Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, January 30, 2016

நரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும் கட்டுரையாளர்; ரா.வேங்கடசாமி நன்றி-பால ஹனுமான்,

மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே இல்லை. இல்லத்தரசி கர்ப்பிணி ஆனார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாள் இல்லை. இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!
ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்’ என்று உத்தரவிடுகிறார். ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, “எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்” என்று வாதம் புரிகிறாள்.
நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.
காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.
“நரசிம்மன் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?
அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள். மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.
தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள். குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவா குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள். அனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார். பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்? அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார். தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி ? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலிக்கிறார்.
காஞ்சி மகானின் கருணை நிழலில்

Thursday, January 28, 2016

பெரியவா தன்னைப்பற்றி நகைச்சுவையா சொன்னதும் ரா.கணபதியின் சாதுர்யமான பதிலும்.


தகவல்;எஸ்.கணேச சர்மா..
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
இது 12-02-2012-ல் போஸ்ட் செய்யப்பட்டது.


ஒரு நாள் ரா. கணபதி [தெய்வத்தின் குரல் என்ற நூலில் பெரியவா
சொன்ன விஷயங்களைத் தொகுத்து அளித்தவர்} என்பவரிடம்,

"என்னை ஏன் எல்லாரும்" பெரியாவா"ன்னு சொல்றா?
 எனக்கு  பெரிய வாயா இருக்கு?
 இல்லைனா, வரவாகிட்டே ஓயாமல் பேசறேனே...அதனால்
 ஓட்டைவாய் என்று இப்படிப் பேர் வெச்சுட்டாளா?"

என்று கேட்டாராம். அதற்கு கணபதி,
"ஆமாம்...இருப்பதிலேயே மகாவாக்கியத்தை உபதேசிக்கும் வாய்
பெரியவாளுக்கு இல்லையா...அதனால் "பெரிய வாய்"என்றார்.

"சிலர் 'பெரியவாள்'னு சொல்றாளே! அதுக்கு அர்த்தம் என்ன?
 வாள் போல அறுக்கிறேன்,ஃபோர் அடிக்கிறேன் என்பதா?"
என்று கேட்டாராம்.

"ஆமாம் நீங்க பெரியவாள்தான். இந்த வாள்,தங்களிடம் வரும்
 பக்தர்களின் காமம்,குரோதம்,கோபம்,மோகம்,மதம்,மாச்சரியம்
என்ற எல்லாக் குற்றங்களையும்,'அறுத்துத் தள்ளுகிறதே.
அதான் "பெரிய வாள்" என்கிறார்கள்!" என்றார் கணபதி.

Tuesday, January 26, 2016

‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;'


(காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும்)

காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் பகிர்ந்துகொள்கிறார்.

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.

அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.

காஞ்சிப் பெரியவரும்,ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணைநடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!


Source: Shri Varagooran Narayanan

Sunday, January 24, 2016

"பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது".


மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!

"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"

"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"

மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?"

இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது," பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்!

பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா? பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம்

பெரியவா சொன்னார்......"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?...ன்னு கூட தோணியிருக்கும்......

ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது. அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்"

எத்தனை சத்யமான உபதேசம்!


Source: Shri Varagooran Narayanan

Friday, January 22, 2016

"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்." (மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!)


உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி
.
அதனால்தான் நம்... குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.

காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு.

ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்." பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை. அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி. நம்ம பெரியவா சாக்ஷாத் தாயாரில்லையா?

"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்." என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார். அவ்வளவுதான்!

கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்."

சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார். வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்......
.
பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை!

மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!


Source: Shri Varagooran Narayanan

Wednesday, January 20, 2016

"வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம்" அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா மணலில் போட்ட அட்சதையை, அவரது ஆணைப்படி சேலம் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும் கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர்.
எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை. மகான்களின் இயல்பை மனிதர்கள் அறிய முடியுமா?

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது.

ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த நிகழ்வு அன்றே அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர்.

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார்.

உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: ‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.இருக்காதா பின்னே!எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும்.

மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வெங்கடாத்திரி அகரத்தில் மகா பெரியவா,அட்சதையை ஏன் தரையில் போட்டார் என்கிற சம்பவத்தை ஏறக்குறைய மறந்தே போயிருந்தார் ராமசாமி ஐயர். ஆனால், அப்படி அட்சதை போட்டு ஆசி புரிந்த மகா பெரியவா இதை மறப்பாரா?

நில புலன்கள் சேர்ந்தால் நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது.

தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

“வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” - மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயாமே?”

மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைங்களையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.”

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு, இடி இடியென பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை.

மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். “ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார்.

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.

‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?


Source: Shri Varagooran Narayanan

Monday, January 18, 2016

"உன் மகனின் பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்துவிட்டதா?

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது ஓரிக்கையில் இருக்கும்போது சுந்தரராமன்(மடத்தில் பெரியவாளுக்கு சேவை செய்யும் சிறுவன் ), பூணூல் இல்லாமல் இருந்ததை மகான் கவனித்து விட்டார்.
நீ ஏன் இன்னும் உபநயனம் செய்து கொள்ளவில்லை?" என்று மகான் கேட்டார்.

"அதற்குத் தேவையான பணம் அப்பாவிடம் இல்லை போலிருக்கிறது" என்று சுந்தரராமன் சொல்ல, சில நிமிடங்கள் மகான் மௌனமாக இருந்துவிட்டு பிறகு ஒரு பிரசங்கமே செய்துவிட்டார் .

"இன்றைய பிராமண சங்கம், எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்காததாக உள்ளது. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதிமுக்கியமான சமஸ்காரங்களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள். பட்டுப்புடவைகள், விருந்து, செலவு என்று பணத்தை வாரி வீணாக இறைக்கிறார்கள். இதனால் சம்ஸ்காரத்தின் முக்கிய அம்சத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்குச் சம்மதமே இல்லாவிட்டாலும் சரி, பணக்காரன் வேண்டுமானால் தன் அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளல் இஷ்டத்திற்கு செலவு செய்யட்டும் . ஏழை ஜனங்கள் இதை பார்த்து 'காப்பி' அடிக்கும்போது தான் கஷ்டம் வருகிறது. 'உபநயனம்' போன்ற சிறு விழாக்களுக்குக் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். இந்தச் சிறுவிழா நடத்த சிறு தொகையே போதும். . திருமணம் நிச்சயமாகும்வரை கூட பிள்ளைகளுக்குப் பூணூல் போடுவதில்லை. கல்யாண சுப முகூர்த்தங்களோ இன்னும் மோசம் . ஆயிரமாயிரமாக செலவுகள் செய்து ஆடம்பர விழாக்களாகச் செய்து வருகிறார்கள். வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையே பாதித்துள்ளது. என்னுடைய உபதேசங்கள் எதுவுமே இந்த சமூகக் கொடுமைகளை கொஞ்சமும் மாற்றியதாகவே தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட்டு மகான் சில நிமிடங்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்.

பிறகு தொடர்ந்தார்:

"மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்? நீ ஏன் என் எதிரில் திறந்த மார்புடன் நிற்கிறாய்? இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன்?" சுந்தரராமனிடம் அடுத்த கட்டளையைப் பிறப்பித்தார், "உடனே போய் பஞ்சாங்கத்தை எடுத்துவா?, அதோடு உன் தோப்பனாரையும் இங்கே அழைச்சுண்டு வா."

பஞ்சாங்கம் அவர் கையில் தரப்பட்டது சுந்தரராமன் தந்தையும் அங்கே வந்தார்

பஞ்சாங்கத்தை மிகவும் கவனித்த பெரியவா " அடுத்த வியாழக்கிழமை நாள் மிகவும் நன்றாக இருக்கிறது அன்றே உன் பையனின் உபநயனத்தை நடத்திவிடு என்று பணித்துவிட்டார்

தந்தை எதோ சொல்ல வாயெடுக்க

"பணம் இல்லை பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்லாதே, மடத்து சாஸ்திரிகளுக்கு உன் சக்திக்கேற்றவாறு பணம் கொடுத்தால் உபநயனத்தை நடத்திவிடுவார் , மடத்து உக்ராணத்தில் தேவையான சாமான்கள் இருக்கின்றன நீ பய்யன் அவன் தாயார் தவிர வேறு யாரும் இந்த சுபகாரியத்திர்க்கு அவசியம் இல்லை" என்று மகான் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்

ஆனால் சுந்தரராமனின் தந்தை விடாப்பிடியாக "அடுத்த வியாழனன்று பெரியவா உத்திரவுப்படி நான் நைவேத்யம் தயாரிக்கும் கைங்கர்யம் செய்யவேண்டியுள்ளதே" என்று கூற, மகான் "அன்று நீ தவறாமல் நைவேத்திய கைங்கர்யம் செய்யப்போகிறாய் அதே தினம் உன் குமாரனுக்கும் உபநயனம் செய்யப்போகிறாய்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்:

"உபநயனம் இதே இடத்தில் கோசாலையில் நடக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது நீ பூர்வாங்க வேலைகளை விடியற்காலையிலேயே ஆரமிச்சுடு , பிறகு சந்திரமௌலீஸ்வரருக்கு நைவேத்யமும் தயார் செய்துவிடு. நான் பூஜையை ஆரம்பிக்கும் நேரத்தில் இங்கே நடக்கும் வைதீக கர்மாக்களிலும் வந்து கலந்து கொள். நான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் அதே நேரத்தில் அங்கே உபநயன முகூர்த்தம் நடைபெறவேண்டும். இப்போது உன் வேலையைப்பார்", என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்

மகான் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் இயலும்? மேலும் சுந்தரராமனின் தந்தை மடத்து ஊழியர் அவரால் எப்படி மறுப்பு சொல்லமுடியும்

சுந்தரராமன் தான் தாயிடம் சென்று இந்த விஷயத்தைச் சொன்னபோது, அந்த மாதரசி மகிழ்ச்சியடைந்தாலும் உறவினர்களை அழைக்க அவகாசம் இல்லையே , கையில் பணமில்லையே என்கிற மனக்கவலை எழுந்தது.

ஒரு காலத்தில் பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைத்ததின் விளைவாகத்தான் அக்குடும்பத்திற்கு வறுமை நிலை வந்தது

அழைப்பிதழ்கள், உறவினர் கூட்டம், புத்தாடைகள் இவை ஏதுமின்றி உபநயனம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம் நடந்து கொண்டிருந்தத நேரம் ஒரு கணவன் மனைவி கையில் பெரிய மூங்கில் தட்டுடன் அங்கே வந்தார்கள். இருவர் கையிலும் இரண்டு தட்டுகள்.மடத்து நாதஸ்வர வித்வான்கள் இனிமையான கல்யாணி ராக கீர்த்தனையை வாசித்துக் கொண்டு இருந்தனர் . வந்தவர்கள் நங்கவரம் சுந்தராம அய்யரும் அவரது பத்னியும் என்று இவர்களை அடையாளம் கண்டுகொண்டனர் , அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததில் எல்லோருக்கும் வியப்பு , சாஸ்த்ரிகளும் மேற்கொண்டு மந்திரம் சொல்வதை அப்படியே நிறுத்திவிட்டார் .

அதையெல்லாம் கவனித்த சுந்தரம் அய்யர் மெதுவான குரலில் பேசலானார் " மகா பெரியவா எங்களண்டை" நாளை காலை, எனக்கு மிகவும் பிரியமான ஒரு பையனுக்கு நான் இங்கே நடத்தும் பூணூல் கல்யாணத்திற்கு எனக்கு யார் உதவி செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் . நீங்கள் சரியான நேரத்திற்கு வந்து இருக்கிறீர்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டுவிட்டார்

" இது எங்களுக்கு கிடைத்த பாக்யம் என்ன செய்ய வேண்டும் என்று மகாபெரியவா சொன்னா செய்யக் காத்திருக்கிறோம்" என்று கூறினோம். " மகா பெரியவா புன்னகையோடு ஆசிவழங்கவே, கடைகள் மூடுவதற்கு முன்பே கடைவீதிக்கு சென்று கூடுமானவரை சாமான்களை சேகரித்து வந்தோம்" அவர் மேலும் சொன்னார்:" நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்" என்று. சுந்தராமனின் குடும்பத்தினர் முகம் மலர வெளியில் சொல்ல முடியாமல் பேசமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கா " தயவு செய்து இவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று அந்த தம்பதியர் மூங்கில் தட்டுகளை அவர்கள் முன் வைத்தார்கள் .

உபநயனத்திற்க்கு வேண்டிய புதிய துணிகள் மாலைகள் பழம் வெற்றிலைபாக்கு எல்லாமே அங்கு வந்தன , அதனால் மகான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் அதே நேரத்தில் சுந்தரராமனின் உபநயனமும் நடந்தது .

மகா பெரியவா முன்பு மடத்திலேயே உபநயனம் செய்துகொண்ட சுந்தரராமன் மிகவும் பெரிய அதிர்ஷ்டசாலி என்று எல்லோரும் வாழ்த்தினர் .

பூஜையை முடித்துக்கொண்ட மகானை, குடும்பமே கால்களில் விழுந்து நமஸ்கரிக்க, மகான் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்து சுந்தராமனின் கையில் கொடுக்க பிறகு சுந்தரராமனின் தாயாரைப் பார்த்து "உன் மகனின் பூணூல் கல்யாணம் விமரிசையாக நடந்துவிட்டதா? என்று கேட்க, அந்த மாதரசியின் கண்களில் நீர் பெருக்கெடுக்க கைகள் உயர்ந்து மகானை வணங்கின. அன்று மடத்தில் எல்லோருக்கும் சிறப்பு சாப்பாடு


Source: Shri Varagooran Narayanan.

Saturday, January 16, 2016

"வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?" எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்!


ஸ்ரீமடத்தில் பக்தியுள்ள குடும்பம். அக்குடும்பத்தின் ஒரு வயோதிகருக்கு பாரிச வாயு வந்து, வலது பக்கம் முழுதும் செயலற்றுப் போனது. மருந்து சுமாரான பலன் குடுத்தது. பேச்சு வரவில்லை. ஞாபக சக்தியும் சரியாக இல்லை. அவருடைய மனைவி பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டு பிரார்த்தித்தாள்.

...."பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும். அவருக்கு பூரணமா குணமாகணும்".

பெரியவா ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் அந்த அம்மாவிடம் " சரி. அவருக்கு ஒடம்பு சரியாகணும்னா.......என்ன வேணா செய்வியா?"

"என்ன செலவானாலும் பரவாயில்லே பெரியவா"

"அதில்லே...........நான் சொல்லறதா வெளையாட்டா எடுத்துக்க மாட்டியே?"..........

"மாட்டேன்......என்ன சொன்னாலும் செய்யறேன்"

"சீட்டுக்கட்டு ரெண்டு வாங்கி, எப்பவும் அவர் கண்ணுல படறமாதிரி வெச்சிடு. .......கொஞ்சம் கொஞ்சமா நெனவு திரும்பிடும்"

பக்கத்திலிருந்த எல்லாருக்குமே ஆச்சரியம். ஒண்ணும் புரியவில்லை. விநோதமாக இருந்தது! அந்த அம்மாவுக்கோ......தன் கணவர் எப்போதும் சீட்டாட்டத்தில் மூழ்கி இருந்தவர் என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? சீட்டுக்கட்டு கண்ணுல பட்டுண்டு இருந்தா ஒடம்பு சரியாயிடுமா? ஆச்சர்யமாக இருந்தது. பெரியவா சொன்னபடி செய்தாள்.

சில நாட்களில் சீட்டாட்டக்காரருக்கு நினைவு திரும்பியது! பேரன் பேத்திகளோடு சீட்டு விளையாட ஆரம்பித்து, ஒருநாள் "இஸ்பேட்டுக்கு பதிலா ஆட்டின் போடறியேடா!!!!" என்று பேரனை அதட்டினார்! ஆம். பேச்சும் வந்துவிட்டது!

இந்த சீட்டுப் பைத்தியத்துக்கு பெரியவா கொடுத்தது "வீட்டுவைத்தியமா?" அல்லது "சீட்டு வைத்தியமா?"

எப்படியிருந்தாலும் "துருப்பு" அவர் கையில்தான்!


Source: Shri Varagooran Narayanan

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top