Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, September 7, 2020

பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா

" இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, 
அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா"(இந்த இரண்டு
 வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் 
பெண்ணிடம் கொடு)...பெரியவா.

(பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா)


சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
 மறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கர்நாடகம் - மகாராஷ்டிரம் எல்லைப் பகுதியில்
யாத்திரை செய்து கொண்டிருந்தோம். ராமதுர்க என்ற
ஊரின் அருகில்,வெள்ளம் பெருகி ஓடிக்கொண்டிருந்த
ஒரு நதியில் ஆனந்தமாக நீராடினோம். பெரியவாள்
நதிக்கரையில் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு
ஜப-அனுஷ்டானங்களை செய்யத் தொடங்கினார்கள்.

அனுஷ்டானம் முடிந்து எழுந்திருந்ததும்,
தன் அருகிலிருந்த இரண்டு சிஷ்யர்களைக் கூப்பிட்டு,
"உங்கள் மேல்துண்டுகளை கீழே போடுங்கள்" என்றார்கள்.

மிகவும் புதுமையான உத்திரவு!
ஆனாலும் நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவு.

பெரியவா, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மக்கள்
நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரு சிறுவன்
காணப்பட்டான். ஏழெட்டு வயது இருக்கும். பெரியவா
அவனை அருகில் அழைத்தார்கள்.

அந்த நதி, மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக் கொண்டிருந்தது,
இருகரைகளையும் தொட்டுக்கொண்டு, அசாத்திய வெள்ளம்.
சுழித்து சுழித்திக் கொண்டு படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

பெரியவா, அந்தச் சிறுவனிடம் கன்னடத்தில் சொன்னார்கள்;
" இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, 
அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா"(இந்த இரண்டு 
வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் 
பெண்ணிடம் கொடு)

அந்தச் சிறுவன், இரண்டு மேல் துண்டுகளையும் எடுத்துக்
கொண்டு, மேற்கு நோக்கிச் சென்று,கழுத்தை மட்டும் வெளியே
வைத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தான்.

அந்தப் பெண்,அரைமணிக்கு மேலாகவே உடல் முழுவதையும்
தண்ணீரில் மறைத்துக்கொண்டு, ஆற்றோரத்தில் உட்கார்ந்து
கொண்டிருக்கிறாள்.!

ஆமாம், வெள்ள வேகத்தில்,கட்டியிருந்த ஆடைகள் போயே
போய்விட்டன. வெட்கம். எப்படி வெளியே வருவது" எப்படி
வீட்டுக்குப் போவது? படிப்பறியா மக்கள்தான் என்றாலும்
பண்பாடு மறக்கவில்லையே?

'இந்த சனங்களெல்லாம் எப்பத்தான் போய்த் 
தொலைவாங்களோ?' என்று ஸ்ரீமடம் சிப்பந்திகளைப்
பார்த்து அந்தப் பெண் நொந்து போயிருக்கக் கூடும்.
ஆனால், யாத்திரைக் குழுவினரின் பார்வை, நூறு
அடிக்கு அப்பால் செல்லவில்லை; செல்ல வேண்டிய
அவசியம் ஏற்படவில்லை.' 

இந்த இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு எப்படித்
தெரிந்தது? தொலை நோக்கு (அல்லது, தலை நோக்குப்)
பார்வை என்பது இது தானோ?

அரண்மனைவாசியான திரௌபதி, கண்ணனைக் கேட்டு
பெற்றாள் ஆடை. இந்தக் கிராமவாசிக்கு மகாசுவாமிகள்
தானே வழங்கினார் ஆடை.

அந்தப் பெண்,மேல்துண்டுகளை உடம்பில் சுற்றிக்கொண்டு
அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டு விட்டு, வீட்டை
நோக்கி ஓடிப்போனாள்.

யாத்திரை கோஷ்டி நதி ஓரமாகவே கிழக்கு நோக்கி நகர்ந்தது.

ஆற்றில், வெள்ளம் இன்னும் வடியவில்லை.

Saturday, September 5, 2020

"என்னிடம் ஒண்ணுமேயில்லை; நான், அகிஞ்சனன்."

(ஒரு பைசா கூட வைத்துக்கொள்ளாதவன்)பெரியவா.

(
(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக்
கொண்டபிறகு (பெரியவா) நடந்த சம்பவம்)

'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று
எப்படிச் சொல்லலாம்' ?
சொன்னவர்-பிரும்மஸ்ரீ டி.எஸ்.நடராஜ சாஸ்திரிகள்.
..............................(ஸ்தானீகர்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில்
நித்யபூஜை,விசேஷ பூஜை,உற்சவம் எல்லாம் ஒழுங்காக
நடைபெறவேண்டுமே? அந்தக் காலத்தில் ஸ்ரீமடம்
நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம்
வரவு-சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான்
இருந்தது.ஸ்ரீபுதுப்பெரியவாள் இந்தத் துறையில்
கவனம் செலுத்தினார்கள். 'ஸ்ரீபங்காரு காமாக்ஷி அம்மன்
நித்ய பூஜா டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையைத்
துவக்கினார்கள்.அந்த அறக்கட்டளையின் முழு
விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து
அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி
பணித்தார்கள், புதுப் பெரியவாள்.

டிரஸ்ட் நிர்வாகிகளுடன், ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக்
கொண்டு நானும் செல்லவேண்டும் என்று உத்திரவாயிற்று.

மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு
கிராமத்தில் முகாம்.

முகாம் இருப்பிடத்தைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றோம்.

பெரியவாள் முன்னிலையில் நின்றோம்.

அணுக்கத் தொண்டர்,சற்று பெரிய குரலில் கூறினார்.

'தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்
டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானிகர்
பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்...'

'முதலில் பிரசாதம் கொடு'-என்று சமிக்ஞை.

ஒரு மூங்கில் தட்டில், ஒரு சாதரா,வாடிப்போன
நிர்மால்ய மாலை,புஷ்கலமாகக் குங்குமம்.

குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு,
மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள்.

"இன்னும் என்ன இருக்கு.."

'அம்பாள் பிரசாதமாக, ஒரு சால்வை..'

மகாபெரியவா கண்களில் ஒரு தேஜஸ்.
நெஞ்சில் ஏதோ நினைவோட்டம்.

"ஸ்தானீகரைக் கூப்பிடு.."

நான் சற்று அருகே சென்றேன். பாதாதிகேசம்
அருட்புனலால் ஒரு நீராட்டு.

"நீ....சங்கரசாஸ்திரிகள் புத்திரன் தானே?.

'ஆமா..'

"என்ன ஒற்றுமை பார்! நான் பட்டத்துக்கு
வந்தபோது,அவர்தான் சாதரா கொண்டு வந்து,
பூவாலேயே அபிஷேகம் பண்ணி...ஹ்ம்?..
அப்புறம் பிரசாதம் கொடுத்தார். மடத்தின்
மூலமா, அவருக்குப் பதில் மரியாதை கூடப்
பண்ணினோம்...தெரியுமோ?...."

'அப்பா சொல்லியிருக்கார்...'

யுகமாகக் கழிந்த இரு விநாடிகள்.

"நீயும் அவரைப் போலவே...சாதரா,நிர்மால்யம்,
குங்குமம் கொண்டு வந்திருக்கே. உனக்கும் பதில்
மரியாதை செய்யணும்...ஆனா..என்னிடம் 
ஒண்ணுமேயில்லை; நான், அகிஞ்சனன்.
(ஒரு பைசா கூட வைத்துக்கொள்ளாதவன்..)

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக்
கொண்டபடியால், இவ்வாறு கூறினார்கள்.)

மௌன இடைவெளி.

"இவனுக்கு,ஒரு முத்திரைப்பவுன் வாங்கி பதில்
மரியாதை செய்தால், தேவலை. உங்களால்
யாராலேயாவது முடியுமோ?..."

அந்த கிராமத்தில் நகைக்கடை ஏது?
சில மாதர்கள் நகைகளைக் கழற்றிக் கொடுக்கத்
தயாராக இருந்தார்கள்.ஆனால்,பெரியவாள்
முத்திரைப் பவுன் அல்லவா,கேட்கிறார்கள்.?

இந்தப் பரபரப்பில்,எனக்கு அழுகையே வந்து
விட்டது. 'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று
எப்படிச் சொல்லலாம்' என்று மனம் பரிதவித்தது.

கண்ணீர் விட்டபடியே நமஸ்காரம் செய்தேன்.

'பெரியவாளோட அனுக்ரஹம் எங்களுக்கு
இருந்தால் போதும்..காமாக்ஷி கருணையிலே
நாங்கள் எல்லாம் சௌக்கியமாகவே இருக்கோம்.

விம்மினேன், பெரியவா பரிவுடன் கடாக்ஷித்தார்கள்.

"இதே எண்ணத்தோடே இருந்து கொண்டிரு.
கடைசிவரை க்ஷேமமாய் இருப்பாய்..."

ஆனால்,பெரியவாள் வெற்றுச் சொல்லுடன்
நின்றுவிடவில்லை.முடிகொண்டான் கிராமத்தைச்
சேர்ந்த ஒரு தனிகரிடம் சொல்லி, விரைவில்
முத்திரைப் பவுன் அனுப்பிவைத்தார்கள்.

ஸ்தானீர்களாய நாங்கள் பங்காரு காமாக்ஷிக்கும்
பரமாசார்யாளுக்குமிடையே, எந்த ஒரு பேதத்தையும்
காண்பதில்லை.

Thursday, September 3, 2020

ஊழிக் கூத்து...


(1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த நிகழ்வு)



('தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க...உலகமே இருளோன்னு இருக்குதே..')

 ஸ்ரீ பரணீதரன் அவர்கள் கைவண்ணம்...


1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த 'அன்பே அருளே' கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்...

சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது. 

நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி - சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள். 

'பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே...'

'திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே...'

'இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே...அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே... அமுத பேச்சை கேட்க முடியாதே...'

அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?
'பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்? 
பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே...'

'நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா...இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே... மோசம் போயிட்டேனே...'

'பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்...எவ்வளவு பேசி இருக்கா...ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா...ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே...எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே...'

'பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே...'

'தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க...உலகமே இருளோன்னு இருக்குதே..'

இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன். 

என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.

'எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?' என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான். 

ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள். 

8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார். பாலுவிடம், 'நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?' என்று கேட்டிருக்கிறார்.

எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ? 

யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். 'சௌக்கியமா இருக்கேளா?' என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.

'பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது...' என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி. 

'பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்' என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து 'கையில் என்ன?' என்று கேட்டாராம். 'பெரியவாளோட மரக்குவளை...அலம்ப எடுத்துண்டு போறேன்...' என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.

பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்...அனாயாசமாக அப்போது மணி 2.58...

அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை. 

அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள். 

துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!  அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் - மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்கொண்டு இருந்தார். 

பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார். 

என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, 'ஏமாந்து போயிட்டோம்...இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா...தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்...எதிர்பார்க்காம சேதி வந்தது.'என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, 'ஒ, வந்திருக்கேளா?' என்று கேட்பது. 'உங்களுக்கு எப்போ தெரியும்?' என்று பரிவுடன் விசாரிப்பது...'பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?'என்று பார்வையிடுவது... பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர். 

பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது. 

மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்...எவ்வித அசைவும் இல்லை...மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள். 

எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்...

ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் 'ஜெய ஜெய சங்கர...ஹர ஹர சங்கர...'கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்.... மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்...தேவலோக சூழ்நிலை...

பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது. 

இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது. 

வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top