* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.
* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதை செய்ய மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதும்.
Welcome to My Blog.....
PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN
Sunday, October 13, 2013
மஹா பெரியவா சொன்னவை : =========================
Saturday, September 14, 2013
தியாகம்
'கொடுக்க வேண்டும்'. அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்கும் போது , "நான் தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே ! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது" என்கிற பரம தியாக புத்தியில்...'ந மம ' - எனதில்லை ,எனக்கில்லை ' என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.
மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு , "நான் கொடுத்தேன்" என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டே இருந்தால், இந்த அகங்காரமானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிறஆத்மாபி விருத்தியை அப்படியே ஏப்பம் விட்டு விடும். தியாகம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியாகம் பண்ணினேன் என்கிற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
'சோஷியல் சர்வீஸ் பண்ணுகிறேன்' என்று சொல்லிக் கொண்டு , வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால், இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீசால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்தது போல் படாடோபமாக தெரியலாம்; ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.
Courtesy: Smt. Vidya raju
Saturday, April 20, 2013
We sin in four different ways. With our body we do evil; with our tongue we speak untruth; with our mind we think evil; and with our money we do so much that is wicked. We must learn to turn these very four means of evil into instruments of virtue.
-His Holiness Sri Chandrasekarendra Saraswathi Swamigal
Sunday, May 20, 2012
Arul 48 : தியானம் (Dyanam)
பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உப நிஷத் சொல்கிறது.
அவனுக்குப் பேச வேண்டும் என்றோ, பேச வேண்டாமென்றோ எந்த சொந்த அபிப்ராயமும் ஆசையும் இருக்காது. லோகாநுக்ரஹத்துக்காக அவன் மூலம் உபதேசமாகப் பேச்சு வந்தாலும் அவன் தான் பேசுவதாக நினைக்க மாட்டான். அதைவிடப் பெரிய மௌன உபதேசத்தில் தக்ஷிணாமூர்த்தி மாதிரி அவனைப் பராசக்தி உட்கார்த்தி வைத்திருந்தாலும் ‘நாம் மௌன விரதம் என்று ஒன்று அனுஷ்டிக்கிறோம்’ என்று அவன் நினைக்க மாட்டான். இதைத்தான் மௌனம், அமௌனம் இரண்டையும் விட்ட நிலை என்பது.
Saturday, May 12, 2012
Arul 47 : Gajana -Ganesh Chandrasekar and Kalyanasundaram Ramachandaran
ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.
அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். "கஜானா" சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. "ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?" என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. "நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, "அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு"ன்னார்" என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.
"கஜானா" மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் "கஜானா"விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.
"நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்" என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.
அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா "நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?" என்றார்.
"அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்" என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.
"சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?" என்றார் பெரியவா
"காத்துண்டு இருக்கேன்" என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
"அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!""அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு....." கஜானா இழுத்தார்.
"அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா"
"சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்" என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது "சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு"
கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.
"அதி"க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். "இவ்வளவுதானா?" என்று வேறு கேட்டார்.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
"இன்னம் உவப்பன் நான்" என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!............என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.
பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று "இன்னும் என்ன இருக்கு" என்று கேள்வி கஜான வெலவெலத்து போனார்.
"வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!" என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.
"பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்" என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, "இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?" என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்
Thursday, May 10, 2012
Arul 46: காதில் விழவே இல்லையா"? (Kathil vizhalaya)
தகவல் " காஞ்சி மகான் அருளிய அற்புத அனுபவங்கள் " ரா வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை . தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை .
திரு ராஜகோபாலின் மனைவி கீதா பலவருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துகொண்டிருந்த சமயம் , மகானிடம் பெரும் பக்தி , அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் .
ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை , எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கசெய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கயக்கி விட்டது
மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை , இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமகிகொண்டு வர , ஒரு நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார் , அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும் பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு " இதனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள்" என்று கதறிக்கொண்டு இருக்கின்றேனே பெரியவா உங்கள் காதில் விழவே இல்லையா ,
காதில் விழவே இல்லையா என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது அங்கே சென்று கதவை திறந்தபோது " கஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம் மகா பெரியவா இந்த பிரசாதத்தை உங்களன்ண்ட கொடுக்க சொன்னார்" என்றனர் வந்தவர்
காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார் , கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை தான் தந்தையின் வாயில் ஊற்ற , அவரது மூச்சு திணறல் நின்றது , அதன் பிறகு அவர் தந்தை நீண்டநாள் சுகமாக வாழ்ந்தார் என்பது தான் வியப்பிற்குரிய விஷயம்
மகன் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார் "காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி
Tuesday, May 8, 2012
Arul 45 : ஒழுக்க நெறிகள்!
நம்மளவு சௌகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக நினைத்துக் கர்வப்படக் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு எல்லாவற்றையும்விடக் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத் தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மைவிடக் கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த தப்புக்களையெல்லாம் விடப் பெரிய தப்பு. இதன...ால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம்.
இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றி கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவதில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப் பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக இதில் ஈடுபடக்கூடாது. ஒருவனிடம் தப்புத் தெரிந்தால், அதை நேரில் நல்லபடியாக, நயமாக, அன்பாக அவனிடமே சொல்ல வேண்டுமே ஒழிய, அந்தத் தப்பை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவது வெறும் கோழைத்தனம்தான். இப்படிப் புறங்கூறுகிறபோது அங்கே அந்தப் பையன் இல்லாதிருக்கலாம் – ஆனால் எங்கேயும் உள்ள ஸ்வாமி அங்கேயும் இருக்கிறார். என்றைக்கோ ஒரு நாள் அவர் தண்டித்து விடுவார். அதற்கு யாரும் தப்ப முடியாது.
பொய், பயம், பொறாமை, நிந்தனை ஆகிய அழுக்குகளைப் போக்குகிற சோப்பு, சீயக்காய், அரப்பு, வாசனைப் பொடி மாதிரி சத்தியம், தைரியம், விட்டுக் கொடுக்கிற சுபாவம், இன்சொல் ஆகியன இருக்கின்றன.
இப்படியே நம் மன அழுக்கைப் போக்குகிற நல்ல குணங்கள் பல இருந்தாலும்கூட, வேறொரு ஜலம் இல்லாவிட்டால் இந்த நல்ல குணங்கள் மாத்திரம் நமக்கு மனத்தூய்மையைக் கொடுக்க மாட்டா. அந்த ஜலம்தான் தெய்வ பக்தி. எல்லா அழுக்குகளும் நீங்குவதற்கு, கங்கா ஸ்நானமாக இருப்பது ஸ்வாமியிடம் செய்கிற பிரார்த்தனைதான்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
Sunday, May 6, 2012
Arul 44 5: Shri Bodendral Swamigal
லக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும், பெரியவாளும் திண்டிவனம் அமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம் வரும்போதெல்லாம், நகர எல்லையில் உள்ள பாப்பான்குளத்தில் இருக்கும் பாபுராவ் சத்திரத்தில்தான் தங்குவார். பெரியவரை லக்ஷ்மி நாராயணனின் தந்தைதான் பூரணகும்பம் கொடுத்து வரவேற்று, சத்திரத்துக்கு அழைத்துச் செல்வார்.
மடத்தின் பரிவாரத்தில் யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. சத்திரத்தில் அவற்றையெல்லாம் கட்டிப் பராமரிக்க அப்போது வசதி இருந்தது.
அப்படி ஒருமுறை, பெரியவா பாபுராவ் சத்திரத்தில் வந்து தங்கியபோதுதான், அவரை முதன்முறையாகத் தரிசித்தார் லக்ஷ்மிநாராயணன்.
”எனக்கு அப்போ ஆறு வயசு இருக்கும். என் பெரியப்பா என்னை பெரியவாகிட்ட கூட்டிண்டு போய், ‘என் தம்பி பிள்ளை இவன். மூணாங் கிளாஸ் படிக்கிறான்’ என்று அறிமுகப்படுத்தினார்.
‘பையனுக்குப் பூணூல் போட்டாச்சோ?’ன்னு விசாரிச்சார் பெரியவர். ‘இல்லை’ன்னு சொன்னதும், ‘சரி, சீக்கிரம் பூணூல் போட்டுடு. ஸ்கூல்ல லீவு சமயத்திலே இங்கே என்னண்டை அனுப்பி வை’ன்னார்.
அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சு 1946-47-ல அதே பாபுராவ் சத்திரத்துல மறுபடியும் பெரியவா வந்து தங்கினா. அதுக்குள்ளே எனக்குப் பூணூல் போட்டாச்சு. பெரியவா சொன்னாப்பல, ஸ்கூல் லீவ் நேரத்துல மடத்துக்குப் போய் பெரியவாளுக்குச் சேவை செய்ய ஆரம்பிச்சேன். அதுதான் ஆரம்பம். வில்வம் ஆய்ஞ்சு கொடுக்கறது தான் என் முதல் டியூட்டி. பெரியவா பத்து நாள் அங்கே இருந்தா.
ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஜெயராமய்யர் பெரியப்பாவுக்கு சீனியர். அவர் பெரியவாளை வந்து தரிசனம் பண்ணினார். ‘நீங்க ஊருக்குள்ள வரணும்’னு கேட்டுண்டார். ‘ஊருக்கு வந்தா என்ன தருவே?’ன்னு கேட்டா பெரியவா. ‘உன்னோட வீட்டைக் கொடுத்துடறியா? நான் பத்து மாசம் இங்கேதான் தங்கப் போறேன்’னார். குறும்பா கேக்கறாப்பல இருக்கும்; ஆனா, அதுக்குப் பின்னாடி பெரியவா மனசுக்குள்ளே பெரிய திட்டம் ஏதாவது இருக்கும்.
‘தினம் என்னால அவ்ளோ தூரம் நடந்து பெண்ணையாத் துக்குப் போக முடியாது. அதனால எனக்கு இங்கேயே ஒரு குளம் வெட்டிக் குடுக்கறயா?’ன்னு கேட்டா பெரியவா.
பாணாம்பட்டுன்னு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல ஒரு ஊர். தோட்டத்துல வேலை பாக்கறவா 200 பேர் சேர்ந்து மூணு நாள் தோண்டினதுல, அஞ்சு அடியிலேயே ஜலம் வந்துடுத்து. ராமருக்கு அணில் உதவின மாதிரி நானும் இந்தக் குளத் திருப்பணியில பங்கெடுத்துக்கிட்டேன். முட்டிக்கால் ஜலம்தான். ஆனா, ஸ்படிகம் மாதிரி இருந்துது. அதுல இறங்கி ஸ்நானம் பண்ணிட்டு, கங்கா பூஜை பண்ணினார் பெரியவா.
பத்துப் பதினைஞ்சு நாள் போயிருக்கும். ஒரு நாள்… ‘இங்கே ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்துல வடவாம்பலம்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே சுப்பிரமணிய ரெட்டியார்னு ஒருத்தர் இருக்கார். அவரைக் கூட்டிண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அவரைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன் னோம். பெரியவா நம்மளை எதுக்குக் கூப்பிடறானு அவருக்கு ஒண்ணும் புரியலே. அவர் நல்ல வசதியானவர். அவர் வந்து பெரியவரைப் பார்த்து, ‘நான் என்ன செய்யணும்?’னு கேட்டார். ‘தாசில்தாரை அழைச்சுண்டு வாங்கோ’ன்னார் பெரியவா. அந்தக் காலத்துல, தாசில்தார்னா கலெக்டர் மாதிரி… அவ்வளவு பவர் அவருக்கு.
தாசில்தார் வந்தார். அவர் கும்ப கோணத்து பிராமணர். அவர்கிட்டே பெரியவா, ‘இந்த ஊர்ல என்ன விசேஷம்? ஃபீல்டு மேப் இருக்குமே? அதுல பாத்து கண்டுபிடிச்சு சொல்லு’ன்னா.
ஃபீல்டு மேப்பை வெச்சு அவரால ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலே!
அப்புறம் பெரியவாளே, ‘ஒரு இருநூறு வருஷத்துக்கு முன்னால பெண்ணையாறு இங்கே வடவாம்பலம் கிராமத்துக் குப் பக்கத்துலதான் ஓடிண்டிருந்திருக்கு. நாளாவட்டத்துல ஒதுங்கி ரொம்ப துரம் தள்ளிப் போயிடுத்து’ன்னார்.
‘வடவாம்பலத்துல முன்னே ஒரு பெரிய சித்தர் இருந்திருக்கார். அங்கேதான் ஸித்தி அடைஞ்சிருக்கார். ஆத்ம போதேந்திரான்னு ஒரு பீடம் இருந்திருக்கு. அதை எல்லாம் வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து’ன்னா பெரியவா.
தை மாசம் அஞ்சாம் தேதி வரை கங்கை அங்கே வர்றதா ஐதீகம். ஆத்துத் திருவிழாவா கொண்டாடுவா. சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துண்டு போவா. அந்த இடத்துல ஆத்ம போதேந்திரா சமாதி ஆகி, லிங்கம் வச்சு அதிஷ்டானம் கட்டியிருக்காளாம். திடீர்னு ஒரு நாள் ராத்திரி, ‘இந்த க்ஷணமே அங்கே போகணும்’னா பெரியவா. நாங்க ரெண்டு பேர் டார்ச்லைட் எடுத்துண்டு அவரோடேயே நடந்து போனோம். ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டார் பெரியவா. விடியற்காலை நாலு மணி வரைக்கும் ஜபம் பண்ணினார். அப்புறம், இருள் பிரியறதுக்கு முன்னே ஊருக்குத் திரும்பி வந்துட்டார்.
அப்புறம், மூணு மாசம் கழிச்சு மறுபடியும் கிளம்பி, பெரியவரோடு அதே இடத்துக்குப் போனோம். ஒரு பெரிய ஸர்ப்பம் எதிரே வந்துது. நடுங்கிப் போயிட்டோம். ‘ஒண்ணும் பண்ணாது. ஒரு நிமிஷம் நில்லுங்கோ’ன்னார் பெரியவா. அது ஊர்ந்து போய் மறைஞ்சுடுத்து. முன்பு போலவே பெரியவா அங்கே குறிப்பிட்ட இடத்துல உட்கார்ந்து ஜபம் பண்ணினார். நாலு மணிக்கு ஜபத்தை முடிச்சுண்டு எழுந்து வந்துட்டார். அங்கே அப்படி என்ன விசேஷம்னு எங்களுக்கு எதுவும் புரியலே.
மறுபடி சுப்பிரமணிய ரெட்டியாரை அழைச்சுண்டு வரச்சொல்லி, அவர்கிட்ட, ‘எனக்கு இங்கே ரெண்டு ஏக்கர் நிலம் வேணும். வாங்கித் தர முடியுமா?’ன்னு கேட்டார் பெரியவா. ‘ஆகட்டும்’னார் ரெட்டியார்.
தஸ்தாவேஜு எல்லாம் ரெடி பண்ணி, ஏக்கர் 200 ரூபா மேனிக்கு ரெண்டு ஏக்கர் 400 ரூபாய்னு பத்திரம் எழுதிக் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணியாச்சு. பணம் வாங்கமாட்டேன்னு மறுத்தார் ரெட்டியார். ‘இல்லே! நீங்க வாங்கிக்கத்தான் வேணும். இல்லேன்னா நாளைக்கு ஒரு பேச்சு வரும்’னு சொல்லி, மடத்துலேருந்து 500 ரூபாயை ரெட்டியாருக்குக் கொடுக்கச் சொல்லிட்டார் பெரியவர்.
அப்புறம், அந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல தோண்டிப் பார்க்கணும்னா பெரியவா. அவருக்கு மாமா பிள்ளை ஒருத்தர் இருந்தார். அவரையும் அழைச்சுண்டு அந்த இடத்துக்குப் போனோம். ஒரு இடத்தை செலக்ட் பண்ணி, அங்கே கடப்பாரையால தோண்டினார் அவர். வெளியே எடுத்தப்போ கடப்பாரை முனையெல்லாம் ரத்தம்!
அவர் அதைப் பார்த்து மூர்ச்சையாகி, அங்கேயே தடால்னு விழுந்துட்டார். என்ன பண்றதுன்னு தெரியாம கையைப் பிசைஞ்சுண்டு நின்னோம். அரை மணி கழிச்சு அவரே, ‘எனக்கு ஒண்ணும் இல்லே’ன்னு எழுந்து உட்கார்ந்துட்டார்.
பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னோம். ‘பயப்படாதீங்கோ! அங்கே, அடியிலே ஒரு கோயில் புதைஞ்சு கிடக்கு. நாளைக்குத் தோண்டிப் பாக்கலாம்’னார்.
அப்படியே மறுநாள் போய்த் தோண்டினப்போ, முன்னே ஒரு காலத்துல அங்கே கோயில் இருந்ததுக்கான அடையாளங்கள் தெரிஞ்சுது. ஒரு சிவலிங்கம் கிடைச்சுது. ரெண்டு மாசம் அங்கேயே இருந்து, அந்தக் கோயிலை மறுபடி புதுப்பிச் சுக் கட்டிட்டு, காஞ்சிபுரம் திரும்பிட்டா பெரியவா.
அந்த நேரத்துல நான் 3, 4 மாசம் பெரியவாளோடு கூடவே இருந்தேன். அந்தச் சம்பவங்களையெல்லாம் இப்போ நினைச்சுப் பார்க்கிறப்போ சிலிர்ப்பா இருக்கு!” என்று சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மிநாராயணன்
Sunday, April 22, 2012
Arul 43: Foreign Trip
வளைகுடா நாடொன்றில் நிறைய பணம் ஈட்டிய என் நண்பர் ஒருவர், காஞ்சி பெரியவரை வணங்கப் போயிருந்தார்.பெரும் தொகை ஒன்றை அவர்முன் வைத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு சுவாமிகள்.
... பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
வைதீக மரபில் வந்த அவரைப் பார்த்து மகா சுவாமிகள்,"கடல் கடக்கக்கூடாது என்கிற தர்மத்தை மீறி நீ போய் சம்பாரிச்ச காசை வச்சு என்னை தர்மம் பண்ணச் சொல்றியா..தர்மத்தை மீறி வந்த காசை வைச்சு தர்மம் பண்ண முடியுமா?" என்று கடுமையான குரலில் கேட்டார்கள்.
காலில் விழுந்து கதறிய நண்பர் "இப்பவே பெரியவா உத்தரவுன்னா வளைகுடா நாட்டு உத்தியோகத்தை விட்டுடறேன்"என்றார்.சிரித்தபடி பெரியவர்,உலகப் படத்தைக் கொண்டுவரச் சொல்லி தரை வழியாகவே
அந்த நாட்டுக்கு தொடர் வழி உண்டு என்று விளக்கி,"அப்படி இருந்தால் போகலாம் குத்தமில்ல!" என்று சாஸ்திர விளக்கம் அளித்தார்கள். "கடல்கடந்து போறதுன்னா..முன்னெல்லாம் கப்பல்தான்..குளிக்கிறது,
அனுஷ்டானம் பண்ரது..இதெல்லாம விட்டுப்போயிடும்.அதனால வேண்டாம்பா..இப்ப என்ன மூணு மணிநேரம்தான்..போ..போ..தப்பில்ல" என்று சொல்லிச் சிரித்தார்கள்.அதற்குப் பிறகு சொன்ன விஷயம்தான் முக்கியம்.
"தர்மம் பண்றபோது காசைக் கொடுத்துட்டு ஒதுங்கிக்கிறேன்னா, அது தர்மம் இல்ல..நாம கொடுத்த காசில தர்மம் நடந்தாத்தான் நல்லது.
அதனால் நீயே முன்ன தர்மம் பண்றதுதான் ஒசத்தி.. ஒரு இன்வால்வ்மென்ட் வேண்டாமோ.. காசு குடுத்துடறேன் அப்படின்னா போதுமா...நீயே செய்..நன்னா தர்மம் நடக்றதான்னு பாத்துப் பாத்து செய்" என்றார்கள்.அந்த நண்பர் இன்னும் செய்கிறார்.
Saturday, April 21, 2012
Arul 42: படித்ததில் மெய் சிலிர்த்தது
சர்வ தீர்த்தக் கரை. அங்கே பெரியவாகாஷ்ட மௌனத்துல இருந்தார். உடம்பு ஒடிசலாக, ஒல்லியாக இருந்தது. ‘பெரியவா தூத்தம் (தண்ணீர்) கூடக் குடிக்கலை’ என அருகில் இருந்தவர்கள், வருத்தத்துடன் தெரிவித்தனர்.
அன்றைய தினம், காஞ்சிபுரத்துலதான் இருந்தேன். திடீர்னு ஒரு சேதி… ‘பெரியவா உத்தரவு, உடனே வா’ன்னு தகவல். பறந்தடிச்சுண்டுபெரியவாளைப் பார்க்க ஓடினேன்.
அன்னிக்குதான், புஷ்பங்களால மகா பெரியவாளை அலங்கரிக்கிற மாதிரி பாட்டு ஒண்ணு எழுதினேன். அந்தப் பாட்டையும் பெரியவாளோடஅழைப்பையும் மனசுல நினைச்சுண்டே, அங்கே போய் நின்னேன்.
‘அவனை உள்ளே கூப்பிடு’ன்னு பெரியவாளோட குரல் நன்னாக் கேட்டுது, எனக்கு. உள்ளே நுழைஞ்சு, காஞ்சி மகானைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம், குழப்பம், வியப்பு, சந்தோஷம், பயம்னு எல்லாம் மாறிமாறி வர்றது. அங்கே… புஷ்பங்களால, பெரியவாளைப் பிரமாதமா அலங்காரம் பண்ணியிருந்தாங்க. அவரோட பீடத்துலேருந்து அவர் சிரசுல இருக்கற கிரீடம் வரை, எல்லாமே பூக்களால அலங்கரிக்கப்பட்டிருந்துது.
தடால்னு விழுந்து நமஸ்காரம் பண்ணினேன்; கண் லேருந்து ஜலம் அருவியாக் கொட்றது, எனக்கு! ‘இப்போ எனக்குப் பண்ணியிருக்கிற அலங்காரத்தை, நீ எழுதியே வைச்சுட்டியே! மனசுக்குள்ளே எப்பவும் என்னையே பாத்துண்டிருக்கியோ?!’னு கேட்டார்.
‘அடியேனுக்குக் காமாட்சியும் பெரியவாளும் ஒண்ணுதான், பெரியவா’ன்னு சொல்லிண்டே, திரும்பவும் நமஸ்காரம் பண்ணினேன்; கரகரன்னு அழுகை அதிகமாயிருந்தது எனக்கு.
‘சரி.. என்ன எழுதியிருக்கேனு படி!’ என்று பெரியவா சொல்ல… கண்கள் மூடி, பரவசத்துடன் அந்தப் பாட்டைச் சொன்னேன். அதன் அர்த்தம் இதுதான்…
‘எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம் சோபித மாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம் முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும் சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை, அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!’
நான் பாட்டைச் சொல்லி முடிச் சதும், குவியலாக இருந்த பூக்களைக் கொஞ்சம் எடுத்துத் தன் சிரசின் மீது தூவிக்கொண்டார், பெரியவா.
பெரியவாளுக்கும், அவர் எப்போதும் வைத்திருக்கிற தண்டம் முதலானவற்றுக்கும் நான் வர்ணித்திருந்தது போலவே அலங்கரித்திருந்தனர். யாரோ ஒரு பெண்மணியின் நேர்த்திக்கடனாம் இது!
இப்படியரு மலர் அலங்காரத்தில் பெரியவாள் திருக்காட்சி தந்ததும், அதற்கு முன்னமேயே அப்படியொரு பாடலை அடியேன் எழுதியதும்… ஸ்ரீகாமாட்சியம்மையின் பெருங் கருணையன்றி வேறென்ன?! மகாபெரியவாஎன்னை அழைத்ததும், அங்கே புஷ்ப அலங்காரத்தில் காட்சி தந்ததும் என் பாக்கியம்! வேறென்ன சொல்றது?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் காமாட்சி தாசன் சீனிவாசன்.
நன்றி – சக்தி விகடன்
Friday, April 20, 2012
Arul 41: அம்பாளின் பல ரூபங்கள் (Ambalin Pala Roobamkal)
‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால்,எதையுமே தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ப்ரஹ்மம்.
இருந்தாலும் லோகத்தில் இத்தனை தினுசான அறிவுகள் வந்து விட்டன. ப்ரஹ்மம் எங்குமாக எல்லாமாக இருப்பதால் அது அசைவதற்கு இடம் ஏது? ஆனாலும், பிரம்மாண்டம் முழுக்க, உலகம், நக்ஷத்திரங்களிளிருந்து தொடங்கி அணுவுக்குள் இருக்கிற electron வரையில் எல்லாம் எப்போது பார்த்தாலும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நம் மனசோ கேட்கவே வேண்டாம் – எப்போது பார்த்தாலும் அசைவுதான்! இத்தனை அறிவுகளும், அசைவுகளும், எப்படியோ பிரம்மத்தில் வந்து விட்ட மாதிரி இருக்கின்றன!
அதுதான் மாயா காரியம்; அல்லது பிரம்ம சக்தியின் பிரபாவம்! பிரம்மத்தை சிவன் என்றும், சக்தியை அம்பாள் என்றும் சொல்கிறபோது, இதையே ஆச்சர்யாள், “அம்மா! நீதான் சிவனையும் ஆட்டி வைக்கிறாய், அசைய வைக்கிறாய்!” என்கிறார். இறுதியில் இல்லாமல் போகிற லோகம் அவளால்தான் வந்தது. யாமா – ஏது இல்லையோ, அதுவே – மாயா. நமக்கு மாயையை போக்குகிறவளும் அவள்தான்.
நாம் பார்க்கிற ரூபமெல்லாம் அவள் செய்ததுதான்.விசேஷமாகச் சில ரூபங்களில் த்யானித்தால் நம் மனசு லயிக்கிறது.எல்ல ரூபத்திற்கும் இடம் தருகிற அகண்ட அரூப ஆகாசமாக இருக்கிரவளே பிராண சக்தியாக, மூச்சு காற்றாய் இருக்கிறாள். அக்னி, ஜலம், பூமி, எல்லாம் அவள் வடிவம்தான்.இதையெல்லாம் அனுபவிக்கிற நம் மனசும் அவள்தான்.
‘மனஸ்த்வம்’ என்கிற ஸ்லோகத்தில் ஆச்சர்யாள் இதையெல்லாம் சொல்கிறார். வடக்கே ஹிமாச்சலத்தில் பர்வத ராஜகுமரையாகப் பிறந்தவள் தென்கோடியில் கண்யகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டேஸ்வரியாகவும், தமிழ் நாட்டில் தொண்டை மண்டலத்தில் காமட்சியாகவும், சோழ தேசத்தில் அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டிய நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திர தேசத்தில் ஞானாம்பாளாகவும், மகாராஷ்டிரத்தில் துளஜா பவானியாகவும், குஜாத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாகவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திர பிரதேசதத்தில் விந்த்யவாசினியாகவும், வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸாமில் காமாக்யாவாகவும் – இப்படி தேசம் முழுவதும் பல ரூபங்களில் கோயில் கொண்டு எப்போதும் அனுக்கிரகம் பண்ணி வருகிறவள் அவளே!
Thursday, April 19, 2012
Arul 40 : எசையனூர் பாட்டி (Esayanur Patty)
காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.
எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.
“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.
“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.
“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.
காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.
பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.
சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்
Wednesday, April 18, 2012
Arul 39: கானல்நீர்!
பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் ‘ஹா ஹா’ என்று தாஹம் எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது.
அங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல்நீர் என்பது. ப்ரதிபிம்பம் (reflection), ஒளிச்சிதறல் (refraction) ‘தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் இலேசாகி விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும்.
இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும்,
ஸம்ஸ்க்ருதத்தில் ‘ம்ருக்’ என்றால் ‘தேடுவது’ என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் ‘ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது! லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. ‘அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ என்று கேட்டால், ‘கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா ? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்’ என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
Tuesday, April 10, 2012
Arul 38: எச்சில் தோஷம்
இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹச்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தளம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .
இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா... பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீடிற்கு வரவேண்டும் என்று .
ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே வந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .
வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .
அப்போது மகான் நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே என்று கட்டளயிட்டார்
பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .
இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்ற இக்காலஹச்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலதைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .
ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா
இதற்க்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார்
Sunday, April 8, 2012
Arul 37: Padmavathi Kalyanam
பத்மாவதி பரிணயம் மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள்.
இளவயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்
மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்
செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில்
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு
வாடகை பிரச்னை இல்லை.
கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்'
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..
மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.
ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்த
வளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே
கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,
மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."
தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார் "அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம். பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."
பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே' என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே பெரியவாள்.
வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்
ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..
"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.
என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ
பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.
அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..
என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன்,
உதவி செய்யப்படாதா?"
பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"
"சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி
பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"
பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்
பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"
ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;
அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"
"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு
மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"
அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி
அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்
தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்
ஒரு டாலர்; பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப்
பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம்
மார்க்கபந்து சாஸ்திரிகள். பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில்
ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.
பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்
பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றக்கு என்ன,இப்படி?
அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்
காக்க வைக்கலாமா?
ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து சாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.
பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது.
பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.
"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா, ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..." பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.
அரை மணி ஆயிற்று. "சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு. "ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.
"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...." உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருககும் ஆச்சர்யமாக இருந்தது.
ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும் தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?
திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா?
"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"
சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!
இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.
"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார். 'கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன் பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."
"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார். "சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."
"அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவுகூட கண்டதில்லே...."
பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!
"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா? புத்திரிக்குக் கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?" பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.
"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான சௌ.பத்மாவதியை.." விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி... பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.
"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,அண்ணா சந்தோஷப்படுவார்..." தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு. இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள் காதருகில் மீண்டும் ஒலித்தன.
'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி' என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.
தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு வைத்துக் கொண்டால் போதும்.!
திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!
சங்கரா! போற்றி...போற்றி
மகா பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Friday, April 6, 2012
Arul 36: சகோதரி பையன் (Charity Begins at home)
சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் கூறுகிறார்…..
இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.
அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.
பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.
தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர்.
அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…
“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.
Saturday, March 31, 2012
Arul 35: தீக்ஷையில் மூன்று வகை (Deekshai)
தீக்ஷையில் மூன்று வகை உண்டு.
நயன தீக்ஷை:
உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம்... குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.
காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு. ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்". பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை. அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி. நம்ம பெரியவா சாக்ஷாத் தாயாரில்லையா? "நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்". சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார். வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.......பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை! மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!
Thursday, March 29, 2012
Arul 34: மகாப்பெரியவரின் தேசப்பற்று - மனித நேயம்
ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது.
ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் ...பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.
அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.
சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.
சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!
எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.
பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.
பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!
Tuesday, March 27, 2012
Arul 33: மணி-மந்த்ர-ஔஷதம்
ஒரு தம்பதியும், இளம் பெண்ணும் தரிசனத்துக்கு வந்தார்கள். பெண், வெறும் குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள். வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது.
... "பெரியவா அனுக்கிரஹம் பண்ணனும்.இவளுக்குக் கல்யாணம்
செய்வதா, வேண்டாமான்னே புரியலை. ரொம்பக் குழப்பாமா இருக்கு."
பெரியவாள் சொல்லிய அறிவுரையில் மணி-மந்த்ர-ஔஷதம் என்று கூறுவதைப் போல,மூன்று வகையான சிகிச்சைகள் இருந்தன.
1.கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் காசி விசுவநாதர் கோயில் இருக்கு.அங்கே,மகாமகப் பெண்டுகள் என்று ஏழு தேவதைகள் சந்நிதி இருக்கு. அந்தச் சிலைகளுக்கு வஸ்திரம் சார்த்தி பொங்கல் நேவேத்யம் செய்யணும்.
2]சுயம்வரா பார்வதி மந்த்ரம் என்று ஒரு தேவி மந்த்ரம் இருக்கு. அதைப் போல, விவாஹத்தைக் கூட்டி வைக்கிற வேற சில மந்த்ரங்களும் உண்டு. உங்க வீட்டு வைதீகரைக் கொண்டு, இந்த மந்த்ரங்களை ஆயிரம் ஆவ்ருத்தி வீதம் ஜபம் செய்யச் சொல்லணும்.
3]பெண்ணுக்கு உடல் புஷ்டி வேணும்னா..நாட்டு வைத்தியரிடம் போகணும். அவர் லேகியம் பண்ணிக் கொடுப்பார். அதைச் சாப்பிட்டா பலம் வந்துடும்.
"கல்யாணம் நன்னா நடக்கும்." கேட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு ரொம்ப சந்தோஷம். தன்னுடைய நல்வாழ்வுக்குப் பெரியவாள் நல்வாக்கு ஒன்றே போதும் என எண்ணினாள்.
ஓராண்டுக்குப் பின்,உடல் நன்றாகத் தேறி, விவாகமாகி,தன் கணவருடன் வந்து, பெரியவாளுக்கு நன்றிப்
பெருக்குடன் வந்தனம் செய்தாள், மாஜி குச்சிப் பெண்.
Sunday, March 25, 2012
Arul 32: சாத்வீகமான பக்தி (Bakthi – Sathvigam)
திருச்சியில் ஒரு பக்தர் புகைப்படக்காரர் சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார். வீட்டில் மகா பெரியவா படம் பிரதானமாக இருக்கும் .
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு மகா பெரியவா படத்துக்கு நெய்வேத்தியம் படைத்துவிட்டுதான் எந்த வேலையையும் தொடங்குவார். உதடுகள் எப்பொழுதும் மகாபெரியவா நாமாவை உச்சரித்துக்கொண்டே இருக்கும்
ஒரு தடவை பெரியவா ஆந்திரமாநிலதிலுள்ள கர்னுலுக்கு விஜயம் செய்திருந்தார்
அதுவோ உஷ்ணப்ரதேசம் வெயில் கடுமையாக கொளுத்திக் கொண்டிருந்தது
திருச்சியில் இருந்த இந்த புகைப்பட கலைஞருக்கு பெரியவாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அன்று காலை ரயிலில் புறப்படும் முன் ஒரு டம்பளரில் சூடான பாலை வைத்துவிட்டு கிளம்பிவிட்டார் .
கர்னுலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம் , எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம், புகைப்பட கலைஞரால் உள்ளே செல்ல முடியவில்லை. சற்று மணல் மேடாக இருந்த ஒரு இடத்தில் ஏறி நின்று மகானை தரிசிக்க முயற்சித்தார் , வெய்யிலின் தாக்கம் காலை சுடவே கீழே இறங்கிவிட்டார். சரி சற்று கூட்டம் குறைந்ததும் மாலை வந்து மகானை தரிசிக்கலாம் என்று நினைத்து கிளம்பிவிட்டார்
இவ்வளவு தூரம் வந்தும் மகானை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் மனசில் இருந்தது
சற்று தூரம் போனதும் தன்னை யாரோ அழைப்பது போல் உணர்ந்து திரும்பி பார்க்க, ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார் , நீங்க திருச்சிலேந்து தானே வந்திருக்கீங்க
"ஆமாம் "
பெரியவா உங்களை அழைச்சிண்டு வர சொன்னார்
என்னையா ?
நீங்க போடோக்ராபர் தானே ?
"ஆமாம்"
அப்படியென்றால் வாருங்கள்
விடாப்பிடியாக அவரை அழைத்துக்கொண்டு பெரியவர் முன் நிறுத்தினார். அந்த சிஷ்யர் கைகளை கூப்பியவாறு கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.
அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்த மகான் "என்னை பார்க்கணும்னு இவ்வளவு தூரம் வந்திருக்க பார்க்கம போனா என்னப்பா அர்த்தம் " என்றார்
கும்பல் நிறைய இருந்தது அதான் கொஞ்சம் குறைஞ்சவுடன் வரலாம்னு என்று இழுத்தார் புகைப்படக்காரர்
சரி சரி சாப்பிட்டயோ
சாப்பிட்டேன்
சில வினாடிகள் தாமதத்திற்கு பின் மகான் பேசினார் " என் வாயை பார்த்தியோ"?
நாக்கை வெளியே நீட்டுகிறார் சூடு பட்டது போல் சிவந்து இருந்தது உதடெல்லாம் கூட புன்னாயிடுத்து ஏன் தெரியுமா ?
புகைப்பட நிபுணருக்கு புரியவில்லை
" நீ பாலை சூடா வச்சுட்டு அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா அதான் என்றார்.
திருசிக்காரருக்கு தான் புறப்படும் போது தான் வைத்த படையல் அப்போதுதான் நினைவிற்கு வந்தது
சாஷ்டாங்கமாக மகானின் காலில் விழுந்து பிரபோ என்னை மன்னியுங்கள் என்று கதறினார்
எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால் மகான் அந்த பாலை ருசித்திருப்பார் என்பதை சற்றே எண்ணிப்பாருங்கள் அது சாத்வீகமான பக்தி
ஆண்டவனே நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி ..