நம் ஆசார்யாள் ஜீவர்கள் கடைத்தேறும்படி அத்வைத
மதத்தை ஸ்தாபித்திருக்கிறார்கள். அந்தப் பரம்பரையில்
வந்த நாங்கள் எல்லாவிடங்களிலும் சுற்றிக்
கொண்டு வருகிறோம் .இப்படிச் சுற்றுவது அவர்களையும்
அவர்கள் ஸ்தாபனம் செய்த மதத்தையும் நமக்கு அடிக்கடி
ஞாபகமூட்டுகிறது. நாம் எல்லாரும் இங்கு கூடியிருக்கிறோம்.
இந்த சமயத்தில் ஸ்ரீபகவத் பாதாள் ஞாபகமாகவே எல்லாருக்கும்
இருக்கிறது. எங்களை இப்படி சுற்றும்படி அவர்கள் ஏற்பாடு
பண்ணினது இது முக்கியமான ப்ரயோஜனம். மற்றொரு
ப்ரயோஜனமும் உண்டு. சேதுவிலிருந்து ஹிமாசலம் வரை
மதத்தையும், தர்ம மார்க்கத்தையும் ஸ்தாபனம் செய்த
ஆசார்யாள் எங்களுக்கும் ஒரு கட்டளை இட்டிருக்கிறார்.
ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வர பூஜை செய்து கொண்டு அங்கங்கே
சுற்றி வரும்போது மத சம்பந்தமான பல விஷயங்களை
எடுத்துச் சொல்லும்படியாக ஆஜ்ஞை இட்டிருக்கிறார்கள்.
அதற்காக அவர்கள் பெயரையும் வகிக்கச் செய்திருக்கிறார்கள்.
அதனால் சன்யாச்ரமத்திலிருந்து கொண்டு ,பகவத் பாதாளின்
ஸித்தாந்தங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதே எங்கள்
முக்கியமான வேலை.
நாம் எப்போதும் சாகாமலிருக்க வேண்டும் என்பது
எறும்பு முதல் மனிதன் வரையிலான எல்லா ஜீவன்களுடைய
ஆசை. ஆனால் எல்லா ஜீவனும் செத்துப் பிழைத்துதான்
வருகிறது. சாவை ஜயித்த ஜீவென் முக்தர்கள் நம்
மதத்தில் ஸதாசிவ ப்ரம்மேந்திராள் மாதிரி மகான்களுக்கு
லபிக்கும். நம் ஆசார்யாள் ஜீவித்திருக்கும்போதே இந்த
இறவா வரத்தை எப்படி சம்பாதிப்பது என்று உபதேசித்திருக்கிறார்கள்.
மனிதனுக்கு தேஹ சம்பந்தம் ஏற்படுவது ஜன்மம். தேஹ
சம்பந்தம் நீங்குவது மரணம்.நாம் ப்ராணனுடன்
இருக்கும்போதே ஜீவன் முக்தி நிலைக்கு பகவத்
பாதாள் சொல்லியிருக்கிறார். சாகும் நிலையில்
நம் அவயவங்கள் செத்துக் கொண்டிருக்கும். செத்துப்
போன பிறகும் இதற்கு வழி கிடையாது.
தினம் பூஜா காலத்தில் இந்த புருஷ சூக்தம் சொல்கிறோம்
तमेवम् विढ्वानम्रुत इह भवति | नान्य: पन्था विध्यतेअयनाय ||
இந்த ஆத்மஸ்வரூபத்தை நன்கு அறிந்தவன் இந்த
ஜன்மத்திலேயே மரணமில்லா நிலையை
அடைகிறான். இன்னிலை அடைவதற்கு வேறு மார்க்கம்
இல்லை என்று அர்த்தம். அம்ருதம் என்றால் மோக்ஷம்.
மோக்ஷம்மடைந்தவர்களுக்கு பிறப்பு, இறப்பு இல்லாததால்
அம்ருதம் என்று சொல்லப்பட்டது. சரீரம் என்ற வியாதி யானது
மனிதனுக்குப் புதிதாய் ஏற்பட்டதல்ல. நமக்குத் தெரியாமலும்,
கணக்கிடக் கூடாததுமான நாட்களாக இருந்து வருகிறது.
தக்க மருந்து சாப்பிட்டு இத்தகைய சரீரம் எடுக்காமலிருக்க
அனுபவஸ்தர்கள் அனுபவம்தான் நமக்கு வேண்டும்.
நாம் சாகாமலிருக்க வேண்டுமென்றால் உடம்பு என்கிற வியாதி
ஒழியவேண்டும். உடம்பு இல்லாதவன் யார்? ஈசுவரந்தான்.
அந்த ஈசுவரனே நான் என்று(ஸோஹம்) என்ற பாவனை
எப்போதும் செய்து வரவேண்டும். உட்காரும்போதும்,
எழுந்திருக்கும்போதும் சிலர் ஸோஹம் என்றே சொல்வார்கள்.
அப்படியில்லாமல் அதன் அர்த்ததை உணர்ந்து சொல்லவேண்டும்.
நம் சரீரத்தை நம்முடையது அல்ல என்று நினைப்பது கடினமான
விஷயம். யாராவது நம்மை அடித்தால் நமக்கு வலிக்காமல்
இருக்குமா? அதற்கு நாம் உலகத்தில் அனைவரும் நாம்,
எல்லா உடம்பும் நம்முடையது என்று நினைக்க ஆரம்பிக்க
வேண்டும். அதுதான் சரியான உபாயம். அப்படி நினைப்பதால்
பிறர் கஷ்டப்படும்போது அதற்குப் பரிஹாரம் செய்ய எண்ணம்
வருகிறது. எல்லார் சுக துக்கமும் நம்மதாக ஆகிறது. நாம் செய்யும்
எந்தக் காரியமும் நமக்காக இல்லை என்ற எண்ணம் தானாகவே
ஏற்படுகிறது. எல்லாவற்றையும் பகவானுக்கு அர்பணம் செய்யுமாறு
கீதையில் அர்ஜுனனுக்கு பகவான் உபதேசிக்கிறார். எப்போதும்
ஸோஹம் என்று சொல்லிக்கொண்டு, நம: பார்வதீ பதயே என புண்டரீகம்
போட்டுக்கொண்டிருக்கவேண்டும். பிழைத்திருக்கும்போதே ஜீவன் முக்தி,
இத்தேகத்தை விட்ட நிலை.
अश रीरं वाव सन्तं न प्रियाप्रिये स्प्रुशत: |(ப்ருஹதாரண்யகம்)
இந்த வசனமும் இப்படியே கூறுகிறது. சரீரம் இல்லாமல்
பழைத்திருக்கும் புருஷனை ஒரு போதும் சுக துக்கம்
அண்டுவதில்லை என்பது அர்த்தம்.பகவத் பாதாள் நமக்கு சாகமலிருக்க
உபதேசித்த மந்த்ரம் இதுவே!
இதற்குக் காரணமான ஈசுவர பாவனை செய்யவும்,
எப்போதும் நல்ல காரியங்களைச் செய்யவும் அதில்
ப்ரவ்ருத்தி ஏற்படவும் ஸ்ரீ சந்த்ரமௌலீச்வரரை ப்ரார்த்தித்து
அவர் அனுக்ரஹம் பெறுவோமாக.
ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா ||
No comments:
Post a Comment