("வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"-பண்டிட்டின் மகள்)
(அமானுஷ்ய சக்தியை மற்றவர்கள் அறியவிடாமல் மறைத்து வைத்திருப்பதால்தான் பெரியவாளுக்குப் பெருமை-பண்டிட்)
சொன்னவர்; ஸ்ரீமதி மைதிலி,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரருக்குத் தினந்தோறும் ஸ்ரீருத்ர த்ரிசதீ வில்வார்ச்சனை நடைபெறும். வில்வதளங்கள், வாடிவதங்கியோ,ஓட்டை விழுந்ததாகவோ இருக்கக்கூடாது. மூன்று இலைகள் கொண்ட தளமாகவே இருக்கவேண்டும்.
பெரியவாள் செய்யும் பூஜைக்கான முன்னேற்பாடுகளில், தேவையான வில்வ தளங்களைத் திருத்திக் கொடுப்பது என்பது ஒரு முக்கியமான வேலை. அந்த வேலை ஒழுங்காக நடைபெறவேண்டும் என்பதால்,அதெற்கென்று ஒரு பணியாளரை ஒதுக்கி விடுவது வழக்கம். அந்தப் பணியைச் செய்யும் தனிப்பொறுப்பை ஏற்கும் பணியாளரையே 'வில்வம்' என்று சங்கேதப் பெயரால் அழைப்பதும் உண்டு.
என்ன காரணத்தினாலோ, வில்வத்தின் வரத்து குறைந்து கொண்டே வந்தது.காஞ்சிபுரத்திலுள்ள வில்வமரங்கள் எல்லாம் பசுமை இழந்து காணத் தொடங்கின. சிவன் கோவில்களில் வில்வ மரங்கள் இருந்தன என்றாலும், 'சிவன் சொத்து குலநாசம்' என்பதால், கோவில் மரங்களிலிருந்து வில்வக்கிளைகளை ஒடித்துக் கொண்டுவர முடியாது.
ஆனால், வில்வம் குறைந்தால்,பெரியவா கேட்பார்களே?.
ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைத்தபோது, "காஞ்சிபுரத்தில் எல்லார் வீட்டு வில்வமரங்களிலும் கிளைகள்தான் இருக்கு; இலைகள் இல்லை" என்று நாசூக்காகத் தெரிவித்தார், ஒரு தொண்டர்.
"ஹிந்தி பண்டிட்டைக் கேளேன்..."
தொண்டர்,'த்ஸொ' கொட்டினார்.'ஹிந்திபண்டிட் என்ன சர்வக்ஞரா? அவருக்கு ஹிந்தி தெரியும்;சம்ஸ்கிருதம், இங்கிலீஷ்,தமிழ் தெரியும். வில்வமரம் தெரியுமா!'
பெரியவாளுடைய ஆக்ஞை.எனவே,தவிர்க்க முடியாது.
"பண்டிட் ஸ்வாமி, காஞ்சிபுரத்தில் வீடுகளைத் தவிர வேறு எங்கே வில்வமரம் இருக்கா-ன்னு தெரியுமா? உங்களை கேட்கச் சொல்லி பெரியவா உத்திரவு.."
அப்பாவுக்கு நெஞ்சு சிலிர்த்தது.
பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது,நினைவுக்கு வந்தது.
ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கு, ஹிந்தி டியூஷன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார், அப்பா.
இடம் - முனிசிபல் பார்க் ! அங்கேதான் இடைஞ்சல் இல்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட இடம். அலங்கோலமாக வளர்ந்திருந்த குரோடன்ஸ் செடிகள். தண்ணீர் ஊற்றப் படாததால் வாடிக் கொண்டிருந்த செடிகொடிகள். ஆனால், இது என்ன, பச்சைப்பசேலென்று, புதர் அடர்த்தியாக...
- வில்வமரம் !
அட ! பூங்காவில் வில்வமரம்கூட வளர்க்கிறார்களா? பொருத்தமாக இல்லையே?
சரி. நமக்கென்ன?
இல்லை.ஆழப் பதிந்துவிட்டது.
"பண்டிட் ஸ்வாமி...வில்வமரம்.."
"இதோ, என்னோட வா, காட்டுகிறேன்..."
பூங்காவுக்கு அழைத்துக் கொண்டு போய் வில்வமரத்தைக் காட்டினார்,அப்பா.
பின்னர் பல நாள்களுக்கு அந்த மரத்தின் தளங்கள்தாம் சந்திரமௌளீஸ்வரரின் அர்ச்சனைக்குப் பயன்பட்டன.
.............................. .............................. .............................. .........
இரண்டு நாள்களுக்குப் பிறகு நான் அப்பாவைக் கேட்டேன்;
"யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் ஒரு வில்வமரம் இருப்பது, ஹிந்தி பண்டிட்டுக்கு மட்டும் தெரியும்- என்பது,எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது.
அப்பா சிரித்தார்,பெரியவாளுடைய பல லீலைகளில் இதுவும் ஒன்று."
"இதில் லீலை என்னப்பா இருக்கிறது? ஹிந்தி பண்டிட்டுக்கு நிறைய நண்பர்கள்; பல இடங்களுக்கும் போகிறார்; சிவபூஜை செய்கிறார். அதனால், வில்வமரம் ஓர் இடுக்கில்இருந்தால் கூட, அவர் நினைவில் வைத்துக்கொண்டு விடுவார் - என்ற அனுமானத்தில் பெரியவா சொல்லியிருக்கக்கூடும். இல்லையா?"
"இல்லை, மைதிலி, இது ஒரு அபூர்வ ஸித்தி.."
"அப்படியானால், முனிசிபல் பார்க்கில் வில்வமரம் இருப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாமே? உங்களைக் கேட்கச் சொல்வானேன்?..."
என் எதிர்வாதத்தை அப்பா ரசித்தார்.
"இதோ பார். மைதிலி, முனிசிபல் பார்க் மட்டுமில்லே; இந்த அண்டகோளமே பெரியவாள் அறிவுக்கு உட்பட்டதுதான்.அந்த அமானுஷ்ய சக்தியை மற்றவர்கள் அறியவிடாமல் மறைத்து வைத்திருப்பதால் தான் பெரியவாளுக்குப் பெருமை.
முனிசிபல் பார்க்கில் வில்வமரம் இருக்கு...என்று சிஷ்யரிடம் சொல்லியிருந்தால், என்ன ஆகியிருக்கும்? சிஷ்யர், தண்டோரா போடாத குறையாக, எல்லோரிடமும் 'முனிசிபல் பார்க்கை எட்டிப் பார்க்காத பெரியவாளுக்கு அங்கே வில்வமரம் இருக்கு-ன்னு தெரிஞ்சிருக்கு.பெரியவா, ஸித்தபுருஷர் ! ' என்று முழங்கியிருப்பார்.
அதைத் தவிர்ப்பதற்காக, நான், ஒரு வியாஜம்; காரணம், அந்த உண்மை,என் மூலமாக வரட்டுமே? -என்று, எனக்குக் கௌரவம் கொடுத்துவிட்டு, என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டு, சுவாமிகள் இந்த
சம்பவத்திலிருந்து தன்னை மறைத்துக் கொண்டுவிட்டார்கள்.
நான் நெஞ்சுருகிப் போனேன்; கண்களை துடைத்துக் கொண்டேன். இமயம் போன்ற தத்துவங்களைப் புரிந்துகொள்கிற வயதில்லை, எனக்கு
No comments:
Post a Comment