Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Wednesday, June 15, 2016

ஊராளாத்துப் பிள்ளைய…கூட்டிண்டு வந்திருக்கோம்!

நன்றி-கௌரி சுகுமார்.
ஸதாராவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஆந்த்ராவில், பீலேரு என்ற க்ராமத்தில் ஒரு ஸ்கூல் கட்டிடத்தில் பெரியவா தங்கியிருந்தார்.
அப்போது ஒரு பக்தர் மூன்று பெரியவாளையும் ஒருசேர தர்ஶனம் பண்ணும் ஆசையில் பீலேரு வந்தார். அவர் வந்த போது பெரியவா… ஒரு தட்டி மறைவில் அமர்ந்து கொண்டு, புதுப் பெரியவாளிடம் பேசிக் கொண்டிருந்தார்..
த்ளாயிரத்து இருவதுகள்ள…. நாங்க காஸிக்கு யாத்ரையா.. கெளம்பினவொடனே, மடத்ல இருந்த எல்…லார்க்கும்… காஸிக்குப் போகணுன்னு ஆசை வந்துடுத்து ! காஸி ராஜாவானா… அத்தன நன்னா ஏற்பாடு பண்ணியிருந்தார்! சும்மா சொல்லப்…டாது! உபசாரங்களுக்கு கொறைவேயில்ல! ஆனா என்னாயிடுத்துன்னா…திரும்பி வரச்சே, விஶாகப்பட்ணத்ல… உக்ராண [ஸமையல்]தட்டுப்பாடு வந்துடுத்து! ஆந்த்ர ஜனங்கள்ளாம்… அங்க இருக்கற வரைக்கும், எங்களுக்கு… ஒரு கொறையும் வெக்கல! ரொம்….ப நன்னா கவனிச்சிண்டா.! ராமேஶ்வரம் வந்தப்பறந்தான்… கஷ்டதஸை ரொம்ப ஜாஸ்தியாயிடுத்து! மடத்ல இருந்த…. தங்க ஸாமானையெல்லாம் வித்தோம்! அப்போல்லாம்… ஸவரன் என்ன வெலை தெரியுமோ? பதினஞ்சு ரூவாய்க்கும் கொறைச்சல்…! ஆனா, அப்றம் தஞ்சாவூர்க்காரா எல்….லாத்தையும் மறுபடி பண்ணிக் குடுத்துட்டா..! ஆமா..! ஸ்வாமிக்கு அபிஷேகம் பண்ண தாரா பாத்ரம் ஒண்ணு இருக்குமே? அது இருக்கோ? அது சொக்கத்தங்கம்! தெரியுமோ?….”
“பத்ரமா இருக்கு….”
பதவிஸாக, அடக்கமாக ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவாளின் குரல் ஒலித்தது.
” கும்மாணத்ல…. ராமஸ்வாமி ஶாஸ்த்ரிகளை… தெரியுமோ?….”
“தெரியுமே!….”
அவர் இல்ல…! அவரோட பாட்டனாரைப் பத்திச் சொல்றேன்…! நம்ம….கும்மோண மடத்து சொவத்துல… [சுவர்] நோட்டீஸே ஓட்டிட்டார்! என்னன்னு… ஓட்டினார் தெரியுமா?
“…இந்த மடத்தை நம்பி… கடன் குடுத்துடாதீங்கோ! திரும்பி வராது”…ன்னு” நோட்டீஸ் ஒட்டிட்டார்!
பெரியவா… பலமாக சிரிக்கும் ஶப்தம் கேட்டது.
[பெரியவா சிரித்தாலும், இன்றும் நமக்கு இது ஒரு வெட்கக்கேடு! நாமே நம் தலையில் மண்ணையும், சேற்றையும் வாரிப் போட்டுக் கொண்டோம். மஹா அல்பமான பணத்துக்காக மஹா அரிதான பகவானை, மஹான்களை எத்தனை ஈஸியாக கீழ்மைப் படுத்திவிடுகிறோம்! பெரியவாளை நம்பினால் நமக்கு கிடைக்கும் மன அமைதியில், அழியும் இந்த பணம் காஸு எல்லாம்…வெறும்.. தூஸு போலாகும்!]
இப்போ மடத்துக்கு பேரும் புகழும் வந்திருக்குன்னா….அது என்னமோ…என்னாலதான்..ன்னு எல்லாரும் நெனைச்சிண்டிருக்கா.! வாஸ்தவத்ல… அது அப்டி இல்ல!….. எல்லாம்… ‘கலவைப் பெரியவா’ குடுத்த பாக்யம்”
[உண்மைதான்! கலவைப் பெரியவா குடுத்த மஹா மஹா பாக்யம்…..நம் பெரியவாதானே?]
எனக்கு… ஒண்ணுமே தெரியாது ! அதுவும்…பணத்தைப் பத்தி… ஶுத்தமா எதுவுமே தெரியாது! cheque, draft….இதெல்லாம்… எனக்கு பரிச்யமே… இல்ல!…. பல விஷயங்கள… எங்கிட்ட வர, பக்தாள்ட்டேர்ந்து.. துருவித் துருவி..நானே… கேட்டுத் தெரிஞ்சுக்கறேன். அப்டித் தெரிஞ்சிண்டத… மத்தவாகிட்ட சொல்றதால, என்னை… பெரிய்…ய “ப்ராக்ஞன்” ன்னு எல்லாரும் நெனைச்சிண்டு இருக்கா…
[பெரியவாளின் இந்த வார்த்தைகள், அவர் அமர்ந்திருக்கும் பாணி, அவர் பேசும் த்வனி இந்த மூன்றும் ஸந்தோஷமாக த்யானிப்பதற்கு மிகவும் ரஸமானவை]
image
image
“….மடத்துக்கு… பணக்கஷ்டம் வரப்டாது! ஊராளாத்துப் பிள்ளைய [பால பெரியவா] அழைச்சிண்டு வந்திருக்கோம்….அவனுக்குப் பணக்கஷ்டம் தெரியாம இருக்கணும்…!.”
“ஆமா…..வெலவாஸில்லாம்… ரொம்ப ஜாஸ்தியாயிடுத்து…! ஒரு தேங்கா… அஞ்சு ரூவா விக்கறது! நம்ம மடத்துக்கு… தபால் செலவே…. வர்ஷத்துக்கு ஒரு லக்ஷத்துக்கு மேல ஆறது……”
இளைய பெரியவா கூறினார்.
ம்ஹும்!..அத… கொறைக்காதே! வெள்ளைக்காரா….அதுலயும் “ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா” க்காரா நம்ம மதத்துக்காக எவ்ளோவ் செலவு பண்றா! எவ்ளோவ் ஒழைக்கறா !…
“நீங்க எப்டி சொல்றேளோ… அப்டியே பண்றேன்…”
பக்தருக்கு புளகாங்கிதமானது. இரண்டு பெரியவாளின் ஸம்பாஷணையை கேட்கும் பாக்யத்தை,  பெரியவாளன்றி… யாரால் அனுக்ரஹிக்க முடியும்?
நாமெல்லாம்…குடும்ப பட்ஜெட் போடுவோம். Business பண்ணுபவர்கள்…அதற்கான பட்ஜெட் போடுவார்கள். State Government, Central Government, UN என்று ஒவ்வொரு நாடும் பட்ஜெட் போடும். எத்தனை நல்ல பட்ஜெட்டாக இருந்தாலும், அது பூரணமான, நல்ல பட்ஜெட்டாக இருக்கவே முடியாது.
ஆனால்… நம் பெரியவா போடும் பட்ஜெட்டில், இந்த ஸமஸ்த ப்ரபஞ்சத்திலும் உள்ள ஸகல ஜீவராஸிகளுக்கும் பெரிய, பூர்ணமான ஆத்ம லாபம் மட்டுமே கிடைக்கும்!
compiled & penned by gowri sukumar

Tuesday, June 14, 2016

"அமாவா" (பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவா உட்பட அனைவருக்கும் ஆச்சர்யம் தந்த சம்பவம்)

சொன்னவர்;தில்லைநாதன்.சென்னை
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கர்நூல் வியாஸ பூஜை முடிந்து காஞ்சிபுரம் வந்து
சேர்ந்த சமயம்,புதுப்பெரியவர்கள் வடக்கே யாத்திரை
சென்றுவிட்டார்கள். மகாபெரியவர்களும் பால
பெரியவர்களும் காஞ்சியில் தங்கியிருந்து தரிசனம்
தந்துகொண்டு இருந்தார்கள்.

அப்போது ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த
வடதேசத்துக்காரர்கள் தரிசனத்துக்கு வந்தார்கள்.
நானும் பெரியவாளுக்குப் பின்னால் நின்று
கொண்டிருந்தேன். என்னை அருகில் அழைத்த
 மகாபெரியவர்கள் பாலபெரியவர்களுக்கும் 
தமக்கும் நடுவிலிருந்த சிறிய இடைவெளியில் 
வந்து உட்காரச் சொன்னார்கள். நானும்
 ஒடுங்கியபடி அந்த குறுகலான இடத்தில் அமர்ந்தேன்.

மகாபெரியவர்கள் என்னை, "திதிகளில் 
கடைசித் திதி'என்ன?" என்று கேட்டார்கள்.

"அமாவாசை, பௌர்ணமாவாசை" என்றேன்.

"முதலில் சொன்னதை மட்டும் சொல்" என்றார்கள்.

"அமாவாசை" என்றேன்.

"அதில் கடைசி எழுத்தை எடுத்துவிட்டுச் சொல்"

"அமாவா"

வடநாட்டுக்காரர்களைக் காட்டி,"அதை அவர்களிடம்
சொல்!" என்றார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"அவர்களிடம் கேள்" என்று மறுபடியும் சொன்னார்கள்.

நான் அவர்களைப் பார்த்து "அமாவா!" என்றேன்.

"நான்தான், நான்தான் அமாவா!" என்றாள் ஒரு
பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.

"அவள் என்னை இதற்கு முன் பார்த்திருக்கிறாளா?
என்று ஹிந்தியில் கேள்!" என்றார்கள்.-கேட்டேன்.

"நான் பார்த்ததில்லை!" என்று சொன்னாள்.

"நான் அவளைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்!"
-சொன்னேன்.

"ஆமாம்,ஆமாம்!" என்றாள் அந்தப் பெண்மணி.

"ஆமாம் என்கிறாளே? எப்படி என்று கேள்!"
என்றார்கள் பெரியவர்கள்-கேட்டேன்.

"நான் சின்னக் குழந்தை,இரண்டு வயது இருக்கும்.
அப்போது எங்கள் தாத்தா பெரியவர்களை
எங்கள் அரண்மனைக்கு வரவழைத்துப் பாதபூஜை
செய்திருக்கிறார்கள்.அப்போது பார்த்திருக்கிறார்கள்.
இதெல்லாம் எங்கள் தாத்தா சொல்லி எனக்குத்
தெரியும். நான் சின்னக் குழந்தையானதால் எனக்குப்
பெரியவர்களைப் பார்த்த நினைவு இல்லை" என்று
சொன்னாள், அந்தப் பெண்மணி.

பின்னர் விசாரித்தபோது காசி யாத்திரை சென்றிருந்த
சமயம் பெரியவர்கள் அந்த ஜமீன்தாருடைய
ஸமஸ்தானத்தின் அழைப்பின் பேரில்
சென்றிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

இதைக் கேட்கும்போது பாலபெரியவர்கள் உட்பட
அனைவருக்கும் 'பெரியவாளுக்கு இத்தனை ஞாபக
சக்தியா?' என்று ஆச்சர்யமாக இருந்தது. அந்தக்
குடும்பத்தைச் சேர்ந்த சுமார் இருபத்தைந்து பேர்கள்
தரிசனத்துக்காக மிகவும் பக்தி சிரத்தையுடன்
வந்திருந்தார்கள்.அந்த சமஸ்தானத்தின் பெயரைக்
கூடச் சொன்னார்கள். அது எனக்கு நினைவு இல்லை.

Sunday, June 12, 2016

" பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........ ஒரு தகவலும் இல்லே.....கொழந்தை க்ஷேமமா திரும்பிவர அனுக்ரகம் பண்ணணும்...... பெரியவா"

சொன்னவர்-நெய்வேலி மஹாலிங்கம்.
தகவல் உதவி-அமிர்தவர்ஷினி

பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும்,  அவரை "அப்பா" என்றும் "நீ" என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர். நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர்.

 பெரியவா சதாராவில் முகாம். மஹாலிங்கம் சதாராவில் போய் பெரியவாளை தர்சனம் பண்ணிவிட்டு அன்றுதான் திரும்பியிருந்தார்.  அவரைத் தேடிக்கொண்டு ஒரு நண்பர் வந்தார். முகத்தில் அப்படியொரு சோகம்.

"மஹாலிங்கம் ஸார்....எம்பிள்ளை மெட்ராஸ்ல படிச்சிண்டு இருக்கான்..திடீர்னு நாலஞ்சு நாளா அவனைக் காணோம்! எல்லா எடத்லையும் விஜாரிச்சாச்சு!

ஒண்ணுமே தெரியலை.....நீங்கதான் பெரியவாளோட பரம பக்தராச்சே!.... பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணறதை தவிர எனக்கு வேற கதி இல்லே....என்னை சதாராவுக்கு அழைச்சிண்டு போறேளா?" கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார்.
 மகாலிங்கத்திற்கோஎன்ன பண்ணுவது என்று தெரியவில்லை. அவர் மனைவி சொன்னாள்
 "பாவம்.....அழைச்சிண்டு போங்கோ! பிள்ளையைக் காணாம தவிக்கறார்" என்று பரிந்தாள்.

இருவரும் கிளம்பி சதாராவை அடைந்தபோது விடிகாலை மணி மூணு!  பெரியவா தங்கியிருந்த இடத்துக்கு வந்தால்...........மஹாராஜபுரம் சந்தானம்  மூன்று நாட்களாக பெரியவா தர்சனத்துக்காக காத்திருக்கிறார் என்று தெரிய வந்தது!  மணி விடிகாலை நாலரை!

"என்ன மஹாலிங்கம்! சந்தானத்துக்கே இந்த நெலைமை...ன்னா... நாம எப்டி பெரியவாளை தர்சனம் பண்ண முடியும்?" நண்பர் கவலைப் பட்டார்.

பெரியவா ஒரு சின்ன "டொக்கு" மாதிரி ரூமில் ஜன்னல் கதவைக்கூட சாத்திக் கொண்டு இருந்தார்.

"ஏன் கவலைப்படறேள்? பெரியவா காருண்ய மூர்த்தி.......... தன்னை நம்பி வந்தவாளை கைவிட்டதா சரித்திரமே கெடையாது......... கதவு தெறக்கும்! தர்சனம் கெடைக்கும்!" அடித்துச் சொன்னார் மஹாலிங்கம்.

சொன்ன மறு நிமிஷம்,பிரஹ்லாதனின் வார்த்தையை "சத்யம்" என்று நிருபிக்க தூணைப் பிளந்துகொண்டு வெளியே வந்த நரசிம்ஹமூர்த்தி, 

இங்கே "டொக்கு" ரூமில், சௌம்ய நாராயணனாக இருந்தாலும், பக்தானுக்ரகம்என்ற கல்யாண குணத்தை அவனால் விட முடியாதே! எனவே, "படக்"கென்று ஜன்னல் திறந்தது.......உள்ளே பெரியவா! மகாலிங்கத்தை சைகை காட்டி அழைத்தார்...........

நண்பர் கண்ணீர் வழிய " பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........ ஒரு தகவலும் இல்லே.....கொழந்தை க்ஷேமமா திரும்பி வர அனுக்ரகம் பண்ணணும்......பெரியவா" என்று கூறி, அவனுடைய போட்டோ ஒன்றையும் காட்டினார். 

திருநயனங்கள்  அதை கருணையோடு பார்த்தன! கரங்களை உயர்த்தி ஆசி கூறினார். 

மஹாலிங்கம் இன்னும் தெம்பாகிவிட்டார்! இருவரும் நமஸ்கரித்துவிட்டு கிளம்பினார்கள்.

"ஸார்......நீங்க திரும்ப நெய்வேலிக்கே வந்துடுங்கோ!
பெரியவா பாத்துப்பா! ஒங்க பிள்ளை நிச்சயம் திரும்ப வந்துடுவான்.........
.கவலையேபடாதீங்கோ! வந்ததும், மடத்துக்கு ஒரு தந்தி அனுப்பிடலாம்" 
என்று ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டினார்.

அடுத்த ரெண்டு நாட்களில் பையன் திரும்ப வந்துவிட்டதாக மடத்துக்கு தந்தி போனது! 

பையன் பல ஊர்களுக்கு சென்றுவிட்டு, கடைசியில் மந்த்ராலயம் போயிருக்கிறான்.

 அங்கே துங்கபத்ராவில் குளிக்கும்போது அவன் மனஸில் ஒரு குரல்......"நீ உடனே வீடு திரும்பு" என்று சொன்னது. அது எப்போது? எந்த விடிகாலையில் சதாராவில் பெரியவா அவனுடைய  போட்டோவை கடாக்ஷித்தாரோ....... அப்போதுதான்!

"சஹாஸ்ராக்ஷ சஹாஸ்ரபாத்" என்று
வேதங்கள் ஸ்துதி பாடுவதும் இவரைத்தானே?

அந்தப் பையன் பின்னாளில் மிகப் பிரபலமான பாடகராக, நல்ல பக்தராக திகழும்.

நெய்வேலி சந்தானகோபாலன்தான்!

Saturday, June 11, 2016

"எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான் நிஜம்"-பெரியவா (வெளிப்படையாகச் சொன்ன அபூர்வ தகவல்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


உலகுக்கு அனுக்கிரகம் செய்யும் அந்த மாபெரும்
தெய்வத்தின் உயரிய நிலையைப்  பற்றி,கருப்பத்தூர்
சந்திரசேகர கனபாடிகள் சொல்லும் சம்பவம் நம்மை,
மெய்சிலிர்க்க வைக்கிறது.

காளஹஸ்தியில் மகான் முகாமிட்டிருந்தபோது,
மகானின் முன்னிலையில் நடந்த சதஸ் ஒன்றில்
கலந்து கொள்ளச் சென்றார் கனபாடிகள்.மகானை
தரிசித்த கனபாடிகள் மடத்தினுள்ளே வலம்வந்து
கொண்டிருந்தார்.

ஆங்காங்கே எரியும் எண்ணெய் விளக்குகளின்
மங்கலான வெளிச்சம். திடீரெனக் கை தட்டும் ஓசை
கேட்டது.சத்தம் வந்த திசைப்பக்கம் கனபாடிகள்
திரும்பிப் பார்த்தார்.மையிருட்டில் அவர் கண்களுக்கு
ஒன்றும் புலப்படவில்லை. அதனால், அவர் தன்
நடையைத் தொடர்ந்தார்.

மீண்டும் கைதட்டல் ஓசை! சத்தம் வந்த பக்கம்
கனபாடிகள் நடந்துபோனபோது, அங்கே மகான் ஒரு
தூணின் மறைவில் அமர்ந்திருந்தார்.

"இங்கே வா!" என்று கனபாடிகளை அழைத்தார்.
அதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் நடந்த
சம்பாஷனை.

மகான்; சிலருக்கு உடம்பில் சில இடங்களில் அடித்தாலோ,
...............கிள்ளினாலோ சொரணை இருக்காது. மரத்துப்
...............போயிருக்கும்.அதை நீ கேள்விப்பட்டிருக்கியோ?

கனபாடிகள்; கேள்விப்பட்டிருக்கேன் பெரியவா சொன்னது
.........................வாஸ்தவம்தான்!.

மகான்; சிலருக்கு சில சமயம் நாக்கு ருசிக்காது.சிலர்
...............பிறவியிலேயோ,நாளடைவிலோ கேட்கும்
...............சக்தியை இழந்திருப்பார்கள்.

கனபாடிகள்; கேள்விப்பட்டிருக்கிறேன்.

மகான்; சிலருக்கு ஜலதோஷம் பிடித்தால்,மூக்கு நுகராது.
...............பிறகு சரியாகும்.

கனபாடிகள்; ஆமாம்! கவனித்திருக்கிறேன்.

மகான்;

என்னை நீ அடிக்கடி கவனிச்சு இருந்தா ஒரு விஷயம் உனக்கு 
நன்னா புரிஞ்சிருக்கும்.என்னைப் பார்க்க வருபவர்கள் எனக்கு
விதவிதமான மாலைகளை அணிவிக்கிறார்கள்.அந்த
மாலைகளில் இருந்து வாசனையுள்ள சில புஷ்பங்களை
எடுத்து நான் நுகர்வதைப் பார்த்திருக்கியோ?

கனபாடிகள்;அடிக்கடி அப்படிப் பார்த்திருக்கிறேனே!.

மகான்;

ஆனால்,எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான்
நிஜம்.சுமார் நாற்பது வருஷமா இதே நிலைதான் நீடிக்கிறது
சரி, துர்நாற்றமாவது தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை
அதையும் ஒருமாதிரி பரீட்சித்துப் பார்த்து விட்டேன்.
மூக்கைப் பொத்திக் கொள்ளும்படியான எந்த ஒரு சூழலும்
இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு இப்படி என்றால்
என்னைத் தரிசிக்க வருபவர்கள் நிலைமை வேறுமாதிரி
இருக்கிறது.

என் அருகே வருபவர்கள் மூக்கைக் கையாலும்
துணியாலும் பொத்திக்கொண்டு திணறுவார்களே.....
பார்த்திருக்கிறாயா?   (பெரும் சிரிப்பு)

அதாவது,எனக்கு எந்த துர்நாற்றமும் தெரியாது. வாசனையும்
தெரியாது! நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

இப்படி மகா ஸ்வாமிகள் வெளிப்படையாகச் சொன்னதை
கேட்ட கனபாடிகள் பிரமித்து நின்றார்.சகல போகங்களையும்
தன்னுள் அடக்கிய பெருந்தெய்வம் உலகுக்கு அப்பாற்பட்டவராக
எளிமையாகத் தன்னைக் காட்டிக்கொண்டு, உலகுக்கு
அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கும் கருணையைச்
சொல்லிச் சொல்லி மனம் கசிந்துருகிறார் கருப்பத்தூர்
சந்திரசேகர கனபாடிகள்.

Thursday, June 9, 2016

'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா'

(கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில்- புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


மகா பெரியவர் 1981-ஆம் வருடம் பண்டரிபுரத்தில்
முகாமிட்டிருந்தார். வரிசையாக பக்தர்கள் மகானை
தரிசித்துக்கொண்டு வரும்போது, கூட்டத்தின் நடுவே
வடநாட்டைச் சேர்ந்த சேட் ஒருவர்,பெரியவாளின் முன்
ஒரு டின் நிறைய நெய் கொண்டுவந்து வைத்தார்.

அதைப் பார்த்த மகான்,"ஒரு ரூபாய்...ஒரு ரூபாய்..."
என்று கூறினார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு
மகான் எதற்காக அப்படிக் கூறுகிறார் என்று
தெரியவில்லை. அவர் நிஜமாகவே ஒரு ரூபாய்
கேட்பதாக நினைத்துக்கொண்டு,அங்கிருந்தவர்கள்
ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் பணத்தை எடுத்தனர்.

மகான், தன் அருகில் இருந்த மடத்துச் சிப்பந்தியிடம்
சொன்னார்; "அந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்குத்தானே
நெய் வாங்கி வரச்சொன்னேன்...ஏன் ஒரு டின் நெய்
வாங்கி வந்தார் என்று கேள்!"

எல்லோரும் இதைக்கேட்டு வியந்து போனார்கள்.

பெரியவர் எப்போது இந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்கு
நெய் வாங்கிவரச் சொல்லி இருக்கக் கூடும்?"
என்று விளங்காமல் விழித்தனர்.

இதைப் புரிந்துகொண்ட சேட், நிதானமாக பதில்
 சொன்னார்.

"என் மகளை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டார்கள்
நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது,'ஸ்வாமிஜி'
என் கனவில் தோன்றி, 'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக்
கொண்டு பண்டரிபுரத்துக்கு வா,உன் மகள் சேதமின்றி
வீடு திரும்புவாள்' என்று கூறினார்.

சொன்னபடியே, மறுநாள் என் பெண் பத்திரமாக
வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.அதான் பெரியவா சொன்ன
ஒரு ரூபாய் நெய்க்கு பதிலாக ஒரு டின் நெய் எடுத்துக்
கொண்டு வந்திருக்கிறேன்" என்று அவர் சொன்னதைக்
கேட்ட பக்தர்கள் அனைவரும் வியப்பு அடைந்தனர்.

சேட்டுக்கு கனவில் தோன்றி, தான் சொன்னது
வாஸ்தவம்தான் என்கிற உண்மையை அந்த மகான்
எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார் அல்லவா?

சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும்
அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது
தவறாமல் உதவி வருகிறார்.

Wednesday, June 8, 2016

"தனக்கு தொண்டு செய்ய விரும்பாத ஒருவரையும், தன்னை பார்க்க விரும்பாத ஒருவரையும்-பற்றி பெரியவா சொன்ன அதிசய குருபக்தி சம்பவம்."

(குருபக்தியில் சிறந்த இருவர்-கைகளாலும்,கண்களாலும்)

கட்
டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில்- புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


மகா பெரியவாளிடம் கைங்கர்யம் செய்யும் பாக்கியம்
பெற்றவர் ஏகாம்பரம் என்கிற அன்பர்!.

"பேப்பர்,பேனா எடுத்துவந்து, நான் சொல்வதை
எழுதிக்கொள்" என்று மகாகாவ் என்னுமிடத்தில்
(குல்பர்கா அருகில்) முகாமிட்டிருந்தபோது மகான்
ஏகாம்பரத்திடம் சொன்ன விஷயம் இது.

மகா பெரியவா தன் பதின்மூன்றாவது வயதில்
பட்டத்துக்கு வந்த புதிதில், அவருக்கு முன் காஞ்சி
காமகோடி பீடாதிபதியாக இருந்த பரமாச்சார்யாரிடம்
கைங்கரியம் செய்தவர்களை வரிசையாக
அறிமுகப்படுத்தினார்களாம்.

அந்த வரிசையில் ஒருவரைக் காண்பித்து,
"இவர்தான் முந்தைய குருவுக்கு மடிவஸ்திரம் 
தோய்த்துக் கொடுத்தவர்" என்று பெரியவாளிடம்
சொல்லிவிட்டு, அவர் பக்கம் திரும்பி,"இனிமேல் இவர்தான்
நமக்குப் பெரியவா...உன்னோட வஸ்திர கைங்கரியத்தை
தொடர்ந்து பண்ணு!" என்று சொன்னார். ஆனால் அந்த
அன்பரிடமிருந்து பதில் வேறுவிதமாக இருந்தது.

"நான் முந்தைய பெரியவாளுக்கு கைங்கரியம் செய்த
கைகளால் வேறு எவருக்கும் செய்ய இயலாது" என்றார்.

இது தவிர,இன்னொன்றையும் மகான் எழுதிக்கொள்ளச்
சொன்னார்.

கலவையில் மகானின் முகாம்..பண்ருட்டியில் இருந்து
ரெட்டியார் ஒருவர் மடத்துக்கு நிறையக் காணிக்கை
அனுப்பியிருந்தார். அத்துடன் தன் வணக்கத்தையும்
பெரியவாளுக்கு சொல்லச் சொல்லி இருந்தார்.

"அவர் ஏன் நேரில் வரவில்லை?" மகான் கேட்டார்.

அதற்கு காணிக்கை கொண்டுவந்தவர் சொன்ன பதில்;

"66-வது பீடாதிபதியான குருவை தரிசனம் செய்த 
கண்களால், அவருக்குப் பின்னர் வரும் குருவைத்
தரிசிக்க மனம் ஒப்பவில்லை என்று ரெட்டியார்
 சொல்வார்"

இந்த இருவரின் குருபக்தியையும் மெச்சி,இது 
எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்றுதான்
ஏகாம்பரத்திடம் சொல்லி எழுதவைத்தார்.
"இதை இப்படியே ரேடியோவில் சொல்லும்படி
ஏற்பாடுசெய்!" என்று பெரியவர் சொன்னார்.

ஆனால், குல்பர்காவில் இருந்துகொண்டு எதையோ
சொல்லி, அது ரேடியோவில் வரவேண்டுமென்றால்
எப்படி? எவ்வளவோ தடைகளைத் தாண்டியல்லவா
இவற்றை ஒலிபரப்ப இயலும்? ஏகாம்பரம்,
"அது முடியாத காரியம்!" என்று பெரியவாளுக்கு
நிலைமையை விளக்கினார்!.

"சரி, அதனால் என்ன..பத்திரிகைகளிலாவது வரட்டுமே!
அதற்கான ஏற்பாட்டைச் செய்யேன்" என்றார்.

"சரி" என்ற ஏகாம்பரம் ஓய்வெடுக்கப் போய்விட்டார்.
சற்று நேரத்துக்குள் ஏகாம்பரத்துக்கு அழைப்பு வந்தது.
மகாபெரியவாளைப் பார்க்க ஒரு குழு வந்திருந்தது.
அவர்களுக்காகத்தான் ஏகாம்பரத்தை வரவழைத்திருந்தார்
மகாபெரியவா.

"நான் காலையில் சொன்ன குருபக்தியை ஒலிபரப்ப
முடியுமானு இவாளிடம் கேட்டுப் பாரேன்!"-பெரியவா

குழுவில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்த ஏகாம்பரம்
வியப்பினால் ஸ்தம்பித்துப் போய்விட்டார். அவர்கள்
அனைவரும் அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன்
டைரக்டர்கள். ஒரு டிரெயினிங்குக்காக வந்தவர்கள்.
மகான் இங்கு இருப்பதால் தரிசிக்க வந்திருக்கிறார்கள்.

மகானின் எண்ணப்படி,குருபக்தியில் சிறந்த இருவரைப்
பற்றியும் எடுத்துச் சொல்லி, "இதை ஒலிபரப்ப முடியுமா!"
என்று அவர்களிடம் கேட்டார் ஏகாம்பரம்.

"இது எங்களுக்குக் கிடைத்த பெரும்பேறு....உடனே
அதற்கான ஏற்பாடு செய்கிறோம்...இப்படி ஒரு நல்ல
காரியத்துக்கு எங்களை உபயோகப்படுத்த மகான்
நினைத்தது பெரும் பாக்கியம்!" என்று சொன்னவர்கள்
அன்றே அதை ஒலிபரப்பவும் செய்தனர்.

பிரம்ம ஞானிகள் நினைத்தது நடக்கும் என்பதற்கு
இதைவிட வேறு உதாரணம் தேவையா?

Tuesday, June 7, 2016

"வளையல் வியாபாரிக்கு செய்த உதவி" (மனதைத் தொடும் நிகழ்ச்சி.!)

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து.
தட்டச்சு; வரகூரான் நாராயணன்.

ஒரு நாள் வெய்யில் கடுமையாக இருந்த சமயம்.
பூஜையை முடித்துவிட்டு முன்பக்கத்தில் மகா பெரியவா
அமர்ந்திருந்தார்.

அந்தச் சமயம் வெய்யலின் கொடுமையைத் தாங்காமல்
வயதான ஒரு வளையல் வியாபாரி மடத்துக்குள் வந்து
தன் வளையல் பெட்டியை  ஒர் ஓரமாக இறக்கி 
வைத்துவிட்டு ஓய்ந்துபோய் உட்கார்ந்தான். அவருடைய
சோர்ந்த முகம் மகானின் கண்களில் பட்டது. மடத்து
ஊழியர் ஒருவர் மூலமாக வியாபாரியை தன் அருகே
அழைத்து வரச் செய்தார். மெதுவாக வியாபாரியை
விசாரித்தார்.

"உனக்கு எந்த ஊர்?வளையல் வியாபாரம் எப்படி
நடக்கிறது? உனக்கு எத்தனை குழந்தைகள்?"
போன்ற விவரங்களைக் கேட்டார்.

வளையல் வியாபாரி அதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
தன்னுடன் வயதான தனது தாயாரும்,மனைவி
மற்றும் நான்கு குழந்தைகள் தனக்கு இருக்கிறார்கள்
என்றும், கடந்த ஆறு மாத காலமாக வியாபாரம்
மிகவும் மந்தமாக இருப்பதால், ஜீவிப்பதே கஷ்டமாகஐ
இருக்கிறது என்றும் யதார்த்தமாகத் தன் நிலையைச்
சொன்னார்.

அப்போது மகாப் பெரியவாள், "இந்த வளையல்
வியாபாரியின் பாரத்தை இன்று நாம்தான் ஏற்றுக்
கொள்ள வேண்டும்" என்று சொன்னவர்,அதற்கேற்ற
விளக்கமும் தந்தார்.

"இன்று வெள்ளிக்கிழமை இவரிடம் இருக்கும் எல்லா
வளையல்களையும் மொத்தமாக வாங்கி, மடத்துக்கு
வரும் எல்லா சுமங்கலிகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும்
கொடுத்தால் புண்ணியம். இந்த ஏழையிடமிருந்து வாங்கி
அவர்களுக்குக் கொடுப்பது விசேஷமல்லவா? இந்தப்
புண்ணிய கைங்கர்யத்துக்கு அளவு கோலே கிடையாது!"
என்று சொன்னவர், ஒரு பக்தர் மூலம் வளையல்
எல்லாவற்றையும் வாங்கச் சொன்னார்.

பிறகு அதில் ஒரு டஜன் வளையலை எடுத்து
வளையல்காரரிடமே கொடுக்கச் சொல்லுகிறார்.
அதற்கு காரணமும் சொல்கிறார்.

"வெள்ளிக்கிழமையில் வளையல் பெட்டி காலியாக
இருக்கவே கூடாது.அந்த வளையல்களை அவன்
வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகட்டும்
.

பிறகு வளையல்காரருக்கு மடத்தின் மூலமாக வேஷ்டி,
புடவைகளைக் கொடுத்து அவருக்கு சாப்பாடும் போட்டு
அனுப்பும்படி மகான் உத்தரவு போட்டார்.

இன்னொன்றும் சொன்னார்.

"இன்று அவனுக்கு தலைபாரமும்,மனபாரமும் நிச்சயம்
குறைந்திருக்கும் இல்லையா?"

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத
விதமாக உதவியைச் செய்து விடுகிறார்  மகான் என்று
அங்கிருந்த பக்தர்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

அன்று மடத்திற்கு வந்த அவ்வளவு சுமங்கலிப் பெண்களுக்கும்
வளையல்கள் வழங்கப்பட்டன. அதுவும் மகானின் கையால்
தொட்டுக் கொடுத்த வளையல்கள். அந்த பாக்கியம்
எல்லோருக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டுமே!

Monday, June 6, 2016

"இப்போ எனக்கு முறுக்கு தருவியா?"-பெரியவா


(பழைய முறுக்குப் பாட்டி-புதிய கட்டுரையாளர்)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


மகானுக்கு ஏழெட்டு வயது இருக்கலாம்.
துள்ளி விளையாடுகிற பருவம்.

அதே ஊரில் ஓர் அம்மா முறுக்கு வியாபாரம் செய்து
கொண்டிருந்தார்.அந்த காலத்தில்,இளம் வயதில்
மகாபெரியவர் மிகவும் அழகாக இருப்பார்.முறுக்குப்
பாட்டி, பெரியவாளைப் பார்த்தவுடன் கையில்
முறுக்கை எடுத்து அவருக்கு கொடுப்பது வழக்கம்.

ஒரு சமயம் ஒன்று,இரண்டு, மூன்று என்று வாங்கிக்
கொண்ட பிறகும் "இன்னொண்ணு கொடு !" என்று
கேட்டார் மகான்.

"கொடுக்க முடியாது போடா!.நான் வியாபாரத்துக்கு
வெச்சிருக்கிறதை உனக்கே கொடுத்துட்டா எப்படி?"
என்று பாட்டி சீறினாள்.

பெரியவா கோபத்தோடு அந்த மூதாட்டியிடம்,
"இப்போ என்னைப் 'போ'னு சொல்லிட்டே....
அப்புறமா நீ கூப்பிட்டாக்கூட நான் வரமாட்டேன்"

பாட்டி அலுத்துக் கொண்டபடியே,
"ஆமாம் உன்னைத்தான் ஆரத்தி எடுத்து
கூப்பிடப் போறேனாக்கும்!" என்றாள்.

இந்த சம்பவம் இப்படி முடிந்து விட்டாலும்
பெரியவா முறுக்குப் பாட்டியை மறக்கவில்லை.

காஞ்சி மடாதிபதியாகத் தனது பதின்மூன்றாவது
வயதில் பதவியேற்றபின், தான் வாழ்ந்த இடம்,
படித்த பள்ளிக்கூடம் இதையெல்லாம் பார்த்து
மகிழ்ந்தார்.அதே சமயம் முறுக்குப் பாட்டியின்
வீட்டுக்கு எதிரே வந்து நின்றுகொண்டார்.

பாட்டி வியப்புடன் வெளியே வர,
"இப்போ எனக்கு முறுக்கு தருவியா?"
என்று புன்சிரிப்பு தவழக் கேட்டார் மகான்
சுற்றிலும் அடியார்கள் கூட்டம்.

"மகாபிரபு! என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?
உனக்கு நான் இப்போ என்னத்தைக் கொடுக்க முடியும்?"
என்று அவரை வணங்கி மகிழ்ந்தாள் பாட்டி.

முறுக்கு விற்கும் ஒரு சாதாரண மூதாட்டியைத்
தேடிப்போய் நலம் விசாரிக்கிறார் என்றல் என்ன
அர்த்தம்? அவர் எல்லோரையும் ஒரே 
மாதிரியாகத்தான் பாவிக்கிறார் என்பதைத் தவிர 
வேறு எப்படி  இருக்க முடியும்?

Sunday, June 5, 2016

"செய்யாத குற்றத்திற்கு தண்டனை"

(பெரியவாளின் இளமை வாழ்க்கையில் ஒரு
சம்பவம்-(ஒரு கண்ணீர் கட்டுரை)


கட்
டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


சிறுவயது முதற்கொண்டே மகானுக்கு அனுஷ்டான
பலம் இருந்துகொண்டே இருந்தது.நூறு வருடம் வரை
இதை அனுஷ்டித்துக் கொண்டே இருந்தார்.இந்த
அனுஷ்டான பலத்தைச் சிறுவயதில் எப்படிக் 
கடைப்பிடித்தார் என்பதை இந்த நிகழ்ச்சி சொல்கிறது.

மகான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.
ஒருநாள் மாலையில்,பள்ளி விட்டபின் 'பேட்மின்டன்'
விளையாடிவிட்டு பெரியவர் வீடு திரும்பினார்.அருகே
நதிதீரம், அதைத் தாண்டித்தான் வீட்டுக்கு வரவேண்டும்.

மாலைப்பொழுது கழிந்து, இரவு ஏழு மணி ஆகிவிட்டது.
பெரியவர் கையில்,'பேட்டோடு' வீட்டுக்குள் நுழைந்தார்.
வீட்டில் அவரை எதிர்கொண்டவர் அவரது அண்ணன்,
கணபதி சாஸ்திரி,நுழைந்தவரிடம் ஒரு கேள்வி........

"ஏண்டா, நீ இப்படிப் பண்ணலாமா?" என்று கேட்டுவிட்டு,
மகான் பதில் சொல்லும் முன், அவரது கன்னத்தில்
ஓங்கி அறைந்துவிட்டார்.

"அண்ணன் எதற்காகத் தன்னை அடித்தார்?" என்கிற
காரணம் தெரியாமல் தடுமாறிய மகான்,அடுத்த நிமிடம்
"எதற்காக என்னை அடித்தீர்கள்" என்று கோபமாகக்
கேட்டுவிட்டார்.கன்னத்தில் விழுந்த அடி நன்றாகவே
உறைத்தது.

"எதற்கென்றா கேட்கிறாய்? நீ என்ன குலத்தில்
பிறந்திருக்கிறாய்? அதற்கேற்ற தர்மங்களைக் கடைப்
பிடிக்க வேண்டாமா? மாலை வேளை கடந்து விட்டதே..
சந்தியாவந்தனம் செய்ய வேண்டாமா? நீ இப்படி
அலட்சியமாகப் போய் விளையாடிவிட்டு
வந்திருக்கிறாயே!" என்றார் அண்ணன்.

அதற்குக் கோபமாக மகான்,

"தண்டனை கொடுப்பதற்கு முன், விசாரணை நடத்தி
விட்டுத்தான் அடுத்தபடியாகத் தொடர வேண்டும்.
நீங்கள் என்னை அடித்தது எதற்காக? நான் மாலை
நேரத்து சந்தியாவந்தனம் செய்யவில்லை என்றுதானே?
முதலில் அதைக் கேட்டிருக்க வேண்டும்...........
என் நெற்றியைப் பாருங்கள்...."என்றார்.

நெற்றியில் விபூதிப் பட்டையின் சாயல் தெரிந்தது.
மகான் தொடர்ந்தார் -

"விளையாடி முடித்தவுடன் கை-கால்களை சுத்தம்
செய்து கொண்டபின், அங்கேயே ஒரு நண்பர் வீட்டில்
சந்தியாவந்தனம் செய்துவிட்டுத்தான் இங்கே வருகிறேன்.
குல தர்மத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கும்
இருக்கிறது..." என்று சற்றுக் கோபமாகவே சொல்லி
முடித்தார். அண்ணன் விக்கித்துப் போனார்.

"குழந்தை, நீ வயசுல சின்னவன்.அதனால் உன்னண்டே
மன்னிப்புக் கேட்க முடியாது!" என்று கண்கலங்கச்
சொன்ன அவர், நேராகப் பூஜை அறைக்குப் போய்,
பகவான் படத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து
வணங்கி,தன் தம்பியைத் தெரியாமல் அடித்து
விட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

எவ்வளவு பெரிய மனது அவருக்கு? செய்த தப்புக்கு
வருத்தம் தெரிவிப்பது மிகப்பெரிய விஷயமில்லையா?

இந்த சம்பவத்தைப் பற்றி பின்னால் ஓர் இடத்தில் மகான்
குறிப்பிடுகிறார் - அதாவது அண்ணன் கணபதி சாஸ்திரி
இறந்தபிறகு (இறக்கும்போது அவருக்கு அறுபத்தேழு
இருக்கலாம்!)

"எனக்கு அப்போது சிறுவயது. மாலையில் நான்
எனக்குரிய கடமைகளைச் செய்யவில்லை என்பதற்காக
என்னை அவர் அடித்துவிட்டார். ஆனால்,அது தவறு
 என்று தெரிந்தபிறகு, அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி,
இன்னொரு பக்கம் வருத்தம்.

மகிழ்ச்சி - குலதர்மத்தைக் காப்பாற்றி விட்டதற்காக,
வருத்தம் - என்னை அடித்து விட்டதற்காக.
இதற்கு பரிகாரமாகத்தான் அவர் தெய்வ சந்நிதியில் 
நின்று வேண்டி நமஸ்காரம் செய்த்தது......
அவருக்கு எவ்வளவு பெரிய மனது?" என்று மகான்
சொல்லும்போது, அவரது கண்களில் லேசாக நீர்
துளிர்த்தது.இது பாசத்தினால் அல்ல! இதனாலேயே
இறந்துபோன அவரது அண்ணனுக்கு மோட்சம்
கிடைக்கும் இல்லையா?

Saturday, June 4, 2016

"பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா?"

(உலகில் எங்கிருந்து யார் வந்தாலும்,  எம்மொழி பேசினாலும்,  இந்த பகுதியிலிருந்து வந்தவர், 
 இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கு)

(டாக்டர்,  இரா.  நாகசாமி (முன்னாள் தொல்பொருள்  ஆய்வுத் துறை தலைவர்)
நன்றி-பால ஹனுமான்.

அன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில்  பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் .  ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  மாலை சுமார் நான்கு மணியிருக்கும்.   “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள்.  நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர்.   “சரி” என்று தயங்கினேன்.
சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர்.  “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம்.  உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர்.  மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன்.  பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள்.  தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார்.  என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.
வந்தவர்களில் மூவர் பெண்கள்;  இருவர் ஆண்கள்.  அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும்,  மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார்.  பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும்,  அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.
அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது,  பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து,  “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார்.  அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர்.  அங்கு பேராசிரியர்.  அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன்.  அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார். 

அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.  பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க்  என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்று கேட்டார்.  அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே,  “ஆமாம்” என்று கூறினார்.  இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை.  அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது.  அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும்,  இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.
எங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள்.  “இத்தாலிய நாட்டினருக்கும்,  பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத்   தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும்.  இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்”  என்றார்கள்.  அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம்!  ஆமாம்!” என்று வேகமாகத் தலையாட்டினார்.
காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள்,  உலகில் எங்கிருந்து யார் வந்தாலும்,  எம்மொழி பேசினாலும்,  இந்த பகுதியிலிருந்து வந்தவர்,  இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது,  வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து  இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.
 டாக்டர்,  இரா.  நாகசாமி (முன்னாள் தொல்பொருள்  ஆய்வுத் துறை தலைவர்)

Wednesday, June 1, 2016

"மகான் அனுக்கிரகத்தில் நமக்கு ஏதாவது ஐயம் ஏற்படலாமா?

(அற்புத ஸ்வாரஸ்ய கட்டுரை நீளம் கருதி
மூன்றாகப் பிரித்துள்ளேன்)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


மகா பெரியவாளின் பக்தர் திரு.வி.என்.வைத்தியநாதன்
என்பவருக்கு ஏற்பட்ட மகத்தான அனுபவம் இது.
மகானின் அருள் எப்படிக் கிடைத்தது என்பதே
சுவாரஸ்யமான சம்பவம்.

நிகழ்வு-1

மத்திய அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அவர்,
தினமும் 14 மைல்கள் தனது சைக்கிளில் செல்வது
வழக்கம். இது 1974ம் வருடம் நடந்த விஷயம்.
காரியாலயத்திற்கு வந்தவுடன் அட்டெண்டன்ஸ்
புத்தகத்தில் அவர் கையெழுத்துப் போட முயன்றபோது
திடீரென அவரது பார்வை மங்கி, எழுத்தே தெரியாத 
அளவுக்குப் போய்விட்டதை அவர் உணர்ந்தார்.

தன் கண்களில் ஏதோ கோளாறு என்று நினைத்த அவர்,
உடனே டெல்லி சப்தர்ஜங் ஹாஸ்பிடலுக்கு
பரிசோதனைக்காகச் சென்று இருக்கிறார்.டாக்டர்கள்
பரிசோதித்துப் பார்த்துவிட்டு தங்களால் ஏதும் செய்ய
இயலாது என்றும்,கண்ணாடி போட்டால் கூட பார்வை
திரும்பக் கிடைக்காது என்றும் முடிவாகச் சொல்லி
விட்டார்கள்.

வைத்தியநாதன் உடனே சென்னைக்கு வந்து டாக்டர்
கர்னல் அண்ணாசாமி என்பவரிடமும் தன் கண்களைப்
பரிசோதிக்க,அவரும் தன்னால் ஏதும் செய்ய இயலாது
என்று சொல்லிவிட்டார்.

அப்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டிருந்த டாக்டர்
பத்ரிநாத் அவர்களை,சில நண்பர்களுடன் சென்று
 பார்த்தார். அவர் நன்றாகப் பரிசோதித்தபின் சொன்னார்.

"இது ஃபோட்டோ கொபாகுலேஷன்" என்னும் நோய்,
ரெடினாவை ஒரு திராவகம் மறைப்பதால் ஏற்படுவது.
ஆறுமாத சிகிச்சைக்குப் பிறகு தேவைப்பட்டால்
ஆபரேஷன் மூலம் திரவத்தை வற்றச் செய்யலாம்"என்று
சொல்லி சாலேஸ்வர கண்ணாடியை சிபாரிசு செய்தார்.

டாக்டர் சொன்னபடி தனக்குத் தேவையான கண்ணாடிக்கு
ஆர்டர் கொடுத்துவிட்டு அடுத்த நாள், தேனம்பாக்கம்
சென்று அங்கே முகாமிட்டிருந்த மகாபெரியவாளைத்
தரிசிக்கச் செல்லும் பாக்யம் அடைந்தார்.

நிகழ்வு-2

அங்கே போனவுடன் இவர் மனதில் ஒரு சங்கல்பம்.
மகானாக இவரைக் கூப்பிட்டுக் கேட்டால் ஒழிய,
அவரிடம் தான் ஏதும் கேட்கப் போவதில்லை என்று
முரட்டுத்தனமாக முடிவுக்கு வந்தார்.

தேனம்பாக்கம் கிணற்றடியில் அமர்ந்தபடி மகான்
பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார்.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 
ஒவ்வொருவராக மகானிடம் ஆசி பெற்றுக் கொண்டு
இருந்தனர்.வைத்தியநாதன்,அவரது மனைவி மற்றும்
உறவினர்கள் 12-30 வரை அமர்ந்திருந்தனர். மற்ற
பக்தர்கள் மனமார பேசி விடை பெற்றுச் சென்றபின்,
இவர்களும் வணங்கி உத்தரவைப் பெற்று 
திரும்பினார்கள்.

இந்தக் கண்கண்ட தெய்வத்தின் பார்வை எத்தனை
வலிமையானது என்று வைத்தியநாதனுக்கு
மறுநாளே புலப்பட்டது.

மறுநாள் கண்ணாடியுடன் டாக்டரிடம் சென்று டெஸ்டிங்
போர்டில் இருந்த ஆங்கில தமிழ் எழுத்துக்களை,அவர்
படிக்கச் சொன்னபோது,கடைசி பொடி எழுத்துக்கள் வரை
படித்துக் காண்பித்தார் வைத்தியநாதன். டாக்டர் 
வியப்புடன் அவரைப் படுக்க வைத்து,பரீட்சை செய்து
பார்த்து விட்டு வியப்பில் ஆழ்ந்தார்.பிறகு சொன்னார்.

"மிஸ்டர் வைத்தியநாதன், இது என் மருத்துவ அறிவைத்
தாண்டி நடந்துள்ள அற்புதம்.ரெடினா பிம்பத்தில்
கசிந்திருக்கிற திரவம் எப்படியோ உங்கள் 
சிஸ்டத்துக்குள்ளேயே 'அப்சார்ப்' ஆகிவிட்டது" என்றார்.

இதைக் கேட்ட வைத்தியநாதன்,மகானின் கருணையை
நினைத்து உருகி நின்றார்.

"கண்ணப்பருக்குக் கண் கொடுத்த காளத்திநாதரைப் போல்
எனக்கும் காமகோடி பீடாதிபதி பார்வை அளித்து விட்டார்"
என்று சொல்லி மகிழ்ந்தார்.

ஸ்வாரஸ்யமான மூன்றாம் நிகழ்வு.

சரி....இந்தக் கருணைக் கடலில் அனுக்கிரகத்தில் நமக்கு
ஏதாவது ஐயம் ஏற்படலாமா? அப்படி ஓர் ஐயம் எழுந்து
அதை அந்த ஐயத்தை எப்படி சுட்டிக்காட்டி உணர்த்தினார்
என்பதை இன்னொரு சம்பவத்தின் மூலம்
வைத்தியநாதன் அவர்களே விளக்கியிருக்கிறார்.

வைத்தியநாதன் அனுபவம்- 'கல்கி' வார இதழில்
மகானின் அருளைப் பற்றி வந்த தொடரில் வெளிவந்தது.

முதன் முதலாக தன் அனுபவம் அச்சில் வெளிவந்தது
குறித்து அவருக்கு மெத்த மகிழ்ச்சி.

இவரும் சராசரி மனிதர்தானே....அதனால் அவரது
உள்ளத்தில் ஓர் ஐயம் எழுந்தது.

"ஒரு வேளை நம் பார்வை சில நாட்கள் மங்கி மீண்டும்
சரியானது, சாதாரண இயற்கையை மீறாத நிகழ்ச்சிதானே?
இதில் பெரியவாளின் கருணையை கொலுவிருக்கச் செய்து
மிகைப்படுத்தி விட்டோமோ" என்று ஒரு கணம் நினைத்தார்.

அந்த எண்ணம் அவரது மனத்தில் தோன்றியதும் 'கல்கி'
இதழில் அவர் கட்டுரையை அவரால் படிக்க இயலாமல்
போய்விட்டது. அதாவது பார்வை மங்கி விட்டது.

இப்படி ஒரு சந்தேகம் அவரது மனத்தில் எழலாமா?
சாட்சாத் சந்திரமௌலீஸ்வரரின் கருணையில் சந்தேகம்
வரலாமா?

"மகாப்பிரபோ என்னை மன்னித்து விடுங்கள்.அருள் கூர்ந்து
என் பார்வையைத் திருப்பித் தாருங்கள்" என்று கண்ணீர்
மல்க மகானை சரண் அடைந்தார்.

மந்தகாச சிரிப்புடன், கருணை பொழியும் பார்வையுடன்
மானசீகமாக, வைத்தியநாதனைப் பார்க்க அவருக்கு
பெரியவாளின் படமும், அவர் தன்னைப் பற்றி எழுதிய
கட்டுரையும் மீண்டும் பளிச்சென கண்களில் பட்டன.
மெய்சிலிர்த்தது அவருக்கு.

வைத்தியநாதன் அனுபவம் மகானின் 
பரமபக்தருக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்
என்று அந்த மகான் நினைத்தாரோ என்னவோ?

அவர் தன் பக்தர்களுக்கு காட்டும் கருணை
உள்ளத்தில் மாசு மருவே இருக்காது என்பது மட்டும்
திண்ணம்.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top