Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, October 31, 2015

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது. முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!

வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார். கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்! பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!

இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன், மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும், தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?

சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”

சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா…ஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா”

“அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ “டக்”குனு அந்த கல்லுல ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”

மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்! தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான “பெத்தச்ச தேவுடு” வைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.

பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே!


Source: sekarvkc 

Thursday, October 29, 2015

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.
“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”
“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.
“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!
பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.
“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”
“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!
“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.
“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”
“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?
பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.
பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….
“என்னது இது?”
“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”
“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”
“குடுத்துட்டோம். பெரியவா”
“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.
“குடுத்தாச்சு. பெரியவா……”
“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”
ருத்ர முகம்!
“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.
“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?
“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.
“நீ எங்கே குடியிருக்கே?”
“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”
“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”
“அங்க சுப்புராமன் இருக்கார்……”
பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!
“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”
“இல்லை……….”
“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”
“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”
“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!
இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”
உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வரா……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.
தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Source: Shri. nannilam_balasubramanian

Tuesday, October 27, 2015

An interesting occasion with a child

பெரியவாளின் மேனாவுக்கருகே ஒரு சின்ன பெண் குழந்தை வந்து நின்றது.
“பேர் என்ன?”
“தீபா” கீச்சு குரலில் குட்டி கூறியது.
“நீ சொன்னது எனக்கு கேக்கலியே! பலமா சொல்லும்மா”
அது அழுத்தந்திருத்தமாக ” D for donkey , E for egg , இன்னொரு E for elephant , P for people ,A for ant ” என்றது.
பெரியவா “பேஷ் பேஷ் மகா கெட்டிக்காரியா இருக்கியே! பொளந்து தள்றியே!” என்று ஸ்லாகித்தார். அதுக்கு ஏக மகிழ்ச்சி.
சின்னஞ்சிறுசிடம் பென்னம்பெரியவர் ” நீ நன்னாதான் சொன்னே…..ஆனா ஒன் பேரோட “டாங்கி”யையும் “எக்”கையும் சேக்கறதுக்கு பதிலா, நான் இன்னூரு தினுசா சொல்லிதரட்டுமா?”….. ரொம்ப ஒசத்தியானவாளோட சேத்து சொல்லித்தரேன்.
D for Devi . தேவின்னா என்ன தெரியுமா? ஒரே ஸ்வாமியே பல விதமா வருவார். அம்மாஸ்வாமியா அன்போட வரச்சே தேவின்னு பேரு. அம்மன் கோவில்ல பாத்திருக்கியோ?”
“ஒ பாத்திருக்கேன்”
“I for Ilango “
“அப்படீன்னா?”
“இளங்கோ.. ங்கறவர்தான் தமிழ்ல ரொம்ப ஒசத்தியான பொயட்ரிகதை எழுதினவர். அப்பாவை கண்ணகி கதை புஸ்தகம் வாங்கித்தர சொல்லு”
“P for Prahlada “
“தெரியும். தெரியும். பக்தியா இருந்த boy , அவனுக்காக God -ஏ சிங்கம் மாதிரி வந்து அவனுக்கு enemy -யா இருந்த father -ஐ kill பண்ணினார்”
“பேஷ் பேஷ் நன்னா தெரிஞ்சு வெச்சுண்டிருக்கியே…….. கடைசியா, a for anjaneyaa ..தெரியுமா?”
“உஹூம் “
“ஹனுமார்”
“தெரியும். monkey god “
“அவரேதான். கரெக்ட்டா சொல்லிட்டியே……இந்தாம்மா” கல்கண்டை குழந்தையிடம் வீசினார்.
எழுத்துக்களை அறியும்போது, மதத்திலும், இலக்கியத்திலும் பிடிமானம் ஏற்படுத்தி தர ஜகத்குருவின் சுவையான பாடம்.

Sunday, October 25, 2015

An event to remember -

ஹாஸ்பெட் நகரில் முகாம்.
பிற்பகல் சுமார் ரெண்டு மணிக்கு, திடீரென்று, “டேய்! அந்த சமையல் கட்டையும், சாப்பாடு நடந்த மண்டபத்தையும் ஒடனே காலி பண்ணச் சொல்லுங்கோ! அன்னபூரணி கோவிலை ஒட்டினாப்ல இருக்கற இடத்துக்கு போகச் சொல்லுங்கோ!”
பெரியவா அவசர உத்திரவிட்டார்.
இட்லிக்கு மாவு அரைத்துக்கொண்டிருந்த பாரிஷதர்
“அஞ்சே நிமிஷம். அரைச்சதை எடுத்து வெச்சுடறேன்…” என்றதும்
“போட்டது போட்டாப்ல ஒடனே வெளில வரச்சொல்லு! “
அதிலும் பரம பரம காருண்யம்……..
“சமையக்கட்டுல ஒரு பூனையும், குட்டிகளும் இருக்கும். அதுகளையும் வெளில தொரத்திடுங்கோ!”
பரபரவென்று உத்தரவானதும், பூனை அம்மா, குட்டிகள் சஹிதம் அத்தனை பேரும் ஓட்டமாய் மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்….
அடுத்த அரைமணி நேரத்தில், என்ன காரணமோ, மண்டபம் மெதுவாக சரிய ஆரம்பித்தது!
பெரியவா “ஆப்ரம்ம கீட ஜனனி” இல்லியா? அவருக்கு பாரிஷதர்களும், பூனைக்குட்டியும் அவருடைய குழந்தைகள்தான்!

Friday, October 23, 2015

Maha Periyava's views about Patachala Children

ஏழை பாட்டி ஒருத்தி அப்பளம், வடகம் இட்டு, பெரியவாளுக்காக மடியாக பண்ணிக்கொண்டு வந்ததாக கூறி, சமர்ப்பித்தாள். கனிவுமயமாக அவளிடம் கூறினார் பெரியவா……..
” லோகம் நன்னா இருக்கணும்னா வேதம் இருந்துண்டே இருக்கணும். அப்படி இருக்க பண்றதுக்காகதான் என்னால ஆனதெல்லாம் பண்ணிண்டிருக்கேன். கஷ்டப்பட்டு ஆளை சேர்த்து அங்கங்கே வேத பாடசாலைகள் நசிச்சு போகாம காப்பாத்தி குடுக்க முயற்சி பண்ணிண்டிருக்கேன்.
வேற எந்த படிப்பு படிச்சு எந்த தொழிலுக்கு போனாலும் கை நிறைய சம்பளம்னு இருக்கற இந்த நாள்லயும் என் வார்த்தையை கேட்டுண்டு சில தாயார் தோப்பனார் பசங்களை பாடசாலைக்கு அனுப்பிசிண்டிருக்கா……என்னை நம்பிண்டு கொழந்தைகளை ஒப்பு கொடுத்திருக்கா…. வரப்போற காலத்திலையும் வேதம் போய்டாம கொஞ்சமாவது ரக்ஷிச்சு கொடுக்க போற அந்த குழந்தைகள்தான் எனக்கு உயிர் மாதிரி………ஆனதுனால, நீ என்ன பன்ன்றேன்னா…..சின்ன காஞ்சிபுரத்துல மடத்து பாடசாலை இருக்கு…….அங்கே சுந்தரம் ன்னு சமையல் பாத்துக்கறவன் இருக்கான். அவன்ட்ட, ஒன் அப்பளம், கருடாத்தை குடுத்து குழந்தைகளுக்கு வறுத்து போட சொல்லு. நான் சொன்னேன்னு சொல்லு. அதுகள் அப்பளாம், கருடாம் பாத்தே எத்தனையோ காலமாயிருக்கும். அதனால சந்தோஷமா சாப்டும். அதுவே எனக்கு பரம சந்தோஷம்………நம்மை நம்பிண்டு அதுகளை அனுப்பினதுக்கு பதிலா, நாமும் ஒண்ணு பண்ணினோம்னு சந்தோஷம்”
பெரியவாளின் சரீரதிற்காக கொண்டு வந்த தின்பண்டங்கள், அவரது உயிரான வேதம் பயிலும் சிறுவர்களுக்கு செல்வதில், பாட்டிக்கும் ரொம்ப சந்தோஷம்.

Wednesday, October 21, 2015

Mahaperiyava's Observations

கும்பகோணத்தில் மடம் இருந்தபோது, ஒருநாள் பெரியவா ப்ரும்மசூத்ர பாஷ்ய பாடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு வித்வான் ஏதோ சந்தேகம் கேட்கவும், பெரியவா “பாமதி” யிலோ, “பரிமளத்தி”லோ இதுக்கு விஸ்தாரமா பதில் இருக்கு. அத படிச்சா போறும்………மடத்து லைப்ரரில அந்த புஸ்தகம் இருக்கா பாக்கலாம்” என்றார்.
லைப்ரரி பொறுப்பாளர், அதை யாரோ வித்வான் எடுத்துக்கொண்டு போயிருப்பதாக சொன்னார்.
அதே சமயம் தெருக்கோடியில் பேரீச்சம்பழக்காரன் குரல் கேட்டது.
“பழைய புஸ்தகத்தை போட்டுட்டு செலபேர் பேரீச்சம்பழம் வாங்கியிருப்பா……..ஒடனே போய் அவன்ட்ட இருக்கற அத்தனை புஸ்தகங்களையும் வெலைக்கு வாங்கிண்டு வா” என்று ஒரு தொண்டரை அனுப்பினார்.
ஒரு கட்டு புஸ்தகத்தோடு அவர் வந்தார். எல்லாம் அபூர்வமான சம்ஸ்க்ருத புஸ்தகங்கள்! பழுப்பேறின காகிதம்!
“சாஸ்த்ரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ!”
வரிசையாக படித்துக்கொண்டே வந்தார். ……….”பாமதி”யும், “பரிமள”மும் ” அதில் இருந்தன!
பாஷ்ய பாடம் நடக்கும் போது பேரீச்சம்பழக்காரன் வருவானேன்? இல்லாத புஸ்தகங்கள் விலைக்கு வாங்கின புஸ்தகங்கள் நடுவில் இருப்பானேன்?
விடை காண முடியாத கேள்வி!

Balasubramanian

Monday, October 19, 2015

பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர் வந்தார். அது தெரிந்த பெரியவா தன்னிடம் கைங்கரியம் செய்து வந்த கண்ணனை அழைத்து, அவருக்கு தங்க இடம் முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார். மேலும் அவர் மிகுந்த ஆசாரமுடையவர். ஆதலால், “நீயே ஒரு பலகாரம் செய்து கொடுத்துவிடு” என்றும் கூறினார்.
“நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிசனம் தருகிறேன்.கண்தெரியாமல் அவர் என்னைத் தேடி வர ண்டாம்”என்றும் தெரிவிக்கச் சொன்னார். கண்ணன் அவ்வாறே செய்தார். சிறிது உப்புமாவைக் கிண்டி அவளெதிரே வைத்து “சாப்பிடுங்கள்…” என்று உபசரித்த கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.
அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார். உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்துசேர்ந்தது. மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்துவிட்டது. அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர் தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று முடிவு செய்தார்.
“இவர் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ! இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப் போகிறதோ?” என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன் காத்திருந்தார். பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக்காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.
“ராத்திரி வரேன்னு சொல்லிவிடு” என்று அவரைப் பெரியவா அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும் யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.
இரவு. எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும் இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கைவிளக்குகள் ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில் அமருகிறார்.
“நான் வந்துவிட்டேன்!” என்று குரல் கொடுக்கிறார். அவளும் நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள். “எதற்கு வந்திருக்கிறாய்?” என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.
“உங்களுக்குத் தெரியாதா சுவாமி! எனக்கு இன்னும் சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே! எனக்கு அதுதான் வேணும்.அதற்காகத்தான் வந்தேன்!”என்கிறாள்.
“என்ன நடக்கப் போகிறதோ?” என்று கண்ணன் ஆவலுடன் காத்திருக்க…பரமாச்சார்யாளோ, நிதானமாக, ”அப்படியா! நீ சிறுது நேரம் தியானம் பண்ணு!” என்றார்.
கண்ணனிடம், “நான் ஜாடை காட்டுவேன்.அப்போது எல்லா விளக்குகளையும் அணைத்துவிடு” என்று கட்டளை இடுகிறார். காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப் பெருத்த ஏமாற்றம்.கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..என்ன செய்வது? என்று ஏதுவுமே செய்ய முடியாதே!
பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன. அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து பெரிய கூக்குரல் எழுந்தது.
“நான் ஜோதி தரிசனம் கண்டேன், கண்டேன்!” என்று கூத்தாடினார். ”போதும்!போதும்!காமாட்சி! நிறுத்திவிடு! நிறுத்திவிடு!” என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம் ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார்.
போவதற்கு முன் கண்ணனிடம், “அந்த அம்மாவை ஊருக்கு அனுப்பி விடு!” என்று சொன்னார்.
அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், “என்ன நடந்தது? ஏன் கத்தினீர்கள்? நீன்ங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா!” என்று கெஞ்சினார்.
அவரும், “நான் கேட்ட ஜோதி தரிசனம் சஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி அலறினேன்!” என்றார்.
எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில் ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்? பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்! தவிர, மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தை, ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்கு வேறு எப்படி விளக்கம் தர முடியும்?
அவரது அனுக்கிரகத்தால் உயர்ந்த ஒன்றக் கேட்டுப் பெறுபவர்களே பாக்கியசாலிகள். அந்த அம்மா பேறு பெற்றவள்.

Saturday, October 17, 2015

அது 1974-ஆம் ஆண்டு..காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார். தேகத்தில் ஏற்படும் மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல் பாடுகளில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.இருந்தாலும், சில அன்பர்களது வற்புறத்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகைச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அது போதிய பலன் தரவில்லை.
அதோடு, பாதிக்கப்பட்ட அந்தக் கண்ணில் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது…அது பலன் தராது
என்கிற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொருகண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மகா பெரியவா.
நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட்..[புரை] ஏற்பட்டது.இதை அறிந்த
பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி “கேட்ராக்ட்டுக்குப்
பெரியவா ஏதாவது சிகிச்சை எடுத்துக்கணும்” என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.
புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார். பெரியவா, “போதும்டா…இந்த ஒரு கண்ணை வெச்சுண்டே
நான் சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப் பார்வையே எனக்குப் போதும்” என்று அன்புடன்
மறுத்து விட்டார்.
ஆனால் மகா பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திரர் ஏற்கவில்லை. கேட்ராக்ட்டுக்கு அவசியம்
ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம் வற்புறுத்திக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில்
பெரியவாளும் இதற்கு சம்மதித்தார்.
அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் டாக்டர் பத்ரிநாத்
மகா பெரியவாளுக்கு அறிமுகம் ஆனது.இந்த நேரத்தில்தான், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில்
இருந்தார் பத்ரிநாத். இவரது சேவை மனப்பான்மை பற்றியும் தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு பத்ரிநாத்தைக் கொண்டே மகா பெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆபரேஷன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை
விளக்கினார். ‘ஒரு சந்நியாசிக்கு மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அதுபோல்
நர்ஸ்,மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது” என்றெல்லாம் சில
விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன் வைக்கப்பட்டது.
“நானும் மகா ஸ்வாமிகளின் பக்தன்தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாதவாறு இதைப்
பார்த்துக் கொள்கிறேன்” என்றார் மென்மையாக.
ஆபரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார். இவரைத் தவிர, மருத்துவமனை
சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின்போது உடன் இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆபரேஷன்
நேரத்தில் உதவியவர்கள் யார்?
மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி கொடுத்து,அவர்களைத்
தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம்,
ஆபரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சென்னையில்
இருந்தே கொண்டு வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மகா பெரியவாளுக்கு ஆபரேஷன் முடிந்தது.

Reference : Face Book - Mr Narayanan

Thursday, October 15, 2015

கர்மத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்

அநேக நியமங்களோடு பெரிய யக்ஞம் செய்வது, விரதம் இருப்பது, பிரம்மாண்டமாக கோயில் கோபுரங்களைப் பார்த்துப் பார்த்துக் கட்டுவது, குளம் வெட்டுவது என்றிப்படியெல்லாம் முன்னே பல காரியங்களைச் செய்து வந்தார்களே, இவையெல்லாம் அந்தந்த லட்சியத்தோடு நின்றுவிடவில்லை. இவற்றின் முக்கியமான லட்சியம் சித்தத்தை ஒருமுகப்படுத்தி சுத்தமாகப் பழகுவதேயாகும். இந்த ஸத்காரியங்களின் நடுவிலும் அநேக கஷ்டம், அநேக அவமானம் எல்லாம் வரத்தான் செய்யும். ஆனாலும் காரியத்தை முடித்தாக வேண்டும் என்பதால், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு மேலே மேலே எடுத்துக் கொண்ட வேலையில் போய்க் கொண்டிருப்பார்கள். இதுவே சித்த சுத்திக்கு நல்ல உபாயமாகும். அப்புறம் சுவாசபந்தம், தியானம் எல்லாம் வைத்துக் கொள்ளலாம். முடிவிலே, ஒரு கழக்கோடி எப்படி எந்த அழுக்கிலும் பட்டுக் கொள்ளாமல் கிறுகிறு என்று உருளுகிறதோ – அந்தக் கழக்கோடி மேலே நாம் கொஞ்சம் விபூதியைப் பூசினால் அதைக்கூட உதிர்த்துவிட்டு ஒடும் – அப்படி எந்த துன்பத்திலும் ஒட்டாமல் பரமாத்மாவை நோக்கி ஒடி அவரைச் சேர்ந்து விடுவோம். இந்த சேர்க்கை தான் யோகம் என்பது. அதுதான் நம் மூலமான நிலை. அதுவேதான் முடிவான நிலையும். நடுவாந்திரத்தில் நாம் எப்படியோ மாறிபோயிருக்கிறோம். அதனால் அந்த நிலை இப்போது நமக்குப் புரியவில்லை. நமக்குப் புரிகிற இடத்திலிருந்து அந்த நிலைக்குப் போக வேண்டுமானால் கர்மத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.

Tuesday, October 13, 2015

மனோரத முத்திரை மூர்த்தி

பக்தர்களின் நியாயமான ஆசையை நிறைவேற்றி வைப்பதில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளுக்கு நிகர் யாருமுண்டோ? ப்ரத்யக்ஷ பெரியவாளை சிம்மாசனத்தில் அமர்த்தி சுவாமி புறப்பாட்டிற்காக தேரில் அலங்கரிக்க வேண்டுமென அடிமை வெகுநாளாக அவா கொண்டிருந்தார். காமாட்சி அம்மன் கோவிலில் தத்ரூபமாக ஒரு படம் இருப்பதை பார்த்துவிட்டு அம்மாதிரியே எம்பெருமான் ப்ரத்யக்ஷ ரூபம் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ஜகத்துக்கெல்லாம் ராஜாவான வேதவேந்தனை மலர் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல ஒரு காட்சி கிடைத்தால் அதை அவ்வருட ஜெயந்தி பத்திரிகையில் அலங்கரிக்கலாமென்ற எண்ணம். இதற்கு சென்னையை சேர்ந்த ஆடிட்டர்களான சங்கரன், ராகவன், பாலாஜி ஆகியோர் உதவி செய்தனர்.
தானே வலிய வந்து பிரத்யேகமாக இதற்கு முன் யாருக்கும் கிட்டாத திவ்ய சாம்ராஜ்ய சக்கரவத்தியாக காட்சி அளிக்க தயாளன் விழைந்து விட்டார். ஒரு புஷ்ப சிம்மாசனத்தை தயார் செய்து கொண்டு போய் மீளா அடிமை சென்ற போது பிரான் ஏகாதசி உபவாசத்தோடு சயனித்திருந்தார். இருப்பினும், அந்த நியாயமான ஆசையை பூர்த்தி செய்ய ஒப்புக்கொண்டு இசைந்தது புண்ணிய மனம்.
இத்யாதிகளை ஏற்றிக்கொண்ட பிரான் அங்கு காட்சியருளினார். இதற்காக கொண்டு வரப்பட்ட போட்டோகிராபர் பல காட்சிகளை எடுத்தார். எல்லாம் வல்ல இறைவனும் பரம கருணாமூர்த்தியும் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்தவர் மட்டுமல்லாமல் அண்டசராசரங்களை அறிந்தவரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவா தன்னை நிழற்படம் எடுக்கும்போது இசைந்து அமர்ந்திருந்தது யார் செய்த பாக்கியம்.அடிமைக்கு இந்த அறிய வாய்ப்பு புளகாங்கிதம் அடைய வைத்தது. பல நிழற் திரு உருவங்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாள் தனது வலது கரத்தை யார் எது கேட்டாலும் மனோரதங்கள் பூர்த்தி யாகும்படியான வகையில் அமைந்த காட்சி அற்புதமாக அமைந்து விட்டது. அந்த சக்கரவர்த்தி மலர் சிம்மாசனத்தில், மலர் கீரிடம் அணிந்து, மலர் பாதுகையுடன் தன் திருக்கரத்தில் மகோன்னதமான மனோரத முத்திரையுடன் அந்த அருங்காட்சி பிரபல பத்திரிகைகளிலும் அச்சேறி புனித படுத்தியது.
அந்த திருவுருவம் தான் வருடம் தோறும் புஷ்ப ரதம் ஏறி காஞ்சியின் ராஜ வீதிகளில் ராஜ உலா வந்து கொண்டு இருக்கிறது.

Collection : Maha Swamigal excerpts

Sunday, October 11, 2015

ஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ‘வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் ” ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ” என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம், மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாகவைக்க — எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம்! பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு. I have been saying many times that you all must participate in the celebration of Adi Shankaracharya’s Jayanthi and Mutt’s activities providing assistance both physically and materially. “Take a week off from office work every year and utilize that time to come to the Kanchi Mutt and help out in its various needs; And spare atleast one day every weekend for the Mutt”, I have said all along. But more than that, I request you all, now and here, to chant ‘Hara Hara Shankara, Jaya Jaya Shankara’ in your minds in a focussed manner for atleast 5 minutes. This will be the best festivity and the loftiest assistance to the Mutt possible! Nothing more than this Hara Hara Shankara japam is required to take care of your well being and for the Mutt to take care of you. This Chant in the mind is superior to all physical and material assistance to the Mutt.
வாய்விட்டுச் சொல்லாமல் எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம், ” ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ” என்று ஜபித்துக் கொண்டிருங்கள் — நான், ” அரோஹரா ” என்று சொல்கிற வரை!
Everyone, chant ‘Hara Hara Shankara, Jaya Jaya Shankara’ in their minds alone (and not chanting it audibly) for 5 minutes now, until I say ‘Arohara’!
(இவ்விதம் கூறிச் சில நிமிஷங்கள் எல்லோரையும் மானஸிகமாக ஜபிக்கச் செய்கிறார்கள். அதன்பின் மும்முறை “அரோஹரா” சொல்லி அவர்களையும் சொல்ல வைத்து, ” கோவிந்த நாம ஸங்கீர்த்தனம் “என்று தாம் கூறி,” கோவிந்தா கோவிந்தா “என்று ஸபையோர் கோஷிக்க, அன்றைய உபந்நியாஸத்தை முடிக்கிறார்கள்.)
— இப்பகுதி 1960 ஆச்சார்ய ஜெயந்தி அன்று திருச்சியில் ஆற்றப்பட்ட உரையில் வருவதாகும்.
(He said thus to those assembled to chant in total meditation. And then Says ‘Arohara’ three times, makes them also say it, and then Says, ‘Govinda Nama Sankeerthanam’ to which the devotees say in unison ‘Govinda, Govinda!’. And thus ends that day’s Discourse)
— This is part of His discourse at Trichy in 1960 on Adi Shankaracharya’s Jayanthi.


The above Tamil text is from Deivathin Kural, Shankara Charitham, Vol 5.

Friday, October 9, 2015

நேத்திக்கு ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்லோகம் பாராயணம் பண்றேன்.மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது. ஆனா பிரச்சினைகள் தீரலே…பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.

“ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந்துண்டு, சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்”னு கேட்டேன்.
“அதெப்படி முடியும்? குளிச்சிண்டே,வேற வெலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப்பாடம்.தப்பு வராது”ன்னா.
காய் நறுக்கணும்னா அரிவாள்மணை,கத்தியைக் கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும்.
குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.
ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? “ஸர்வாந்தர்யாமி” தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா
சொல்லுங்கோ… நிச்சயம் கேட்பான்.
வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?
புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும்.இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி
இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலேகருணை செய்கிறவாளாச்சே!
கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே!
கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம்.
அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.

Wednesday, October 7, 2015

காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.”பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா.
ஆனா இங்கே, நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.
அப்பல்லாம் விவசாயிகள் ல், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா.
மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாது’ம்பார் பெரியவா!
டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா. கலவையில சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார். அதனால, ஆச்சார்யாள்கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துல ‘சுயம் ஆச்சார்ய புருஷன்’னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார். முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.அந்தக் காலத்துல அந்தணக் குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ன்னு ஒரு வசனம் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு?நங்கவரம் ஜமீன் ராஜப்ப ஐயர்னு ஒருத்தர்; அவருக்குக் காவிரிக்கரையில பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் இருந்துது. அடுத்தடுத்த காலங்கள்ல அதெல்லாம் போயிட்டுது. ஜமீனோட குடும்பத்தார், மகேந்திரமங்கலம்ங்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்லாம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா. பெரியவா அதையெல்லாம் ‘மாஸ்டர்’ பண்ணிட்டார். அதாவது, நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான் மகாபெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னு சொல்லுவா!பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சப்ப… மடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது. அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின மக்கள் ஏராளம்.
ஆனாலும், பண விஷயத்துல பெரியவா ரொம்பக் கவனமா, ஜாக்கிரதையா இருப்பா. எத்தனையோ பெரிய மனுஷங்க எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவா காலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் ஏத்துக்கமாட்டார். யார்கிட்டேருந்து வாங்கலாம்; யார்கிட்டே வாங்கக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும்.
அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்பகூட, வேண்டாம்னு மறுத்த மகான் அவர்!
பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார். பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், பெரியவா!அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம். ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரேயரு அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா.
‘அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடு’ன்னு சொல்லிட்டார் பெரியவா.
‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலையா போச்சு! இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப ஆந்திர மாநில சீஃப் மினிஸ்டரா இருந்த என்.டி. ராமராவ் பதறிப்போயிட்டார். அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்து பெரியவாகிட்டே நேரில் மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமித மரியாதை!
உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்தா. ‘அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசு’ன்னு அடிக்கடி சொல்வார் பெரியவா!” என்று சிலிர்த்தபடி சொன்ன பட்டாபி சார், காஞ்சி மகானுக்கும் மற்ற மகான்களுக்குமான தொடர்புகளையும் விவரித்தார்.”திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு சொல்வா. முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாமசங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா. ஏன்னா… சுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார். அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா. அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு! அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது. அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொல்ல… பக்தர்கள் சில பேர் கிளம்பி, பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.
எல்லாத்தையும் கேட்டுண்ட பெரியவா, ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா.
பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.
ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!
அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!
இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!
பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

Source: Shri Manoharkumar

Monday, October 5, 2015

“வேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”

ஒருமுறை மஹாபெரியவரை காஞ்சியில் பார்க்கச்சென்றிருந்தேன். வேதத்தை பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார். உற்றுக்கேட்டு கொண்டு இருந்தேன்.
“வேதம் பொய் சொல்லுமா”, என்று கேட்டார். அவர் கேட்கும் போது ஏதோ விஷ்யம் வரப்போகிறது என்று மௌனமாக இருந்தேன்.
“சரி ராத்திரி 12 மணிக்கு சூரியனை பார்க்க முடியுமா”, என்று கேட்டார். முடியாது என்று சொன்னேன். “அப்போ வேதம் பொய் சொல்லரதே, சதா பஸ்யந்தி சூர்யாக: வரதே சூக்தத்தில்.அப்ப்டின்னா எப்பவும் சூர்யனை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்னுதனே அர்த்தம்”.
மனதில் குழப்பம் இருந்தாலும் பெரியாவாவே சொன்னா நன்ன இருக்கும்ன்னு சொன்னேன்.
அவர் சொன்னார், “வேதம் சொன்னவா நம்மளை மாதிரி கண்ணுக்குத்தெரிந்த உலகை மட்டும் பார்க்கவில்லை அவா ஞனக்கண்ணால் உலகை பாத்தவா. அதனாலதன் எப்பவும் பனிக்கட்டியா இருக்குமாமே பின்லாந்துன்னு ஒரு ஊரு அங்கே வருஷத்துலே சிலநாள் எப்பவும் சூர்யன் பிரகசிக்குமாமே அதை வெச்சுத்தான் எழுதி இருப்பாளோ”!
வேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.

Saturday, October 3, 2015

'பெரியவா'க்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

"சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர்

நேரில் கண்டது. ஒரு பெயர் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது.


சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார்.

முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.


பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார்.

சென்னையில் அப்போது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர். 
பெரியவா

வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் 
செய்து விட்டு

உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை

வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள். வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15

நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.
வாசித்து

முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொ
ன்னார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'அப்புறம் நான் அதை வாசிக்கலாமா?', என்று பெரியவா கேட்டார்.


எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன? 
வீணையில் ஸ்ருதி கூட்டி பின்

மீண்டும் வித்வானிடம் காட்டினார். 'இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த

பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.' 
'சரியா இருக்கு!'.

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான்

அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்
று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். 'க்ஷமிக்கணும்

க்ஷமிக்கணும்' என்
று கதறினார். அடுத்த பத்து நிமிடங்களில் ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ

ஆறாக ஓடியது. 'தப்பு பண்ணிட்டேன், க்ஷமிக்
கணும்' என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.வாசித்து

முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி

ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"


 உபயம் : திரு. K. N. ரமேஷ்

Thursday, October 1, 2015

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்


“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை

அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு, குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே

நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.

உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச்

சொல்லுவேன்!”என்றாராம். சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ”யாமா மாநீ யாமா மா” என்ற

மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப்

பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.


அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,

முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து

எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,


முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்

அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்

விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்

கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,

“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப்

பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும்

இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற

சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக

அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டு வந்து

கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எதையுமே இப்படி

விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.


 Originally Posted by nannilam_balasubramanian

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top