சங்கர் பவார்...ஸ்ரீ மடத்தில் பலர் பார்த்திருக்கலாம். சான்டூர் மஹா ராஜா அவர்களால் ஐயனுக்கு கைங்கர்யம் செய்வதற்காக அனுப்பி வைக்கப் பட்டு, பின் ஸ்ரீ மடத்திலேயே திருத் தொண்டு செய்பவர்.
பெரியவாளின் மூன்றாவது விஜய யாத்திரையின் போது நடந்த சம்பவம் இது.
தாங்களனைவரும் அறிந்த ஒன்று தான். ஸ்ரீ ரா க அண்ணா அவர்கள் சொல்வது போல, 'சல்லிக்' காசு அல்ல, 'செல்லாக்' காசு கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று அருளாணை பிறப்பித்து, தன்னோடு வருபவர்களும் வெறும் கையோடு தான் வர வேண்டும் என்று செய்த யாத்திரை அது.
'நடமாடும் தெய்வம்' அன்றைய பொழுதுக்கு 'நடமாடி' பின்னிரவில் ஓய்வு எடுக்கும் போது அது வேறு ஓர் ஊராகத்தானே இருக்க முடியும்? பெரும்பாலான நாட்களில் சங்கரரோடு செல்லும் கிங்கரர்களுக்கு வெறும் பால், சொற்ப சமயங்களில் சொற்ப பழங்களோடே மட்டும் தான் 'இரவு விருந்து', அதுவும் வெகு நேரம் கழித்து...
அன்றும் அப்படித் தான்...வெகு சில பழங்கள், சொற்ப பால்...எல்லோரும் படுக்கப் போயாயிற்று.
நம் சங்கர் பவார் அவர்களுக்கோ இதெல்லாம் புதிது...(அப்போது!!!), வயிற்றில் அப்படியொரு பசி...ஆனால், யாரிடம் சொல்வது, என்ன கேட்பது? பேசாமல் படுத்துவிட்டார்.
நம் 'அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பல'த்துக்கா தெரியாது?
அழைத்தார் அருகில் அத்யந்த கிங்கரர் வேதபுரி சாஸ்த்ரிகளை...
'எல்லோரும் சாப்டாச்சா?' என்றது அந்த தாயுள்ளம்.
'ஆயிடுத்து' என்றார் பிரம்மஸ்ரீ.
'என்ன சாப்டேள்?'
'ஏதோ, பழம் பால் ன்னு இருக்கறதை எல்லாம் சாப்பிட்டோம்'.
'அது சரி...அந்த புதுசா வந்திருக்கானே ஒரு பையன்...அவன் என்ன சாப்பிட்டான்?'
'அவரும் கொஞ்சம் பழம் பால் எடுத்துண்டார்'
'அவனுக்கு வயிறு ரொம்பித்தோ?'
'ஆமாம். வயிறு ரொம்பி படுத்துண்டுட்டார்'
'அவனை நீ கூப்பிடு.'
வந்தார் சங்கர், சங்கரரிடம்.
கேட்டார் சங்கரர்.
இதற்கு தானே காத்துக் கொண்டிருந்தார் நம் சங்கர்.
'இல்லே, பசிக்கிறது, போறலே' என்றார்.
நடு நிசி. அந்த பெயர் தெரியாத ஊரில்...
அந்த வேளையில்...
ஓர் அன்பர்...
ஐயன் அவர்களை தரிசிக்க வந்ததாக சொன்னார். அவர் கையில் ஓர் உணவு கேரியர். நான்கு அடுக்கு...
ஐயனை வணங்குகிறார் வந்தவர். நம் இந்திரருக்கோ பார்வை எல்லாம் அந்த டிபன் கேரியர் மேலேயே.
'அது என்ன?' கேட்கிறார்.
'நான் வேலை முடிந்து வீட்டுக்கு போகிறேன். நான் மதியம் சாப்பிட்டது போக மீதி உணவு. '
'அப்படியா, அதனை இவருக்கு தருவாயா?'
'தாராளமாக...'
சங்கரிடம் சொன்னார் சங்கரர். 'நீ உள்ளே போய் சாப்பிட்டுவிட்டு டப்பாவை அலம்பி இவர் கிட்டே கொடுத்துடு' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார் தாயிதய தயாமயர்.
உள்ளே சென்றால்... அது மிச்சமான உணவே அல்ல. புத்தம் புதிதாக ஒருவரும் சாப்பிடாத நிறைந்த உணவு. ரொட்டி,கூட்டு, பருப்பு, காய்...போதாதற்கு இனிப்பு வேறு.
அப்புறம் என்ன...
உந்தி குளிர உயிர் குளிர உணவுண்டார் நம் சங்கர் பவார்...
டிபன் கேரியரை வாங்கிக் கொண்டு போனவர் போனவர் தான்...அப்புறம் அந்த ஊரில் எப்போதுமே எவர் கண்களிலும் தட்டுப் படவில்லை...
நன்றி - ஸ்ரீ கணேச சர்மா அவர்களின் மஹா பெரியவா ஸப்தாஹம் உரையில்...
Courtesy: shri.Karthi Nagaratnam
No comments:
Post a Comment