இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்!"
(குருக்களின் குறையைத் தீர்த்த மகாபெரியவா)
நன்றி- குமுதம்.லைஃப்
தொகுப்பு-வெ.ஸ்ரீராம்.
13-12-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஆதிசங்கர பகவத்பாதர் பொன்மழை பொழிய
வைச்ச கதை எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்.
தனக்கு அழுகின நெல்லிக்காயை பிட்சையா
போட்டவளோட வீட்டுல இருந்த தரித்திரத்தை
விரட்டறதுக்காக, மகாலக்ஷ்மியை வேண்டினாராம்,
சங்கர மகான்,அந்த வீட்டுல இருந்தவா செஞ்ச பாவம்
அடுத்த தலைமுறைலதான் தீரும்.அதுவரைக்கும்
தனம் தரம்முடியாதுன்னாளாம்.உன்னோட பார்வைதான்
எப்பேர்ப்பட்ட பாவத்தையும் அழிச்சுடுமே. நீ அதை செய்யக்
கூடாதான்னு கேட்டு,அந்த வீட்டுல இருந்த வறுமையைப்
போக்கினார் ஜகத்குரு.
அதாவது, மகான்கள் நினைச்சா, எப்படிப்பட்டவாளோட
கஷ்டத்தையும். எந்த மாதிரியான சூழல்லையும் போக்கிட
முடியும்கறது நிதர்சனம். அப்படி பக்தர் ஒருத்தரோட
கஷ்டத்தை பரமாசார்யா போக்கினதைத்தான் இப்போ
பார்க்கப்போறோம்.
ஒரு சமயம் மகாபெரியவா வெளியூர்ல முகாம் இட்டிருந்த
சமயத்துல வழக்கம்போல சுத்துவட்டாரத்துலேர்ந்தெல்லாம்
ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பண்ணினா. அவாள்ல
மகாபெரியவா தங்கி இருந்த இடத்துக்கு கொஞ்சம் தள்ளி
இருந்த சிவன் கோயில் குருக்களும் ஒருத்தர்.
கோயில்லேர்ந்து கொஞ்சம் புஷ்பம்,வில்வதளம்,விபூதி,
குங்குமம் எடுத்துண்டு வந்து சுவாமி பிரசாதம்னு சொல்லி
மகாபெரியவாகிட்டே குடுத்துட்டு, ஆசிர்வாதம் வாங்கிண்டு
புறப்பட்டுட்டார் அந்த குருக்கள்.
இது நடந்து ரெண்டு நாளைக்கு அப்புறம்,பிரதோஷம் வந்தது.
அன்னிக்கு சாயந்திரம் நாலு மணி இருக்கும். எந்த முன்
அறிவிப்பும் இல்லாம, தரிசனம் தந்துண்டு இருந்த
இடத்துலேர்ந்து எழுந்துண்ட பெரியவா, மளமளன்னு
வெளியில இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டார்.
எங்கே போறார்?எதுக்குப் போறார்னு மடத்து சிப்பந்திகளுக்கே
தெரியாததால ,எல்லாரும் அவசர அவசரமா அவர் பின்னால
ஓடினா.பரமாசார்யா நடை,அவ்வளவு வேகம்! என்னவோ
காரணம் இருக்கும்னு பக்தர்களும் சேர்ந்து நடந்தா.
மளமளன்னு நடந்த மகாபெரியவா பக்கத்துல இருந்த சிவன்
கோயிலுக்குள்ளே நுழைஞ்சார். அவரைக் கொஞ்சமும்
எதிர்பார்க்காத கோயில் குருக்கள் அவசர அவசரமாக
வரவேற்க ஓடிவந்தார்.
"அதெல்லாம் இருக்கட்டும்..பிரதோஷகாலம் ஆரம்பிக்கப்
போறது..நீ பூஜை ஆரம்பி..நான் முழுக்க இருந்து பார்த்துட்டுப்
போறேன்!" சொன்ன பரமாசார்யா சுவாமி சன்னதி நேராத்
தெரியறாப்புல ஒரு இடத்துல நின்னுண்டார்.
ஏற்கனவே மகாபெரியவா பின்னாலயே வந்த கூட்டம் அங்கே
நிறைஞ்சு இருந்துது. அதோட ஆசார்யா அங்கே இருக்கார்னு
தெரிஞ்சதும் இன்னும் நிறையப்பேர் வந்ததுல திருவிழா
மாதிரி கூட்டம் அலைமோதித்து.
குறைவான அபிஷேக ஆராதனைப் பொருட்கள்தான்
இருந்தாலும்,அதைவைச்சு குருக்கள் நந்திக்கும்,நாதனுக்கும்
பரிபூரணமா அபிஷேக அலங்கார ஆராதனைகள்
அத்தனையையும் சிறக்கப் பண்ணி முடிச்சு தீப ஆரத்தி
காட்டினார்.
ஆரத்தி ஜோதியை இருந்த இடத்துலேர்ந்தே தரிசித்தார்
மகாபெரியவா. வந்திருந்த கூட்டம், குருக்கள் காட்டின
ஆரத்தியைத் தொட்டுக் கும்பிட்டுட்டு தீபத்தட்டுல
தட்சணையா காசுபோடவும் ஆரம்பிச்சா. கையில இருந்த
சில்லறைக் காசுகளை சிலர் போட்டா. இன்னும் சிலர்,
பெரியவா பார்த்துண்டு இருக்கார்ங்கறதால பத்து
இருபதுன்னு ரூபாய் நோட்டுக்களைப் போட்டா.
எல்லாம் முடிஞ்சு வந்திருந்தவாளுக்கு பிரசாதம் குடுக்க
ஆரம்பிச்சார், குருக்கள்.
முதல் பிரசாதமா விபூதி,வில்வம், புஷ்பத்தை மூங்கில்
தட்டுல வைச்சு, மகாபெரியாகிட்டே குடுத்தார்.
மென்மையா அவரைப் பார்த்துப் புன்னகைச்ச மகாபெரியவா,
"என்ன..உன்னோட மனோரதம் பூர்த்தியாச்சா? இனிமே
எல்லாம் நல்லபடியா நடக்கும்!"னு சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்டதும், குருக்களுக்கு அப்படியே
கை நடுங்க ஆரம்பிச்சுடுத்து. கண்ணுலேர்ந்து ஜலம்
அருவியா கொட்டித்து. "பகவானே...நான் மனசுக்குள்ளே
நினைச்சது உங்களுக்குக் கேட்டுதா?" அப்படின்னு
கேட்டுண்டே மெய்சிலிர்த்து நின்னார்.
பதில் எதுவும் சொல்லாம மௌனமா புன்னகைச்சுட்டு,
கோயிலைப் பிரதட்சணம் பண்ணிட்டுப் புறப்பட்டார்
ஆசார்யா.
அதுக்கப்புறம் அங்கே இருந்தவா எல்லாரும் குருக்கள்கிட்டே
என்ன நடந்ததுன்னு கேட்டா.
"ரெண்டு நாள் முன்னால மகாபெரியவாளை தரிசனம் பண்ண
வந்தப்போ, அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்தேன்.
"பரமேஸ்வரா...இந்தக் கூட்டத்துல பத்துல ஒரு பங்கு
கோயிலுக்கு வந்தாக்கூட உன்னையும் நன்னா வைச்சுக்கலாம்
என்று மனசுக்குள்ளே நினைச்சுண்டேன். சாட்சாத்
சர்வேஸ்வரன்கிட்டேதான் நான் அப்படி வேண்டிண்டேன்.
அந்த பகவானும் நானும் வேற இல்லைங்கறதை
உணர்த்தறமாதிரி, இங்கே இத்தனை கூட்டத்தையும்
அழைச்சுண்டு வந்து திருவிளையாடல் நடத்திட்டுப் போறார்,
மகாபெரியவா!" தழுதழுக்கச் சொன்னார் குருக்கள்.
அதுக்கப்புறம் மகாபெரியவா வந்துட்டுப் போன கோயில்னே
அது பிரபலம் ஆச்சு. பக்தர்களும் நிறைய வர ஆரம்பிச்சா.
No comments:
Post a Comment