என்னுடைய படிப்பு முடிந்தவுடன் வேலைக்காக நான் தேர்ந்தெடுத்த துறை பத்திரிகைத் துறை. ஒரு வாரப் பத்திரிகையில் 1960-ஆம் ஆண்டு உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். மாதச் சம்பளம் 70 ரூபாய்.
அங்கு சரியாக சம்பளம் தரவில்லை என்பதால், என் தந்தை என்னை சிம்சன் கம்பெனிகளில் ஒன்றில் சேர்த்துவிட்டார். மாதச் சம்பளம் 110 ரூபாய். இருந்தாலும் நான் எழுத்துத் துறையை விடவில்லை. (இந்த 70 வயதிலும்). ஆனால் நான் பணிபுரிந்த- அந்த சிம்சன் குரூப் கம்பெனிகளில் ஒன்றான அது எந்த நிமிடத்திலும் மூடப்படும் அபாயத்தில் இருந்தது. அந்த மனக் கவலையோடு இருந்த நேரத்தில், என்னோடு பணிபுரிந்த நண்பருக்கு காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்தது. அதிகாலையிலேயே நடந்து முடிந்துவிட்டதால், பெரியவர் ஒருவர், ""மகா பெரியவா இங்கதான் கலவைல இருக்கார்... போய் தரிசனம் பண்ணிட்டு வாங்களேன்...'' என்றார்.
கலவை ஒரு சிறிய கிராமம். அக்ரஹாரம் மாதிரி இருந்த அந்தத் தெருவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒருபுறம் முழுவதும் பழைய காலத்து வீடுகள் முனிவரின் பர்ணசாலையைப்போல் காட்சியளித்தன. அமைதியான கிராமம். சிறிய குளம் ஒன்றும் இருந்தது.
""பெரியவா ஸ்னானம் பண்ணிண்டிருக்கா...'' என்றார் ஒருவர்.
நாங்கள் அந்தக் குளத்தை விட்டு சற்று தூர நின்று பெரியவரை தரிசித்தோம். ஈரம் சொட்டச் சொட்ட குளக்கரைக்குமேல் நின்று எங்கள் பக்கம் பார்வையை ஓட்டினார் பெரியவர். நாங்கள் அனைவரும் சாஷ்டாங்க மாக அவரின் பாதத்தில் விழுந்து நமஸ்கரித் தோம். அற்புதமான அந்தப் பேரொளியின் தீட்சண்யத்தை எங்களால் தாங்க முடியவில்லை. நாங்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அது அந்த நிமிடமே தொலைந்திருக்கும். அது ஒரு கங்கை நதி. மறுபடியும் சட்டென்று எங்களைப் பார்த்தார்.
""எதுக்கும் கவலைப்படாதீங்கோ... கம்பெனி எல்லாம் நல்லா நடக்கும். எல்லாம் க்ஷேமமா இருப்பேள்'' என்றார்.
எங்களுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த மாதிரி ஓர் உணர்வு. "நாங்கள் யார்... எங்கிருந்து வருகிறோம்? நாங்கள் பணிபுரியும் அலுவலகம் மூடும் நிலையில் இருக்கிறது. எங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ...' என்று அவரிடம் யார் சொல்லியிருப்பார்கள்? மகா பெரியவர் எங்களுக்கு கருணா கடாட்சம் எப்படி அளித்தார்? இவருக்கு எப்படித் தெரிந்தது? கண்களில் நீர்வழிய மறுபடியும் அந்த மகானை நமஸ்கரித்தோம். ஏனெனில் அனைத்தும் அறிந்த சர்வேஸ்வரன் அல்லவா அவர்?
இந்த அற்புதம் நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அந்த இறைவடிவத்தை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அநேகமாக 1963 அல்லது 1964-ஆம் ஆண்டாக இருக்கலாம். நான் அப்போது என் தாய், தந்தை, தம்பிகளோடு பெரம்பூரில் திரு.வி.க. நகர் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தேன். அங்கே ஒரு "சத்சங்கம்' இருந்தது. அதில் நானும் ஓர் அங்கம். திரு.வி.க. நகரின் நுழைவுவாயிலில் ஓர் ஏழைப் பிள்ளையார் வசித்து வந்தார். ஆம்; ஒரு குடிசையில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வந்தோம். தினமும் ஒரு அர்ச்சகர் காலையும், மாலையும் பூஜை செய்துவிட்டுப் போவார். சனிக்கிழமை மாலை பஜனை நடக்கும். சுண்டல் விநியோகம். பலர் கலந்து கொள்வார்கள்.
திடீரென்று எங்கள் சத்சங்க உறுப்பினர் களுக்கு இந்த ஏழைப்பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்கிற எண்ணம் உண்டாயிற்று. அந்த முடிவின்படி நல்ல உள்ளம் படைத்த ஆன்மிகப் பெருமக்களிடம் நன்கொடை வசூலித்து கோவில் திருப்பணியை ஆரம்பித்தோம். ஓர் அன்பர், ""காஞ்சி மகா பெரியவாளிடம் ஸ்ரீமுகம் வாங்கி, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தால் நன்கொடை குவியும்...'' என்று சொன்னார்.
நாங்கள் மகா பெரியவரை சந்திக்க ஸ்ரீ மடத்துடன் தொடர்புகொண்டோம். மகா பெரியவர் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் காஞ்சிபுரத்திற்கு எப்போது திரும்புவார் என்கிற சரியான தகவல் தெரியவில்லை. நாங்களும் பெரியவர் வரட்டும் என்று காத்திருந்தோம். அவர் வருகைக்காகத் தவமிருந்தோம் என்றுகூடச் சொல்லலாம்.
அன்றிரவு-வழக்கம்போல் உணவுண்டு பகவானை பிரார்த்தித்து விட்டு உறங்கப் போனேன். ஓர் அற்புதமான கனவு. நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மகாசுவாமிகள், பெரம்பூர் ராவ் பகதூர் கண்ணன் செட்டியார் பள்ளியில், புதுப்பெரியவரோடு (ஜெயேந்திரர்) முகாமிட்டிருப்பது போலவும், எங்கள் சத்சங்கத்தினர் மகா பெரியவரிடம் பிள்ளையார் கோவில் கட்ட ஸ்ரீமுகம் வேண்டி நிற்பதுபோலவும் இருந்தது அந்தக் கனவு.
திடுக்கிட்டு எழுந்தேன். இரவு மணி இரண்டரை. அந்த அற்புதக் கனவை மறுநாள் காலையில் எழுந்ததும் எங்கள் சத்சங்க முக்கியஸ்தர்களிடம் சொன்னேன்.
""நீ அதையே நெனைச்சிண்டு படுத்திருப்பே. அதுதான் அந்த சொப்பனம். மடத்துக்காராளுக்கே பெரியவா எந்த ஊர்ல இருக்கார்னு தெரியலே. நீ என்னடான்னா நம்ப ஊர் ஸ்கூல்ல வந்து தங்கின மாதிரி சொப்பனம் கண்டிருக்கே... அவ்வளவுதான்...'' என்று சிலர் சொன்னார்கள்.
என்ன அற்புதம் பாருங்கள். ஒருசில மணித் துளிகள் கழித்து ஸ்ரீ ரங்காச்சாரி என்பவர் ஓடிவந்தார்.
""சுவாமிகள் நெல்லூர் வழியா வந்து நம்ப ஆர்.பி.சி.சி. ஸ்கூல்ல தங்கியிருக்காராம். எல்லாரும் வாங்கோ... பெரியவாகிட்ட கோவில் கட்டற விஷயத்தைச் சொல்லிடுவோம்...'' மூச்சிரைக்க பொங்கிப் பொங்கிப் பேசினார் ரங்காச்சாரி. அவர் சொன்னதைக் கேட்டதும் அனைவரும் என்னைப் பார்த்தார்கள்.
""உன்னோட சொப்பனம் பலிச்சுடுத்துப்பா...'' நாங்கள் ஒரு ஏழெட்டு சத்சங்க உறுப்பினர்கள் உடனே அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளி வகுப்புகள்மேல் ஓலை வேய்ந்திருந்த இடத்தில், புதுப்பெரியவரோடு அமர்ந்து சுவாமிகள் அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். சுவாமிகள் எந்த இடத்தில் அமர்ந்திருந்ததாகக் கனவு கண்டேனோ அதே இடத்தில் அதே கோலத்தில் அமர்ந்திருந்தது எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அவரிடம் கோவில் விஷயத்தைப் பற்றி பேசியதைக் கேட்டுக் கொண்டார். அன்று மாலையே புதுப் பெரியவரை கோவிலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். அனைவரும் அவரை நமஸ்கரித்துவிட்டுப் புறப்படும்போது, நான் எங்கள் குடும்பப் பெயரான ""பாளேகெட்டே குடும்பம் நான்'' என்றேன். ஏனெனில் என் தந்தை, "பெரியவாளிடம் நம் குடும்பப் பெயரை சொல்லிவை' என்றிருந்தார். சட்டென்று சுவாமிகள் என்னை உற்றுப்பார்த்து புன்னகைத்தார். கன்னடத்தில், ""நீ கும்மோணமா?'' என்றார். ""ஆம் ஸ்வாமி'' என்றேன். ""பத்து உனக்கு என்ன ஆகணும்?'' என்று கன்னடத்திலேயே கேட்டார். ""என் சிறிய தாத்தா'' என்றேன். மீண்டும் என்னை ஆசிர்வதித்தார். ""போ... சாயங்காலம் இவா வருவா உங்க ஊருக்கு'' என்று ஜெயேந்திரரைக் காட்டினார்.
புத்துணர்ச்சி பெற்றவர்களாக திரு.வி.க. நகர் திரும்பினோம். மாலை புதுப்பெரியவர் வரும்போது எப்படி வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பதை மடத்து ஊழியர் எங்களிடம் தெரிவித்தார். எங்கள் சத்சங்கத்திலோ பணம் இல்லை. என்ன செய்வது? எங்கள் நகரில் ஐந்நூறு வீடுகள் இருந்தன. ஒரு குழுவாக நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றோம். சுவாமிகள் நம் ஊருக்கு வருகை தர இருக்கிறார் என்கிற செய்தி கேட்டு அனைவரும் நாங்களே எதிர்பாராதவிதமாக பணத்தை அள்ளிக் கொடுத்தனர். இரவு ஏழு மணியளவில் புதுப்பெரியவர் வரும்போது அதி அற்புதமான வரவேற்பு கொடுத்தோம். புதுப்பெரியவர் குடிசையிலிருந்த பிள்ளையாரை தரிசித்துவிட்டு, "சரி' என்பதற்கு அடையாளமாக புன்சிரிப்புடன் தலையாட்டினார். மறுநாள் மகா சுவாமிகள் ஸ்ரீமுகம் கொடுக்க, "கல்கி' வார ஏடு அதை இலவசமாகப் பிரசுரித்தது. எங்களுக்கு நன்கொடைகள் குவிய ஆரம்பித்தன. முதலில் சிம்சன் கம்பெனிகளின் அதிபர் ஸ்ரீ அனந்தராமகிருஷ்ணன் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். அன்றைய தினம் இது மிகப்பெரிய தொகை. பலரிடம் வசூல் செய்து, 64-ஆவது நாயன்மார் என்று போற்றப்படும் ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகளின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்போது அந்த ஆலயம் மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது. அந்த வழியாகப் போகும்போதெல்லாம் இந்த மகான்கள் நினைவில் தோன்றுவர்.
Source: Shri Mannargudi Sitaraman Srinivasan
No comments:
Post a Comment