"பெரியவா எம் பொண்ணு அபர்ணாவோட பதினேழாவது வயசுலேர்ந்து இங்கே வரன் தேடி வர போதெல்லாம்.. வருஷா வருஷம் திருமலை ஸ்ரீ நிவாஸப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் பண்ணி வெச்சுருக்கேன்.இது வரைக்கும் எட்டு தடவை நடத்தி இருக்கோம் பெரியவா" --விஸ்வநாதன்
""சரி விஸ்வநாதா! அதனாலென்ன கொறஞ்சுடப் போறது.?. இந்த ஸந்யாஸிக்காக ஒம்பதாவது தடவையா திருக்கல்யாணம் பண்ணிட்டு வாயேன்!"-- பெரியவா
(பெரியவா நடத்திய ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்)
கட்டுரை ஆசிரியர்-ரமணி அண்ணா
தட்ட்ச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு நாள் மாலை வேளை,ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம்,பெரியவா தன் ஏகாந்த அறையை விட்டு வெளியே வந்தார்.வழக்கமாக உட்காரும் மேடையில் வந்து சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்துகொண்டார்.
ஒவ்வொருவராகப்பெரியவா முன்வந்தனர், நமஸ்கரித்தனர்,தத்தம்குறைகளைத் தெரிவித்துப் பிரார்த்திதனர். உரிய பதிலைப் பொறுமையுடன் சொல்லி ஆசி வழங்கி, பிரசாதமும் கொடுத்து அனுப்பி வைத்தார் ஸ்வாமிகள்.
இரவு எட்டரை மணி,அனைவரும் தரிசித்துச் சென்றுவிட்டனர். ஸ்வாமிகள்தனது ஏகாந்த அறைக்கு எழுந்த போக இருந்தார்.
வேகமாக ஓடிவந்தனர்ஒரு தம்பதி. அவர்கள் பின்னால் ஓர் இளம் வயதுப் பெண்ணும் விரைந்து வந்தாள். மூவரும் பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். நான்கு பிக் ஷாப்பர்' பைகளில் தாங்கள் வாங்கி வந்திருந்த பண்டங்களை அங்கிருந்த பெரியபெரிய மூங்கில் தட்டுகளில் நிரப்பி, ஸ்வாமிகளுக்கு முன்பாகத் தலைகுனிந்து சமர்ப்பித்துவிட்டு நிமிர்ந்தனர். நிரப்பப்பட்டிருந்த மூங்கில் தட்டுகளைச் சற்று நேரம் உற்று நோட்டம்விட்டாரஆச்சார்யாள்.
ஒவ்வொன்றிலும் கற்கண்டு,முந்திரி,பிஸ்தா,பாதாம்,திராட்சை,அக்ரூட், பேரீச்சை என வகை வகையான பதார்த்தங்கள். கொண்டு வந்தவர்களை ஆச்சர்யத்தோடு நிமிர்ந்து பார்த்தார் ஸ்வாமிகள். அவர் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியது.
"அடடே, நம்ம விஸ்வனாதனா? அமெரிக்காலேர்ந்து எப்ப வந்தே? ஆம்படையாளும் வந்திருக்காளா...பேஷ்...பேஷ்! ரொம்ப சந்தோஷம். எல்லாரும் க்ஷேமந்தானே? என்னடாப்பா...நீ பாட்டுக்கு ஏகப்பட்ட முந்திரி,திராட்சை எல்லாம் எதுத்தாப்ல கொண்டு வந்து வெச்சிருக்கே? ஏதாவது கல்யாண விசெஷமா? இதோ ஒம் பக்கத்திலே நிக்கறாளே...அவ ஒம் பொண்ணுதானே? ஓஹோ.. அவளுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கயாக்கும்?ஏண்டா விஸ்வனாதா..ஒரு தட்டுலயும் விவாஹ பத்திரிகையக் காணோமே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.
அவ்வளவுதான் எதிரில் நின்றிருந்த மூவரும் மடை திறந்த வெள்ளம் போல் கேவிக்கேவி அழுதபடியே ஆச்சார்யாள் பாதங்களில் விழுந்தனர்.
மகா ஸ்வாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நிதானப்படுத்திக்கொண்டு,
"ஏண்டாப்பாவிஸ்வநாதா..ஒன்னநா ஏதாவது பெசகா கேட்டுட்டேனா? இப்டி சின்னக் கொழந்த மாதிரி கேவிக்கேவி அழறேளே" என்று வாஞ்சையுடன் கேட்டார்.
உடனே விஸ்வநாதன் கைகளால் கன்னத்தில் போட்டுக்கொண்டு பதறியபடியே, "சிவ சிவா! அபசாரம்..அபசாரம்...அப்டியெல்லாம்
ஒண்ணும் இல்லே பெரியவா.'பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கியா?பத்திரிகை எங்கே?"னு நீங்க கேட்டதும்எங்க மூணு பேராலயும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியலே.பெரியவா. இவளுக்கு இப்ப இருவத்தஞ்சு வயசாறது.இவளோட பதினேழாவது வயசிலேர்ந்து ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவிலேர்ந்து இங்க வந்து ரெண்டு மாசம் தங்கி முயற்சி பண்றோம் பெரியவா. ஒரு வரனும் குதிரலே,தட்டிப் போயிடறது. நன்னா படிச்சிருக்கா,அழகு இருக்கு...பணம் இருக்கு, இதெல்லாம்இருந்தும், அதிர்ஷ்டமில்லே" என்று மேண்டும் அழ ஆரம்பித்தார்.
இப்போது இரவு மணி ஒன்பதரை,நிலைமையைப் புரிந்துகொண்டார்ஆச்சார்யாள். அங்கு நிலவிய இறுக்கத்தைப் போக்க எண்ணினார்.
"சரி...சரி...வருத்தப்படாதீங்கோ, மூணு பேரும் இப்டி ஒக்காருங்கோ" என எதிரில் கை காண்பித்தார்.மூவரும் பவ்யமாக அமர்ந்தனர்.
ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார். "விஸ்வநாதா,கோயில் குளங்களுக்கும்ஏழை பாழைகளுக்கெல்லாம் நெறைய தான தர்மம் பண்றேனு நேக்கு நன்னா தெரியும். நோக்கு இப்டி ஒரு மனக்கஷ்டமா? அது சரி...நீ.....அமெரிக்கா போய் செட்டிலாகி எத்தனை வருஷமாகிறது!"
"இருவது வருஷமாகிறது பெரியவா" விஸ்வநாதன்.
ஸ்வாமிகள் அந்தப் பொண்ணை நோக்கிக் கை காண்பித்து
"இவ நோக்கு ஏக புத்ரிதானே,என்ன பேரு?" என்று சிரித்தபடியே கேட்டார். விஸ்வநான் உடனே வாய் பொத்தியபடியே, "இவ பேரு அபர்ணா,ஏக புத்ரிதான் பெரியவா" என்றார்.
"ஜோஸ்யாள்ட்ட இவ ஜாதகத்தைக் காமிச்சியோ?" ஆச்சார்யாள் கேட்டார்.
"ஏகப்பட்ட ஜோஸ்யாளைப் பாத்துட்டேன் பெரியவா, ஒவ்வொர்த்தரும் ஏதேதோ தோஷங்கள் சொல்றா...பரிகாரங்களும் சொல்றா...எல்லாமே பண்ணிட்டேன்."
"என்னென்ன பண்ணினே?" என்றார் ஆவலுடன்.
"ராமேஸ்வரத்திலே தில ஹோமத்துடன் பித்ரு தோஷப் பரிகாரம்,கஞ்சனூரில் சுக்ர ப்ரீதி,திருநாஸ்வரத்தில் ராகு ப்ரீதிஆலங்குடியில் குரு ப்ரீதி, குத்தாலத்துக்குக்கிட்டே திருமணஞ்சேரியிலே விசேஷ பூஜா பரிகாரம், திருநள்ளார்லே நள தீர்த்த ஸ்நானத்தோடு சனி ப்ரீதி.. இப்படி நெறையப் பண்ணிப்டேன்பெரியவா" என்று விஸ்வநாதன் சொல்லி முடிப்பதற்குள்.
"பல ப்ராப்திதான் [பிரயோஜனம்] இல்லேங்றே.." என்று முத்தாய்ப்பு வைத்தார் ஸ்வாமிகள்..தீடீரென்று பெரியவாவிஸ்வநாதனின் மனைவியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
"பொண் கல்யாணத்துக்கு நகை நட்டெல்லாம் ரெடியா வாங்கி வெச்சுட்டியோ?"
"எல்லாம் ரெடி பெரியவா" என்றாள் அம்மணி.
"பேஷ்...பேஷ் எத்தனை பவுன் போடறே?" என்று கேட்டார் ஸ்வாமிகள். விஸ்வநாதன் பதில் சொன்னார், "எங்க பொண்ணுக்கு முப்பது பவுன் பெரியவா, அதோட சேர்த்து தனித்தனியா ரெண்டு இருபது பவுனுக்கு "செட்டா நகைகள் பண்ணி வெச்சுருக்கு"
பெரியவா கேட்டார், "அது எதுக்குடாப்பா இருவது பவுன்ல தனியா ரெண்டு செட்டு?"
உடனே விஸ்வநாதன், "அது ஒண்ணுமில்லே பெரியவா, அபர்ணவுக்குக் கல்யாணம் நிச்சயமானா, அந்தக் கல்யாணத்தோடு ரெண்டு ஏழைப் பெண்களுக்கும், எல்லாச் செலவும் ஏத்துண்டு விவாஹம் பண்ணி வைக்கிறதா தீர்மானம்.அதுக்காகத்தான் பெரியவா அந்த ரெண்டு செட் நகைகள். ஆனா, அபர்ணாவுக்கே நிச்சயம் ஆக மாட்டேங்கறதே பெரியவா" என்று கண்களில்நீர் துளிர்க்க ஆதங்கப்பட்டார்,
ஸ்வாமிகள் யோசனையில்ஆழ்ந்தார். அப்போது இரவு மணி பத்தரை. ஸ்வாமிகள்விஸ்வநாதனைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள்ளாம் இன்னும்எத்தனை நாளுக்குள்ள அமெரிக்கா திரும்பியாகணும்?"
"இன்னும் இருபது நாள் இருக்கு பெரியவா."
"பேஷ்...பேஷ்.." என்று குதூகலித்த ஸ்வாமிகள், நீங்கள்லாம் சாப்டாச்சோ?" என்று கேட்டார்
"இன்னும் ஆகலே" என்றார் விஸ்வனாதன்.
உடனே பெரியவா உக்ராணத்திலிருந்த சமையல்காரரை அழைத்து வரச் சொல்லி, "என்ன இருக்கு?" என்று கேட்டார்.
அந்த சமையல்காரர், அரிசி உப்புமாவும்,பூசணிக்காய் சாம்பாரும்இருப்பதாகக் கூறினார். விஸ்வநாதன் குடும்பத்தை உள்ளே போய்சாப்பிட்டுவிட்டு வருமாறு கூறினார் ஸ்வாமிகள். அவர்களும்சாப்பிட்டுவிட்டு வந்தனர். ஸ்வாமிகள் அங்கேயே காத்திருந்தார். இரவு மணி பதினொன்று.ஸ்வாமிகள் விஸ்வநாதனை வாஞ்சையோடு பார்த்தார்.
"விஸ்வநாதா, நோக்கு ஒசந்த மனசுடா.ஒம் பொண் கல்யாணத்தோட இன்னும் இரண்டு ஏழைப் பொண்களுக்கும்தர்மமா விவாஹம் பண்ணி வெக்கணும்கிறதுக்காக நகைநட்டெல்லாம் முன்கூட்டியே பண்ணி வெச்சுக் காத்துண்டிருக்கியே.. என்ன பரந்த மனசுடா நோக்கு! காமாட்சி காப்பாத்துவாடா" என்று ஆதரவோடு வார்த்தைகளால் வருடிக் கொடுத்த ஆச்சார்யாள், "ஒரு கார்யம் பண்ணு,நாளக்கி கார்த்தாலேயேஒங் குடும்பத்தோட திருவானைக்காவல்போ
.அங்குஅம்மாஅகிலாண்டேஸ்வரிக்கும்,ஜம்புலிங்கேஸ்வரருக்கும் அபிஷேகஆராதனையெல்லாம் பண்ணி வெச்சுப் பிரார்த்தியுங்கோ,
ஒம் பொண்ணு அபர்ணாவை என்ன பண்ணச் சொல்றே....அங்க அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு பளபளனு காதுல 'தாடங்கம்'சாத்தியிருப்பா,அத வெச்ச கண் வாங்காம கொஞ்ச நாழி தரிசனம்பண்ணிண்டே, 'சீக்கிரம் நேக்கு கல்யாணமாகணும்னு'பிரார்த்திக்கச் சொல்லு. இதப் பண்ணிட்டு..."என்று முடிப்பதற்குள்...
விஸ்வநாதன், "பெரியவா...எங்களுக்குக் குலதெய்வமே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிதான்" என்று குதுகலத்துடன் கூறினார்.
உடனே பெரியவா, "பேஷ்! ரொம்ப நல்லதா போச்சு.அப்போநாளைக்கே நீ குடும்பத்தோட போய் இதப் பண்ணிடு. இத பண்ணிப்ட்டு நேரா திருப்பதிக்குப் போங்கோ.அங்கேஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஒரு திருக்கல்யாண உற்சவம் பண்ணிவெச்சுப் பிரார்த்தனை பண்ணுங்கோ. எல்லாம் க்ஷேமமா நடக்கும்.
இதோ எதுத்தாப்ல தட்டுகள் லே கல்யாண சீர்வரிசை மாதிரிஜமாய்ச்ருக்கியே முந்திரி,திராட்சை,கல்கண்டு எல்லாத்தையும்ப்டியேஎடுத்துண்டுபோய், அகிலாண்டேஸ்வரிக்கு அர்ப்பணம்பண்ணு" என்று கூறியபடி இடத்தை விட்டு எழுந்தார்.பெரியவாளை நமஸ்காரம் பண்ணியது விஸ்வநாதன் குடும்பம்.
ஸ்வாமிகளைப் பார்த்து விஸ்வநாதன் தயங்கியபடியே,
"பெரியவா எம் பொண்ணு அபர்ணாவோட பதினேழாவது வயசுலேர்ந்து இங்கே வரன் தேடி வர போதெல்லாம்.. வருஷா வருஷம் திருமலை ஸ்ரீ நிவாஸப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் பண்ணி வெச்சுருக்கேன்.இது வரைக்கும் எட்டு தடவை நடத்தி இருக்கோம் பெரியவா" என்று கூறியதுதான் தாமதம்.....
"சரி விஸ்வநாதா! அதனாலென்ன கொறஞ்சுடப் போறது.?. இந்த ஸன்யாஸி சொல்றதுக்காக ஒம்பதாவது தடவையா நடத்திவையேன்" என்று சிரித்தவாறு கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் ஆச்சார்யாள் ஆணையிட்டபடி திருவானைக்காவல் அபிஷேக ஆராதனைகளையும், தாடங்க தரிசனத்தையும் முடித்துக்கொண்டு நேராக திருமலை வந்து சேர்ந்தது விஸ்வநாதன் குடும்பம்.
அன்று ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாண வைபவத்துக்கு நிறைய பக்தர்கள் பணம் செலுத்தி இருந்தனர். திருக்கல்யாண மண்டபத்தில்ஏகக் கூட்டம். நடுவில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தது விஸ்வநாதன் குடும்பம். வைவாஹிக [கல்யாண] மந்திரங்கள் முழங்க எம்பெருமான்ஸ்ரீ நிவாஸனுக்கு திருக்கல்யாணத்தை விமரிசையாக நடத்தி வைத்துக்கொண்டிருந்தனர். வைகானஸ பட்டர்கள்,அவர்களின்குரல்கள் உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலித்தன.
அப்போது விஸ்வநான் தன் மனதுக்குள் இவ்வாறு துக்கப்பட்டார்.: "அப்பா ஸ்ரீ நிவாஸா,இது தர்ம நியாயமா? நீ மாத்திரம் தினம்தினம் கோலாகலமா இப்டி கல்யாணம் பண்ணிக்கறயே! எம் பொண் அபர்ணா என்ன பாவம் செஞ்சா? அவளுக்கு ஏன் ஒரு வரன் பாத்து கல்யாணம் பண்ணி வெக்க மாட்டேங்கறே? சொல்லு.." என்று கேவ,இதைப் பார்த்துவிட்டு அவரது மனைவியும்,மகளும் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தனர்.
விஸ்வநாதனுக்குப் பக்கத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. குடும்பத் தலைவருக்கு ஐம்பது ஐம்பத்தைந்து வயதிருக்கும். விஸ்வநாதனின் முதுகை பரம ஆதரவுடன் தடவிக் கொடுத்த அவர், "சார் எம் பேரு வைத்யநாதன்,மெட்ராஸ். நானும் ரொம்ப நாழியா பாத்துண்டு வரேன். சந்தோஷத்தோடு ரசிச்சு தரிசனம் பண்ண வேண்டிய இந்த ஸ்ரீ நிவாஸதிருக்கல்யாணத்துலே இப்படி நீங்க மூணு பேரும் கேவிக்கேவி அழுதுண்டிருக்கேளே இது பார்க்கவே நன்னால்ல" என்று சன்னமான குரலில் நாசூக்காகச் சொன்னார்.
இப்படி ஒருவர் ஆதரவோடு முதுகைத் தடவிக் கொடுத்துப்பேசியதும், நெகிழ்ந்துவிட்டார் விஸ்வநாதன்.உடனே, அந்த வைத்யநாதனிடம் தன் கவலையை எல்லாம் சுருக்கமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார். விஸ்வநாதன்.
அபர்ணாவைத் திரும்பிப் பார்த்தார் வைத்யநாதன்.அவர் மனது சொல்லிற்று, "பொண் ரொம்ப லட்சணமா இருக்காளே."
"வைத்யநாதன் கேட்டார், "ஒங்க கோத்ரம்?"
"வாதூலம்" இது விஸ்வநாதன் பதில்.
"நாங்க ஸ்ரீவத்ஸம், அது சரி! பொண்ணுக்கு வயசு..?"
"இருபத்தஞ்சு ஆரது...ஏன் கேக்கறேள்?" விஸ்வநாதன் கவலையுடன் கேட்டார்.உடனே வைத்யநாதன்,
"திருக்கல்யாணம்முடியட்டும்.அழச்சிண்டு போய் விவரமா பேசறேன்" என்றார்.
ஸ்ரீ நிவாஸ கல்யாணம் பூர்த்தி அடைந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தான் தங்கி இருந்த ஜாகைக்கு விஸ்வநாதன் குரும்பத்தை அழைத்துப் போனார் வைத்யநாதன்.
அங்கே விஸ்வநாதனிடம், "எனக்கு ஒரே பையன், வயசுஇருவத்தாறு ஆறது. பேரு ஸ்ரீ நிவாஸன். நாங்கல்லாம் தஞ்சாவூர்பக்கம். மெலட்டூர். இப்போ மெட்ராஸ். நான் டிஃபன்ஸ்அக்கவுண்ட்ஸ்ல வேலை பண்றேன். பையன் அமெரிக்காவுலஃபோர்டு மோட்டார் கம்பெனிலே நல்ல சம்பளத்தில் இருக்கான். அவன் நாளக்கி லீவுலே மெட்ராஸ் வரான். அவனுக்கு மூணு வருஷமா கல்யாணத்துக்குப் பொண் பாத்துண்டிருக்கேன். ஒண்ணுமே அமையலே. நாங்கல்லாம் காஞ்சி காமகோடி மடத்து பக்தாள். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் பெரியவாளை தரிசனம் பண்ணி, பையனுக்குக் கல்யாணம்தட்டிண்டே போற மனக் குறையை நானும் என் மனைவியும்சொல்லிப் பிரார்த்திச்சோம். அவர்தான் " திருமலைலே ஸ்ரீ நிவாஸனை பிரார்த்திச்சுண்டு ஒரு கல்யாணஉற்சவம்பண்ணிவை.ஒடனேஆயிடும்"னார்.
அதை நடத்தி வைக்க இன்னிக்கித்தான் பிராப்தம் வந்தது.அந்த பெரியவா அநுக்ரகம்இ ருந்தா ஒங்காத்துப் பொண்ணே கூட எங்க மாட்டுப் பெண்ணா வந்துடலாம்"என்று சொல்லி முடித்தார் வைத்யநாதன்
அந்த ஜாகையிலேயே பரஸ்பரம் இருவரும் ஜாதகப் பரிவர்த்தனை செய்துகொண்டு, திருமலையிலேயே ஒரு பெரிய ஜோஸ்யரிடம்கொண்டுபோய் ஜாதகங்களைக் காண்பித்தனர்.
என்ன ஆச்சரியம்! பரிசீலித்த ஜோஸ்யர் பத்துப் பொருத்தங்களும்தீர்க்கமாக அமைந்துள்ளதாகக் கூறினார். இரு குடும்பத்தாருக்கும்பரம சந்தோஷம். அன்றிரவே அனைவரும் சென்னை திரும்பினர். அடுத்த நாள், அமெரிக்காவிலிருந்து ஸ்ரீ நிவாஸன் வந்து சேர்ந்தான். அவனுக்கு அபர்ணாவைப் பிடித்துவிட்டது. அபர்ணாவுக்கும்அவனை ரொம்பப் பிடித்துவிட்டது.
பதினைந்து நாட்களுக்குள் ஒரு சுபமுகூர்த்தம் பார்த்து சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்துவிட்டார்விஸ்வநாதன். இவ்ற்றையெல்லாம் ஏற்பாடு பண்ணி முடித்துவிட்டுஇரு வீட்டாரும் ஒரு நாள் மாலை காஞ்சி மகானை தரிசிக்கப்புறப்பட்டனர்.அன்றும் தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். இரவு ஒன்பது மணி சுமாருக்குத்தான் விஸ்வநாதன் குடும்பமும் வைத்யநாதன் குடும்பமும் மகா ஸ்வாமிகளை நெருங்க முடிந்தது.
பெரியவா தன் புருவங்களுக்கு மேலே இரண்டு கைகளையும்வைத்துக்கொண்டு அவர்களைக் கூர்ந்து நோக்கினார். ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தன இரு குடும்பமும். விஸ்வநாதனுக்குப்பின்னால் நின்றிருந்தார் வைத்யநாதன். முன் போலவே அபரிமிதமாக வாங்கிச் சென்ன்றிருந்தகல்கண்டு,திராட்சை,முந்திரி இத்யாதிகளை மூங்கில் தட்டுகளில் வைத்து சமர்ப்பித்துவிட்டு கைகட்டி நின்றார் விஸ்வநாதன்.
பெரியவா முகத்தில் அமானுஷ்யமான ஒரு சந்தோஷம், விஸ்வநானையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தவர்திடீரென சற்று உரத்த குரலில்,
"ஏண்டாப்பா விஸ்வநாதா, இந்த ஸந்யாஸிக்காக ஒம்பதாவது தடவையா ஸ்ரீ நிவாஸனுக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வெச்ச ஒடனேயே பலப்ராப்தி [கார்ய ஜெயம்] ஏற்பட்டுத்தோல்லியோ? பேஷ்! ஒம்பொண் அபர்ணா குடுத்து வெச்சவதான்!" என்று சொல்லிட்டு இடிஇடியென்று சிரித்தார்..
அப்படியே விக்கித்து நின்றது இருகுடும்பமும். ஒருவருக்கும்பேச நா எழவில்லை/
ஸ்வாமிகளே தொடர்ந்தார், "விஸ்வாநாதா....அன்னிக்குநீ ரொம்பவும் தாபப்பட்டு அப்டி அழுதிட்டே.ஒம் பொண்ணுக்கு ஜன்மாந்த்ரியமான [பூர்வ ஜன்ம] விவாஹ ப்ரதிபந்தக [விவாஹம் நடைபெறுவதைத் தடுக்கக்கூடிய தோஷம்] இருக்குன்னு மனசுலே பட்டது. அந்த தோஷ நிவர்த்திக்காகத்தான் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க தரிசனத்தையும், ஒம்பதாவது தடவையா ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணத்தையும்ப ண்ணச் சொன்னேன்.இப்பப் புரியறதா நோக்கு!" சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்தார் ஸ்வாமிகள். அங்கு அமைதி நிலவியது.
ஸ்வாமிகளே தொடர்ந்து, "ஒன் சம்பந்தியா வரப்போறது யாரு? அவருக்கு எந்த ஊரு? என்று கேட்டார்.
விஸ்வனாதனுக்குப்பின்னால் நின்றிருந்த வைத்யநாதன் முன்னால் வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, "நான்தான் பெரியவா அவருக்கு சம்பந்தியா வரப் போறவன்...எல்லாம் ஒங்க அநுக்கிரகம்" என்று குழைந்தார்.
உடனே பெரியவா மூக்கின் மேல் விரலை வைத்து, "யாரு? மெலட்டூர் வைத்யநாதனா? ஏண்டா வைத்யநாதா...மூணு மாசத்துக்கு முன்னாடி, "அமெரிக்காவுல வேலை பாக்கற எம் பையனுக்கு ஒரு பொண் ஜாதகமும் சரியா பொருந்த மாட்டேங்கறது'னு குறைப்பட்டுண்டு வந்து சொன்னே. ஒன்னையும் "திருமலை ஸ்ரீ நிவாஸனுக்குத் திருக்கல்யாண பண்ணி வெச்சு பிரார்த்தி"னு சொன்ன ஞாபகம். அது சரி நீ எப்ப திருக்கல்யாண உற்சவம் பண்ணினே?" என்று கேட்டார்.
உடனே வைத்யநாதன், "ரெண்டு பேரும் ஒரே நாள்லதான் திருக்கல்யாணம் பண்ணினோம் பெரியவா. திருமலைலேயே பேசி முடிவு பண்ணிட்டோம்.எல்லாம் ஒங்க ஆசீர்வாதம்" என்றார் நா தழுதழுக்க.
"க்ஷேமமா இருங்கோ" என மனதார ஆசீர்வதித்தார் ஆச்சார்யாள். அப்போது இரவு மணி பத்து. ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே
"மணியாயிடுத்து விஸ்வநாதா,இன்னிக்கு நம்ம மடத்துலே அரிசி உப்புமாவும், பூசணிக்கா சாம்பாரும்னு பேசிண்டா. அவசியம் இருந்து பலகாரம் பண்ணிட்டுப் போங்கோ" என்று ஒரு தாயின் கருணையோடு விடை கொடுத்தார்.