“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்!” – அன்றே முழங்கிய கண்ணதாசன்!
நாம் பக்தி செய்து ஒழுகும் குருவின் மேல், நமக்கு மிகவும் பிடித்த ஒரு சரித்திர புருஷனுக்கும் பக்தியும் அன்பும் இருந்தது கண்டு மெய்சிலிர்த்தோம் அகமகிழ்ந்தோம். ஏனெனில், வள்ளுவர், விவேகானந்தர், பாரதிக்கு அடுத்து கண்ணதாசனின் வார்த்தைகளுக்கு தான் நாம் அதிகம் மதிப்பளிக்கிறோம்.
மஹா பெரியவா அவர்கள் மேல் பக்தி செலுத்துவது குறித்து இப்போது சிலருக்கு இருக்கும் சந்தேங்கள் அப்போதும் இருந்துள்ளது. அவற்றுக்கெல்லாம் கவியரசர் மிக மிக அற்புதமாக விளக்கமளித்திருக்கிறார்.
“காஞ்சி பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், இந்து மதம் என்றால் என்ன?” என்று கேட்டால் “மஹா பெரியவர்” என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் என்று கண்ணதாசன் கீழ் கண்ட கட்டுரையில் கூறியிருப்பதை கவனியுங்கள். இதை அவர் சொன்ன ஆண்டு 1973. தற்போது நடப்பது 2013. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள்.
கவிஞன் வாக்கு பொய்க்காது அல்லவா..! இல்லையெனில், தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி பொழுதை போக்கிக்கொண்டிருந்த எமக்கு மஹா பெரியவா அவர்கள் மேல் ஈடுபாடு வந்து இன்று அவரை பற்றி பதிவு எழுதிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? சற்று யோசித்துப் பாருங்கள்.
ஒருவேளை எம் முற்பிறப்பில் குரு நடந்து சென்ற பாதையில் ஊறிய எறும்பாக இருந்திருப்போமோ என்னவோ… இல்லையெனில், சம்பந்தமேயில்லாமல் எமக்கு அவர் மேல் ஈடுபாடு வரக்காரணம் என்ன?
உண்மையில், மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிக்கொண்டிருந்தபோது கொண்டாடப்பட்டதைவிட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் மஹா பெரியவா அவர்களை குறித்த சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு கவியரசர் மிக மிக அழகாக அதே சமயம் ஆணித்தரமாக பதிலளித்துள்ளார்.
(மஹா பெரியவா ஒரு முறை, (1973) தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிக்கொண்டிருந்தார். ஆச்சர்யம் அவர் எழுதிய அத்தியாயம் இது.)
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே!
பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர்.
அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார்.
இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க் கொண்டிருக்கிறார்.
கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.
தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது .
பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே விழுகிறது.
முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள்..
அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள்.
ஒரு ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
”இது என்ன பார்வை? ஆற்றில் வெறும் தண்ணீர் தான் ஓடுகிறது” என்று எண்ணினான் மற்றொருவன்.
ஆனால் ஆற்றைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றிற்று?
‘ஆறு என்ற ஒன்று ஆண்டவனால் படைக்கப்படவில்லை. வெறும் நீரை மட்டுமே இறைவன் படைத்தான். அது ஆறாக உருக்கொண்டு, இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக் கொண்டது. மனிதருக்கில்லாத புத்தி, தண்ணீருக்கு இருக்கிறதே’ என்று வியந்தானாம்.
சிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம்.
படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை.
உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.
அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார்.
அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று.
அது ஆன்ம யாத்திரை.
நாற்பது வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார்.
அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை.
ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை.
முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது.
No comments:
Post a Comment