, 2016

"பிள்ளையாருiக்குத் தேங்காய் உடைப்பது,தோப்புக்கரணம், எதற்காக?

*அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.
"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.)

தெய்வத்தின் (பெரியவா) குரலில்.
ரா.கணபதியின் எழுத்தில்.
.
விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.
பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.
சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்" என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, 'வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்' என்று தெரிந்தது.
அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடையசக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.
"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.
விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக

Tuesday, September 20, 2016

"காலடி சங்கரனே கைலாஸ சங்கரன்"

("கைலாஸ சங்கரன் ரதத்தில் போனபோது எங்கே அச்சு
முறிந்ததோ, அதே ஊரில் காலடி சங்கரர் லாரியில்
போகிறபோது ஆக்ஸில் உடைந்திருப்பதால் இவர்
அவனுடைய அவதாரமே என்றும் நிரூபணம் ஆகிறது!"
என்று பின்னரும் ஒரு பொருத்தம் காட்டிவிட்டார்.)
.
கட்டுரையாளர்;ரா.கணபதி
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ராமேச்வரத்தில் அப்போது நிர்மாணமாகி வந்த
ஸ்ரீ சங்கரமடத்துக்குச் சென்னையிலிருந்து சிலர்
விக்கிரகங்களுடன் சென்ற லாரி வழியே 'ஆக்ஸில்'
உடைந்து நின்று விட்டது. இளையாத்தங்குடியிலிருந்த
பெரியவாளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

"எந்த இடத்தில் நின்று விட்டது" என்று வினவுகிறார்.

"அச்சரப்பாக்கத்தில்" என்று  பதில் வருகிறது.

பெரியவாள் முகத்தில் புன்னகை விரிகிறது.
இடுக்கண் வருங்கால் நகைக்கிறார்.

இளையாத்தங்குடிப் பிள்ளையாருக்குத் தாமே
தள்ளாத வயதில் துள்ளும் பாலகனைப் போல்
முட்டிக்கால் தோப்புக்கரணம் போடுகிறார்.

ராமேச்ர விஷயம் விக்கினமின்றி நடைபெறவே
விக்னேஸ்வர வழிபாடு என்பது வெளிப்படை.

மூர்த்தி வழிபாட்டுக்கு மேம்பட்ட முற்றிய அருள்
நிலையில் இருந்து இவரே இடையூற்றைத்
தீர்த்துவிடலாம்.ஆயினும் விக்கினம் தீர்க்கவே
ஏற்பட்ட தெய்வத்தை, மானுடருக்கு முன்னுதாரணமாகத்
தாமே வழிபட்டுக் காட்டுகிறார்.அதைச் சொல்லாமல்
சொல்லுகிறார்.

"பரமசிவன் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளாமலே
திரிபுர தகனத்துக்குப் புறப்பட்டார். 'எந்தக் காரியம்
ஆரம்பித்தாலும் பிள்ளையாரை முதலில் பூஜிக்க வேண்டும்
என்று லோகத்துக்கு ஏற்பட்ட சம்பிரதாயத்தை ஈஸ்வரனே
செய்து காட்டினால்தானே, மற்ற ஜனங்களும் அப்படிச்
செய்வார்கள்? அதனால், ஈஸ்வரன் இப்படிப் பண்ணாத போது
அவர் புறப்பட்ட  ரதத்தின் அச்சு முறிந்து போயிற்று.அப்புறம்
அவர் விக்னேஸ்வரரைப் பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு
தான் அது புறப்பட்டது.

அச்சு இற்று முறிந்த போன இடம்தான் 'அச்சரப்பாக்கம்' என்று
இப்போது சொல்லும் அச்சிறுப்பாக்கமான ஊர்.அங்கேயேதான்
நம் லாரியும் அச்சு முறிந்து நின்றிருக்கிறது.!"

எப்பேர்ப்பட்ட பொருத்தம்! பொருந்தாமல் இடையூறு
ஏற்பட்டதிலேயே ஒரு பொருத்தம் கண்டுவிட்டார்.

"கைலாஸ சங்கரன் ரதத்தில் போனபோது எங்கே அச்சு
முறிந்ததோ, அதே ஊரில் காலடி சங்கரர் லாரியில்
போகிறபோது ஆக்ஸில் உடைந்திருப்பதால் இவர்
அவனுடைய அவதாரமே என்றும் நிரூபணம் ஆகிறது!"
என்று பின்னரும் ஒரு பொருத்தம் காட்டிவிட்டார்.

Monday, September 19, 2016

"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்".

(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்
தேடிவர வேண்டும்)

சொன்னவர்; எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள்.கும்பகோணம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp
செய்திருந்தார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேச்வர ஆலயத்தில்
திருப்பாவை-திருவெம்பாவை மகாநாடு வெகுவிமரிசையாக
நடைபெற்றது. அப்போது பக்தவத்சலம் தமிழ்நாட்டு
முதல்வராக இருந்தார்..மதுரை மீனாக்ஷி கோயிலை
திருப்பணி செய்த பி.டி.ராஜன்,தமிழ்நாட்டு முதல்வர்
முதலிய பெரிய பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர்.

ஸந்த்யாகாலம். ஸ்ரீ பெரியவர்கள் அனுக்ரஹபாஷணம்
கேட்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீ பெரியவர்கள்
அருகில் அமர்ந்து இருந்தேன்.

ஸ்ரீ பெரியவா உபன்யாஸம் செய்யத் தொடங்கும் நேரம்.
என்னைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை
வைத்துக் கொண்டு என்னை வெளியே செல்லுமாறு சைகை
காட்டினார்கள்.

'இது ஸந்த்யாகாலம். உன் கடமை இப்போது
ஸந்த்யாவந்தனம் செய்வதுதான். என் உபன்யாசத்தை
கேட்பதற்காக, உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம்
செய்யாமல் இருக்காதே' என்று சைகை மூலம் எனக்கு
உணர்த்தினார்கள். நானும் திருக்குளத்தில் ஸந்த்யை
செய்யச் சென்று விட்டேன்.

அன்று இரவு பத்து மணிக்கு நாங்கள் அழைக்காமலேயே,
மேலக்காவிரியிலுள்ள எங்கள் க்ருஹத்துக்குத்
தானாகவே வந்து ஒரு மணி நேரம் பரமானுக்ரஹம்
செய்தார்கள். 

பிராம்மணனுக்கு ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாக்கள்தான்
முக்யமானது; வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.
'பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்
நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்.
தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்
தேடிவர வேண்டும்' என்ற உண்மையை உலகிற்கு
இதன் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top