ஸ்தோத்ரங்களையோ, பகவான் நாமாவையோ சொல்லிக் கொண்டுதான் ஒரு ஸ்திரீ அரிசி பொறுக்குவதிலிருந்து, காய்கறி நறுக்கவதிலிருந்து, ஆரம்பித்து அரிசி களைந்து உலையில் போடு அது பக்குவமாகிப் பரிமாறுகிற வரையில் இதைத் தொடர்ந்து செய்யணும்.
சாப்பிடுகிறவனும் "கோவிந்த கோவிந்த" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடணும்.
இப்படிச் செய்தால் போஜனத்தின் ஷட்ரஸத்தோடு அறுசுவையோடு நாமரஸமும் சேர்ந்து அதன் தோஷத்தையெல்லாம் போக்கிவிடுமென்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
காபி, டீ குடிப்பது:
புத்தியைக் கெடுப்பதில் கள்ளு, கஞ்சா அளவுக்குப் போகாவிட்டாலும், "அடிக்ட்" ஆக அடிமைப்படுத்துகிற சக்தி காபி, டீக்கும் இருப்பதால் தான் அவை உதவாது என்பது.
போதையை உண்டு பண்ணுவது - Intoxicant என்று இவற்றைச் சொல்ல முடியாவிட்டாலும், நரம்பை ஊக்குவிக்கிறவை - stimulant - என்பதால் இப்படித் தூண்டப்பட்ட நரம்புமண்டலம் முடிவிலே பலஹீனம் தான் அடையும் என்பதால், தள்ளத்தான் வேண்டும்.
காபி குடிப்பதை நிறுத்தவேண்டும். காபியினால் குடியே அழிந்து போகிறது. உடம்புக்கு அது கெடுதல் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.
காபியை நிறுத்திவிட்டால், மாசக் கடைசியில் ஒரு சிரமம் சாமான்ய குடும்பங்களுக்கு வருகிறதே, அது இல்லாமல் இருக்கும்.
டீயும் அநாசாரம் தான் என்றாலும் காபி போல் அவ்வளவு மோசமில்லை. காபி, டீ மாதிரி ஏதாவது இல்லாமல் முடியவே முடியாது என்று இருக்கிறவர்கள் வேண்டுமானால் டீ கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டு, அதையும் படிப்படியாக விட்டு விட வேண்டும்.
நல்ல வஸ்துவான பாலில் இந்தச் சாமான்களை (காபி, டீ போன்றவற்றை) கலந்து கொடுக்க வேண்டியதே இல்லை. அதிகாலையில் வெறும் பாலே சாப்பிடலாம். பகலில் மோராக்கிக் குடிக்கலாம். மோர்க் கஞ்சியாகவும் சாப்பிடலாம்.
நாமே அகத்திலே பார்த்து அரைத்து வைத்துக் கொள்கிற மாவுகளைப் போட்டுக் கஞ்சியாக்கிக் குடிப்பது தான் ஆசாரம்.
எத்தனையோ ஏழைக் குழந்தைகள், துர்பலர்கள், நோயாளிகள் பாலுக்குப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பாலைக் காபி-விஷமாக்கி மற்றவர்கள் மூன்று நாலு வேளை சாப்பிடுகிறார்கள். இது தான் தப்பு.
காபியை நிறுத்திவிட்டு, அந்தப் பாலை ஏழைக் குழந்தைகளுக்கோ, பலஹீனருக்கோ விநியோகம் பண்ணுவதென்று வைத்துக் கொண்டால் பெரிய புண்யமாகும்.
No comments:
Post a Comment