நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக, ஆகிறது. ‘இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று’ என்கிறபோது நாம் கேட்டுத்தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக, கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈசுவரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான பக்தி இல்லை. ஆனால், நாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டு ஈசுவரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே, அதுவும் நல்லதுதான். அவனும், நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூடப் பொருட்படுத்தாமல், நம் கர்மாவையும் மீறிப் பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனாலும், ஒரு கஷ்டம் போனாலும் இன்னொரு கஷ்டம் என்று லோக வாழ்க்கையில் வந்துகொண்டேதான் இருக்கும். ஆகையால் லௌகிகமான கஷ்ட நிவிருத்திக்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே இராது.
No comments:
Post a Comment