Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Wednesday, April 30, 2014

"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்"

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு

என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா.

அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சர்,

கமிட்டியின் தலைவர். நான் செயலாளர்-என்று,

காஞ்சியில் பெரியவா அறிவித்தார்கள்.

ஆறு ஆண்டுகள்,மிகவும் பிரமாதமாக அன்னாபிஷேக

தெய்வப் பணியை நான் நடத்துவதற்கு பெரியவாளின்

கருணை துணை நின்றது.

ஸ்ரீ பி.என். ராகவேந்திர ராவ் என்பவர், ஓர் ஆண்டு,

ஆந்திரா முதல் தரமான அரிசி நூற்றெட்டு மூட்டை

அனுப்பிவிட்டார்.

"அபிஷேகம்,அன்னதானத்துக்கு அதை வைத்துக்

கொள்ளலாமா?" என்று மகா சுவாமிகளிடம் கேட்டோம்.

"ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி

வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்னு நினைச்சேன்.

போகட்டும். அவர் வேண்டுகோளின்படி இந்த வருஷம்

அவர் அனுப்பியுள்ள அரிசியை உபயோகப் படுத்திக்கோ"

என்றார்கள்.

நிகழ்ச்சியெல்லாம் முடிந்தவுடன் பார்த்தால்,

முப்பத்திரண்டு மூட்டை அரிசி மிகுந்திருந்தது.

"உன் இஷ்டம் போல், கோவில்களுக்குக் கொடுத்து விடு"

என்று சொல்லிவிட்டார் ,ராவ். காஞ்சிபுரம் சென்று

மகா சுவாமிகளிடம் தெரிவித்தேன்.

"அவர் எதற்காக உன்னிடம் கொடுத்தார்?

அதைச் செய்தது போக, மீதி உள்ளதை விற்று, பாங்க்

டிராப்ட் எடுத்து அவருக்கு அனுப்புவதுதான் முறை."

இருபத்திரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு

டிராப்ட் எடுத்தேன். ஒரு சால்வை, ஸ்ரீ மடத்துப்

பிரசாதம்,டிராப்ட் முதலியவைகளுடன்

ஸ்ரீமடம் சிஷ்யர் ஒருவரை ஸ்ரீ ராவ் அவர்களிடம்

கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்த மகான்

மகாசுவாமிகள்.

Monday, April 28, 2014

"போ" என்றார்;போயே போச்சு!

சொன்னவர்; எஸ்.பலராம ராவ்.காஞ்சிபுரம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

(சற்று நீண்ட கட்டுரை)

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் திருத்தணி

மலை மீது, பைரவ சுப்ரமணி ஐயர், பிரசாதக் கடை

நடத்திக் கொண்டிருந்தார்.அக்கடையில் வேலை செய்த

தொழிலாளர்களில் அடியேனும் ஒருவன். ஓய்வற்ற

வேலை செய்ததால் ஒரு சமயம் உடல் சுகமற்று படுத்து

விட்டேன். நேரம் ஆக,ஆக ஜுரம் அதிகமாகி விட்டது.

இரவு 10 மணிக்குள் வீட்டிற்கு சென்று விடலாம் என்று

முடிவு செய்து, மலையிலிருந்து கீழே வருவதற்குள்

தள்ளாடியவாறும்,அங்காங்கே அமர்ந்தும்,ஓய்வெடுத்து,

ஓய்வெடுத்து, மெதுவாக இறங்கி ஒருவழியாகக்

கடைசி படியில் வந்து நின்றேன்.

கீழே தெப்பக்குளத்துக் கரையில் ஒரு பல்லக்கு

இருந்தது.அப்போது என்னை நோக்கி வந்த ஒருவர்,

"நீங்கள் மலை மீது இருந்துதானே வருகிறீர்கள்?" என்றார்.

"ஆம்" என்றேன்."அப்படியென்றால், வாருங்கள்" என்று

என்னை அழைத்தவர் பல்லக்கின் அருகே கூட்டிச்

சென்றார். சற்றே பல்லக்கின் உள்ளே உற்று நோக்கினேன்.

அங்கே ஸ்ரீ மகா பெரியவர் அவர்கள் சாந்த ரூபமாய்

என் இருண்ட கண்களுக்கு காட்சி தந்தருளினார்.

மெய் மறந்து கை கூப்பி வணங்கி நின்றேன்.

"நீ மலையிலிருந்துதானே வருகிறாய்? கோயில்

திறந்திருக்கா?" என்று கேட்டார் ஸ்ரீ பெரியவர்.

மிக பவ்யமாய் "கோயில் சாத்தியிருக்கு சுவாமி!" என்றேன்.

"அங்கே ஒரு பிரசாதக் கடை இருக்குமே?'-ஸ்ரீ பெரியவர்.

"அதுவும் சாத்தியிருக்கு" என்றதும், சில வினாடிகள்

மௌனம். பிறகு, " என்னை சுமந்து வந்த இவர்கள்

மிகவும் பசியோடு இருக்கிறார்கள். புத்தூர், நகரியில் கூட

இவர்களுக்கு ஆகாரம் கிடைக்கவில்லை.திருத்தணிக்குப்

போனால் உங்களுக்கு கண்டிப்பாக ஆகாரம்

கிடைக்குமென்று சொன்னேன். இங்கே வந்து

தெப்பக் குளக்கரை பக்கமுள்ள ஓட்டல்களிலெல்லாம்

ஏறி இறங்கியும் ஆகாரம் ஏதும் கிடைக்கவில்லை"

என்று ஸ்ரீ பெரியவா சொன்னதும் எனக்கு ஒன்றுமே

புரியவில்லை.

ஜுரத்தோடு தள்ளாடிய நிலையில் இருந்த நான்,

நம் உடம்பைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று

நினைத்து, "மகா பெரியவா உத்தரவு இட்டால், அடியேன்

இவர்களுக்கு ஆகாரம் தயாரிக்க முடியும்" என்று

சொன்னதும், "இந்த ராத்திரியில் உன்னால் என்ன

செய்து விட முடியும்?" என்று ஆச்சரியமாக கேட்டார்,

ஸ்ரீ மகா பெரியவர்.

"நான் மலை மீது உள்ள பிரசாதக் கடையில்

இருப்பவன். இவர்களுக்குப் பசியாற வெண்பொங்கல்

செய்துதர முடியும்" என்றேன்.

ஸ்ரீ பெரியவர் "அப்படின்னா ரொம்ப நல்லதாப்போச்சு.

அவர்களை மலைப்பாதை வழியாக மேலே போகச்

சொல்லி, நான் படி வழியாக நடந்து வருகிறேன்.

நீ போய் சீக்கிரம் செய், போ "என்றார்.

அதுவரை  நோயினால் அவஸ்தைபட்டிருந்த என்னுடைய

ஜுரம் 'போ' என்று ஸ்ரீ பெரியவர் சொன்னதும், எப்படிப்

போனதென்றே தெரியாமல் போய்விட்டது.நான்,

பந்தயத்தில் ஓடும் விளையாட்டு வீரனைப் போல ஓடி,

ஒற்றையடிப் பாதை வழியாக மலைக்கு வந்து சேர்ந்தேன்.

அன்று பிரசாதக் கடை முதலாளி இல்லை. அவரது

மனைவியிடம் நான் தகவலைச் சொன்னேன்.

அப்பெண்மணியோ "நீ டாக்டரை பார்க்கத்தானே கீழே

இறங்கினாய்? வைத்தியநாதனே உன்னை குணப்படுத்தி,

உனக்கு உத்திரவு கொடுக்க, என்னை வந்து கேட்கிறாயே!

எல்லோரும் நலமோடு இருப்பதற்காக அல்லவா இந்த

நிகழ்ச்சி நடந்திருக்கு! நீ போய் தாராளமாக ஆகாரம்

தயார் செய்!" என்றார். உடனே அடுப்பைப் பற்ற வைத்து

வெண் பொங்கல் தயாரித்தேன் நான். அதன் பிறகு,

அங்கு படுத்திருந்த ஒருவரை எழுப்பி, மர அகப்பை,

மந்தார இலைகள், பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள

புளிக்காய்ச்சல் இவைகளை எடுத்துக் கொண்டு முருகனின்

த்வஸ்தம்பத்தின் அருகே வந்து நின்றேன் நான்.

சில நிமிடங்களில் ஸ்ரீ பெரியவர் மலையிலுள்ள

கோயிலை வந்தடைந்தார். எல்லா பிரகாரத்திலும்

மின்சார விளக்குகள் ஒளி வீச, வாத்தியங்கள் முழங்க

அதிகாரி கிருஷ்ணா ரெட்டியார், கோயில் நிர்வாகி

குலசேகர நாயுடு,இன்னும் பல ஊழியர்கள்,குருக்கள்

அனைவரும் சேர்ந்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது

ஸ்ரீ மகா பெரியவர் நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தார்.

கைகூப்பி அவரெதிரில் வந்து நின்றேன்.

ஸ்ரீ பெரியவர் "ஆகாரம் தயார்தானே" என்றதும்,

"தயார் செய்து இங்கேயே கொண்டு வந்திருக்கிறேன்"

என்றேன்."சரி, இவர்களுக்குப் பரிமாறி விட்டு வா"

என்று உத்திரவிட்டார். ஸ்ரீ பெரியவர், பல்லக்கைத்

தூக்கியவர்களை உட்காரச் சொல்லி,எல்லோருக்கும்

இலை கொடுத்து வெண் பொங்கலைப் பரிமாறிய நான்,

"இதெல்லாம் உங்களுக்கென்று தயார் செய்தது.

புளிக்காய்ச்சல் இருக்கு. திருப்தியாக சாப்பிடுங்கள்.

நான் கோயில் சென்று பெரியவாளை தரிசிக்க வேண்டும்"

என்றேன். அவர்களும், "நீங்க போங்க நாங்க பார்த்துக்

கொள்கிறோம்" என்றதும் நான் கோயில் உள்ளே போனேன்.

அங்கே மூலஸ்தானத்தின் அருகே ஸ்ரீ ஸ்வாமிகள்
நின்றிருந்தார். அக்காட்சியைக் கண்ட நான்,
"யார் தணிகைமலை முருகன்? யார் பரமாசாரியார்?"

என்று கண்களைக் கசக்கிக் கசக்கி உற்றுப் பார்த்தேன்.

தெய்வ குருவாகவும், ஜகத்குருவாகவும்

ஸ்ரீ பெரியவர் இருந்த நிலை கண்டு, என் கண்களில் நீர்

மல்கிப் பெருக்கெடுத்து ஓடியது.தரிசனம் முடிந்தது.

ஸ்ரீ மகா ஸ்வாமிகள் வெளியே வந்தார்.

அவரை சேவித்து நின்ற கோவில் சிப்பந்திகள்

விலகிச் செல்ல நான் அவரெதிரில் கைகூப்பி நின்றேன்.

ஸ்ரீ பெரியவர் "அவாளெல்லாம் ரொம்ப சந்தோஷப்படறா.

ரொம்ப ருசியாகவும்,வயிறு நிரம்ப சாப்பிடவும் செய்தாயே!

ரொம்ப ரொம்ப சந்தோஷம் அவாளுக்கு. வயிறும் ரொம்பிப்

போச்சு" என்று சந்தோஷமாக ஆசிர்வதித்து நிற்கையில்,

கீழே விழுந்து நான் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து

எழுந்தேன்.

"நீ தினமும் தூங்கப் போகும்போது 'ராம' நாமாவை

சொல்லு" என்று ஆசிர்வதித்தார், ஸ்ரீ பெரியவா.

அப்போது நேரம் இரவு மணி ஒன்று.

Saturday, April 26, 2014

"அரசியல் என்ற மாயம் என்னை இழுத்துக் கொண்டது.'வேண்டாம்' என்றார்கள் பெரியவா

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ சக்ரபாணி ஸ்வாமி கோவில் தேர், பல ஆண்டுகளாக ஓடவில்லை. பல பெரிய மனிதர்கள் முன்னின்று முயற்சிகள் மேற்கொண்டும், தேரோட்டம் நடத்த முடியவில்லை-என்ற விஷயத்தை, மகா சுவாமிகளிடம் ஒரு தடவை

பிரஸ்தாபித்தேன்.

"அதை ஏன், நீ முன்னின்று செய்யக் கூடாது?" என்று கேட்டதும், நான் அதிர்ந்து போய்விட்டேன்.

அதை நிறைவேற்றுவதற்குச் சில யோசனைகளையும் கூறினார்கள்.

"சின்னதாக ஒரு தேர் செய். சக்ரபாணி ஸ்வாமி கோவில் தேரில், மரத்தினாலான பிம்பம் இருப்பதை எடுத்து, சிறிய தேரில் வைத்து, மாணவர்களைக் கொண்டு தெருத் தெருவாக இழுத்துச் செல்.

ஏழை,எளியவர்கள் ஒரு ரூபாய்-அம்பது காசு கொடுத்தால் கூட வாங்கிக்கோ. இந்தச் சில்லறைத் தொகையை அஸ்திவார மரம் வாங்குவதற்கு வெச்சுக்கோ.

பெரிய மனுஷாள் கொடுக்கும் பணத்தில் மின் அலங்காரம், தேர்ச்சீலை போன்ற அலங்கார-ஆடம்பர விஷயங்களுக்குச் செலவு செய்.."

-இப்படியெல்லாம் எனக்குச் சொல்லித் தந்து, தன் அனுக்கிரஹத்தால், அந்த மகத்தான தெய்வப் பணியைச் செய்து முடித்து, ஆனால், அது நிறைவேற நானே காரணம் என்பது போலக் காட்டி, ஊரில் மதிப்புள்ள ஒரு பெரிய மனிதனாக என்னை ஆக்கிவிட்டார்கள்.

நான் பெரிய மனிதனானவுடன், பதவிகள் என்னைத் தேடி வந்தன; அரசியல் என்ற மாயம் என்னை இழுத்துக் கொண்டது.'வேண்டாம்' என்றார்கள் பெரியவா.

நான் கேட்கவில்லை. பொருளாதாரத்தில் சர்ரென்று

கீழே இறங்கினேன். இந்த அனுபவமும் எனக்கு வேண்டும் என்பது பெரியவாளின் அபிப்பிராயமோ என்னவோ?

Thursday, April 24, 2014

"கை-கால் உடைந்து பின்னமாக இருந்த பிள்ளையார்களுக்கும் பூஜை செய்யணுமா"

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் இஞ்சினீயராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். மனைவியுடன்

பெரியவா தரிசனத்துக்கு வந்தார்.

"எனக்கு, ஏதேனும் ஒரு கைங்கர்யம் செய்வதற்கு உத்திரவானால் தேவலை" என்று ப்ரார்த்தித்தார்.

"எவ்வளவு தொகை செலவானாலும் பரவாயில்லை!" பெரியவா, மற்ற எல்லா பக்தர்களுக்கும் பிரசாதம்

கொடுத்தபின், கணேசய்யரிடம் சொன்னார்;

"கும்பகோணத்திலே நிறைய பிள்ளையார் இருக்கு.

அரச மரத்தடி, ஆற்றங்கரை-இங்கெல்லாம் மேற்கூரையில்லாத பிள்ளையார்கள் அதிகம்.

கும்பகோணம் டவுனைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் வரையில் உள்ள எல்லாப் பிள்ளையார்களுக்கும்-

கோவிலில் இருந்தாலும் சரி, குளத்தங்கரையில் இருந்தாலும் சரி-எண்ணெய் சாற்றி, அபிஷேகம் செய்து, சந்தனப் பொட்டு வைத்து, ஊதுபத்தி ஏற்றி வைத்து, தேங்காய்-வாழைப்பழம்-வெற்றிலை பாக்கு

நைவேத்யம் செய்து விடு. அது போதும்."

"எனக்கு இந்த பூஜை-புனஸ்காரமெல்லாம் பழக்கமில்லை. இருபத்திநாலு வயதிலேயே வடக்கே போய் செட்டில் ஆயிட்டேன். அதனாலே உள்ளூரில் யாரிடமும் பரிச்சயமும் கிடையாது"

என்றார் இஞ்சினீயர்.

பெரியவா, ராயபுரம் பாலு என்ற சிஷ்யரைக் கூப்பிட்டு, "கும்பகோணம் பழக்கடை தியாகுவுக்கு ஓர் லெட்டர் எழுதிக் கொடு. அவன் எல்லாம் செய்து கொடுப்பான்" என்றார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்தக் கைங்கர்யம் நிறைவேறியவுடன் என்னையும் அழைத்துக் கொண்டு

தரிசனத்துக்கு வரச்சொன்னார்களாம்.

தம்பதிகள், என் வீட்டுக்கு வந்தார்கள்.உடனடியாக, செயல்படத் தொடங்கினேன்.

மூன்று நாட்களுக்கு, ராஜா வேதபாடசாலை வேன் கிடைத்தது.

ஸ்ரீமடம் வாசற்புறம் கருங்கல் தூணிலுள்ள பிள்ளையார் உட்பட, நூற்று அறுபத்தெட்டு பிள்ளையார்களுக்கு பூஜை செய்தோம்.

ஐந்து டின் நல்லெண்ணெய், அரைக்கிலோ சந்தனம், ஒரு கிலோ கற்பூரம்.ஐம்பது பாக்கெட் ஊதுபத்தி- இவைகளை ஆங்காங்கிருந்த சிவாசாரியார்களிடம் ஒப்படைத்தோம். வெளியில் இருந்த அனைத்துப் பிள்ளையார்களுக்கும்

எங்களுக்குத் தெரிந்தபடி அபிஷேகம்-பூஜை செய்தோம்.

"கை-கால் உடைந்து பின்னமாக இருந்த பிள்ளையார்களுக்கும் பூஜை செய்யணுமா" என்று கேட்டதற்கு,

"ஏன், கைகால் உடைந்த மனிதர்களெல்லாம் உலகில் வாழவில்லையா? அதுபோல்தான் இதுவும்!" என்று கூறி, அவைகளுக்கும் பூஜை செய்யும்படி

உத்திரவிட்டார்கள்.

அப்போது, பெரியவா, கர்நூல் அருகே ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள்.

கணேசய்யர் குடும்பமும், நானும் அங்கே சென்று விபரங்களைக் கூறினோம்.

"இன்னும் ஆறு பிள்ளையார் இருக்கே? எப்படி விட்டுப் போச்சு?" என்று பெரியவா கேட்டதும் எங்களுக்குத் திகைப்பு ஏற்பட்டது.

"சாக்கோட்டை பக்கம் ஒரு பிள்ளையார், சுவாமிமலை போகும் சாலையில் குடியானவர்கள் தெருவில், அவர்கள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் ஒரு பிள்ளையார், அரசலாற்றங்கரைப்

பிள்ளையார், மரத்தடிப் பிள்ளையார்..."என்று ஆறு

இடங்களையும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்,பெரியவா.

"அதனாலே பரவாயில்லே, ஊருக்குப் போனதும் இந்த ஆறு பிள்ளையாருக்கும் அபிஷேக-ஆராதனை பண்ணிவிடு" என்று சமாதானப்படுத்தினார்கள்.

எங்களுக்குப் பிரசாதம் கொடுத்து திருப்தியுடன் அனுப்பிவைத்தார்கள்.

Tuesday, April 22, 2014

வீணை வாசித்த பெரியவா"

பெரியவாளின் பத்தி இன்னொரு சம்பவம். சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர் நேரில் கண்டது. ஒரு பெயர் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது. இது பின்னர் மஹா பெரியவா தரிசனங்கள் என்ற பெயரில் வரும் தொடர் வெளியீட்டில் வரலாம். இப்ப ஸ்னீக் ப்ரிவியூ!
--
சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார். முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும். பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அபோது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர். பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.
வந்திருந்த பொது மக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள். வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார்.
திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச்சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்புறம் நான் அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு!
பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?
வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார்.
இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு. சரியா இருக்கு! பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது.
வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்றூ போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்றூ கதறினார். அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கனும் என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார். வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக்கொடுத்தார். வித்யா கர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுதுக்கொண்டே வெளியேறினார். கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?
ராவணன் சிவ பெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.
எதிரில் நாரதர் வந்தார்.
என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?
நான் சிவ பெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!
அட அசடே! அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!
என்ன சொல்லறீங்க? வேலை செய்யாமலும் இருக்குமான்னா?
எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு. உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?
ஆமா. சரி, இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!
கைலாசத்தை ஒன்பது தலை 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம். பார்வதி திடுக்கிட்டுப்போய் சிவனை கட்டிண்டாளாம்! சிவன் சிரிச்சாராம்.
பார்வதி கோபிச்சுக்கொண்டு, ஓய் உமக்கு ஸ்த்ரீயின் குணம் எப்படி தெரியபோறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரே தான் சீதையாக பிறந்தார்.
அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?
(இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)
மலை கொஞ்சம அசைஞ்சதும்பெருமான் கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார். மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன. ராவணன் செய்வது அறியாமல் திகைச்சு போனான்.
நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார்.
நாரதரே தப்பிக்க ஏதாவது வழி சொல்லும்.
அட உனக்குத் தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.
நான்தான் மாட்டிக்கொண்டேனே?
பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு.
வீணை இல்லையே?
இதோ நான் தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.
ராவணனும் ஸாம கானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப்படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.
அது சரி, இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???
வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.
இதில் ராவணனின் ஸாம கானம் வந்த போது அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.
பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக்காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?
யாருக்குத்தெரியப்போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.

Sunday, April 20, 2014

கருணை என்றால், இதுவல்லவா, கருணை?.

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு
முற்பட்ட நிகழ்ச்சி.

கும்பகோணம் மடத்துத் தெருவிலுள்ள ஸ்ரீ காஞ்சி

காமகோடி பீடம் மடத்தில், ஒரு சமயம்,ஏராளமான

வைதீக சிரேஷ்டர்களுக்கு சமாராதனை ஏற்பாடாகி-

யிருந்தது. அப்போது, வைதீகர்களுக்கு நானும்

பரிமாறுவேன்.

மகாசுவாமிகள், என்னைத் தனியே கூப்பிட்டார்.

"இன்னிக்கு, இலைக்கு பட்சணம் லட்டு!
தெரியுமோல்லியோ?"

"தெரியும்."

"நீ தானே பரிமாறுவே?.. அவர்கள், வேண்டாம்,

வேண்டாம் என்று கையைக் கொண்டு வந்து

மறுத்தாலும், நீ பட்டுக்கு, ஒவ்வொருத்தருக்கும்

லட்டு ரெண்டு,மூணுன்னு போட்டுண்டே போ!

அவாளெல்லாம் உன்னைத் திட்டுவா, எறியும்படி

வைக்கிறானே? என்று கோபப்படுவா,காது கொடுக்காதே.."

சுமார் அறுபது வைதிக சிரோன்மணிகள் போஜனப்

பந்தியில் உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களுக்குப்

பரிமாறியதில் நூற்றைம்பது லட்டுக்களைக்

காலி செய்து விட்டேன்.

பெரியவா சொன்னது போல, என் காதுபடவே

என்னைத் திட்டினார்கள். இந்தத் திட்டுகளுக்கு

மேல் உயர்ந்து பெரியவாளின் கருணை இருந்தது.!

அப்போதெல்லாம், ஒரு இரட்டை மாட்டுவண்டி

மடத்துக் கொல்லைப்புறத்தில் இருக்கும். பெரியவா,

அந்த வண்டியை கழுவச் சொன்னார்கள்; ஆசனம் கொண்டு

வரச் சொன்னார்கள்.அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.

வைதிகர்கள் உணவருந்தி முடித்தவுடன் எச்சில்

இலைகளை கொல்லையில் கொண்டு வந்து போட்டார்கள்,

சிப்பந்திகள். அப்போது ஓடி வந்தார்கள் ஐம்பது

நரிக்குறவர்கள் ஆண்-பெண் குழந்தைகளாய்.

ஏக சந்தோஷம்,அவர்களுக்கு. அவர்கள் பாஷையில்

காச்சு,மூச்சென்று ஒரு இரைச்சல்.ஒரு கும்மாளம்!

இலைகளில் மிகுந்திருந்த பண்டங்களை அள்ளி அள்ளிச்

சாப்பிட்டார்கள். லட்டுக்களைப் பொறுக்கி மூட்டை

கட்டிக் கொண்டார்கள்.

பெரியவா, வண்டியிலிருந்தபடியே, இந்த ஆனந்த

அமர்க்களத்தை மனம் நெகிழப் பார்த்து மகிழ்ச்சியுடன்

ரஸித்துக் கொண்டிருந்தார்கள்.

"நீ போய், போஜனம் செய்து விட்ட வைதிகர்களை

அழைச்சிண்டு வா."

வந்தார்கள். நரிக்குறவர்களின் முகத்தில்
பேரானந்தத்தைக் கண்டார்கள்.

"நமக்கும்,நேரடியாகத் தரும் பழக்கம் இல்லை."

(நேரடியாகக் கொடுத்தால், சமையற் கட்டில்

மீதமிருக்கும் லட்டுகள் சேஷமாக-மடி,ஆசாரம்

பார்ப்பவர்கள் உண்ணத் தகாததாகப் போய்விடும்.)

இப்படி இலையில் போட்டு, மிகுந்து எறியப்பட்டதை

நரிக்குறவர்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு

என்ன மேன்மை?

-இந்த கேள்விக்குப் பெரியவா கொடுத்த பதில்,

நெஞ்சம் உள்ள எல்லோரையும் நெகிழச் செய்யும்.

"ஏதோ, முன்வினைக் கொடுமையால் நரிக்குறவர்களாக

ஜன்மம் எடுத்து, குப்பைத் தொட்டியில் போட்ட

எச்சில் உணவுப் பண்டங்களை சாப்பிடும் துர்பாக்கியம்

அவர்களுக்கு. இன்று வேதவித்துக்கள் உண்ட

உச்சிஷ்டத்தை சாப்பிட்டு, பாவமெல்லாம் போய்,

அடுத்த பிறவியில் நல்ல வேதியர்களாகப் பிறந்து

ஆனந்தமாக இருக்கத்தான், இப்படிச் செய்யறது..."

பெரியவாளின் விளக்கத்தைக் கேட்டவர்களுக்கெல்லாம்

உடம்பில் மின்னலை பரவினாற் போலிருந்ததாம்.

கருணை என்றால், இதுவல்லவா, கருணை?.

அந்த நரிக்குறவர்களுக்குத் தான் எவ்வளவு பெரும் பேறு?

வேத பண்டிதர்கள் எல்லோரும், பெரியவாளின்

அவ்யாஜ கருணையை எண்ணி, அசந்து போனார்கள்!

அப்போது பந்தியில் சாப்பிட்ட வைதிகர்களில்

ஒன்றிரண்டு பேர்கள் இன்னமும் சென்னையில்

உள்ளார்கள்.

Friday, April 18, 2014

"மதில் சுவரைக் காப்பாற்றிய மகா பெரியவா"

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

குடந்தை நகர மத்தியப் பகுதியில், அருள்மிகு

சோமேஸ்வரன் ஆலயம் உள்ளது. அதன் மதில்

சுவர்களை இடித்து, பத்து கடைகள் கட்டுவதற்கு

அப்போதைய டிரஸ்டி, பலரிடம் கையூட்டுப் பெற்று

முனைப்புடன் செயல்பட்டதால் கடைகள்

கட்டப்பட்டு விட்டன. யாரும் இடங்களை

வசப்படுத்தி, வியாபாரத்தைத் தொடங்கவில்லை.

ஆந்திர மாநிலம் கார்வேட் நகரில் முகாம்

இட்டிருந்த மகாசுவாமிகள், ஒரு சிஷ்யனை அனுப்பி

என்னை அழைத்து வரச் சொன்னார்கள்.

"இதோ, பாரு. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

நமது ஆலயங்கள் எல்லாம் நகரத்தில் நடுநாயகமாக

இருக்கின்றன. பிற்காலத்தில் ஆலய நிர்வாகப்

பொறுப்புக்கு வருபவர்கள், சோமேஸ்வரன் கோவில்

முன்னுதாரணத்தைக் காட்டி, ஆலயச் சுவர்களை

இடித்துக் கடை கட்டிவிடுவார்கள். ஆகவே,சோமேஸ்வரன்

கோவில் சுவர் இடிப்பை, கோர்ட்டுக்கு எடுத்துக்கொண்டு

போய். தர்மத்தைக் காப்பாற்று. உனக்கு சிரேயஸ்

உண்டாகும்" என்று அருள்பாலித்து ஆணையிட்டார்கள்.

பெரியவாளின் கட்டளையை சிரமேற்கொண்டேன்.

குடந்தையில், சுட்டுப் பொசுக்குகிற நாத்திகர்கள்

கும்பல் உண்டு. அதன் மிரட்டலையும் பொருட்படுத்தாமல்,

பிறரிடம் சென்று பண உதவி கோராமல்,

உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்காடி, கடைகளை

மூடச் செய்ய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு மிகவும்

பெருமையை பெற்றுத் தந்த வள்ளல், மகாசுவாமிகள்.

அப்போது என்னிடம் கூறினார்கள்;

"என்னுடைய ஜீவிய காலம் வரை, நான் செய்யச்

சொன்னதாக யாரிடமும் சொல்லக் கூடாது."

அவ்வண்ணமே இந்த விஷயத்தை நான் இதுகாறும்

எனக்குள்ளேயே போற்றிப் பாதுகாத்தேன்.

Wednesday, April 16, 2014

"ஏமாந்து விட்டாய்"

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

என்னுடைய பதினெட்டாவது வயதில்

கும்பகோணம் மடத்துத் தெருவில்,

ஜீவனோபாயத்திற்கு ஒரு பழக்கடை வைத்தேன்.

என்னுடைய தமையனார் மணி அய்யர் கிரஹத்தில்,

இரண்டு நாட்கள், மகாபெரியவா ஸ்ரீ சந்திரமௌளீஸ்வர

பூஜை செய்தார்கள். நான் நிறைய பழங்களுடன்,

அண்ணா வீட்டுக்குச் சென்று, சுவாமிகளிடம்

சமர்ப்பித்து வந்தனம் செய்தேன்.

அப்போது சுவாமிகள், என்னிடம் மிகவும்

வாத்ஸல்யத்தோடு, "இதுவரை சாப்பிடாதா மூன்று

பழங்கள் தருகிறேன். அதற்குப் பதிலாக, நான்

இதுவரை சாப்பிடாத மூன்று வகைப் பழங்கள்

கொண்டு வர வேண்டும்" என்றார்கள்.

நான் அதுவரை கண்ணால் கூடப் பார்த்திராத

காசி வில்வப்பழம், அத்திப்பழம், கொட்டையில்லாத

மாதுளம்பழம் தந்தார்கள்.

"பெரியவா சாப்பிடாத பழம் என்னன்னு சொன்னா,

எங்கிருந்தாலும் கொண்டு வந்து தருகிறேன்"என்றேன்.

பெரியவா சிரித்துக் கொண்டார். " நீ போய் முயற்சி

செய்து பார்."

அது முதல் எனக்கு அதுவே நினைவு.

கேரளாவில், தை பதினைந்து வாக்கில் மாம்பழ

சீசன் ஆரம்பாகிவிடும். நான் கேரளா சென்று

நல்ல பழங்களாக வாங்கி, பெரியவா எங்கே

முகாமிட்டிருந்தாலும் அங்கே சென்று

சமர்ப்பிப்பேன்.
"இந்த ஆண்டு, நீங்கள் இதுவரை சாப்பிட்டிராத

மாம்பழங்களை கொண்டு வந்திருக்கிறேன்"என்பேன்.

பல வருஷங்கள் தொடர்ந்து இந்தக் கைங்கர்யம்

நடந்து வந்தது.ஆனால் ஓரிரு ஆண்டுகள்,

எனக்கு முன்னதாக அதே ரகத்தைச் சேர்ந்த பழங்களை

வேறு பக்தர்கள் சமர்ப்பித்திருப்பார்கள்.
"ஏமாந்து விட்டாய்"என்று ஹாஸ்யத்துடன்
சொல்லி மகிழ்வார்கள்.

Monday, April 14, 2014

"தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்".

சொன்னவர்; எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள்.கும்பகோணம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp

செய்திருந்தார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேச்வர ஆலயத்தில்

திருப்பாவை-திருவெம்பாவை மகாநாடு வெகுவிமரிசையாக

நடைபெற்றது. அப்போது பக்தவத்சலம் தமிழ்நாட்டு

முதல்வராக இருந்தார்..மதுரை மீனாக்ஷி கோயிலை

திருப்பணி செய்த பி.டி.ராஜன்,தமிழ்நாட்டு முதல்வர்

முதலிய பெரிய பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர்.

ஸந்த்யாகாலம். ஸ்ரீ பெரியவர்கள் அனுக்ரஹபாஷணம்

கேட்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீ பெரியவர்கள்

அருகில் அமர்ந்து இருந்தேன்.

ஸ்ரீ பெரியவா உபன்யாஸம் செய்யத் தொடங்கும் நேரம்.

என்னைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை

வைத்துக் கொண்டு என்னை வெளியே செல்லுமாறு சைகை

காட்டினார்கள்.

'இது ஸந்த்யாகாலம். உன் கடமை இப்போது

ஸந்த்யாவந்தனம் செய்வதுதான். என் உபன்யாசத்தை

கேட்பதற்காக, உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம்

செய்யாமல் இருக்காதே' என்று சைகை மூலம் எனக்கு

உணர்த்தினார்கள். நானும் திருக்குளத்தில் ஸந்த்யை

செய்யச் சென்று விட்டேன்.

அன்று இரவு பத்து மணிக்கு நாங்கள் அழைக்காமலேயே,

மேலக்காவிரியிலுள்ள எங்கள் க்ருஹத்துக்குத்

தானாகவே வந்து ஒரு மணி நேரம் பரமானுக்ரஹம்

செய்தார்கள்.

பிராம்மணனுக்கு ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாக்கள்தான்

முக்யமானது; வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.

'பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்

நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்.
தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்

தேடிவர வேண்டும்' என்ற உண்மையை உலகிற்கு

இதன் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.

Saturday, April 12, 2014

'எனக்கு மறந்துவிட்டது! "குழந்தை கூறிவிட்டான்"

சொன்னவர்; எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள்.கும்பகோணம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1950-51 வருடங்களில் ஸ்ரீ பெரியவர்கள்

கும்பகோணம் மடத்தில்தான் தங்கியிருந்தார்கள்.

ஒரு நாள் இரவு உபன்யாசம் செய்தார்கள்.

அப்போது மைக் வைக்கப்படவில்லை. ஸ்ரீ மடம் நிறைந்து

ஜனங்கள் இருந்தனர். அப்பொழுது ,
"கர்மநாசாஜலஸ்பர்சாத்" என்ற ஒரு ஸ்லோகம்,

அதில் அடுத்த பகுதிகளை கூறாமல் கர்மநாசா

ஜலஸ்பர்சாத் என்று அதையே திரும்ப திரும்ப கூறிக்

கொண்டு இருந்தார்கள்.

அப்போது என் அக்ஞானத்தால் 'ஸ்ரீ பெரியவாளுக்கு

இந்த ச்லோகத்தின் மேல்பகுதி தெரியவில்லை'

என்று எண்னினேன். எனக்கு அந்த ச்லோகம் பூராவும்

தெரிந்திருந்ததாலும், சிறுவனாக இருந்ததாலும்,

உத்ஸாகத்தாலும் அந்த ச்லோகத்தை ஸ்ரீ பெரியவா

பேசிக்கொண்டு இருக்கும் போதே நானும் இறைந்து

கூறினேன்.

"கர்மநாசாஜலஸ்பர்சாத் கரதோயா விலங்கநாத் !

..கண்டகீ பாஹுதரணாத் தர்ம: க்ஷரதி கீர்த்தநாத் !!

நான் கூறியவுடன், ஸ்ரீ பெரியவா தன் உபன்யாசத்தை

நிறுத்திவிட்டு மறுபடியும் அந்த ச்லோகத்தை

கூறும்படி என்னை ஆக்ஞாபித்தார்கள். ஒருவர்

உபன்யாசம் செய்து கொண்டிருக்கும்போது,

வேறொருவர், இடையில் குறுக்கிட்டுப் பேசினால்

உபன்யாசருக்கு ஆத்திரம்,கோபம்,பொறாமைதான்

ஏற்படும், அதிகப்ரஸங்கி என்று எண்ணுவார்கள்.

ஸ்ரீ பெரியவர்களோ கருணாமூர்த்தி!

ஆக்ஞையானவுடனே இந்த ச்லோகத்தை நான் கூற

ஆரம்பித்தேன்.

ஆனால் எனக்கு மறந்துவிட்டது! "குழந்தை கூறிவிட்டான்"

என்று அருளினார்கள்.

எனது அறியாமையை உலகத்திற்குக் காட்டாமல்,

துடிப்பான ஒருவனுக்கு உத்ஸாகத்தைக் கொடுக்க

வேண்டும் என்ற எண்ணத்தால், அந்த ச்லோகம்

தனக்கு மறந்தது போல் நடித்தார்கள்.அந்த நினைவு

இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கின்றது.

ஸ்ரீ பெரியவர்களைப் போல் கருணாமூர்த்தி உலகில்

யாரும் இல்லை என்பதற்கு இது ஒரு பெரிய

எடுத்துக் காட்டாகும்.

Thursday, April 10, 2014

"உப்புக் குறவன்-னு கேள்விப்பட்டிருக்கியோ?.."

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

வாழ்க்கையில் ஒரு பெரிய துக்கம்-தாங்க முடியாத

சோகம்-ஏற்பட்டது, எனக்கு. நாலு மாதங்கள் போல,

நான் ஸ்ரீ மகா பெரியவாளைத் தரிசிக்கப் போகவில்லை.

பெரியவாள் கூப்பிட்டனுப்பினார். பெரிய

உத்தியோகத்திலிருந்த இரண்டு-மூன்று அன்பர்கள் தான்

என்னை அழைத்துச் சென்றார்கள்.

இரவு மணி பத்து. தனிமை.பெரிய அகல் விளக்கின் வெளிச்சம்.

மெதுவாகப் பெரியவாள்;"...நிபுணௌ.."என்றார்கள்."சொல்லு.."

"தவ ஹி சரணாவேவ நிபுணௌ..சௌந்தர்யலஹரியில்

நான்காவது சுலோகம். 'த்வதன்யப் பாணிப்யாம்.."

பெரியவாள், மெதுவாக, "எல்லோருக்கும் அடைக்கலம்

அம்பாள்தான், அவளுக்குத் தெரியும்-யாருக்கு,எப்படி,

எப்போ,என்ன கொடுக்கணும்னு..."

மௌனம்.

"சாம்பமூர்த்தி, சந்தை-ன்னா,உனக்குத் தெரியுமோ?"

"தெரியும். பல வியாபாரிகள், பல சாமான்களைக்

கொண்டு வந்து விற்பனை செய்வா. ஒவ்வொரு

ஊரிலும், வாரத்தில் ஏதாவது ஒருநாள்,சந்தை.

இன்னிக்கு இந்த ஊர்,நாளைக்கு அந்த ஊர் என்று

போய்க் கொண்டிருப்பார்கள்.

"உப்புக் குறவன்-னு கேள்விப்பட்டிருக்கியோ?.."

"ஆமாம். பரம்பரையா, சந்தைகளுக்குப் போய்

உப்பு வித்துப் பொழைப்பு நடத்தறவா.."

"ஆமாம். அப்படி ஒரு உப்புக் குறவன்."

பரம்பரையா,காமாக்ஷியிடத்திலே பக்தியுள்ளவா.

ஒரு தடவை, ஒரு சந்தை முடிஞ்சு,அடுத்த ஊருக்குப்

போற வழியிலே, காட்டுப் பிரதேசம். இவன் கழுதை

மேலே உப்பு மூட்டை ஏத்திண்டு போறதை சில

திருடர்கள் பார்த்தா. "டேய் இவன் நாளைக்கு உப்பை

வித்துட்டு, பணம்,காசு எடுத்துண்டு இந்த வழியா

திரும்பிப் போவான். அப்போ, புடுங்கிக்கலாம்"ன்னு

பிளான் பண்ணிண்டா.

"உடனே,-வெடி,வெடிப்பானே, தெரியுமோ,உனக்கு?.."

"கோயில்ல உத்ஸ காலங்களிலே வெடி மருந்து

போட்டு, கெட்டிச்சு,நீளமா திரி போட்டு வைப்பா.

திரி முனையிலே நெருப்புப் பத்த வெச்சா, அது

மெல்ல போய் வெடி மருந்திலே படும். அது,

படீர்னு சத்தம் போட்டு வெடிக்கும்.."

"ஆமா..திருடர்கள் என்ன பிளான் பண்ணினான்னா,-

வெடி மருந்து போட்டு வெடிச்சா, கழுதை மிரண்டு

ஓடும்; உப்புக் குறவன் பயந்து அலறுவான்;மூர்ச்சை

போட்டு விழுவான்,அப்போ,அவன் மடியிலேர்ந்து

பணத்தை எடுத்துக்கலாம்..."

"அன்னிக்கு, சந்தையிலே உப்புக்குறவன் கடை

விரித்ததும், பெரீசா மழை பெய்து,உப்பெல்லாம்

கரைஞ்சு போச்சு.அவனுக்கு நஷ்டம்;மனக்கஷ்டம்.

காமாக்ஷியை, என்னென்னமோ சொல்லித் திட்டினான்.

காசே இல்லாமே வீட்டுக்குப் போகணுமேன்னு

ஆத்திரம் வேற. திரும்பி காட்டு வழியே வந்தான்.

அவனைப் பார்த்துவிட்டு, திரியிலே நெருப்பு

வெச்சானகள், திருடர்கள், திரியிலே நெருப்பு

பத்திண்டு, மருந்துக்குழாய்வரை போச்சு.இதோ,

வெடிக்கப் போறதுன்னு சந்தோஷப்பட்டா.

ஆனா, வெடிக்கல்லே! என்ன காரணம்னு கிட்ட

வந்து பார்த்தா, காலையிலே பெய்த மழையிலே,

வெடி மருந்து நனைஞ்சு போச்சு.தீப்புடிக்கல்லே,

உடனே, உப்புக் குறவனைப் பார்த்து !,

"சுவாமி உன்னைக் காப்பாத்திடுத்து, உன்

நன்மைக்காகத்தான் மழை பெய்திருக்கு,

வீட்டுக்குப் போயி, சாமி கும்பிடு"ன்னு சொன்னா.

உப்புக் குறவன் திடுக்கிட்டுப் போனான்.
'அப்போ அம்பாள் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு

நினைச்சது, தப்புத் தானே? காமாக்ஷி என்னை

மன்னிச்சுடு. எனக்கு எப்போ, என்ன வேணும்னு

உனக்குத் தெரியும். மழை பெய்யாமல், நான் உப்பு

வித்துப் பணத்தோட வந்திருந்தா, இந்தத் திருடன்கள்

என்னை அடிச்சுப் போட்டிருப்பா,நல்லவேளை,காப்பாத்தினே!.

பெரியவாள்; "அதனாலே, நமக்கு என்ன கிடைச்சாலும்,அது

அம்பாள் பிரசாதம்தான். நாம் எதையும் கேட்காமல்

இருக்கிறதே, நாம் நமக்குச் செய்து கொள்ளும் நன்மை.."

மகாப் பெரியவாளுடைய, மெல்லிய, தகுந்த

இடைவெளிகளோடு கூடிய நீண்ட நேரப் பேச்சு

முடிவுக்கு வந்தது, இரவு இரண்டரை.

"என் தலைமேலே இருந்த பத்து டன் இரும்பு

இறங்கிடுத்து" என்றேன்.

சந்தையில் ஆரம்பித்து, அம்பாளிடம் முடிந்த கதை.

என் மன ஆறுதலுக்காகத்தான் என்றாலும், அதே

நிலையிலுள்ள எல்லாருக்கும் பொருந்துவது தானே?

பெரியவாள், " நீ, விடாம ராமாயணம் படி,

மனச்சாந்தி கிடைக்கும்" என்றார்.

இன்று வரை ராமாயண பாராயணமும்,மனச்சாந்தியும்

இணைபிரியாமல் தொடர்கின்றன.

Tuesday, April 8, 2014

"ஒரு பார்வையிலேயே பெரியவாளைப் புரிந்து கொண்ட ஜோசியர்."

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கேரளவிலிருந்து ஒரு ஜோசியர் தரிசனத்துக்கு

வந்தார்.அன்றைக்கு, பெரியவா காஷ்டமௌனம்.

ஜோசியரிடம் பேசவில்லை.புன்முறுவல் செய்து

ஒரு பழம் அளித்தார்கள்.

ஜோசியர் வெளியே வந்தார். ஸ்ரீ மடத்து

சிப்பந்திகள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

எல்லோருக்கும் பிரச்னை இருப்பது சகஜம் தானே?

தனக்கு எப்போது விடிவு ஏற்படும்?-

என்றறிய எல்லோருக்கும் ஆவல்.

ஜோசியர் சொன்னார், "இந்த இடத்திலே என்னால்

ஜோசியம் சொல்ல முடியாது. பெரியவாளுடைய

சாந்நித்தியம் பரிபூரணமாக இருக்கும் இடம், இது.

பெரியவா இருக்கிற இடத்திலிருந்து முந்நூறு அடி

தூரம் வரை, எந்தக் கிரஹமும் பேசாது.
எந்தத் தேவதையும் பதில் சொல்லாது.

நான் தங்கியிருக்கிற லாட்ஜுக்கு வாங்கோ,

பதில் சொல்றேன்."

ஒரு பார்வையிலேயே பெரியவாளைப்

புரிந்து கொண்டுவிட்டார், ஜோசியர்.

Sunday, April 6, 2014

"செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் தனிப்பட்ட

வழிபாட்டு முறைகள் வழக்கத்திலிருக்கும்.

அந்த க்ஷேத்திரத்திலுள்ளவர்களுக்குக் கூடத் தெரியாத

பல செய்திகள் பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும்.

இராமேஸ்வரத்திலிருந்து வந்தார், ஒரு புரோகிதர்.

மூன்று தலைமுறைகளாக அந்த ஊரிலேயே

இருந்து வருவதாகச் சொன்னார்.

"ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவைப்

பார்த்திருக்கியோ?"

"பார்த்திருக்கேன். சேவார்த்திகளை அழைத்துக்

கொண்டு போய் காட்டியிருக்கேன்."

"நடராஜாவுக்கு ஏழு திரைகள் உண்டோ?"

புரோகிதருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

பெரியவா சொன்னார்கள்.

"திருவாதிரை அன்னிக்கு, ஏழு படுதாக்கள்

திரையாகப் போட்டு, நடராஜருக்குப் பூஜை

செய்வார்கள். ஏழு திரை விலகியதும்
நடராஜாவைத் தரிசிக்கலாம்....சரி

அந்தக் கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"

ராமேஸ்வரத்தாருக்குக் கொஞ்சம் நடுக்கம்.

"நான் ஒரு நடராஜாவைத்தான் பார்த்திருக்கேன்"

"மூணு நடராஜர் இருக்கு!...போய்ப் பார்..."

"ராமேஸ்வரம் கோவிலில், குருவாயூரைப் போல்,

செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம்

செய்வது வழக்கமா?"

"ஆமாம்" என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

"ராமேஸ்வரத்தில் செக்கே கிடையாது! அந்த

க்ஷேத்திரத்து ஸ்வாமி, மண்ணைப் பிடித்து

வைத்து உருவாக்கப்பட்டவர். செக்கு

ஆட்டக்கூடாது என்று ஓர் ஐதீகம்..."

பின்னர், அந்தப் புரோகிதர் மனத்தில் ஒரு குறை

இருக்கக் கூடாது என்பதற்காக, குடும்ப க்ஷேமலாபங்கள்

விசாரித்துப் பிரசாதம் கொடுத்தார்கள், பெரியவா.

Friday, April 4, 2014

"மடியா செஞ்சிருக்கேன்..கெட்டுப் போகாது... நாலு நாள் வெச்சுக்கலாம்.."

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

அந்தக் கிராமத்தில் பெரியவர் தங்கியிருந்த

இடத்துக்கு அருகில் குடிசை வீடுகள்.

சாயங்கால வேளைகளில், குடிசைக் குழந்தைகள்

கும்மாளமிட்டுக்கொண்டு விளையாடுவதையும்,

சண்டை போடுவதையும், கூச்சல்-கூப்பாடுகளையும்

பெரியவா மனமகிழ்ச்சியுடன் ரசிப்பார்கள்.

(அப்போதெல்லாம், அந்தக் குழந்தைகளுடன்

சேர்ந்து நாமும் விளையாட மாட்டோமா? என்ற

ஒரு பாவம்-வேட்கை-பெரியவா கண்களில் ஜொலிக்கும்)

அப்படி, குழந்தைகள் விளையாட்டை ரசித்துக்

கொண்டிருந்த தருணத்தில், ஒரு பாத்திரம் நிறைய

திரட்டுப் பால் கொண்டுவந்து பெரியவாளுக்கு

முன்வைத்து நமஸ்காரம் செய்தாள், ஓர் அம்மணி.

"என்னது?... பாலைக் குறுக்கிக் கொண்டு வந்திருக்கியோ?..

"ஆமாம்..."

"தித்திப்பா இருக்குமோ?"

"இருக்கும்.."

"வாசனை?"

அம்மையார் பதில் சொல்வதற்குள், "அதான்,
மூக்கைத் துளைக்கிறதே!" என்று பாராட்டினார்கள்.

"மடியா செஞ்சிருக்கேன்..கெட்டுப் போகாது...

நாலு நாள் வெச்சுக்கலாம்..தினம், கொஞ்சம் கொஞ்சமா

பெரியவா..."

பெரியவா, அந்த அம்மாளின் சொற்களைக் காதில்

வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.
ஆனால். ஓர் ஆர்வத்துடன்,
"நீ என்ன பண்றே?...இந்தப் பாத்திரத்தை எடுத்துண்டு

போய், அங்கே விளையாடிக் கொண்டிருக்கிற

குழந்தைகளுக்குக் கொடுத்துக் காலிப் பாத்திரத்தைக்

கொண்டு வரே. என்ன? எனக்கு, அடுத்த தடவை
பண்ணிண்டு வா..."

க்ஷீரஸாகர சாயீ, மோஹினி தேவியாக அமிர்த

விநியோகம் செய்ததைப் போல, அத்தனை

திரட்டுப் பாலையும் குழந்தைகளுக்குக் கொடுத்து

விட்டாள் அந்த அம்மாள். பரிபூரண திருப்தியுடன்

குழந்தைகள் திரட்டுப் பால் சாப்பிடுவதை கனிவோடு

பார்த்து ஆனந்தப்பட்டார்கள் பெரியவா.

Wednesday, April 2, 2014

எக்ஸ்-ரே கண்களோ?

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு..

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்

விமரிசையாக ஹோமம் நடந்து, நிறைவுச்

சடங்கான பூர்ணாஹூதி நிகழவேண்டிய வேளை.

பெரியவாளை யக்ஞசாலைக்கு அழைத்து

வந்தார்கள், பக்தர்கள்.

யாகசாலையில் ப்ரதக்ஷிணமாக வந்து,

கலசகுண்டங்களைத் தரிசித்துக் கொண்டார்கள்

பெரியவா. பூர்ணாஹூதி செய்ய ஆக்ஞயை

எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தப் போதில்.

"இப்போ பூர்ணாஹூதி வேண்டாம்; கொஞ்சம்

கழித்துச் செய்யலாம்" என்று சொல்லிவிட்டு

உள்ளே போய்விட்டார்கள்.

எல்லோருக்கும் திகைப்பு. சரியான சந்தர்ப்பம்தானே?

செய்ய வேண்டியதுதானே?

உள்ளே சென்றவுடன் ஒரு சிஷ்யரைக்

கூப்பிட்டார்கள் பெரியவா.

"பூர்ணாஹூதிக்கு வைத்திருக்கிற நெய் நன்றாக

இல்லை; ஹோம யோக்யம் இல்லை. புதுசா

வேற நெய் டின் கொண்டு வரச் சொல்லு..."

சிஷ்யர், அதன்படி ஏற்பாடு செய்துவிட்டு,
பழைய நெய் டின்னைப் பார்த்தார்.

களிம்பு ஏறிய மாதிரி நிறம்.
ஏழெட்டு ஜீவ ஜந்துக்கள்.

ஒரு மூலையில், டின்னில் பாதி அளவுக்கு
மட்டும் இருக்கிற நெய்யின் குற்றங்குறைகள்

எவ்வாறு பெரியவாளுக்குத் தெரிந்தது?

எக்ஸ்-ரே கண்களோ?

இல்லை. ஒளிக் கதிர்களுக்கும், ஒளியைக்

கொடுக்கும், சுயம் பிரகாசம்!

Tuesday, April 1, 2014

Watch live streaming video from Sri Vignesh Studios of Pradhosham Pooja Abhishekam at Sri Mahaswamigal Adhishtanam and at Sri Periyava temple at Orikkai on all Pradosham days between 5 pm and 8 pm (IST) from these two locations by clicking on them: 

1) Live Stream from Periyava Adhishtanam, Kanchi Matam 

2) Live Stream from Orikkai Manimandapam 

Vignesh Studios also specializes in lifesize prints of Swamigal. 

Here is their address and contact details:

Address:

No-9, Duraiswamy Road (opposite to Pothy's shop)
T.Nagar 
Madras --- 600 017
Tamil Nadu, India

Phone: +91 44 24343631, +91 44 42127210, +91 44 42127457
Mobile: +91 9444325344, +91 9840199917

E-Mail: vigneshstudio@gmail.com

It is located opposite to Pothy's shop in T. Nagar, Madras. The above picture is from their studio.

Please click this link for the list of Pradosham dates in 2014:

http://vandeguruparamparaam.blogspot.com/2014/02/pradosham-dates-2014.html


Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top