1932-ஆம் வருடம் மார்ச் மாதம் 5-ஆம் தேதியில் நிகழ்ந்த மஹா சிவராத்திரிக்குக் காளஹஸ்தி க்ஷேத்திரத்திற்கு விஜயம் செய்யவேண்டும் என்று ஸ்வாமிகள் விரும்பினாகள்.
காஞ்சிபுரத்திலிருந்து திருப்பாற்கடல், வேப்பூர் அடைந்து பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி சித்தூருக்கு விஜயம் செய்து பாக்காலா வழியாகத் திருப்பதியில் ஒருநாள் தங்கி காளஹஸ்திக்கு விஜயம் செய்தார்கள்.அன்று ஸ்வாமிகள் ஸ்வர்ணமுகி ஆற்றில் நீராடிப் பெரியதொரு மாமரத்தின் அடியில் உட்கார்ந்து அடியார்களுக்குத் தரிசனம் அளித்த காட்சி தக்ஷிணாமூர்த்தியே உலகில் அவதரித்து காட்சி அளித்த்து போல் விளங்கிற்று. காளஹஸ்திவாசிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்வாமிகளைத் தரிசித்து அவர்களை வரவேற்க அவசரமாக ஏற்பாடுகளைச் செய்தார்கள். காளஹஸ்தி மன்னர் ஸ்வாமிகள் நீராடிய இடத்தில் ஸ்வர்ணமுகியின் கரையில் பந்தல் அமைக்கச் செய்தார்.
அம்மன்னர் தமது பரிவாரங்களுடனும், தேவஸ்தான அதிகாரிகளுடனும், தேவஸ்தான மரியாதைகளுடனும், ஸ்வாமிகளைப் பூர்ண கும்பத்துடன் வரவேற்றுப் பெரியதொரு ஊர்வலத்தையும் ஏற்பாடு செய்தார். ஊரின் முக்கியமான வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது. ஸ்வாமிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த கற்பக சத்திரத்தில் முடிவடைந்தது.
ஸ்வாமிகள் காளஹஸ்தியில் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். சிவராத்திரி அமாவாசையன்று ஸ்வாமிகள் அவ்வூர் ஆலயத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள கைலாசகிரி மலையைச் சுற்றிவர விரும்பவே, அவ்வூர் மக்கள் மலைப்பாதை சீராக இல்லை என்றும், பாதை இல்லாத மேடுபள்ளங்களையும், முட்புதர்களையும் கடந்து செல்ல வேண்டும் என்றும், சுமார் முப்பது மைல்கள் நடக்க வேண்டும் என்றும் கூறி, அந்த கிரிபிரதட்சணம் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் பலமுறை பிராத்தித்துக்கொண்டனர். ஆனால் எவ்வளவு கஷ்டம் இருந்தபோதிலும் அந்த மலைமீது ஏறி, அதை வலம் வருவதென தீர்மானம் செய்து கொண்டார்கள்.
காலையில் ஒன்பது மணிக்கு ஸ்வாமிகள் கால்நடையாகப் புறப்பட்டு பகல் முழுவதும் கடும் வெயிலில் மலையைக் கடந்து இரவு ஒருமணிக்கு ஸ்வாமிகள் காளஹஸ்தியில் தமது இருப்பிடத்திற்குத் திரும்பினார். மறுநாள் காளஹஸ்தி மன்னர் ஸ்வாமிகளை தம் அரண்மனைக்கு வரவேற்று, பாதபூஜை முதலான வழிபாடுகளைச் செய்து, தமது அரண்மனையில் புனிதமாக வைக்கப்பட்டிருக்கும் பழைமையான சிம்மாசனத்தில் ஸ்வாமிகளை அமரச் செய்தார்.
இதற்கு முன்னர் 1887-ஆம் வருடம் ஸ்ரீ காமகோடி பீடத்தின் 65-ஆம் ஆசார்யர்களான ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் அந்தச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நிகழ்ச்சியை அந்த அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த குறிப்புக்கள் மூலம் யாவரும் தெரிந்து கொண்டனர்.
Source: Shri Well bred Kannan
No comments:
Post a Comment