குரு சிஷ்ய பாவம்கறது பாரம்பரியமா இந்து மதத்துக்கே உள்ள தனிப் பெருமை. மாதா, பிதாவுக்கு அப்புறம், தெய்வத்தைவிடவும் முன்னதா குருவைத்தான் சொல்லி இருக்கு.
அந்தக் காலத்துல எல்லாம் குருவாக இருக்கறவர் ஒரு ஆக்ஞை இட்டுட்டான்னா அது எவ்வளவு சிரமமானதா இருந்தாலும் செய்யறச்சே கஷ்டங்கள் பலதும் வந்தாலும், கொஞ்சமும் சலிச்சுக்காமலும் தவிர்க்காமலும் சீடர்கள் செய்து முடிச்சுடுவா.
அதேசமயம் அவஸ்யம் இல்லாத எந்தக் காரியத்தையும் அவாளைச் செய்யச் சொல்லமாட்டார் குருநாதர். அப்படிப்பட்ட காலகட்டத்துல நடந்த குருகுல அனுபவம் ஒண்ணை முதல்ல சொல்றேன். அதுக்கும் மகாபெரியவாளுக்கும் என்ன சம்பந்தம்கறதை அடுத்ததா சொல்றேன்.
மூணு இளைஞர்கள் ஒரு குரு குலத்துக்கு வந்தாங்க. குருதேவரை தரிசனம் பண்ணி, தாங்கள் அவர்கிட்டே சீடர்களா சேர்றதுக்காக வந்திருக்கறதா சொன்னாங்க.
இந்தக் காலத்துல பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கறதுக்கு முன்னால, நேர்முகத் தேர்வு, என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதவைக்கிறது இப்படியெல்லாம் தகுதித்தேர்வு நடத்தறாங்க இல்லையா? அத அந்தக் கால குருகுல முறையில இருந்துதான் வந்தது.
சின்னவயசுலயே குருகுலத்துல சேர்த்து படிப்படியா கத்துக் குடுத்தது ஒருவகை. இன்னொரு வகை நடுத்தர வயசுல குருகுலத்துல சேர்ந்து படிக்கறது. இதுல இரண்டாவது முறையில சீடர்களை சேர்த்துக்கறச்சே அவாளுக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் சேர்த்துக்குவாங்க.
அந்த வழக்கப்படி, தன்கிட்டே பாடம் கத்துக்க வந்த மூணு இளைஞர்களுக்கும் ஒரு தேர்வு வைச்சார், குருநாதர்.
மூணுபேர்கிட்டேயும் ஆளுக்கு ஒரு பறவையைத் தந்தார். "இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு கொன்னுட்டு வந்துடுங்கோ!' அப்படின்னார்.
இளைஞர்கள் பறவையை எடுத்துண்டு போனாங்க. ரெண்டுபேர் கொஞ்ச நேரத்துலயே வெறும் கையோட திரும்பி வந்துட்டாங்க. மூணாவது இளைஞர் ரொம்பநேரம் கழிச்சு வந்தான். அவன் கொண்டுபோன பறவை அவன் கையிலயே இருந்துது.
குருநாதர் அவங்ககிட்டே நடந்ததை சொல்லச் சொன்னார்.
முதல் இளைஞன் சொன்னான் "நீங்க சொன்னபடியே பண்ணிட்டேன். என் இருப்பிடத்துல ஓர் அறைக்குள்ள போய், கதவை இறுக்க மூடிட்டேன். ஒருத்தரும்... ஏன் சூரிய வெளிச்சம் கூட உள்ளே வரமுடியாதபடி இருண்டுடுத்து. உடனே அங்கேயே வச்சு, அதைக் கொன்னுட்டேன்'.
ரெண்டாவது இளைஞன் அதைக்கேட்டு சிரிச்சான். "நீ குருநாதர் சொன்னதை சரியா புரிஞ்சுக்கலை. யாருமே பார்க்காதபடி பறவையைக் கொல்லச் சொன்னார். ஆனா, நீ அதைக் கொன்ன சமயத்தல அந்தப் பறவை உன்னைப் பார்த்திருக்கும் இல்லையா? அதனால நீ தோத்துட்டே நானும் உன்னை மாதிரிதான் இருட்டு றைக்கு அதை எடுத்துண்டு போனேன். ஆனா அங்கே வைச்சு அதோட கண்ணை ஒரு துணியால கட்டிட்டு வதைச்சுட்டேன். குருநாதர் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சு செயல்பட்ட என்னைத்தான் அவர் சீடனா ஏத்துப்பர். ஏன்னா, டுத்தவன் அவர் சொன்னதையே கேட்காம பறவையை உயிரோட திருப்பி எடுத்துண்டு வந்திருக்கான். அதனால தகுதித் தேர்வுல ஜெயிச்சது நான்தான்!'
அமைதியாக நின்றிருந்த மூன்றாவது இளைஞனைப் பார்த்தார் குருநாதர், "நீ என்னப்பா சொல்லப்போறே?' அப்படின்னு கேட்காமலே கேட்ட அவரோட பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சுண்டு பேச ஆரம்பிச்சான் அவன்.
"சுவாமி, நீங்க சொன்னமாதிரியே பறவையை எடுத்துண்டு போனேன். ஆனா, எங்கே போய் நின்னாலும் கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார்னே, தோணித்து. யாருக்கும் தெரியாம பண்ணணும்னா, அது பகவானுக்கும் தெரியக்கூடாதே? எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருக்கற, எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கற அவருக்குத் தெரியாம எந்த ஒரு காரியத்தையும் பண்றது சாதித்தியமில்லைன்னு தோணித்து. அதோட, உயிர்வதை செய்யறதுல உங்களுக்கு எந்த விருப்பமும் இருக்காது. அதனால் அதை திரும்ப எடுத்துண்டு வரணும்கற அர்த்தத்துலதான் நீங்க அப்படி சொல்லியிருக்கணும்கறதும் புரிஞ்சுது. அதான் பறவையைக் கொண்டு வந்துட்டேன்'
சொல்லி முடிச்ச அவனை, சந்தோஷமா சீடனா ஏத்துண்டு ஆசிர்வதிச்சார் குருநாதர். இந்தக் கதையை எதுக்கு சொன்னேன் தெரியுமா? உலகத்துல நாம எங்க இருந்தாலும் சரி, பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை விளக்கத்தான்.
சுவாமிக்கு சமமா போற்றப்படற ஆசார்யாளும் இப்படி எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருந்து நடக்கற எல்லா விஷயத்தையும் பார்த்துண்டு இருந்தார்ங்கறதை நிரூபிக்கறவிதமா நடந்த சம்பவம் ஒண்ணைதான் நான் இப்போ சொல்லப்போறேன்.
ஒரு சமயம் காஞ்சி மடத்துல பெரியவா, பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். எத்தனை எத்தனையோபேர் எங்கெங்கே இருந்தெல்லாமோ வந்திருந்தா. வரிசை ரொம்ப பெரிசா இருந்தது.
வந்திருந்தவாள்ல அடிக்கடி வர்றவா, எப்போதாவது வர்றவா, புதுசா வர்றவான்னு எல்லா தரப்பும் இருந்தா. அந்தக் கூட்டத்துல சுமார் அறுபது வயசு உள்ள ஒரு பாட்டியும் இருந்தா. நெத்தி நிறைய குங்குமமும் சந்தனமும் இட்டுண்டு , தழையத் தழைய பட்டுக் கட்டிண்டு இருந்தா அந்தப் பாட்டி, பத்தாக்குறைக்க கழுத்துல ருத்ராட்சம், ஸ்படிக மாலைகளையும் போட்டுண்டு இருந்தா.
பார்க்கறவா எல்லாருக்கும் கொஞ்சம் கூடுதலாவே மதிக்கத்தோணும். அப்படி ஒரு தோற்றம் அந்தப் பாட்டிக்கு ரொம்ப பக்தி நிறைஞ்சவா, அவாகூட நாமளும் வர்றதே பாக்யம்னு நினைச்சு சந்தோஷமா வரிசைல வந்தா எல்லாரும்.
ஆச்சு, ஒருவழியா பாட்டியோட முறை வந்துது, மகாபெரியவாளை ரெண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் பண்ணினா அந்த மூதாட்டி.
ஆசார்யா, ஆசிர்வாதம் செய்யப்போறார்னு நினைச்சதுக்கு மாறா, பக்கத்துல இருந்த சீடனை கூப்பிட்டார் பரமாசார்யா.
"மடத்து உக்ராண அறையில் இருந்து (சமையல்கட்டு) நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வா!' உத்தரவிட்டார்.
அவசர அவசரமாக ஓடினார் அந்தச் சீடர். பாட்டிக்கு ஒண்ணும் புரியலை. சுத்தி இருந்தவாளுக்கோ ஆச்சரியம். "பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கார்னா, இந்தப் பெரியம்மா ஏதோ பாக்யம் பண்ணி இருக்கணும்னு!' ஆளாளுக்கு பேசிக்க ஆரம்பிச்சா.
ஒரு கூடையில நூறு எலுமிச்சம் பழத்தை எடுத்துண்டு வேகவேகமா ஓடி வந்தார் சீடர். கூடையை அந்த மூதாட்டி பக்கத்துல வைக்கச் சொன்னார் ஆசார்யா.
"இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ. நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்'
பெரியவா சொல்ல, திருதிருன்னு முழிச்சா அந்த வயதான பெண்மணி. ரொம்ப தயங்கி, "பெரியவா, என்ன சொல்றேள்னு புரியலை. எனக்கு எதுக்கு இத்தனை எலுமிச்சம்பழம்' கேட்டா.
"அதான் காசுவாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது, உறவை அழிக்கறது, ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம்பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிண்டு இருக்கியே... அதுக்கு இது உபயோகப்படும்னுதான் குடுக்கச் சொன்னேன்!'
மகாபெரியவா கொஞ்சம் கோபமான குரல்லயே சொன்னதும்தான் எல்லாருக்கும் அந்த மூதாட்டியோட மறுமுகம் என்னன்னு தெரிஞ்சுது. துஷ்டனை கண்டமாதிரி எல்லாரும் விலகி நின்னா.
சட்டுன்னு பெரியவா கால்ல விழுந்த அந்தப் பாட்டி, "என்னை மன்னிச்சுடுங்கோ... காசுக்க ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்தமாதிரி நீங்க சொன்னது பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை எனக்கு உணர்த்திடுத்து. இனிமே எந்தக் கெட்ட காரியமும் கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ'ன்னு கதறினா. அவ கண்ணுல இருந்து வழிஞ்ச நீரே அவ பாவத்தைக் கழுவிடும்படிக்கு அழுதா.
கொஞ்ச நேரம் கழிச்சு, "உனக்கு தெரிஞ்ச அபிசார மந்திரத்தை எல்லாம் ஏதாவது ஒரு பசுமாட்டோட காதுல சொல்லிட்டு அதோட தலை முழிகிடு. அதெல்லாம் உனக்கு முழுசா மறந்துடும். போயிட்டு வா. இனிமேலாவது நல்லகாரியம் பண்ணு!'ன்னு சொல்லி அந்தப் பாட்டியை அனுப்பி வைச்சார், பரமாச்சார்யார்.
இப்போ, சொல்லங்கோ மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு எல்லாரும் சொல்றது சத்தியமான வார்த்தைகள்தானே!
- பி. ராமகிருஷ்ணன்
Source: Dinamalar
No comments:
Post a Comment