காஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அருளுக்குப் பாத்திரமானவர்களில் ஒருவர் அன்பர் திரு. சுந்தர ராமமூர்த்தி அவர்கள். ஓவியம் வரைவதைப் பொழுது போக்காகக் கொண்ட அவர்தம் அனுபவத்தை ஒரு நிகழ்ச்சி மூலம் இங்கு கூறுகிறார்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், லூதியானா ஷால் விற்கும் கம்பெனி ஒன்றிலிருந்து எனக்கு ஒரு BOX CAMERA பரிசாகக் கிடைத்தது. முதன்முதலாகப் பெரியவாளையும், புதுப்பெரியவாளையும் போட்டோ பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிலிம் போட்டுக் கொண்டு ஸம்ஸ்கிருதக் கல்லுரிக்குப் போய் விட்டேன். புதுப் பெரியவாளை (ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்) போட்டோ பிடிப்பது எளிதாக இருந்தது.
அனால், பெரியவாளிடம் போன போது, “நீ தான் சைத்ரீகனாயிற்றே; என்னை சித்திரமாக வரை, பிறகு போட்டோ பிடிப்பது பற்றிப் பார்க்கலாம்” என்று கூறி விட்டார். அந்த நிலையில் பெரிதும் ஏமாற்றமாகவே இருந்தது. உற்சாகம் இருக்கவில்லை.
பல ஆண்டுகள் கழிந்தன. எனக்கும் திருமணமாகி விட்டது. ஒருநாள் பழைய சமாச்சாரங்களை எல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, இதைப் பற்றி பேச்சு எழுந்தவுடன், என் மனைவி, “பெரியவாள் சொல்லியும் நீங்கள் எப்படி அவர் சித்திரத்தைப் போடாது இவ்வளவு நாள் இருந்தீர்கள்” என்று கூறி உடனே ஒரு படத்தையும் போட வைத்தாள். கலைஞனுக்கு முதல் படம்தான் கஷ்டமே தவிர பிறகு உற்சாகம் வந்துவிடும்.
அன்று ஆரம்பித்து இன்று வரை பல ஓவியங்களை அடியேனால் பெரியவாளின் அநுக்ரஹத்தால் போட முடிந்தது. ஒவ்வொரு வருஷமும் போட்ட படங்களையெல்லாம் பெரியவாளிடம் கொடுத்து ஆசிகளைப் பெற முடிந்தது. அனால் போட்டோ பிடிக்க மட்டும் இன்று வரை பெரியவாளின் உத்தரவு கிடைக்கவில்லை.
சென்ற வருஷம் பெரியவாளின் படங்களைக் கொடுக்க காஞ்சிபுரம் போனபோது ஸ்வாமிகளிடம், “இதையெல்லாம் போட்டு வைத்திருக்கிறேனே தவிர இவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. பல பேர் கண்காட்சியாக, காமகோடியின் பெயர் விளங்கும் இடங்களில் வைக்கலாம் என்கிறார்கள். பெரியவாள் உத்தரவு எப்படியோ அப்படியே செய்கிறேன்” என்று விண்ணப்பித்துக் கொண்டேன்.
“செய்யலாமே” என்ற பெரியவாள் பிறகு அதைப் பற்றியே பிரஸ்தாபிக்காமல் வந்திருந்த பக்தர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு அம்மாள், “பெரியவாள் நீங்கள் கேட்டதை மறந்து போய்விட்டார் போலிருக்கு, மறுபடி கேளுங்கள்” என்றார். அது ஸ்வாமிகள் காதிலும் விழுந்திருக்க வேண்டும்.
ஏனெனில் எங்கயோ பின்னால் நின்று கொண்டிருந்த வதந்து (கைம்பெண்) ஆகிவிட்ட ஒரு வயதான அம்மாளைக் கூப்பிட்டு, “நீ வற்றிலைச் சுழியிலே இன்னார் பெண் தானே, ஐந்து வயதாக இருந்தபோது, உன் அப்பாவுடன் வந்திருக்கிறாய். உங்கள் ஊரில் எல்லோரும் சிருங்கேரியைச் சேர்ந்தவர்கள். உங்கள் அப்பா மட்டும் இந்த மடத்துக்கு விசுவாசமாக இருந்தார். உன் பிள்ளை எப்படி இருக்கிறான்? ” என்று விசாரித்தார்.
அந்த அம்மாள் தன் ஐந்தாவது பிராயத்துக்குப் பிறகு மடத்துக்கு அன்றுதான் வந்திருக்கிறார். நெஞ்சுருகிப் போய்விட்டார். “என்னை இந்தக் கோலத்திலும் அடையாளம் கண்டு விசாரிக்கிறாரே! இவருக்கா ஞாபகமறதி வரும் ?” என வியந்தார்.
கடைசியில் அன்று மாலை பெரியவாள் நான் கொண்டு போயிருந்த சித்திரங்களை எல்லாம், காலடி தீர்த்தி ஸ்தம்பத்தில் நிரந்தரக் கண்காட்சியாக வைக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது, அவர் இந்த சிறியவனையும் எவ்வளவு தன் கருணையால் உயர்த்தினார் என்பதையும், இந்த விஷயத்துக்கு எவ்வளவு தீர்க்கமாக நாளெல்லாம் ஆலோசித்திருக்கிறார் என்பதையும் காட்டியது.
“எதை நினைத்து நாம் ஆசைப் படுகிறோமோ, அதன் சுபாவம் நமக்கும் வந்து சேருகிறது. கடவுளை நினைத்து நாம் தியானம் செய்யும் போது , அந்தப் பரம்பொருளின் பெருமை மிகுந்த குணங்கள் நம்மையும் ஆட்கொள்ளுகின்றன. இதையே நாம் பக்தி என்று சொல்லுகிறோம்”
No comments:
Post a Comment