மஹாபெரியவா அருளியது:
மாதுர்யம் என்றதும் ஸங்கீதம் நினைவுக்கு வருகிறது. ஸங்கீதம் உத்தமமான கலை. பகவத் ஸந்நிதியிலேயே ‘ஈஸி’ யாகக் கொண்டு நிறுத்துகிற கலை. நன்றாக் இசையமைத்துப் பாடும்படி மஹான்கள் நிறைய நிறைய நம் தேசத்தில் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஏராளமான ஸாஹித்யகர்த்தாக்களும் சிக்ஷை சொல்லிக் கொள்ள வசதியாக முறைப்படி ராகம், தாளம், அமைத்துக் கீர்த்தனங்கள் பாடியிருக்கிறார்கள். ஸ்த்ரீகளுக்குத்தான் இயற்கையாகவே இனிமையான குரல் இருக்கும்படியாக அம்பாள் ப்ரஸாதித்திருக்கிறாள். அதனால் அவர்கள் ஒழிந்த பொழுதில் ஸங்கீதம் அப்பஸிக்கலாம். ஸபா, ஸம்மானம், புகழ் -ஆகியவற்றுக்காக இல்லை. அதெல்லாம் போட்டியிலும், அஹம்பாவத்திலும், ஸ்த்ரீகளுக்கு வேண்டாத வெளி வியாபகத்திலும் இழுத்து விடலாம். ஆகையால் அதற்காக இல்லாமல் ஆத்ம ஸந்துஷ்டிக்காகவும் பகவத் ப்ரீதிக்காகவும் பெண்களை ஸங்கீத அப்யாஸம் பண்ணச் சொல்கிறேன். நம் அகத்திலே ஒரு சுபகார்யம், நவராத்ரி, மற்ற பண்டிகை என்றால் கூடியிருக்கிறவர்களுக்கு ஸந்தோஷம், பகவான் நினைவு இரண்டையும் அளிப்பதாகப் பெண்கள் பாடலாம். ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால், அதிலே வேடிக்கையும் இருக்க வேண்டுமாகையால், கேலிப் பாட்டுகள் கூடப் பாடலாம். வாழ்க்கையில் இதெல்லாமும் அதனதன் அளவுக்கு உட்பட்டு வேண்டியதுதான். இல்லாவிட்டால் உப்புச் சப்பே இருக்காது; ஒரே உம்மணாமூஞ்சியாகிவிடும். வீணா வாத்யம் அம்பாளுக்கு ரொம்பவும் ப்ரீதி, அவளுடைய ஸ்வரூபமாகவே மதிக்கப்டும் ஸ்த்ரீ பிரஜைகள் வீணை கற்றுக் கொள்ளலாம். ப்ரதி சுக்ர வாரமும் ஸாயரக்ஷையில் அம்பாளுக்கு வீணாகானம் ஸமர்ப்பணம் செய்யலாம். கோவிலுக்குப் போய் அப்படிப் பண்ணலாம். ஆனால் அங்கே இதேமாதிரி இன்னும் பல பேரும் வந்தால் போட்டி ஏற்படும். அகத்திலேயே, அம்பாள் பிம்பமோ யந்த்ரமோ படமோ இருக்குமே, அதற்கெதிரில் ஒரு கால்மணி-அரைமணி வீணை வாசிக்கலாம். வாயால் பாடிக்கொண்டே வாசிக்கலாம். ஒரளவுக்கு மனஸ் குவிந்து கானம் பண்ணினாலும் போதும், அதில் கிடைக்கிற விச்ராந்தி தெரியும்.
அகத்தோடு இருந்துகொண்டு பெண்கள் இப்படிக் கலைகளை வ்ருத்தி செய்வது ரொம்பவும் நல்லது. அவர்களுடைய ‘நேச்ச’ருக்கு ஏற்றது. பகல் பொழுதை உழைப்புக்கும் கலைகளுக்குமே அவர்கள் பிரித்துக் கொடுக்க வேண்டும். உழைக்கிற ‘ஸ்பிரி’ட்டோடு உழைத்தால் அதுவே ஒரு கலைதான்! ‘நம் அகத்துக்காக, நம் மநுஷ்யர்களுக்காகவாக்கும் செய்கிறோம்?’ என்கிற உணர்ச்சியே உழைப்பில் ஒரு உத்ஸாஹத்தை ஊட்டி, அதையும் ஒரு கலையாக்கிவிடும்.
இதுவரை நான் சொன்ன மாதிரியெல்லாம் ஸ்த்ரீகள் இருந்தால், வீட்டோடு இருப்பதில் பொழுது போகவில்லை என்றில்லாமல் பொழுது போதவில்லை என்றே ஆகிவிடும்!
ஸ்த்ரீகள், உத்யோகத்துக்குப் போகாமல் நாள் முழுதும் நல்ல பொழுதாகக் கழிப்பதற்கு எனக்குத் தெரிந்த (this is the trademark of Periyava!!) யோஜனையைச் சொன்னேன். நல்ல பொழுது என்பது அவர்களுடைய உடம்பை உறுதி பண்ண உதவி பண்ணுவதோடு மனஸைப் பெண்மை என்பதன் மாதுர்யத்தில் குழைக்கவும் உபகாரம் பண்ணவேண்டும் என்ற அபிப்ராயத்தில் சொன்னேன்.
எல்லா தர்மங்களுக்கும் ஆணிவேர் பெண்கள்தான்
எப்படியாவது ஸ்த்ரீத்வம் – பெண்மை – என்பதற்கு லக்ஷணமாக இத்தனை ஆயிரம் வருஷங்கள் இருந்து வந்திருக்கிற உத்தம குணங்களையும், உசந்த வாழ்க்கை முறையையும் செத்தே போய் விடாமல் முடிந்த மட்டும் ஆக்ஸிஜனைப் ‘பம்ப்’ பண்ணி ரக்ஷித்துத் தந்தாக வேண்டும். அதுதான் இன்றைக்குத் தலையான கார்யம். ஏனென்றால் ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: – ‘எல்லா தர்மங்களுக்கும் பெண்டுகளே ஆணிவேர்’ – என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அவர்கள் வீணாகப் போனால் லோகமே போனது போனதுதான். புருஷ ஜாதி வீணாய்ப் போனால் அவ்வளவு ஹானியில்லை. ஸ்த்ரீ ஜாதியின் தார்மிக பலம் அவனைக் காப்பாற்றி எழுப்பிவிடும். அவள் விழுந்தால்தான் ஸமுதாயத்துக்கே வீழ்ச்சி. “ஸ்த்ரீகள் கெட்டுப் போனால் எல்லாமே போய்விடுமே?” என்றுதான் அர்ஜுனனும் கீதாரம்பத்தில் (கீதை ஆரம்பத்தில்) அழுகிறான்.
ஸ்த்ரீக்கு ஸ்த்ரீத்வம் இருக்கவேண்டும், பெண் பெண்ணாக இருக்கவேண்டும் என்பதற்கு இத்தனை சொல்லி முட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதை என்ன சொல்கிறது? ‘காலத்தின் கோலம்’ என்கிறார்களே, அப்படிக் கலி புருஷன் எல்லார் மனஸிலும் புயலாகப் புகுந்து பண்ணுகிற வெறிக் கூத்தால்தான் இப்படி ஏற்பட்டிருக்கிறது.
போகப் போக விளைவு விபரீதமாகும்
போட்டிக்கு இடமே இல்லாத இடத்தில் போட்டி ஏற்பட்டு ஆணுக்குப் பெண் சளைப்பதா என்று ஏற்பட்டு, அதில் ஒரு பெரிய vicious circle -ஆக (விஷக் கூட்டமாக) ஒன்றைத் தொட்டுக்கொண்டு ஒன்றாகத் தப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
ஸ்த்ரீத்வத்தை விட்டுப் பெளருஷத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லாமலே, பொருளாதார உயர்வுக்காக என்று தப்பாக நினைத்துக்கொண்டு ஒரு பெண் வேலைக்குப் போனாலுங்கூட அதன் தொடர்ச்சியாக அந்த ‘அட்மாஸ்ஃபிய’ரில் அவளுக்குத் தன்னையறியாமல் பெளருஷ அம்சங்கள் வந்து சேர ஆரம்பித்துவிடும். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய ஸ்த்ரீத்வம் மேலும் மேலும் மரத்துக் கொண்டே போய், அந்த அளவுக்குப் பெளருஷமும் கூடிக் கொண்டே போகும். அதனால் ப்ரக்ருதி தர்மத்தின் ப்ரதம விதியாகப் பெளருஷ வன்மைக்கு மாற்றாக ஸ்த்ரீத்வ மென்மை லோகவாழ்க்கையை ஸமன் செய்து அழகு படுத்தவேண்டும் என்று இருப்பது சிதிலப்பட ஆரம்பிக்கும். இன்றைய அடங்காப்பிடாரி லோகத்துக்கு அத்யாவச்ய மருந்தான அடக்கம் என்பது ஸ்த்ரீகளை விட்டுப் போக ஆரம்பித்துவிடும். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் அவர்களுக்கும் தாட்பூட் வந்துவிடும்.
இதன் விபரீதம் ஆரம்ப காலத்தில் தெரியாமல் எல்லாம் நல்லதாகவே ஓரு ஸமதர்மப் புரட்சி நடந்ததாகத் தோன்றலாமானாலும் போகப் போக இப்படி ஸ்த்ரீ-புருஷாள் அடங்கிய முழு ஸமூஹமுமே அடங்காமைக் கோலம் கொண்டால் லோகமே க்ரூர ம்ருகங்களோ அல்லது அஸுர ஜாதிகளோ ஒருத்தருக்கொருத்தர் சண்டை பிடித்துக் கொள்வது போன்ற நித்ய நரகமாகிவிடும்.
No comments:
Post a Comment