ஆசார்யாளோட நடைக்கு மற்றவர்களின் ஓட்டம்
ஈடுகுடுக்க முடியலை. அவ்வளவு வேகமா நடந்தார்).
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-04-06-2015 தேதியிட்ட குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)
ஒரு நாள் உச்சிவெயில் நேரத்துக்கு கொஞ்சம் நேரம்
முன்னால் வரைக்கும், பக்தர்களுக்கு தரிசனம்
தந்துண்டு இருந்த ஆசார்யா, வரிசைல கடைசி
பக்தருக்கு பிரசாதம் குடுத்து முடிச்சுட்டு சட்டுன்னு
எழுந்துண்டுட்டார். தண்டத்தை எடுத்துண்டு,
பாதரட்சையை மாட்டிண்டு முகாமைவிட்டு
வெளியில வந்து மளமளன்னு தெருவில நடக்க
ஆரம்பிச்சுட்டார். அவர் இப்படி திடுதிப்புன்னு
புறப்பட்டதும், சில நிமிஷத்துக்கு யாருக்கும்
எதுவும் புரியலை.பதைபதைக்கிற வெயில்ல
எதுக்காக பரமாசார்யா அப்படிப் போறார்னே தெரியலே!
கொஞ்ச நேரம் பிரமை பிடிச்ச மாதிரி யோசிச்சுட்டு
அதுக்கப்புறம்தான் சுதாரிச்சுண்டாங்க மடத்து
சிப்பந்திகள். சுவாமிகள் நகர்வலம் வர்றச்சே கூடவே
போற நாதஸ்வரம்,தவில் வித்வான்கள் அவசர
அவசரமா ஓடினாங்க.பட்டுக்குடை பிடிக்கிறவர்
அதை எடுத்துண்டு ஓடினார்.
ஆனா,ஆசார்யாளோட நடைக்கு அவாளோட ஓட்டம்
ஈடுகுடுக்க முடியலை. அவ்வளவு வேகமா நடந்தார்.
ஒருவழியா ஆசார்யாளை நெருங்கினாங்க எல்லாரும்.
மணி பன்னிரண்டு ஆகவும் பரமாசார்யா ஒரு பக்தரோட
வீட்டுக்குள்ளே நுழையவும் ரொம்பச் சரியாக இருந்தது.
அப்போதான் எல்லாருக்கும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு
வந்தது.
ஒருசமயம் காஞ்சி மடத்துக்கு வந்திருந்த பக்தர் ஒருத்தர்
பெரியவா திருச்சி பக்கம் வந்தா, தன்னோட பிட்சையை
ஏத்துக்கணும்னு வேண்டிக் கேட்டுண்டார்.அப்போ லால்குடி
முகாம் பத்தியெல்லாம் எதுவும் தீர்மானிக்கப் படவே
இல்லை. ஆனா குறிப்பட்ட நாள்ல, சரியா பகல் பன்னண்டு
மணிக்கு அவரோட கிருஹத்துக்கு பிட்சைக்கு வர்றதா
வாக்கு தந்திருந்தார் மகாபெரியவா,அந்ததினம்தான் அது.
பல மாசத்துக்கு முன்னால நடந்த சம்பவம்கறதால
ஆசார்யா அன்னிக்கு அங்கே பிட்சைக்கு போகணும்கறதயே
மடத்து சிப்பந்திகள் எல்லாரும் மறந்து, எந்த ஏற்பாடும்
செய்யாம இருந்துட்டாங்க.அன்னிக்குன்னு பார்த்து
பக்தர்களோட கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆசார்யா
தரிசனம் தந்து முடிக்கவே மணி பதினொண்ணே முக்கால்
ஆயிடுத்து. அதனாலதான் ரொம்ப வேகமா
புறப்பட்டிருந்தார் பரமாசார்யா.
ஒரு சின்ன விஷயத்தை சொன்னா, ஆசார்யா எவ்வளவு
வேகமா நடந்திருக்கார்ங்கறது புரியும். மணிக்கு நாற்பது
கிலோமீட்டர் வேகத்துல ஒரு வாகனத்துல போனா
மடத்துல இருந்து அந்த பக்தரோட வீட்டுக்கு கால்மணி
நேரத்துல போகலாம்.அவ்வளவு தொலைவு பத்தே
நிமிஷத்துல நடந்தேபோயிருக்கார் மகாபெரியவா.
அப்படின்னா அவரோட நடைவேகம் எப்படியிருந்திருக்கும்னு
நீங்களே நினைச்சுப் பார்த்துக்குங்கோ!