Source: Shri Varagooran Narayanan
"ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!
(மகா பெரியவரின் ஞாபக சக்தியும்,நகைச்சுவையும்.)
ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.
“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!……இன்னும் இருக்கோ?….”
“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காயக்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”
“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..ப்ல ஆயிருந்துதே!..”
“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”
“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”
“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”
“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”
“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”
“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”
“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”
“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”
“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”
“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”
“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”
கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”
பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..
“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!
குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.
(ஒரு பழைய தினமலர்)
காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டகாõல் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார்.
ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார்.
இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மகாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.
மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கு இருக்கட்டும்.

Source: Shri Hariharan
பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!
கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது...
----------------------------------------
அவ்வப்போதைய மனக்குழப்பத்துக்கு மருந்தாக பகவத்கீதையைத்தான் எடுக்கிறோம். பல தெளிவான பதில்கள் அதில் கிடைக்கின்றன. ஆனாலும் சிலசமயம் குழப்புகின்றன. கர்மயோகப்படி, செயல்புரிந்தே மேன்மையடையலாம் என்று தெளிவாகிறது மனம். "ஜனக மகாராஜர்', கர்மங்கள் செய்தே சித்தியடைந்தவர் என்கிறது கீதை. ஆனால் பிறகு வேறிடத்தில் "ஞானமே' உயர்ந்தது என்கிறார் கிருஷ்ணர். "கருமத்தைக் காட்டிலும் ஞானமே மேலானது என்று நீ சொல்லும்போது, எதற்காக என்னைக் கொடிய கர்மத்தையே செய்ய ஏவுகின்றாய்?'' என்று அர்ஜுனனே கண்ணனிடம் கேட்கிறானே! இப்படி, செயல்புரியக் கட்டளையிடும் கர்மயோகமும், செயலற்ற தன்மையான தியானமும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே?
* கர்மமும் தியானமும் ஒன்றுக்கொன்று முரணா என்றால், இல்லவே இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று என்று இவை வருகின்றன. நேராக மனஸை அடக்கி ஆத்மாவை அனுஸந்தானம் செய்யமுடியாத ஆரம்பநிலையில் கர்மானுஷ்டானம்; அதனால் சித்தசுத்தி வந்தபின் கர்மம் தொலைந்த தியானம், யோகம் இத்யாதி. இதில் சித்தியானபின் எதுவுமே தன்னை பாதிக்காது என்ற நிலையில், லோக «க்ஷமத்திற்காக கர்மா & உள்ளே அடங்கி வெளியே கூத்தடிக்கிற நிலை.முடிவிலே லோகமெல்லாம் மாயை, இருக்கிற ஒரே வஸ்து பிரம்மம்தான்.
நாம் அதற்கு இரண்டாவதாக இல்லாமல் அத்வைதமாக அதோடு ஒன்றிப்போய், ஒரு காரியமும் எண்ணமும் இல்லாமல் பிரம்மமாகவே இருக்க வேண்டும் என்பதுதான் ஸ்ரீபகவத்பாதரின் சித்தாந்தம். அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற
நானோ எப்போது பார்த்தாலும் பல தினுசான காரியங்கள், வேத கர்மங்கள், பூஜை, ஜபம், பரோபகாரம் இதுகளையே சொல்லி வருகிறேனே என்றால், நாம் இருக்கிற ஸ்திதியில் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இப்படி ஆரம்பித்தால் இதுவே படிப்படியாக அத்வைத மோக்ஷத்தில் கொண்டுவிடும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், சாட்சாத் நம் பகவத்பாத ஆச்சார்யாளும் வகுத்துத் தந்த கிரமமும் இதுதான். முதலில் கர்மா, அப்புறம் உபாஸனை பக்தி, முடிவில் ஞானம்.
