Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, December 26, 2015

எலுமிச்சை மாலையைக் கொண்டு என்ன செய்யலாம்? – மகா பெரியவா காட்டிய வழி!

சொன்னவர்-ஜி.நீலா, சென்னை
நன்றி-தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்

(குறிப்பு: நீங்கள் கீழே காணும் எலுமிச்சை மாலையுடன் கூடிய பெரியவாளுடைய இந்த உயிரோவியத்தை தீட்டியவர் நம்முடைய மதிப்பிற்குரிய Forum Moderator திரு anusham163 அவர்கள்)

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார்.

இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது!

அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார்.

‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.

மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார்.

உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார். “ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார்.

என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்! எலுமிச்சம் பழ மாலையைப் பார்க்கும் போதெல்லாம், பெரியவாளின் கருணை முகம்தான் பளிச்சிடும்

Thursday, December 24, 2015

மார்கழி மாத பஜனையும்,நாம சங்கீர்த்தனமும்

"மற்ற எதற்கும் நேரமில்லாத அளவிற்கு மக்கள் சதா சர்வ காலமும் உலகியல் கஷ்ட காலங்களினால் அவதிப் படுகின்றனர். இந்தக் கஷ்டங்கள் சொப்பன நிலையில் சென்று துன்புறுத்துகின்றன. ஒருவனது உத்தியோகம் அல்லது கல்வி நிலை எதுவாக இருந்தாலும் கடவுள் த்யானதுக்காக சிறிது நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும். இதனால் மன அழுக்கு நீங்க வழி பிறக்கும்.

- பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள்-தொகுப்பு ஸ்ரீ. ரா. கணபதி
பக்தி - நாம மகிமை
தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று கணக்கிடப்படுவதிலிருந்து, பஜனை பந்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.
கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம். தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும், குணங்களையும், லீலைகளையும், பாடி ஈஸ்வரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமூதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைக்கு உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தரவேண்டும் என்று, தன் மனிதர் அடிப்படையிலேயே (Individual basis ) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறை (Congregational worship) யும் இருக்கிறது.
இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களையும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. ரகுபதி ராகவ ராஜாராம் ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான சங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது.
பஜனைக்கூடம் என்ற ஒர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர சங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவந்நாமாக்களை பஜனை செய்தபடி iF வீதியாதகச் செல்வதுதான் நகர சங்கீர்த்தனம் எனப்படுவது. விசேஷமாக மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி  வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்விய நாமங்களைப் பரப்புவதுண்டு.
இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளரவேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவந்நாமம் இல்லாமல் வெறுமையாகப் போகவிடக்கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம் எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாகப் போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது ராம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வொர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனைக் கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.
பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதினால் பகவானின் நாம் சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. ஸ்ரீபகவத்நாம போதேந்திரர்கள், ஸனாதந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரரும் கருணை கூர்ந்து ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பரமேஷ்வரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ஹரி சிவ, முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமில்லை. மூர்த்தியைப் போல அவையும் ஸாக்ஷ£த் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.
இவ்வாறு நாம சங்கீர்த்தத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை சாக்ஷ£த்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தியான புனித கானங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மகாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான சம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பது இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம் ஸங்கீர்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது. கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.
பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் - அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும். அவரவர்களும் தங்களுக்குறிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு ஏது இடம் ஏது?பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைத்தான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, அம்மா அம்மா என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது.

- பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள் (தொகுப்பு ஸ்ரீ. ரா. கணபதி)





Source: Shri Varagooran Narayanan.

Saturday, November 28, 2015

பெரியவாளின் பெரும் கருணை ....!!!

(!பழங்களில் [பழம்+கள்] உள்ள 'கள்ளை' ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.-பெரியவா)
சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.

அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.

"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!........ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!....நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"

ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக,

"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?........அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா...ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !" என்று சொன்னார்.

அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால் கூட நினைக்க முடியாது.

சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?

வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]

மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!

சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார்.

மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள 'கள்ளை' ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.

Thursday, November 26, 2015

உப்புமா பற்றி -இன்று இரண்டு சம்பவங்கள் ஒரே பதிவில் பெரியவாளின் நகைச்சுவையும்,விளக்கமும்

சம்பவம்-ஒன்று.-ரா.கணபதி.இரண்டு-ஸ்ரீமடம் பாலு

சமய குருவை [பெரியவர்] சமையல் துறையில் கொஞ்சூண்டு
ருசிக்கலாம்.[ரா.கணபதி எழுதியது]
'உப்புமா' என்ற பெயர் அந்த உணவகைக்கு ஏன் வந்தது என்று அந்த
விநோத வித்தகர் கேள்வி எழுப்புகிறார். எவராலும் 'கன்வின்ஸிங்'காக காரணம் சொல்ல இயலவில்லை.
அவரே சொல்கிறார், "அது uppuma இல்லே,ubbuma!
ப [pa]- காரத்தை,ப [ba] காராமாச் சொல்லணும்.
ஒடச்ச மாவையோ,ரவையையோ வென்னீர்ல கொட்டின ஒடனேயே
அது வாணலி பூரா உப்பிடறதோல்லியொ? சாதம் வடிக்கறச்சேயும் அரிசி உப்பறது.ஆனா அதுக்கு ரொம்ப நாழி ஆறது.நொய்யும், ரவையுமோ சட்னு பாத்திரம் பூரா உப்பிடறது.அதனால்தான் 'உப்புகிற மாவு'ங்கிற அர்த்தத்துல அந்தப் பேர் ஏற்பட்டிருக்கு."பச்சை மாவும் பவள வாயும்.


--------------------------------------------------------------------------------------------------------


சம்பவம்-இரண்டு ஸ்ரீமடம் பாலு.



இரவு வேளை.
விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.

“ஆகாரம் பண்ணியாச்சா?”

” ஆச்சு”

“என்ன சாப்பிட்டே?”

உப்புமா

ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ?உப்புமாக் கதை”

“தெரியாது”

“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்கு; போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். ப்புமா சரியாக வேகவில்லை.சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு, வாயெல்லாம் புன்ணாகி , சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப் போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத் தெரியுமோ?”

“தெரியாது”

“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”

“இது எனக்குத் தெரியும்.”

“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினான் . பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை (உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”

அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்

Tuesday, November 24, 2015

பிரதமை திதியை பெருமைப்படுத்திய பெரியவா

(அஷ்டமி,நவமி,பிரதமை)
கட்டிரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
அனுராத [அனுஷம்] நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில்
அதிர்ஷ்டம் இதற்க்குத்தான். ஏனெனில் வேதத்திலேயே
அனுராதாவை உயர்த்தி வைத்திருக்கிறது.எந்தக்
காரியத்துக்கும் வேத வித்துகளிடமிருந்து உத்தரவு
வாங்கிக்கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம்.
அதனை அனுக்ஞை என்பர். இதற்கு உள்ள மந்திரத்தில்
அனுராதாவுக்கு ஆஹூதி அளித்து [வேள்வி செய்து]
மித்ரனின் [நண்பன்] அருளால் நூறாண்டுகள் இருக்க
வேண்டுமென்று வேண்டப்படுகிறது.வேத,வேள்வி
தழைக்கப் பிறந்தவரின் திருநட்சத்திரத்தின் சிறப்பும்
எப்படி இருக்கிறது பாருங்கள்!.

பெரியவா பிறந்த திதி பிரதமை.பதினைந்து திதிகளில்
அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை.
எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.

இதற்காக இந்த மூன்று திதிகளும் இறைவனிடம் சென்று
அழுதனவாம்."நீதான் எல்லா திதிகளும் என்று மந்திரம்
இருந்தாலும்,எங்களை எல்லோரும் தள்ளிவிடுகிறார்களே!
நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்று கேட்டனவாம்.

உடனே ஸ்வாமி,"அப்படியா? கவலையை விடுங்கள்...
மற்ற திதிகளைவிட உங்கள் மூவரையும் சிறப்பாகக்
கொண்டாடும்படி நான் செய்து விடுகிறேன்!" என்று ஆறுதல்
தந்தார்.அதன்படி நவமியில் ராமனாகவும்,அஷ்டமியில்
கிருஷ்ணனாகவும்,பிரதமையில் பரமாசார்யாளாகவும்
அவதாரம் பண்ணி,அந்த நாட்களை வீட்டுக்கு வீடு
குதூகலமாகக் கொண்டாட வைத்தார்.

அதிலும் இந்த பிரதமைக்கு 'போனஸ்' என்னவென்றால்,
மாதத்தில் இரண்டு அஷ்டமி,இரண்டு நவமி,இரண்டு பிரதமை
வருகிறது.அஷ்டமியில் ஒன்றை மட்டும் உயர்த்தினார்.
ஒன்றை விட்டுவிட்டார்.நவமியிலும் அவ்வாறே செய்தார்.

ஆனால்,பிரதமையில் இரண்டையுமே பெருமைப்படுத்தியிருக்கிறார்.

கிருஷ்ணபட்சப் பிரதமையில் பெரியவா பிறந்தார்.சுக்லப்பட்சப்
பிரதமையில் மறுபிறவி எடுத்தார்.அதாவது சந்நியாசம் பூண்டார்.
ஆகவே இரண்டு பிரதமைகளும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு வேளை பிரதமையை அதிகமாக அழ விட்டுவிட்டோமே
என்று பச்சாதாப்பட்டு இப்படி செய்தார் போலும்.

[கிருஷ்ணாவதாரத்துக்கு பின் பெரியவா திரு அவதாரம் யுகங்கள்
கடந்து விட்டதல்லவா]

Sunday, November 22, 2015

இன்று-பெரியவா ரெசிபி-2 குழம்பு +வேப்பம்பூ பச்சடி

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்! 
அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட....
இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

(இன்று-பெரியவா ரெசிபி-2  குழம்பு +வேப்பம்பூ பச்சடி)
கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம்.
ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.

அன்றைய தினம் பெரியவாள்,இலேசான'
விஷயங்களைப் பேசி,அடியார்களை சிரிப்பு
வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று, ஆண்கள் பக்கம் திரும்பி,"உங்களில்
யாருக்கு சமையல் செய்யத் தெரியும் என்று கேட்டார்கள்
அடுக்களைப் பக்கம் எட்டிப் பார்த்திராதவர்கள்
உள்பட,எல்லோரும், 'எனக்குத் தெரியுமே!' என்று
ஒரு குரலாகச் சொன்னார்கள்.

"குழம்பு எப்படிச் செய்வே?" என்று அடுத்த கேள்வி.

முதலில் நின்றவர், ஆரம்பித்தார்; "புளியைக்
கரைத்து, மிளகாய்ப் பொடியும் உப்பும் போட்டு,
நன்றாகக் கொதி வந்ததும் இறக்கணும்."

அடுத்தவர்; முதலில்,கடுகு-மிளகாய் தாளித்துக்
கொள்ளணும்.புளி-உப்பு-மிளகாய்ப்பொடி சேர்த்து,
வெந்த பருப்பைப் போட்டு ஒரு கொதி வந்ததும்,
கறிவேப்பிலை-கொத்தமல்லித் தழை போடணும்..."

இன்னொருவர்;"புளி-மிளகாய் இரண்டையும்
அம்மியீல் அறைத்து உப்பு போட்டு, வெந்த பருப்பைச்
சேர்த்து,பெருங்காயம் துளியூண்டு போட்டு
வேக வைக்கணும்..."

.....இப்படியெல்லாம், அதி அற்புதமான முறைகளை
ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தார்கள்.

பின்,பெரியவாள் முறை வந்தது.

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்!
அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட....
இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

பெரியவாள் என்ன சொல்கிறார்கள்?

"ஜனங்கள் குழம்பிப் போவதற்குக் காரணம்,
தான் என்ற நினைவுதான். நீங்கள் எல்லோரும்
தான் என்ற நினைவே இல்லாதவர்கள்!.
புளி-மிளகாய்-உப்பு-பெருங்காயம் மட்டும் நினைவில்
இருக்கு; தான் என்ற எண்ணமே வரவில்லை.
ஞானிகள் நிலை இதுதானே.

(குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்)

கயிலால மலையின் அடிவாரத்துக் கற்சிலைகளாக
நின்றார்கள் அடியார்கள்."வேப்பம்பூ பச்சடி ப்படிச் செய்கிறீர்கள்?"
என்று பெரியவாள் கேட்டார்கள்.

நாங்கள், அசட்டுப் பிசட்டென்று என்னென்வோ சொன்னோம்.

பெரியவாள் சொன்னார்கள்.

"இந்த மூன்று சாமான் மட்டும் போதாது. தேன், நெய்
சேர்க்கணும்.பக்குவமாகச் செய்தால், பச்சடி சுவையாக
இருக்கும். இப்படிச் செய்யப்பட்ட பச்சடியை,மற்றவர்களுக்குக்
கொடுக்கணும்,.அவர்கள் வசியமாகி விடுவார்கள்!

"முதல்லே, அம்பாளுக்கு நைவேத்யம். அம்பாள் வசியமாகி
விடுவாள்! அடுத்து, அகத்துக்காரருக்கு, பின்னர் மனைவி
என்ன சொன்னாலும், "சரி.....சரி..." என்று தலையாட்டுவார்!
அப்புறம், வீட்டில் வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கணும்.
முணுமுணுக்காமல் வேலை செய்வார்கள்!"

பிறகு, உக்கிராணத்தில் சொல்லி,வேப்பம்பூ பச்சடி செய்துகொண்டு
வரச் செய்து,எங்களுக்கெல்லாம் கொடுத்தார்கள்.

"இது எதற்குத் தெரியுமா?"

ஒருத்தி சொன்னாள்; நாங்களெல்லோரும் பெரியவா
ஆக்ஞைப்படி நடக்கணும்-என்பதற்காக...."

"அது சரி...இது,திரிபுரசுந்தரி பிரஸாதம். நீங்க எல்லாரும்
அம்பாளின் பக்தைகளா எப்போதும் இருக்கணும்...."

எங்கள் கையில் இருந்தது,ஒரு ஸ்பூன் வேப்பம்பூ
பச்சடியாகப் படவில்லை;அமுதக் கடலாகவே தோன்றியது.

Friday, November 20, 2015

ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!-

““ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…
(பெரியவாளின் ஞாபக சக்தி)

(நெட்டில் படித்த ஒரு ஸ்வாரஸ்ய தகவல்)

ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்ததே!……இன்னும் இருக்கோ?….”

“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காய்க்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”

“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..போல ஆயிருந்துதே!..”

“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”

“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”

“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”

“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”

“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”

“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”

“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”

“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”

“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”

“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”

பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..

“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…

” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்

Tuesday, November 10, 2015

Happy Diwali to all Mahaperiava devotees.
Video Courtesy: Mr G Sivaraman


Sunday, November 8, 2015

காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அதிசய சம்பவம்!
பிப்ரவரி 27,2013-தினமலரில் வெளியான கட்டுரை.

Temple images
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.

காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார்.பெரியவர் அந்தப் பெண்ணிடம்,நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார்.அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார்.

அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு? என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க! என்றார் பக்தர்.அப்படியா! என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்! என்று அழுதார்.அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்! என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான்! என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.

மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி.
 குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல

Friday, November 6, 2015

மானத்தைக் காத்த மஹா பெரியவா

(வலையில் படித்த தகவல்)
கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.

எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார். யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள்.

பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தாடா……….கொழந்தே! இங்க வா” சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில்,

” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.

அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!

ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!

“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை

. அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.


Source: Shri. வரகூரான் நாராயணன்

Wednesday, November 4, 2015

பெரியவரும் ஆங்கிலமும்

கட்டுரையாளர்- கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா
பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.
அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது.நூறு வருடத்துக்கு
முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக
ஆங்கிலத்தில் உரையாடுவார்.

ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம்
சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங்
செக் ஷன் வந்தது. அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப்
பிரயத்தனப்பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை

ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே
என்று நினைத்தார். தெரிந்தவரை சொல்லிக் கொண்டிருந்தவரைப்
பெரியவா, "பிளேன் மேலே பறக்கும்போது காதைத் துளைக்கும்படியா
ஒரு சத்தம் வரதே அது கேட்டுண்டேதான் இருக்குமா? என்று கேட்க

"ஒரு குறிப்பிட்ட லெவல் வரைதான் கேட்கும். அதற்கு மேலே
போயிட்டா விமானச் சத்தம் கேட்காது!" என்றார். அந்தப் பொறியாளர்.

"ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!" என்று பெரியவர்
சொல்ல...பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

'இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே..
இவருக்கு போயா ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேன்!'
என்று வெட்கினார்.

இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.
"இப்போ எதில் இருக்கே?" என்று கேட்கிறார் பெரியவர்.

அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு,
"அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!"
என்றார்

. "Computer Stationery-தானே நீ சொன்னது?" என்று
பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.எந்த மொழியை
எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழங்கால் கண்டவராயிற்றே

Saturday, October 31, 2015

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது. முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!

வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார். கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்! பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!

இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன், மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும், தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?

சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”

சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா…ஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா”

“அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ “டக்”குனு அந்த கல்லுல ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”

மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்! தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான “பெத்தச்ச தேவுடு” வைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.

பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே!


Source: sekarvkc 

Thursday, October 29, 2015

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”
“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.
“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!
பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.
“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”
“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!
“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.
“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”
“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?
பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.
பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….
“என்னது இது?”
“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”
“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”
“குடுத்துட்டோம். பெரியவா”
“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.
“குடுத்தாச்சு. பெரியவா……”
“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”
ருத்ர முகம்!
“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.
“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?
“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.
“நீ எங்கே குடியிருக்கே?”
“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”
“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”
“அங்க சுப்புராமன் இருக்கார்……”
பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!
“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”
“இல்லை……….”
“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”
“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”
“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!
இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”
உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வரா……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.
தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Source: Shri. nannilam_balasubramanian

Tuesday, October 27, 2015

An interesting occasion with a child

பெரியவாளின் மேனாவுக்கருகே ஒரு சின்ன பெண் குழந்தை வந்து நின்றது.
“பேர் என்ன?”
“தீபா” கீச்சு குரலில் குட்டி கூறியது.
“நீ சொன்னது எனக்கு கேக்கலியே! பலமா சொல்லும்மா”
அது அழுத்தந்திருத்தமாக ” D for donkey , E for egg , இன்னொரு E for elephant , P for people ,A for ant ” என்றது.
பெரியவா “பேஷ் பேஷ் மகா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று ஸ்லாகித்தார். அதுக்கு ஏக மகிழ்ச்சி.
சின்னஞ்சிறுசிடம் பென்னம்பெரியவர் ” நீ நன்னாதான் சொன்னே…..ஆனா ஒன் பேரோட “டாங்கி”யையும் “எக்”கையும் சேக்கறதுக்கு பதிலா, நான் இன்னூரு தினுசா சொல்லிதரட்டுமா?”….. ரொம்ப ஒசத்தியானவாளோட சேத்து சொல்லித்தரேன்.
D for Devi . தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்ல பாத்திருக்கியோ?”
“ஒ பாத்திருக்கேன்”
“I for Ilango “
“அப்படீன்னா?”
“இளங்கோ.. ங்கறவர்தான் தமிழ்ல ரொம்ப ஒசத்தியான பொயட்ரிகதை எழுதினவர். அப்பாவை கண்ணகி கதை புஸ்தகம் வாங்கித்தர சொல்லு”
“P for Prahlada “
“தெரியும். தெரியும். பக்தியா இருந்த boy , அவனுக்காக God -ஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy -யா இருந்த father -ஐ kill பண்ணினார்”
“பேஷ் பேஷ் நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே…….. கடைசியா, a for anjaneyaa ..தெரியுமா?”
“உஹூம் “
“ஹனுமார்”
“தெரியும். monkey god “
“அவரேதான். கரெக்ட்டா சொல்லிட்டியே……இந்தாம்மா” கல்கண்டை குழந்தையிடம் வீசினார்.
எழுத்துக்களை அறியும்போது, மதத்திலும், இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தி தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

Sunday, October 25, 2015

An event to remember -

ஹாஸ்பெட் நகரில் முகாம்.
பிற்பகல் சுமார் ரெண்டு மணிக்கு, திடீரென்று, “டேய்! அந்த சமையல் கட்டையும், சாப்பாடு நடந்த மண்டபத்தையும் ஒடனே காலி பண்ணச் சொல்லுங்கோ! அன்னபூரணி கோவிலை ஒட்டினாப்ல இருக்கற இடத்துக்கு போகச் சொல்லுங்கோ!”
பெரியவா அவசர உத்திரவிட்டார்.
இட்லிக்கு மாவு அரைத்துக்கொண்டிருந்த பாரிஷதர்
“அஞ்சே நிமிஷம். அரைச்சதை எடுத்து வெச்சுடறேன்…” என்றதும்
“போட்டது போட்டாப்ல ஒடனே வெளில வரச்சொல்லு! “
அதிலும் பரம பரம காருண்யம்……..
“சமையக்கட்டுல ஒரு பூனையும், குட்டிகளும் இருக்கும். அதுகளையும் வெளில தொரத்திடுங்கோ!”
பரபரவென்று உத்தரவானதும், பூனை அம்மா, குட்டிகள் சஹிதம் அத்தனை பேரும் ஓட்டமாய் மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்….
அடுத்த அரைமணி நேரத்தில், என்ன காரணமோ, மண்டபம் மெதுவாக சரிய ஆரம்பித்தது!
பெரியவா “ஆப்ரம்ம கீட ஜனனி” இல்லியா? அவருக்கு பாரிஷதர்களும், பூனைக்குட்டியும் அவருடைய குழந்தைகள்தான்!

Friday, October 23, 2015

Maha Periyava's views about Patachala Children

ஏழை பாட்டி ஒருத்தி அப்பளம், வடகம் இட்டு, பெரியவாளுக்காக மடியாக பண்ணிக்கொண்டு வந்ததாக கூறி, சமர்ப்பித்தாள். கனிவுமயமாக அவளிடம் கூறினார் பெரியவா……..
” லோகம் நன்னா இருக்கணும்னா வேதம் இருந்துண்டே இருக்கணும். அப்படி இருக்க பண்றதுக்காகதான் என்னால ஆனதெல்லாம் பண்ணிண்டிருக்கேன். கஷ்டப்பட்டு ஆளை சேர்த்து அங்கங்கே வேத பாடசாலைகள் நசிச்சு போகாம காப்பாத்தி குடுக்க முயற்சி பண்ணிண்டிருக்கேன்.
வேற எந்த படிப்பு படிச்சு எந்த தொழிலுக்கு போனாலும் கை நிறைய சம்பளம்னு இருக்கற இந்த நாள்லயும் என் வார்த்தையை கேட்டுண்டு சில தாயார் தோப்பனார் பசங்களை பாடசாலைக்கு அனுப்பிசிண்டிருக்கா……என்னை நம்பிண்டு கொழந்தைகளை ஒப்பு கொடுத்திருக்கா…. வரப்போற காலத்திலையும் வேதம் போய்டாம கொஞ்சமாவது ரக்ஷிச்சு கொடுக்க போற அந்த குழந்தைகள்தான் எனக்கு உயிர் மாதிரி………ஆனதுனால, நீ என்ன பன்ன்றேன்னா…..சின்ன காஞ்சிபுரத்துல மடத்து பாடசாலை இருக்கு…….அங்கே சுந்தரம் ன்னு சமையல் பாத்துக்கறவன் இருக்கான். அவன்ட்ட, ஒன் அப்பளம், கருடாத்தை குடுத்து குழந்தைகளுக்கு வறுத்து போட சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு. அதுகள் அப்பளாம், கருடாம் பாத்தே எத்தனையோ காலமாயிருக்கும். அதனால சந்தோஷமா சாப்டும். அதுவே எனக்கு பரம சந்தோஷம்………நம்மை நம்பிண்டு அதுகளை அனுப்பினதுக்கு பதிலா, நாமும் ஒண்ணு பண்ணினோம்னு சந்தோஷம்”
பெரியவாளின் சரீரதிற்காக கொண்டு வந்த தின்பண்டங்கள், அவரது உயிரான வேதம் பயிலும் சிறுவர்களுக்கு செல்வதில், பாட்டிக்கும் ரொம்ப சந்தோஷம்.

Wednesday, October 21, 2015

Mahaperiyava's Observations

கும்பகோணத்தில் மடம் இருந்தபோது, ஒருநாள் பெரியவா ப்ரும்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு வித்வான் ஏதோ சந்தேகம் கேட்கவும், பெரியவா “பாமதி” யிலோ, “பரிமளத்தி”லோ இதுக்கு விஸ்தாரமா பதில் இருக்கு. அத படிச்சா போறும்………மடத்து லைப்ரரில அந்த புஸ்தகம் இருக்கா பாக்கலாம்” என்றார்.
லைப்ரரி பொறுப்பாளர், அதை யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருப்பதாக சொன்னார்.
அதே சமயம் தெருக்கோடியில் பேரீச்சம்பழக்காரன் குரல் கேட்டது.
“பழைய புஸ்தகத்தை போட்டுட்டு செலபேர் பேரீச்சம்பழம் வாங்கியிருப்பா……..ஒடனே போய் அவன்ட்ட இருக்கற அத்தனை புஸ்தகங்களையும் வெலைக்கு வாங்கிண்டு வா” என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.
ஒரு கட்டு புஸ்தகத்தோடு அவர் வந்தார். எல்லாம் அபூர்வமான சம்ஸ்க்ருத புஸ்தகங்கள்! பழுப்பேறின காகிதம்!
“சாஸ்த்ரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ!”
வரிசையாக படித்துக்கொண்டே வந்தார். ……….”பாமதி”யும், “பரிமள”மும் ” அதில் இருந்தன!
பாஷ்ய பாடம் நடக்கும் போது பேரீச்சம்பழக்காரன் வருவானேன்? இல்லாத புஸ்தகங்கள் விலைக்கு வாங்கின புஸ்தகங்கள் நடுவில் இருப்பானேன்?
விடை காண முடியாத கேள்வி!

Balasubramanian

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top