ஸ்ரீமடம் எசயனூரில் முகாம். வந்திருந்த பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டும், சிலரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டும் இருந்தார்கள் ஸ்ரீ பெரியவா. பிற்பகல் மணி இரண்டு ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயில். காலையில் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட நகரவில்லை.
அப்போது அந்த கிராமத்திலிருந்து இரண்டு பேர் வந்தார்கள் - சிப்பாய், வெங்கடேசன் என்று பெயர். தினமும் தரிசனத்துக்கு வருவதால் ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு பரிச்சயமாகியிருந்தார்கள். இருவரும் நேரே ஸ்ரீ பெரியவாளிடம் போனார்கள். 'இப்போ மணி என்ன தெரியுமா? பொழுது விடிஞ்சதலிருந்து ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம இருந்த இடத்த விட்டு அசையாம உட்கார்ந்திருக்கியே, எதுக்கு பட்டினி கெடக்கே? போய் சாப்டு' என்றார்கள்.
சுற்றி இருந்த தொண்டர்கள் திகைத்துப் போனார்கள். எவர் முன்னால் ராஜாக்களும், கோடீஸ்வரர்களும், அரசு அதிகாரிகளும், அவ்வளவு ஏன், பிரதம மந்திரியும், ஜனாதிபதியும் தலை வணங்கி நிற்கிறார்களோ, அந்த மஹானை, இரு கிராம வாசிகள் 'நீ, போ' என்று ஏகவசனத்தில் பேசுகிறார்களே? கடவுளே?
ஸ்ரீ பெரியவா மெல்லச் சிரித்துக் கொண்டு சொன்னார்கள் 'நான் சந்யாசம் வாங்கிக்கறதுக்கு முன்னாடி அப்பா, அம்மா, பெரியவர்கள் தான் என்னை வா, போ என்பார்கள். இந்த இரண்டு குடியானவர்களுக்கும் என்னிடம் ரொம்ப வாத்சல்யம். பக்தி. நான் சாப்பிடலையேன்னு கவலை. அதுதான் ரொம்ப பாசத்தோட உத்தரவு போடறா, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?.
உடனே அந்த இடத்திலிருந்து எழுந்து விட்டார்கள். தொடர்ந்து நீராடல், நித்ய கர்மா, இத்யாதி. பிக்ஷைக்கு தயாரான போது மணி நான்கு!
************************
நெய்வேலி மகாலிங்கம். 'கண்ணப்ப நாயனார்' என்று ஸ்ரீ பெரியவாளாலேயே புகழப் பட்டவர். ஸ்ரீ சரணரிடம் உரத்த குரலில் தான் பேசுவார். களங்கமில்லாமல் மனதில் தோன்றியதை அப்படியே கொட்டி விடுவார். அருகிலிருந்து கேட்பவர்களுக்கு அவர் மீது வெறுப்புக் கூட வந்துவிடும், 'என்ன இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறாரே' என்று. ஆனால் ஸ்ரீ ஸ்வாமிகளோ ஆடாமல், அசையாமல் அவர் சொல்வதை ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு நாள் மகாலிங்கம் ஸ்ரீ பெரியவாளிடம் சொன்னார் 'அப்பா, நீ வெயில், மழைல ஊர் ஊரா அலையறே, கொலப் பட்டினி இருக்கே, ஆனா உன்ன பாக்க வரவங்க எல்லாரும் வயிறு முட்ட சாப்டுட்டு காரு, ட்ரைன், பஸ்சுன்னு வாகனங்கள்ல சொகுசா வராங்க. 'பெரியவா, பெரியவா' ன்னு சொன்னவுடனே நீயும் அவங்களோட பக்தியை மெச்சி ஆசிர்வாதம் பண்றே, ஆனா இவங்க யாரும் உன்னப் பத்தி கவலைப் படறதே இல்ல. இந்தா பிஸ்கட், மருந்து, டானிக் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். வேளாவேளைக்கு சாப்பிடு. I am the only son of my father. அதனால, என் வீட்டுக்கு வந்து அங்கேயே இரு'.
ஸ்ரீ பெரியவா மெல்லச் சிரித்த வண்ணம் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார்கள். 'இப்படியெல்லாம் பேசக் கூடாது' என்று ஒரு முறை கூட தடுத்ததில்லை.
காளஹஸ்தி குடுமி நாதருக்கு பசிக்குமே என்று கவலைப் பட்டு மாமிசத்தை உண்ணக் கொடுத்த திண்ணனுக்கும், பிஸ்கட் கொண்டு வந்த மகாலிங்கத்திற்கும் வித்யாசமில்லை. இரண்டு மனங்களும் அன்பு மயமாகவே இருந்தன. இரண்டு பக்தர்களுக்குமிடையே பல நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தது. ஆனால், காலகாலன் மாறுவதில்லை. காளஹஸ்தியில் கண்ணப்பனுக்காக கற்சிலையாகவும் இருப்பார், நெய்வேலி மகாலிங்கத்திற்காக காஞ்சியில் காவி தரித்து உலாவிக் கொண்டும் இருப்பார் !
இவர்களெல்லோரும் அறுபத்தி நாலாவது நாயன்மார்களாக மனதில் தோன்றியது இந்த அறுபத்தி நாலாவது எபிசோடை எழுத உத்தேசித்து புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போது. அதனால் எழுதிவிட்டேன். (ஸ்ரீ பிரதோஷம் வெங்கட்ராம அய்யரையும், ஸ்ரீ முசிறி தீக்ஷிதரையும் அறுபத்தி நான்காவது நாயன்மார்களாகவே அழைத்திருக்கிறார்கள் ஸ்ரீ பெரியவா).
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர
Source: Shri. Krishnamurthy Krishnaiyer
No comments:
Post a Comment