வெளியூரிலிருந்து அடிக்கடி பெரியவாளை தர்சனம் பண்ண ஒரு அம்மா வருவாள். மடத்தில் எல்லாருக்கும் அந்த அம்மா மிகவும் பரிச்சியமாகி இருந்தாள். உள்ளே நுழையும் போது எதிரில் வந்த பாரிஷதரிடம் அந்த அம்மா சொன்னாள் .....
"பெரியவாட்ட முக்யமா ஒரு கேள்வி கேக்கணும்"
"என்ன கேள்வி?"
"எங்க தோப்புல புளியமரம் நாலு வருஷமா காய்க்கவேயில்லே! என்ன காரணம்ன்னு பெரியவாளை கேக்கணும்"
பாரிஷதருக்கு கொஞ்சம் கோபமே வந்துவிட்டது. "என்ன மாமி இது? பெரியவாட்ட ஆன்மீக விஷயமா, பூஜை புனஸ்காரம் பத்தி கேக்கலாம்.... ஒங்காத்து புளியமரம் காய்க்கலைன்னா....அவர் என்ன பண்ணுவார்? இதைப்பத்தி எல்லாம் பேசாதீங்கோ!" என்று கொஞ்சம் கடிந்து சொன்னார். இது போதாதா நம் லீலா புருஷருக்கு? பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பாரிஷதரிடம், "அந்த அம்மா என்ன சொல்றா கேளு..." என்றார்.
அவர் வந்து விஜாரித்து விட்டு, "அவா தோப்புல புளிய மரமெல்லாம் நாலு வர்ஷமா காய்க்கவே இல்லியாம்! ..."
"புளிய மரத்து பிஸாசு...ன்னு கேள்விப்பட்டிருக்காளா..ன்னு கேட்டுண்டு வா!"
"கேள்விப்பட்டிருக்கேன் பெரியவா....தோப்பு புளியமரங்கள்ள பிஸாசு இருக்கறதா ஊர்க்காரால்லாம் சொல்லுவா"
"ஒன்னோட குடும்பத்துல முன்னாடி ஏதோ தலைமுறைல ஒரு பொம்மனாட்டி, கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டா !.....ஒனக்கு அந்த விவரம் தெரியுமோ?"
"கேள்விப்பட்டிருக்கேன்...என் மாமனாரோட அப்பா, தன் மூத்த சம்ஸாரத்தை ரொம்பவே கொடுமைப்படுத்தினாராம். அவரோட ஹிம்ஸை பொறுக்காம, அவா கெணத்துல குதிச்சு உசிரை விட்டுட்டாளாம் !.."
"நீ, ஆனந்ததாண்டவபுரம் ஐயங்காரை போயி பாத்து, அவர் சொல்ற பரிஹாரங்களை பண்ணு! அவர் நல்ல மாந்த்ரீகர்! பரிஹாரம் பண்ணு! அப்றம் ராமேஸ்வரத்ல தில ஹோமம் பண்ணு!.."
பெரியவா சொன்னதை அந்த அம்மா பண்ணி முடித்தாள். புளிய மரங்கள் நன்றாக காய்த்து குலுங்கத் தொடங்கின. முதல் உலுக்கலில் கிடைத்த புளியம்பழங்கள், ஒரு கூடை முழுக்க கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தாள். கையைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார்.
"பெரியவாளோட அநுக்ரஹத்தால என்னோட மாமியாரோட மாமியாருக்கு ஸத்கதி கெடைச்சுது! " கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தாள்.
"இந்த மாதிரி துர்மரணங்கள் சம்பவிச்சா...அவா ஆவியா அலைஞ்சு தவிப்பா! அதுக்கான பரிஹாரங்களை நாம பண்ணிட்டோம்..ன்னா, தவிக்கற அந்த உசிர் மேல் லோகத்துக்கு போய்டறது..." என்றார் பெரியவா.
எந்த இடத்தில் ஸதா மஹா மந்த்ர கீர்த்தனம் நடக்கிறதோ, அங்கே அமங்கலம் என்ற பேச்சுக்கே இடமில்லை! இது ஸத்குருவின் வாக்கு!
No comments:
Post a Comment