Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Sunday, April 22, 2012

Arul 43: Foreign Trip

 

வளைகுடா நாடொன்றில் நிறைய பணம் ஈட்டிய என் நண்பர் ஒருவர், காஞ்சி பெரியவரை வணங்கப் போயிருந்தார்.பெரும் தொகை ஒன்றை அவர்முன் வைத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு சுவாமிகள்.

... பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
வைதீக மரபில் வந்த அவரைப் பார்த்து மகா சுவாமிகள்,"கடல் கடக்கக்கூடாது என்கிற தர்மத்தை மீறி நீ போய் சம்பாரிச்ச காசை வச்சு என்னை தர்மம் பண்ணச் சொல்றியா..தர்மத்தை மீறி வந்த காசை வைச்சு தர்மம் பண்ண முடியுமா?" என்று கடுமையான குரலில் கேட்டார்கள்.
காலில் விழுந்து கதறிய நண்பர் "இப்பவே பெரியவா உத்தரவுன்னா வளைகுடா நாட்டு உத்தியோகத்தை விட்டுடறேன்"என்றார்.சிரித்தபடி பெரியவர்,உலகப் படத்தைக் கொண்டுவரச் சொல்லி தரை வழியாகவே
அந்த நாட்டுக்கு தொடர் வழி உண்டு என்று விளக்கி,"அப்படி இருந்தால் போகலாம் குத்தமில்ல!" என்று சாஸ்திர விளக்கம் அளித்தார்கள். "கடல்கடந்து போறதுன்னா..முன்னெல்லாம் கப்பல்தான்..குளிக்கிறது,
அனுஷ்டானம் பண்ரது..இதெல்லாம விட்டுப்போயிடும்.அதனால வேண்டாம்பா..இப்ப என்ன மூணு மணிநேரம்தான்..போ..போ..தப்பில்ல"  என்று சொல்லிச் சிரித்தார்கள்.அதற்குப் பிறகு சொன்ன விஷயம்தான் முக்கியம்.
"தர்மம் பண்றபோது காசைக் கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்னா, அது தர்மம் இல்ல..நாம கொடுத்த காசில தர்மம் நடந்தாத்தான் நல்லது.
அதனால் நீயே முன்ன தர்மம் பண்றதுதான் ஒசத்தி.. ஒரு இன்வால்வ்மென்ட் வேண்டாமோ.. காசு குடுத்துடறேன் அப்படின்னா போதுமா...நீயே செய்..நன்னா தர்மம் நடக்றதான்னு பாத்துப் பாத்து செய்" என்றார்கள்.அந்த நண்பர் இன்னும் செய்கிறார்.

Saturday, April 21, 2012

Arul 42: படித்ததில் மெய் சிலிர்த்தது

 

சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவாகாஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டுபெரியவாளைப் பார்க்க ஓடினேன்.

அன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோடஅழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.

‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.

தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.

‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.

‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…

‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’

நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.

பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!

இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவாஎன்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.

நன்றி – சக்தி விகடன்

Friday, April 20, 2012

Arul 41: அம்பாளின் பல ரூபங்கள் (Ambalin Pala Roobamkal)

 

‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால்,எதையுமே தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ப்ரஹ்மம்.

இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்து விட்டன. ப்ரஹ்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க, உலகம், நக்ஷத்திரங்களிளிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற electron வரையில் எல்லாம் எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனசோ கேட்கவே வேண்டாம் – எப்போது பார்த்தாலும் அசைவுதான்! இத்தனை அறிவுகளும், அசைவுகளும், எப்படியோ பிரம்மத்தில் வந்து விட்ட மாதிரி இருக்கின்றன!

அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும், சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சர்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்!” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. யாமா – ஏது இல்லையோ, அதுவே – மாயா. நமக்கு மாயையை போக்குகிறவளும் அவள்தான்.

நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்.விசேஷமாகச் சில ரூபங்களில் த்யானித்தால் நம் மனசு லயிக்கிறது.எல்ல ரூபத்திற்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிரவளே பிராண சக்தியாக, மூச்சு காற்றாய் இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி, எல்லாம் அவள் வடிவம்தான்.இதையெல்லாம் அனுபவிக்கிற நம் மனசும் அவள்தான்.

‘மனஸ்த்வம்’ என்கிற ஸ்லோகத்தில் ஆச்சர்யாள் இதையெல்லாம் சொல்கிறார். வடக்கே ஹிமாச்சலத்தில் பர்வத ராஜகுமரையாகப் பிறந்தவள் தென்கோடியில் கண்யகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரியாகவும், தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமட்சியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜா பவானியாகவும், குஜாத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திர பிரதேசதத்தில் விந்த்யவாசினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதும் பல ரூபங்களில் கோயில் கொண்டு எப்போதும் அனுக்கிரகம் பண்ணி வருகிறவள் அவளே!

Thursday, April 19, 2012

Arul 40 : எசையனூர் பாட்டி (Esayanur Patty)

 

காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.
எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.

“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.
“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.
“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.

காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.

பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.
சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்

Wednesday, April 18, 2012

Arul 39: கானல்நீர்!

 

பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ‘ஹா ஹா’ என்று தாஹம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது.

அங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல்நீர் என்பது. ப்ரதிபிம்பம் (reflection), ஒளிச்சிதறல் (refraction) ‘தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் இலேசாகி விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும்.
இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும்,

ஸம்ஸ்க்ருதத்தில் ‘ம்ருக்’ என்றால் ‘தேடுவது’ என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் ‘ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது! லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ‘அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால், ‘கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா ? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்’ என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Tuesday, April 10, 2012

Arul 38: எச்சில் தோஷம்

 

இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹச்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தளம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .
இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா... பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீடிற்கு வரவேண்டும் என்று .
ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே வந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .
வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .
அப்போது மகான் நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே என்று கட்டளயிட்டார்
பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .
இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்ற இக்காலஹச்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலதைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .
ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா
இதற்க்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார்

Sunday, April 8, 2012

Arul 37: Padmavathi Kalyanam

 

பத்மாவதி பரிணயம் மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள்.

இளவயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்
மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்
செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில்
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு
வாடகை பிரச்னை இல்லை.

கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்'
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..

மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.
ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்த
வளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே
கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,
மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."

தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார் "அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம். பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."
பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே' என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே
பெரியவாள்.

வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்
ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..

"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.
என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ
பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.
அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..
என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன்,
உதவி செய்யப்படாதா?"

பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"
"சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி
பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"

பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்
பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"

ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;
அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"

"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு
மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"

அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி
அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்
தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்
ஒரு டாலர்; பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப்
பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம்
மார்க்கபந்து சாஸ்திரிகள். பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில்
ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.

பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்
பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றக்கு என்ன,இப்படி?

அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்
காக்க வைக்கலாமா?

ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.

பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது.
பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.

"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா, ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..." பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.
அரை மணி ஆயிற்று. "சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு. "ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.

"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...." உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருககும் ஆச்சர்யமாக இருந்தது.

ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும் தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?
திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா?
"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"

சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.

முதுகில் சுளீரென்று சாட்டையடி!

இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.
"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார். 'கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன் பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."

"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார். "சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."
"அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவுகூட கண்டதில்லே...."

பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!

"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா? புத்திரிக்குக் கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?" பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.

"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான சௌ.பத்மாவதியை.." விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி... பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.

"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,அண்ணா சந்தோஷப்படுவார்..." தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு. இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள் காதருகில் மீண்டும் ஒலித்தன.

'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி' என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.

தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு வைத்துக் கொண்டால் போதும்.!
திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!

சங்கரா! போற்றி...போற்றி

மகா பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Friday, April 6, 2012

Arul 36: சகோதரி பையன் (Charity Begins at home)

 

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் கூறுகிறார்…..

இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர்.

அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top