பெரியவரின் சைவ-வைணவச் சமநோக்குக்கு அவர் காட்டும் உதாரணங்களும் – வியாக்யானங்களும் ‘அடேயப்பா என்ன ஒரு பார்வை – என்ன ஒரு நேர்மை – என்ன ஒரு நடுவு நிலை’ என்று வியப்பையே ஏற்படுத்துகிறது.
‘எல்லா தேவ தேவியர்களுக்குள்ளும் ஒரே பரமாத்மாதான் இருக்கிறான்’ – இது பொதுவான கருத்து. இதை ‘ஒன்றே குலமென்று பாடுவோம் – ஒருவனே தேவனென்று போற்றுவோம்’ என்னும் கருத்தோடும், பிற மதங்களின் இறைக் கொள்கைகளோடும், இணைத்து ஏற்கவும் முடிகிறது.
இதையும் சொல்லிக் கொண்டு சிவன் – விஷ்ணு – பிரம்மா என்று மும்மூர்த்திகள் என அந்த ஒன்றை மூன்றாக்குவதும், அதைத் தொடர்ந்து சக்தி-சரஸ்வதி-லக்ஷ்மி என்று அது விரிவாவதெல்லாமும் எதனால்?
குறிப்பாக சிவம் -விஷ்ணு என்று இருபெரும் அணிபோல், இந்த ஒன்றை இரண்டாக்கி, இதில் ஒன்று பெரியது மற்றது அதற்கு அடங்கியது என்பதுபோல் பேசுவதெல்லாம் எந்த வகையில் சரி?
இதற்கு பெரியவரின் பதில் மிக இதமாக இதோ…
‘சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறு வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிற போது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால், அதிலும் ஒரு ரசம் இருக்கத்தான் செய்கிறது. பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் நம் மதத்தின் சாரம் (Unity in Diversity)..
இப்படியே சிவன் – விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளையும் வழிபடுகிறபோதும், அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபமாக வைத்துக்கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத் தான் செய்கிறது.
இப்படிச் செய்யும் போது, சிவத்தை ஏக வஸ்துவான ஞானமாக பாவிக்கலாம். அந்த ஏக வஸ்துவை பலவிதமாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவை பாவிக்கலாம். அதாவது, சிவத்தை பரப் பிரம்மமாகவும், விஷ்ணுவை பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இருக்கிற ஒன்றை இல்லாத பலவாக காட்டுகிற சக்தியே, அம்பாள் அல்லது விஷ்ணு. இதனால் ஜகம் முழுவதுமே விஷ்ணுரூபம்!
விஸ்வம் விஷ்ணு என்றுதானே சஹஸ்ர நாமமே ஆரம்பமாகிறது? உலக பரிபாலனமும் விஷ்ணுவுக்கே உரியது. அதனாலேயே உலகத்தில் இருக்கிற ஆனந்தங்களை உணர்ச்சிகளை எல்லாம் தெய்விகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் உள்ளது. ஹரிகதை, ஹரிநாம சங்கீர்த்தனம் என்று கூறுவதுபோல் ஹரகதை ஹரகீர்த்தனம் சொல்லப்படுவதில்லை.
கதை, பாட்டு இதெல்லாம் விஷ்ணுவிடமே அதிகம். பாகவதர் என்றால் பகவானைச் சேர்ந்தவர் என்றே அர்த்தமாயினும், பொதுவாக பாகவதர், பாகவதம் என்றெல்லாம் சொன்னால் விஷ்ணுபக்தர், விஷ்ணுவின் கதை என்றே எடுத்துக் கொள்கிறோம்.
பிரபஞ்ச சௌகரியங்களை எல்லாம் வைத்து, பூஜை, பக்தி, பஜனை, கதை என்பதெல்லாமே விஷ்ணு சம்பந்தமாயிருக்கிறது.
இதை விட்டு இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது, சிவசம்பந்தம் அதிகம் தோன்றுகிறது. சிவஞானம், சிவயோகம் என்று சொல்கிற மாதிரி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்பன காணப்படவில்லை.
பலவாக இருக்கிற உலகனைத்தும் விஷ்ணு என்பதால், ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்ற வாக்கு தோன்றியது. பலவாக காண்பது போனால், ‘ஸர்வம்’ போய்விடும். அப்புறம் ஏகம்தான் இருக்கும்.
ஏகம் இருக்கும்போது ஸர்வத்துக்கு இடம் ஏது? இந்த ஏகத்தை அனுபவிக்கிறவனைத் தவிர, ஜகம் என்றும் ஒன்று தனியாக இல்லை. ஜகமும் அடிப்பட்டு போய்விடுகிறது. சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால் தான் ‘சிவமயம்’ என்கிறார்கள்.
VIBGYOR என்கிற ஏழு நிறங்களில் கறுப்பும் வெளுப்புமில்லை. இங்கே வெள்ளை சிவன், கரிய திருமால் ஆகிய இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில், அதாவது லௌகீகத்தில் சேராதவர்கள்தான்.
எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. ஆனால், அப்போதும் எரிபட்ட வஸ்துவுக்கு நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும். நியூஸ் பேப்பரைகூட கொளுத்திவிட்டு பார்த்தால், அது கறுப்பானாலும் அந்த கறுப்புக்குள் அதிக கறுப்பாக எழுத்துக்கள் தெரியும்.
ஒரு துணிக்கும் இது பொருந்தும். எரிந்த இந்த நிலைதான் சர்வம் விஷ்ணு மயம் ஜகத்! எல்லாம் இருப்பதுபோல, இருந்தாலும் லௌகீகமாக இல்லாமல் தெய்விகமாக பக்தி ரூபத்தில் இருக்கின்றன.
யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம்போட்டால் அதுவும் நீற்றுப்போய் பஸ்பமாகிவிடும். எரிகிற வஸ்துக்கள் கறுப்பானாலும், கடைசிவரை எரித்தால் முடிவில் வெள்ளை வெளேரென்று நீராகின்றன.
இதுதான் சிவமயம்!”
- பெரியவரின் இந்த சிவம்- விஷ்ணு குறித்த சிந்தனை என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. என்னை மட்டுமா?
இதை வாசிக்கும் யாருக்குத்தான் சிந்தனைகள் தோன்றாது.
அவரின் வியாக்யானம் தொடர்கிறது. எப்படித் தெரியுமா? ‘அரனை மறவாதே – திருமாலுக்கு அடிமை செய்’ என்று!
‘எரிந்த மரம் கரியாகிறது. அந்தக் கரியும் முதிர்ந்தால் வைரமாகிறது. உலகம் இருந்த போதிலும் அதன் மாயை விஷ்ணுமயமாக தெரிகிறபோது, நம் அஞ்ஞானம் கரியாகிப்போன நிலையில் இருக்கிறோம். திருமாலும் கரிமாலாக இருக்கிறார் – கரி வைரமாகிற நிலைக்கு பரமேஸ்வரன் வந்து விடுகிறார்.
கரியும் வைரமும் வேறு வேறா? – கேட்கிறார் பெரியவர். அப்படியே மஹாவிஷ்ணுவின் கறுப்பும், சிவனின் வெளுப்பும் இந்த உலக வண்ணங்களில் சேருவதேயில்லை. கலர் வந்தாலே பொய் வந்து விட்டதாகத்தான் பொருள். இந்த இரண்டும் பொய்யோடு சேர்ந்தது மில்லை; சேரப்போவதுமில்லை. வெண்மைக்கு விபூதி. கருமைக்கு விஷ்ணுமய உலகின் மண் திருமண்ணாகிவிட்டது. இதை எல்லாம் கசடற உணர்ந்த காரணத்தால்தான், ‘பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து…’ என்று ஆழ்வாரும், ‘குடமாடியை (கோபிகா கிருஷ்ணனை) இடத்தேகொண்டு’ என்று சைவத்திரு முறைகளும் பாடுகின்றன.
அவ்வைப் பாட்டியும் ஒரு படி மேலே போய், ‘அரனை மறவாதே, திருமாலுக்கு அடிமை செய்’ என்கிறாள்.
தமிழகத்தில் இம்மட்டில் சமரசபாவம் புரிந்த எல்லோரிடமும் இருந்தே வந்துள்ளது. அதனாலேயே 27 நட்சத்திரங்களில் சிவனுக்குரிய ஆதிரை, விஷ்ணுவுக்குரிய ஓணம் இரண்டுக்கும் மட்டும் திரு சேர்த்து திருவாதிரை, திருவோணம் என்று சொல்கிறோம்” என்று விரியும் பெரியவரின் திருவாக்கு, அடுத்தடுத்து பல பரிமாணங்களைக் காட்டுகிறது.
மஹாவிஷ்ணுவானவர் திருபுவன சக்ரவர்த்தி. சிவனோ பிச்சாண்டி. இருவருடைய சொத்துக்களை கொஞ்சம் கணக்கெடுப்போம்.
சிவனிடம் சாம்பல், எருக்கம்பூ தும்பைப்பூ, ஊமத்தை, மண்டை ஓடு, யானைத்தோல், பாம்பு. இவைதான் உள்ளன. இது எதுவுமே விலைபோகாதவையும்கூட.
மஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலம், முக்தாஹாரம், பட்டுப்பீதாம்பரம், கௌஸ்துப மணி, இத்யாதிகள்… இவற்றுக்கோ விலையை நிர்ணயமே செய்ய முடியாது.
இதிலிருந்து சந்தோஷத்துக்கு விஷ்ணு, வைராக்கியத்துக்கு சிவன் என்பது புரியவருகிறது. இதை ஒட்டியே காலை எழுந்தவுடன் ‘ஹரி நாராயண ஹரி நாராயண’ என்கிறோம். பொழுது நன்றாக சந்தோஷமாக செல்ல வேண்டுமே?
மாலையில் ‘சிவசிவ’ என்கிறோம். என்ன பொருத்தமான வழிகாட்டல் பாருங்கள். பகல் முழுக்க சந்தோஷமாக வாழ, நாராயணன். இரவில் ஒடுங்கி அமைதியாய் தூங்க, சிவன். அண்டம் பிண்டம் இரண்டும் ஒரே சரக்கானதால் உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
காலையில் பஞ்சகச்சம் உடுத்தி, சந்தியாவந்தனம் செய்த ஒருவர், பகலில் சூட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்கு போகிறார். இது காரியத்துக்கு ஏற்ப போடும் வேஷம். இங்கேயும் ஒன்றான பரமாத்மாதான் விஷ்ணுவாக காரிய மாற்றும்போதும் சிவமாக காரியமுடிக்கும் போதும் செயலாற்றுகிறது.”
இப்படி சிவ- விஷ்ணுவின் பேத- அபேத சிறப்புக்களை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கூறும் பெரியவர், இதை உணராமல், ‘என் ஸ்வாமியே பெரியவர்’ என்று உன்மத்தமாக சிந்தித்த ஒருவரைப் பற்றியும், அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் சொல்லும்போது, சிரிப்போடு சிந்தனையையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
- அது ஒரு திருப்பாற்கடல் கதை!