திருவண்ணாமலை பெரியவரை அண்மையில் சந்தித்தேன். வழக்கம் போல மஹா பெரிவா கதை சொல்லுங்கன்னு கேட்டேன். அவர் சொன்ன கதை கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதன் கருவை தெய்வத்தின் குரலில் படித்து இருக்கிறேன். ஆனால் அதன் பின் இவ்வளவு கதை இருப்பது தெரியாது!
==
மஹா பெரியவாளின் யாத்திரை காசி நகரை நெருங்கியது. காசி ராஜா மதன் மோஹன் மாளவியா. ஆதித்ய நராயண சிங். அவர் பெரியவாளை பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தார்.சிலருக்கு இது பிடிக்கவில்லை! அவர்கள் ராஜாவிடம் சென்று காஞ்சி மடம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்படவில்லை என்றும் காஞ்சி மடாதிபதிகள் ஜகத் குரு என்று அழைத்துக்கொள்வது சரியில்லை என்றும் "போட்டுக் கொடுத்தார்கள்.” இதை கேட்ட ராஜாவுக்கு மனசு சஞ்சலப்பட்டு விட்டது.வரவேற்புக்கு எல்லாம் ஏற்பாடு ஆகிவிட்டதே, என்ன செய்வது. யோசித்து யோசித்து குழம்பி, கடைசியில் பூர்ண கும்பம் சொடுப்பதை தவிர்த்துவிட நினைத்தார்.
காசி ஹிந்து சர்வ கலாசாலையின் சம்ஸ்க்ருத துறை பேராசிரியரை அழைத்து நாளை நீங்கள் சென்று பூர்ண கும்பம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவர் அதிர்ச்சியுடன் "ஏன்? என்ன ஆயிற்று? உங்களுக்கு உடல் நிலை சரியில்லையா, தீட்டு ஏதும் வந்துவிட்டதா?” என்றூ வினவினார். ராஜா சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.
பேராசிரியருக்கு ராஜாவின் மனசை யாரோ கலைத்து இருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது.
"பூர்ண கும்பத்தை நான் கொடுக்க வேண்டும் என்றால் கொடுக்கிறேன். அது நான் செய்தா பாக்கியம்! ஆனால் காசி பல்கலைக்கழகத்துக்கான என் கடைசி வேலை அதுவாகத்தான் இருக்கும். அவர் எப்பேர்பட்ட மஹான்! சாக்ஷாத் பரமேஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றே சொல்லலாம். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை தர நீங்கள் தயங்குவது சரியா? யாரோ அவரைப்பற்றி தவறாக சொன்னால் நீங்கள் அப்படியே அதை ஏற்றுக்கொள்வதா? கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்று உங்களுக்குத் தெரியாதா? குறைந்தது சம்ஸ்க்ருத பேராசிரியராக உங்கள் பல்கலைக்கழகத்தில் இருக்கிற என்னையாவது கூப்பிட்டு கேட்கக்கூடாதா?” என்று பொழிந்து தள்ளிவிட்டார்.
திக்குமுக்காடிப்போன ராஜா "சரி சரி நானே நாளை பூர்ண கும்பம் கொடுக்கிறேன். நீங்கள் பக்கத்தில் இருங்கள்!” என்று ஒத்துக்கொண்டார்.
ஊர் எல்லை. ஏராளமான ஜனங்கள் பெரியவாளை எதிர்கொண்டழைக்க கூடி இருக்கிறார்கள். ராஜாவும் ஆஜர்.
பெரியவாளும் வந்து சேர்ந்தார். சூரியன் போல் பிரகாசித்துக்கொண்டு நிற்கும் பெரியவாளை கண்ட ராஜாவின் பூர்ண கும்பத்தை ஏந்திய கைகள் நடுங்குகின்றன. கீழே போட்டுவிடுவார் போல் இருந்தது. பேராசிரியர் அதை தானே வாங்கி வேத மந்திரம் கோஷித்து பெரியவாளிடம் நீட்டுகிறார்.அவரும் அதை ஏற்கிறார்.
பின் பேராசிரியரைப் பார்த்து "ராஜாவுக்கு ஏதோ சந்தேகம் இருக்கு போலிருக்கே? தாராளமாக கேட்கச்சொல்லு" என்கிறார்.
ராஜா சம்ஸ்க்ருதத்திலேயே கேட்கிறார். “ஜகத் குரு என்பவர் யார்? யாருக்கு அந்த பட்டம் பொருந்தும்?”
பெரியவா சிரித்துக்கொண்டே "இந்த கேள்விக்கு பதில் கிடைக்க சாயந்திரம் வரை பொறுக்க முடியுமா? நான் பார்த்த நோட்டீஸில் சாயந்திரம் வரவேற்பு கூட்டம் என்றும், என் அனுக்ரஹ பாஷ்யம் என்றும் போட்டு இருக்கிறதே!”
ராஜாவும் ஒப்புக்கொண்டார்.
மாலை சதஸ் கூடியது.
காசி நகர சார்பாக வரவேற்பு பத்திரம் வாசித்து அளிக்கப்பட்டது. பெரியவா ஏற்புரை நிகழ்த்தலானார்.
"இன்றைக்கு ஒருவர் என்னைப்பார்த்து கேட்டார், ஜகத் குருன்னா யாரு?அந்த பட்டம் யாருக்குப்பொருந்தும்?”
கேள்வியை கேட்ட பின் ஒரு முறை நிதானமாக கூட்டத்தினர் அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்தார்.
"நான் பார்க்கிற வரையில் என்னைத்தவிர அந்த பட்டத்துக்கு பொருந்தமானவரா யாரையும் பார்க்கலை!”
கூட்டம் கப்சிப் என்றாகிவிட்டது! ஒரே அதிர்ச்சி! ஒரு சன்யாஸி!தன்னைத்தானே இப்படி புகழ்ந்து கொள்வதா? பலருக்கு ச்சீ என்றாகிவிட்டது.
பெரியவா தொடர்ந்தார்.
"யார் ஜகத் குரு?
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம் |நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தையே நம: |
என்று தக்ஷிணாமூர்த்தியை ஜகத் குருவாக சொல்லியிருக்கு.
வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
என்று க்ருஷ்ணனை ஜகத் குருவாக சொல்லி இருக்கு.
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
என்று ஆச்சார்யாளையும் சொல்லி இருக்கு.
வேறு யாரையும் இப்படி சொன்னதாக தெரியவில்லை.
ஜகத் குரு என்பதை இரண்டு விதமா அர்த்தம் பண்ணலாம். ஜகதாம் குரு என்றால் ஜகத்துக்கே குரு என்பதாக முன்னே மூன்று பேரை சொன்னேன்.
யாருக்கு 'ஜகத் ஏவ குரு' என்றும் அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். யாருக்கு இந்த உலகமே குருவா இருக்கோ அவர் ஜகத்குரு என்றும் அர்த்தம் பண்ணலாம். அப்படிப்பார்த்தா சின்ன வயசில் இந்த மடத்துக்கு வந்ததில் இருந்து லோகத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டே இருக்கேன்.இன்னமும் பாடம் கற்றுக்கொள்கிறேன். அதனால்தான் வேறு யாரையும் விட எனக்கே அதுக்கு அதிக அருகதை இருக்குன்னு சொன்னேன்"
ராஜா இதை கேட்டதும் சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார்! சபையில்'ஓபனாக' "நான்தான் அப்படி மடத்தனமான கேள்வியை கேட்டவன்.இப்போது புரிந்து போயிற்று. நீங்களே ஜகத் குரு. ஜகத் ஏவ குரு இல்லை,ஜகதாம் குரு!” என்று உணர்ச்சி பொங்க கூறினார். சபையோர் ஆரவாரித்தனர்!
--
இந்த கதையின் இன்னும் ஆதென்டிக் வெர்சன் வேறு இருக்கிறது. சக்கையை விட்டு சாரத்தை மட்டும் கிரஹிக்க ப்ரார்த்திக்கிறேன்.
====
"ஆமாம், அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்?”என்று கேட்க அடுத்த கதை வந்தது!......
மிக நல்ல பதிவு. நன்றி.
ReplyDeleteநமஸ்காரம்,
சாவித்திரி