ஸங்கீதம் உருவாக்கும் ப்ரேமை!
வேதாந்தத்திலே எல்லாம் உள்ளத்துக்குள்ளே ஹ்ருதய குஹையில் சாந்தத்தில் ஒடுங்கிவிடுவதாகச் சொல்லியிருக்கிறது. அந்தச் சாந்தத்திலே சேர்க்கத்தான் ஸங்கீதம் ஏற்பட்டிருக்கிறது. சியாமளா என்று ஸங்கீத மூர்த்தியாகப் பராசக்தி இருக்கிறபோது அவளுடைய உள்ளம் அப்படியே குழைந்திருக்கிறது (ம்ருதுள ஸ்வாந்தாம்); அவள் பரம சாந்தையாக இருக்கிறாள் (சாந்தாம்) என்று காளிதாஸன் ‘நவரத்னமாலா’வில் சொல்கிறார். உள்ளக் குழைவு என்பது ப்ரேமை, கருணை ஸங்கீதத்தினாலே ஆத்ம சாந்தம் உண்டான பிறகு, ஸகலமும் அந்த ஆத்மாவே என்பதால் எல்லாவற்றிடமும் அன்பு பொங்குவதைத்தான் சாந்தாம், ம்ருதுள ஸ்வாந்தாம் என்று கவி சொல்கிறார். இந்த்ரிய இன்பமாயில்லாமல் ஆத்மானந்தத்தில் சேர்ப்பதாலேயே ஸங்கீதம் இப்படிப்பட்ட ப்ரேமை உள்ளத்தை உண்டாக்குகிறது. நினைத்துப் பார்த்தாலே மனம் குளிர்கிறது. அம்பிகை வீணையில் சப்த ஸ்வரங்களையும் மீட்டியபடி, அந்த ரீங்காரத்திலேயே சொக்கிப் பரம சாந்தையாக இருக்கிறாள்; அவளுடைய ஹ்ருதயம் புஷ்பம் மாதிரி மிருதுளமாக ஆகி கருணை மதுவைப் பொழிகிறது. இதை நினைக்கும்போது பக்தர்களுக்கும் மனம் குழைகிறது. பக்தியும், அன்பும், சாந்தமும் தன்னால் ஏற்படுகின்றன. வர்ணனாதீதமான சாந்தத்தில், ஆனந்தத்தில் முழுகியிருக்கிற ஸங்கீத அம்பிகை நமக்கும் சாந்தம், ஆனந்தம், அன்பினால் குழைந்த மனம் முதலியவற்றை அநுக்ரஹிக்கிறாள். ‘ஸங்கீத மூர்த்தி’ என்கிறபோது அவள் உத்தேசம் பண்ணி, அதாவது deliberate-ஆக இப்படிச் செய்கிறாளென்று தோன்றவில்லை. ஸப்த ஸ்வரங்களில் ரமிக்கவேண்டுமென்பதற்காகத்தான் அவள் வீணையை மீட்டுவதாகத் தெரிகிறது. “ஸரிகமபதநி ரதாம்” என்று ஸப்தஸ்வரானந்தப்படுபவளாகவே ச்லோகத்தில் ஆரம்பித்திருக்கிறது. அவள் அப்படி ஆனந்தப்பட்டால், லோகம் பூரா அவளுக்குள் இருப்பதால் லோகமும் ஆனந்தப்படுகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
–நன்றி http://www.kalkionline.com
No comments:
Post a Comment